இந்தி பேசாத மாநிலங்களில் பெரியதாக இருந்ததும், மொழிவழி எல்லையைக் கடந்து பிரிவினையை எதிர்கொண்டதுமான ஆந்திரம் இப்போது மூன்று தலைநகரங்கள் எனும் முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலங்கானாவுடன் ஹைதராபாத் சென்றுவிட்ட நிலையில், புதிய தலைநகரமாக அமராவதியைக் கட்டமைத்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலையும் அறிவித்திருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவைக் குலைக்கும் வகையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்குப் பின், பல்வேறு தனிப்பட்ட அரசியல் கணக்குகள் ஆந்திர அரசியலில் சொல்லப்பட்டாலும், அவற்றைத் தாண்டி நிர்வாகரீதியில் இந்த முடிவை எப்படிப் பார்ப்பது? இது எத்தகைய தாக்கங்களை உருவாக்கலாம்?
அரசு நிர்வாகத் துறையில் நெடிய அனுபவம் கொண்டவரும், விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அஷோக் வர்த்தன் ஷெட்டி பேசுகிறார்.
இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், சமச்சீர் வளர்ச்சி மற்றும் அதிகாரப் பரவலாக்கலின் அவசியத்தை நீண்ட காலமாக நாம் பேசிவருகிறோம். ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்கள் என்ற யோசனை பல மாநிலங்களில் அவ்வப்போது எழுப்பப்பட்டுவரும் கோரிக்கையாகவே இருக்கிறது. ஆந்திர அரசின் மூன்று தலைநகரங்கள் முடிவை அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சமச்சீர் வளர்ச்சி ஆகியவற்றின் பார்வையில் நாம் அணுக முடியுமா?
இல்லை. இந்த விஷயத்தை அப்படிப் பார்க்க முடியாது. ஒரு மாநிலம் அல்லது நாடு பல தலைநகரங்களைக் கொண்டிருப்பது மிகவும் அரிது. காரணம், அது நல்ல யோசனை அல்ல என்பதும், நல்ல பலன்களைத் தரக் கூடியதல்ல என்பதும்தான். நிர்வாகம், நிதி மற்றும் தளவாடக் கண்ணோட்டத்தில், மூன்று தலைமையிடங்களும் ஒரே மாநகரத்தில் இருப்பது மிகுந்த அர்த்தபூர்வமானது. ஒரு நாடு அல்லது மாநிலத்தின் சமச்சீரற்ற வளர்ச்சியின் சிக்கலை அணுகவும் அதிகாரத்தைப் பரவலாக்கவும் வேறு ஏராளமான தீர்வுகள் இருக்கின்றன. கூடுதல் தலைநகரங்கள் தீர்வு அல்ல. நல்லாட்சி, சிறந்த உள்கட்டமைப்பு, முதலீடு ஈர்ப்புக் கொள்கைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்களை அதிக அளவில் பகிர்ந்தளித்தல், தனியார் துறை மற்றும் தன்னார்வத் துறையுடன் கூட்டுறவை உருவாக்குதல், ஊர் வளர்ச்சியில் அதிகக் குடிமக்களின் பங்கேற்பு போன்ற ஏனைய விஷயங்களால் மட்டுமே வளர்ச்சியைப் பரவலாக்க முடியும்.
மூன்று தலைமையிடங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்? இதன் பின்னுள்ள நிர்வாக முக்கியத்துவம் என்ன?
நமது நாடாளுமன்ற அமைப்பில், சட்டமன்ற மற்றும் நிர்வாகத் தலைநகரங்கள் ஒரே நகரத்தில் இருப்பது முற்றிலும் அவசியம். நிர்வாகத் தலைநகர் விசாகப்பட்டினம் சட்டமன்றத் தலைநகர் அமராவதியிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவிலும், நீதித் துறைத் தலைநகர் கர்னூலிலிருந்து சுமார் 700 கிமீ தொலைவிலும் உள்ளன. கர்னூலிலிருந்து அமராவதி சுமார் 350 கிமீ தொலைவில் உள்ளது. ஆந்திர அரசின் இப்போதைய முடிவால் சட்டமன்ற அமர்வுகளின்போது, அரசாங்கத்தின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சில முக்கிய துணை அதிகாரிகள் அமைச்சர்களுடன் விசாகப்பட்டினத்தை விட்டு அமராவதிக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல முறை இப்படி அமராவதியில் நீண்ட நாட்கள் தங்க வேண்டியிருக்கும். பயணம் மற்றும் தங்குவதற்கான கணிசமான செலவு தவிர, இந்த ஏற்பாடானது அதிகாரிகள் விலகியிருக்கும் காலங்களில் நிர்வாகத் தலைநகரத்தில் வழக்கமான அரசாங்க வேலைகள் கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறு சட்டமன்றத் தலைநகரம் மற்றும் நிர்வாகத் தலைநகரம் வெகு தொலைவில் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமைச் செயலகத்தில் பொது விஷயங்களைப் பின்தொடர்வது சிரமமாக இருக்கும். மேலும், விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றத்துக்காக கர்னூல் செல்வது சிரமமாக இருக்கும் (கர்னூலில் விமான நிலையம் வேறு இல்லை என்பது இங்கே கூடுதல் பிரச்சினை). பயணம் மற்றும் தங்குவதற்கான கணிசமான செலவைத் தவிர, இது அவர்களின் வழக்கமான அரசாங்க வேலைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்துக்கும் மேலாக, பல தலைநகரங்களுக்கு இடையில் பயணம் செய்வது குடிமக்களுக்குப் பெரும் அலைக்கழிப்பாக மாறிவிடும்.
தன்னுடைய முடிவுக்கு தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் காட்டுகிறது ஆந்திரம். தென்னாப்பிரிக்க அனுபவத்துடன் ஆந்திரத்தின் முடிவைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரமாக பிரிட்டோரியாவும், நாடாளுமன்றத் தலைநகரமாக கேப்டவுனும், நீதித் துறைத் தலைநகரமாக ப்ளூம்பொன்டைனும் செயல்பட முக்கியமான காரணம், அதன் வரலாற்று அடிப்படை. தென்னாப்பிரிக்காவில் அதற்கு முன் அந்நாட்டின் ஆங்கிலேயர்களுக்கும் போயர்களுக்கும் இடையே ஒரு கடுமையான போர் நடந்தது. அந்தப் போருக்குப் பிறகு சமரசத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் நூற்றாண்டுக்கு முந்தைய முடிவுடன் ஆந்திரத்தின் இன்றைய முடிவைப் பொருத்திப்பார்ப்பது சரியல்ல. தவிர, தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகர அனுபவம் அவர்களுக்கே திருப்திகரமான விளைவுகளைத் தரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்கா மட்டும் அல்ல; வரலாற்றுக் காரணங்களுக்காக இரண்டு தலைநகரங்களைக் கொண்ட வேறு சில நாடுகளும், மாநிலங்களும்கூட இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நாம் பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரிகள் அல்ல.
கேரளம், ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் ஏற்கெனவே நீதித் துறைத் தலைநகரமும், நிர்வாகத் தலைநகரமும் ஒரே ஊரில் இல்லை. மகாராஷ்டிரம், இமாச்சல பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தின் குளிர்கால அமர்வுகளை நிர்வாகத் தலைநகரைத் தவிர்த்து, வேறு ஒரு நகரத்தில் நடத்திவருகின்றன. சில மாநிலங்களில் இரண்டு தலைநகரங்கள் இருக்க முடியும் என்றால், ஆந்திரத்தில் ஏன் மூன்று தலைநகரங்கள் இருக்கக் கூடாது என்ற கேள்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கேரளம், ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் அவற்றின் நிர்வாகத் தலைநகரங்களிலிருந்து சற்றுத் தொலைவில் முறையே எர்ணாகுளம், கட்டாக், அலகாபாத் மற்றும் ஜபல்பூரில் அமைந்திருப்பதும், மகாராஷ்டிரம் மற்றும் இமாச்சால பிரதேச மாநிலங்களில், சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் முறையே நாக்பூர் மற்றும் தர்மசாலாவில் நடத்தப்படுவதும் அவற்றின் வரலாற்றுக் காரணங்கள் அடிப்படையிலானவை என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கூடவே, இவை நல்ல முன்னுதாரணங்கள் அல்ல என்பதையும். நம்முடைய அமைப்பில் நிலம், போக்குவரத்து, கலால், வரிகள் போன்ற சில துறைகளின் உயர் அதிகாரிகள் நீதித் துறைத் தன்மையிலான செயல்பாடுகளையும் கொண்டிருக்கின்றனர் (quasi-judicial functions). இதுபோன்ற விஷயங்களுக்கு, வழக்கறிஞர்கள் மற்றும் குடிமக்கள் விசாரணைக்கு அடிக்கடி நிர்வாகத் தலைநகருக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மாநிலங்களின் அதிகாரிகள் தொடங்கி, குடிமக்கள் வரை நீங்கள் விசாரித்தால் அவர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்வார்கள்.
நகரமயமாக்கலில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று, மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் அவற்றுக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள நகரங்களுக்கும் இடையில் உள்ள வளர்ச்சி வேறுபாடு. ஒரே மாநிலத்தின் நகரங்களுக்கு இடையே நிலவும் பாரதூர ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள இத்தகைய வழிமுறை பயன்படும் வாய்ப்பிருக்கிறதா?
அப்படியும் கருத வாய்ப்பில்லை. அது தனித்து அணுகப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்பது போக, இன்றைய ஆந்திரத்தின் முடிவுடன் அந்தப் பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கவும் முடியாது. ஏனென்றால், நீங்கள் சொல்லும் ஒரே மாநிலத்தின் தலைநகரத்துக்கும் அதற்கு அடுத்த நிலையிலுள்ள நகரங்களுக்குமான பாரதூர வேறுபாடு பிரச்சினை ஆந்திரத்தில் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், வடஇந்தியாவுடன் ஒப்பிட தென்னிந்தியாவின் எந்த மாநிலமும் இப்படியான பாரதூர வேறுபாட்டை எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை. உதாரணமாக, வங்கத் தலைநகரமான கொல்கத்தா அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான அசன்சோலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 11 மடங்கு அதிக மக்கள்தொகை கொண்டது; பிஹார் மாநிலத் தலைநகரமான பாட்னா இரண்டாவது பெரிய நகரமான கயாவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிக மக்கள்தொகை கொண்டது. ஒரு மிகப் பெரிய தலைநகரம், அதற்கு அடுத்த நிலையில் இரண்டாம் அடுக்கு நகரங்கள் (Tier 2 cities) என்பது பின்தங்கிய மாநிலங்களில் காணப்படும் பொதுவான அம்சம். ஆனால், இந்தப் பிரச்சினை ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இல்லை. தென்னிந்தியாவில் மாநிலங்களின் தலைநகரங்கள் மிகப் பெரிய நகரங்கள் என்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள நகரங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பெருநகரங்களாகும். தமிழ்நாட்டில் சென்னையையும் அடுத்த நிலையிலுள்ள கோவையையும் சொல்லலாம். நல்ல வளர்ச்சிக்கு இது ஒரு உதாரணம். தலைநகருக்கு இணையாக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழில் துறையை வளர்த்தெடுத்தல் போன்ற நடவடிக்கைகள்தான் கோவையை வளர்த்திருக்கின்றனவே தவிர, தலைநகரப் பகிர்வு அல்ல. இப்போதைய ஆந்திர அரசுடைய முடிவின் விளைவு எப்படி இருக்கும் என்றால், நிர்வாகத் தலைநகரமான விசாகப்பட்டினத்துக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மட்டும் விரைவான வளர்ச்சியைத் தரும். ஏனென்றால், அரசின் முக்கிய நடவடிக்கைகள் அங்குதான் நடக்கும். சட்டமன்றத் தலைநகரமான அமராவதி மற்றும் நீதித் துறைத் தலைநகரமான கர்னூல் இரண்டிலும் வளர்ச்சி குறைவாகவே இருக்கும்; இத்தகைய வளர்ச்சியை அவற்றைத் தலைநகராக அறிவிக்காமலேயே வேறு பல சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொண்டுவரலாம். யாருக்கும் அலைக்கழிப்பு இல்லை.
புதிய தலைநகரங்களை உருவாக்குவதற்கான மூலதனச் செலவுகள் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்? இது குடிமக்களுக்குப் பயனளிக்குமா?
பல்லாயிரம் கோடிகளில் நடக்கும் விளையாட்டு இது. எல்லா வகையிலுமே இது தவிர்க்கக்கூடிய செலவு என்றே சொல்வேன். புதிய தலைநகரங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் பெரும் மூலதனச் செலவுகள் அரசுக்கு ஏற்படும். மக்களுடைய செலவைக் கணக்கிட, இந்த நகரங்களுக்கு இடையிலான தொலைவை ஒப்பிட்டால் போதும்.
இந்தியாவின் இன்றைய மாநிலங்களின் உருவாக்கத்தில் மொழி அடையாளம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்த நிலையில், பழங்குடிகள் அடையாளம் அல்லது பிராந்திய அடையாளம் என்று ஏதோ ஒரு வரலாற்று, கலாச்சாரப் பண்பு இருக்கிறது. செழுமையான கூட்டாட்சிக்கு வலுவான மாநிலங்கள் அவசியம். இத்தகு சூழலில், கூடுதல் தலைநகரங்களின் உருவாக்கம் மாநிலங்களின் இந்த அடிப்படையைப் பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா? காலப்போக்கில் இத்தகு தலைநகரங்களானவை மாநிலங்களை மேலும் சிதறடித்து, அவற்றை வெறும் நிர்வாக அலகுகள் ஆக்கிவிடுமா அல்லது மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?
மாநிலங்களைப் பலவீனப்படுத்தும் என்றே நினைக்கிறேன். ஆந்திரத்தையே எடுத்துக்கொள்வோம். மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்பட்ட பின்னரும், நிர்வாகத் தலைநகரமான விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதி மட்டுமே காலப்போக்கில் அதிக வளர்ச்சியைக் காணக்கூடும்; சட்டமன்றத் தலைநகர் அமராவதி மற்றும் நீதித் துறைத் தலைநகர் கர்னூலைச் சுற்றியுள்ள பகுதிகள் பின்தங்கியிருக்கக்கூடும். இது காலப்போக்கில், பிந்தைய இரண்டு பகுதிகளும் ‘புறக்கணிக்கப்பட்டன’ என்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்கலாம். இது ஆந்திராவை விசாகப்பட்டினம், அமராவதி மற்றும் கர்னூல் தலைநகரங்களைக் கொண்ட 3 புதிய மாநிலங்களாகப் பிரிப்பதற்கான கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும். எனவே, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை அறியாமலேயே எதிர்காலத்தில் இத்தகைய துண்டித்தலுக்கான விதைகளை விதைத்து, இதனால் தெலுங்கு அடையாளத்தைப் பலவீனப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மாநிலங்களின் மொழி அடிப்படையை எதிர்க்கும் சக்திகள், இந்தி அல்லாத மொழி பேசுபவர்களைப் பிளவுபடுத்துவதற்கும் அவர்களின் மொழி அடையாளத்தைப் பலவீனப்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை வரவேற்கலாம்.
ஆக, ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்கள், துணை நகரங்கள் போன்ற பிரிவினையைக் காட்டிலும் செயல்பாடுகளைப் பரவலாக்குவதே அதிகாரப் பரவலாக்கலுக்குச் சரியான வழியாக இருக்கும் என்கிறீர்கள்?
ஆமாம், அதுதான் சமச்சீர் வளர்ச்சிக்கும் வழியாக இருக்கும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago