அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கச் செயலாளர் ஆகலாமா?

By கே.சந்துரு

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பதுடன், கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள இவரது துறையின் கீழ் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் செயல்படுகின்றன. அந்தக் கழகங்களில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் நூற்றுக்கணக்கான மற்ற தொழிற்சங்கங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியின் தொழிற்சங்கச் சம்மேளனம் ஒன்றில் அதிகாரபூர்வச் செயலாளராக இருப்பது தார்மீகரீதியாக மட்டுமல்ல, சட்டத்துக்கும் விரோதமான செயலாகும்.

1926-ம் வருடம் தொழிற்சங்கச் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அந்தச் சமயத்தில், பல அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கத் தலைவராகவும் செயல்பட்டனர். பின்னர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முன்னணி தொழிற்சங்கத் தலைவர்களான வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவர்களாகப் பதவிவகித்தனர். பலர் மத்திய அரசில் அமைச்சர்களாகப் பதவிவகித்தனர். அதேபோல், மாநிலங்களிலும் பல தொழிற்சங்கத் தலைவர்கள் மாநில அமைச்சர்களாகவும் வலம்வந்தனர். திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையில் முன்னணி வகித்த என்.வி.நடராஜன், திமுக ஆட்சியில் தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதேபோல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் அங்கம் வகித்த ராகவானந்தம், எம்ஜிஆர் ஆட்சியில் தொழிலாளர் அமைச்சராகப் பதவிவகித்தார். ரயில்வே தொழிற்சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களில் தலைமைப் பொறுப்பு வகித்த ஜார்ஜ் பெர்னான்டஸ், ஜனதா ஆட்சியில் தொழில் அமைச்சரானார்.

ஆனால், அமைச்சர் பொறுப்புக்கு வந்த பிறகு இவர்களெல்லாம் நேரடித் தொழிற்சங்கப் பொறுப்புகளில் இல்லை. மேலும், அமைச்சர் பதவியில் இருக்கும்போது தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் பிரச்சினைகள் ஏற்படும்போது, அத்தகைய நபரால் பாரபட்சமின்றித் தனது பணியை ஆற்ற முடியாது என்பதுதான் அதற்குக் காரணம். மேலும், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் அரசியல் சார்ந்த பல தொழிற்சங்கங்கள் செயல்படும்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனது கட்சி சார்பான தொழிற்சங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம்.

தொழிற்சங்கங்களில் அமைச்சர்கள் பதவி வகிக்கலாமா என்ற கேள்விக்குத் தார்மீகரீதியான ஆட்சேபணைகள் இருந்தனவேயொழிய, அதற்கான தடையை நாடாளுமன்றம் 2001-ல்தான் உருவாக்கியது. தொழிற்சங்கச் சட்டம் 22(3)-ன் கீழ் மத்திய (அ) மாநிலங்களில் அமைச்சராக இருக்கும் ஒருவர், பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களில் நிர்வாகியாகவோ (அ) செயற்குழு உறுப்பினராகவோ (அ) சாதாரண உறுப்பினராகவோ இருக்க முடியாது என்று சட்டம் திருத்தப்பட்டது.

தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, அவை இணைக்கப்பட்ட பேரவையும் (சம்மேளனம்) அந்தச் சட்டத்தின் கீழ் தொழிற்சங்கமாகக் கருதப்படும்.

ஆக, அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிலாளர்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று விரும்பினால், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தொழிற்சங்கப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இரண்டும் இல்லாதபட்சத்தில், மாநில ஆளுநர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்