தொலைநோக்குள்ள நிறுவனங்களை உருவாக்க வேண்டும்- ஜெ.ஜெயரஞ்சன் பேட்டி

By செல்வ புவியரசன்

காவிரிப் படுகையில் அமையும் வேளாண் மண்டலம் விவசாய நிலங்களை மட்டுமல்ல, அங்கிருக்கும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். அப்படியென்றால், வேளாண் - பொருளியல் நோக்கில் என்னென்ன அம்சங்களை உள்ளடக்கியதாக ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ அமைய வேண்டும்? பொருளியல் அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் வழிகாட்டுகிறார்...

விவசாயம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசின் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நல்ல விஷயம். ஆனால், பல கோணங்களில் சிந்தித்து ‘வேளாண் பாதுகாப்பு மண்டலம்’ என்பதற்கான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக, பகாசுரத் தொழில் திட்டங்கள் காவிரிப் படுகையில் நுழைவதை இந்தப் புதிய ஏற்பாடு தடுப்பது விவசாயிகளுக்கு நன்மை தரும் என்று நம்புகிறோம். ஆனால், அதிலே ஒரு ஆபத்தும் இருக்கிறது. இன்று விவசாயம் நடக்கும் பகுதியில் புதிதாக ஒரு தொழில்பேட்டை தொடங்கப்பட்டால், அதற்காக நிலத்தின் பயன்பாட்டை மாற்றிக்கொள்கிற ஒரு வாய்ப்பு இருக்கிறது. விளைவாக, நிலத்தின் மதிப்பு உயர்கிறது. நிலத்தைவிட்டு வெளியேற நினைக்கிறவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக இருப்பதோடு, மிச்சமிருக்கும் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. ஆனால், நிலத்தின் பயன்பாட்டைச் சுருக்கி, வேளாண் மண்டலமாக அறிவிக்கிறபோது இந்த வாய்ப்பு பறிபோகிறது; மறைமுகமாக நிலத்தின் மதிப்பு ஸ்தம்பித்துவிடுகிறது. அப்போது என்னவாகும்? ஏற்கெனவே விவசாயத்தால் சீரழிவான நிலையில் சிக்கித் தவிப்பவர்கள் அதைவிட்டு வெளியேற முடியாத நிலையை உருவாக்கிவிடும். அப்படியொரு சிக்கலில் விவசாயிகள் மாட்டிக்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தினால், அவர்களை கூண்டில் அடைக்கிற முயற்சியாகவே போய் முடியும். ஆகையால், இந்தத் திட்டத்தை விரிவாக யோசித்துச் செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகளைப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகள் என்னென்ன?

வேளாண்மையை லாபகரமான தொழிலாக்க வேண்டும். அதற்கு, விளைபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மத்திய தர வர்க்கமோ உணவுப் பொருட்களின் விலை ஏறிவிடக் கூடாது என்பதில் தீவிரமான கவனத்தோடு இருக்கிறது. அதையும் தாண்டி, சில சமயம் தாறுமாறாக மழை பெய்வது அல்லது மழை பெய்யாமலே போய்விடுவது போன்ற இயற்கையின் விளைவுகளால் சில உணவுப்பொருட்களின் விலை ஏறும். தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதுபோல. அப்படி அரிதான சந்தர்ப்பங்களிலும் விளைபொருட்களின் விலைதான் ஏறுமே தவிர, அதன் பயன் விவசாயிக்குப் போய்ச் சேராது. மத்திய தர வர்க்கம் தனது உணவுக்காகச் செலவிடுகிற தொகையில் ஐந்து சதவீதத்தைக் கூடுதலாகச் செலவிடுவதற்கு முன்வந்தாலே விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் நிச்சயம் உயரும். மேலும், மற்ற தொழில்களைப் போல விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதியத்தின் அளவு உயர்வது இல்லை. இன்னொரு பக்கம், அரசும் விவசாயத்துக்கு அளித்துவரும் மானியங்களைக் குறைத்துக்கொண்டே வருகிறது. இதனால், விவசாயத்துக்கான செலவு அதிகரிக்கிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் அமைப்புக்கு உள்ளேயே இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட வேண்டும் என்றால், வேளாண் விளைபொருட்களுக்கான விலை அதிகரிக்க வேண்டும் அல்லது விவசாயத்துக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும். இதைத் தாண்டி விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்றால், உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், விவசாயத்துக்கான மூலதனத் திரட்சி நடக்க வேண்டும். முன்பெல்லாம் மிகப் பெரிய நீராதாரத் திட்டங்களுக்காக அரசு செலவிடும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்துக்கான மூலதனத் திரட்சி என்பது மிகவும் சொற்பமான அளவில்தான் நடக்கிறது. அதுவும் தனியார் பங்களிப்பே ஒழிய அரசுடையது அல்ல.

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கொடுக்காததும் வேளாண் துறையில் மூலதனத் திரட்சி நடக்காததும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் கடனாளிகளாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் சிறு குறு விவசாயிகளுக்குத்தான் பெரும்பாலும் கடன் இருக்கும். பெருவிவசாயிகளுக்கு அவ்வளவாகக் கடன் இருக்காது. ஆனால், தற்போது பெருவிவசாயிகளும் கடனாளியாக இருக்கிறார்கள். பெருவிவசாயி என்றால் பெரிய அளவில் கடன், சிறுவிவசாயி என்றால் சிறிய அளவில் கடன் என்பதாக தற்போதைய நிலை இருக்கிறது. கூடவே எட்டுவழிச் சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், ஓஎன்ஜிசி ஆழ்குழாய்கள் என்று நிலங்களைக் கையகப்படுத்தும்போது விவசாயம் மேலும் மிகப் பெரிய சீரழிவைச் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் போதுமான தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் இல்லை. அப்படி இருக்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஃப்ராக்கிங்’ முறையில் பாறைகளை உடைப்பதற்கு மிகப் பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படும். ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதியில் அவ்வளவு தண்ணீருக்கு எங்கே போவது? வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவோம் என்று சொன்னாலுமேகூட, அதனால் வரும் சுற்றுச்சூழல் கேடுகள் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் இட்டுச்செல்லும். அந்த அடிப்படையில்தான் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. வேளாண் மண்டலமாக அறிவித்தால், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வராது என்கிறார்கள். சரி, ஏற்கெனவே நடந்துவரும் பெட்ரோலிய அகழ்ந்தெடுப்புகளை நிறுத்திவிடுவார்களா என்று கேட்டால், பதில் சொல்ல ஆள் இல்லை. இன்னொருபக்கம் அரசியல்ரீதியாகப் பார்த்தால், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய உரிமத்தை மாநில அரசு தள்ளுபடி செய்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதைவிடவும் முக்கியமான கேள்வி, ‘வேதாந்தா குழுமம்’ போன்ற பலம் வாய்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு மோதுகிற அளவுக்கு மாநில அரசுக்குப் பலம் இருக்கிறதா என்பது. எனவே, விவசாயிகளின் வருமானம் உயர வேண்டும் என்றால், விவசாய உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, விவசாய வருமானத்தைப் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயத்திலிருந்து கிடைக்கிற வருமானம் என்பது முப்பது சதவீதம் அளவுக்குத்தான் இருக்கும். எனவே, விவசாயம் தவிர்த்த மற்ற வருமானங்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆராய வேண்டும். அதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பை மேம்படுத்த என்ன திட்டங்களை மேற்கொள்ளலாம்?

விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் கால்நடைகளிலிருந்துதான் கிடைக்கிறது. விவசாயம் செய்வதில் பெரிதாக ஒன்றும் லாபமில்லை, பால் உற்பத்தியில் வருமானம் வருகிறது என்று ஒருவேளை விவசாயிகள் நினைத்தால், சாகுபடிசெய்யும் நிலத்தின் ஒரு பகுதியைப் புல் வகைகளை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரை எங்கெங்கு என்ன சூழல் அமைந்திருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல முடிவெடுக்க முடியும். உதாரணத்துக்கு, பழ மரம் வளர்ப்பதற்கு வேறு எந்த வகைப் பயிர்களையும் சாகுபடிசெய்ய வாய்ப்பில்லாத நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றாக விளையும் நிலத்தில், பழ மரங்கள் தேவையில்லை. மண்ணும் நீர்வளமும்தான் பயிர்வகைகளை முடிவுசெய்கின்றன. எனினும், விவசாயத்தில் எந்தப் பயிரில் அதிக வருமானம் கிடைக்கிறதோ அந்தப் பயிருக்கு மாறிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கலாம்.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான அரசுத் திட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்தாலும் வியாபாரிகள்தான் அதைத் தேவைப்படுபவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். எனவே, வருமானம் பெருமளவு வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்கிறது. அதற்குப் பதிலாக விவசாயிகளே தேவைப்பட்டவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்று சொல்லித்தான் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கினார்கள். மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களிடமிருந்து பங்கு மூலதனம் திரட்டப்படும். அரசும் உதவிகள் செய்யும். அவ்வாறு தொடங்கப்பட்ட அமைப்பு கொள்முதல் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும். ஆனால், அவ்வாறு அமைப்புகள் தொடங்கப்பட்டனவே தவிர, என்ன வேலைகள் நடக்கின்றன என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு, ‘அமுல்’ போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான். ‘அமுல்’ அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டுதான் தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் துவங்கப்பட்டன. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் கைக்குள் அது சிக்கிவிட்டது. அமுலைப் பொறுத்தவரை அதன் நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்கள் ராஜினாமா செய்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும். இங்கே அப்படி இல்லை. கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தொடர்பே இல்லாதவர்கள்கூட அந்த அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டுறவு அமைப்புகள் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. விவசாயிகள் வருமானம் உயர வேண்டும் என்றால் ஆரோக்கியமான கூட்டுறவு அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். அதைப் போலவே, வேளாண் விளைபொருட்களை நேரடியாக விற்காமல், அவற்றின் மதிப்பைக் கூட்டி விற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அதில் கிடைக்கின்ற லாபம் வியாபாரிகளுக்குத்தான் சென்றுகொண்டிருக்கும். எனவே, தொலைநோக்குள்ள நிறுவனங்களை உருவாக்குவதுதான் நம்முடைய முதல் திட்டமாக இருக்க வேண்டும். நிறுவனங்களை உருவாக்குவது ஒரு கலை. பொறுப்புகளுக்கு வருபவர்களின் பேராசைகளுக்குப் பலியாகிவிடாத வகையில், அவற்றை உருவாக்க வேண்டும். அவர்கள் நேர்மையாகச் செயல்படும் வகையில் சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் இருக்கக்கூடிய பால்பொருட்கள், உலக அளவில் பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன. அங்கு தயாரிக்கப்படும் சாக்லேட் உலகத்திலேயே மிகச் சிறந்த தரத்தில் இருக்கிறது. அந்த சாக்லேட்டுகளை அங்கிருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள்தான் தயாரிக்கின்றனர். அத்தகைய அமைப்பை இங்கேயும் நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த வேளாண் மண்டலத்தால் பயன் விளையும். இல்லையென்றால், கொஞ்சம் சுதந்திரமாக இருக்கும் விவசாயிகளைச் சிறையில் தள்ளியதாக அமைந்துவிடக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்