வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்

By ஆசை

பரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளைக் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக அவை பறக்கும்போது வழியிலுள்ள வயல்களில் எந்த தானியமும் மிஞ்சாத வகையில் வயல்களை மொட்டையடித்துவிடுபவை. இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. தற்போது படையெடுத்திருப்பவை இவைதான்.

வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை

பாலைவன வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று கட்டங்களால் ஆனது. முட்டை, இளம்பூச்சி, வளர்ந்தது. ஒவ்வொரு பெண் வெட்டுக்கிளியும் ஒரு தடவைக்கு நூறு முட்டைகளுக்கும் மேல் இடும். ஒரு பெண் வெட்டுக்கிளி தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உகந்த மழைக்காலத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படையெடுக்காத காலகட்டம் ‘அமைதிக் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஓரளவு தரிசாகவும், பாலைவனமாகவும் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தங்கிவிடுகின்றன. இது 30 நாடுகளையும் 1.6 கோடி சதுர கிமீ பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால், மழை பெய்து அவற்றுக்கு உகந்த தட்பவெப்ப நிலை ஏற்பட்டால், வெட்டுக்கிளிகள் 2.9 கோடி சதுர கிமீ பரப்பளவுக்குப் பரவக்கூடியவையாகும். இது 60 நாடுகளை உள்ளடக்கும். இந்தச் சமயத்தில் உலக மக்கள்தொகையில் 10%-ன் வாழ்வாதாரத்தை வெட்டுக்கிளிகள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நூறு கோடி பூச்சிகள் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும். இந்தப் படை ஒவ்வொரு நாளும் 20 லட்சம் கிலோ பயிர்களை உட்கொள்ளக்கூடியவை. சிறிய அளவிலான வெட்டுக்கிளிகளின் படைகூட 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உட்கொள்ளக்கூடிய அளவு உணவை உட்கொள்கிறது. இதுவரை வடகிழக்குப் பகுதியில் 5,000 சதுர கிமீ பரப்பளவில் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. கென்யாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் 100 சதுர கிமீ அளவு கொண்டது.

தள்ளாடும் ஆப்பிரிக்கா

தற்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு செங்கடலை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் யேமன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கியது. வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருகுவதற்குப் புயலும் அதனால் ஏற்படும் மழையும் பெரும் உதவிபுரிகின்றன. அதுவும் முக்கியமாகப் பாலைவனப் பகுதிகளில் புயலுக்குப் பிந்தைய மழையில் தாவரங்கள் துளிர்க்கத் தொடங்குகின்றன. அந்தப் பிரதேசங்கள்தான் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் உருவாவதற்குத் துணைபுரிகின்றன.

இப்படி 2018-லிருந்து 2019 வரையிலான குளிர்காலத்தில் யேமனிலும் ஓமனிலும் மழைபெய்து வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. அங்கிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள், மேற்கே செங்கடலைத் தாண்டி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்று அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிக்குப் புலம்பெயர்ந்தன. பிறகு, ஜபூடி, எரித்ரியா, தெற்கு சூடான், உகாண்டா, கென்யா பகுதிகளில் ஊடுருவி டான்சானியா வரைக்கும் தற்போது வந்துவிட்டன. மேற்கில் இப்படியென்றால் கிழக்கே, பாகிஸ்தான் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் வரை வந்துவிட்டன.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதேபோல் விவிலியத்திலும் பின்னாளில் குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் இடம்பெற்றிருக்கின்றன. வரலாறு நெடுக வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 1900-க்குப் பிறகு, இதுவரை ஆறு முறை மிக மோசமான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் எடுத்துக்கொண்டால் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நிகழ்ந்திருப்பதுதான் மிக மோசமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்கிறார்கள்.

பாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் ஓட்டத்தில் பறக்கக்கூடியவை. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கிமீ தொலைவைக் கடக்கக்கூடியவை. ஒரு நாளில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டுக்கிளியால் கடக்க முடியும். தனி வெட்டுக்கிளியாக இருக்கும்போது அதன் பறக்கும் திறனும் கடக்கும் தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். கூட்டமாகச் சேர்ந்தால்தான் அது அசுரத்தனமான உத்வேகம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, 1988-ல் ஒரு வெட்டுக்கிளி கூட்டம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் இடையிலான 5,000 கிமீ தொலைவைப் பத்தே நாட்களில் கடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட வெட்டுக்கிளி இரவில் பறக்கும் என்றால், கூட்டமாகச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறக்கும்.

என்ன செய்வது?

ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உள்நாட்டுப் போர்களாலும் பசி, பட்டினியாலும் சிதைந்தும் சீரழிந்தும்போயிருக்கின்றன. இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருப்பதால் பல கோடிக் கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போர்களால் செயலிழந்துபோன அரசு நிர்வாகங்கள், வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கும் நிலையில் இல்லை.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புகளுக்குப் பேசப்படும் தீர்வுகள் பல்வேறு காலங்களிலும் பல விஷயங்களை முன்வைத்தாலும் உள்ளபடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமுற்றான வழிமுறை என்று ஒன்றில்லை. இப்போதும், ‘வெட்டுக்கிளிகள் சிறகு முளைக்காத நிலையில் உள்ளபோதே அவை கூட்டம் கூட்டமாக எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; மழை பெய்து தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய இடங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து, அங்கெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசப்படுகின்றன. ஆனால், எது ஒன்றும் எளிதல்ல. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. அதனால் நிலமும் மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே, உயிரி பூச்சிக்கொல்லிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கிடையே ஐநாவுக்கான ‘உணவு மற்றும் விவசாய அமைப்பு’ வெட்டுக்கிளிகளின் படை யெடுப்பைச் சமாளிப்பதற்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் திரண்டுவரும் வெட்டுக்கிளிகளைச் சமாளிப்பது சிரமம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அவை தங்கள் வேட்டையை ஆடிவிட்டுத்தான் செல்லும். அப்படி ஆடிவிட்டுச் செல்லும்போது, வெட்டுப்பட்டுக் கிடப்பவை பயிர்களும் ஏனைய தாவரங்களும் மட்டுமல்ல... பல கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையும்தான்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்