முடியாட்சிக்கு விடை கொடுக்கப்போகிறதா பிரிட்டன்?

By ஜூரி

பிரிட்டிஷ் அரசக் குடும்பத்து உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுத்துவிட்டனர் இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவி மேகனும். இனி அரசக் குடும்பத்துக்குரிய இளவரசர், இளவரசி என்ற பட்டங்களைப் பெயரின் முன் சேர்க்க மாட்டார்கள். விண்ட்சர் அரண்மனையில் தங்களுடைய குடியிருப்பைப் புதுப்பிக்க மக்களுடைய வரிப் பணத்திலிருந்து பெற்ற 24 லட்சம் பவுண்டுகளை அரசுக்கே திருப்பித் தந்துவிடவும் அவர்கள் முடிவெடுத்துவிட்டனர். இனி அவர்கள் தனிப்பட்ட முறையில் வேலைசெய்து குடும்பம் நடத்துவார்கள்.

அரசக் குடும்ப உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை இழக்க அவர்கள் முடிவுசெய்திருந்தாலும், அரசக் குடும்பத்தின் அங்கமாகவே தொடர்ந்து கருதப்படுவார்கள்; அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளையும் உதவிகளையும் அளிக்க அரசக் குடும்பம் தயாராகவே இருக்கும் என்று அரசக் குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பிரிட்டனில் இது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

ஜனநாயகமும் முடியாட்சியும்

பிரிட்டனில் அரசமைப்புச் சட்டப்படியான நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும் அரசக் குடும்பம்தான் வழிகாட்டியாக இருக்கிறது. நாட்டின் சம்பிரதாயத் தலைவராக ராணியே திகழ்கிறார். இப்போது ராணி இரண்டாவது எலிசபெத் ஆள்கிறார். அவருடைய கணவர் பிலிப் மன்னராக இருக்கிறார். ஒருபுறம், உலகின் ஜனநாயக முன்னோடி என்று சொல்லப்படும் பிரிட்டன், மறுபுறம் இப்படி முடியாட்சியை இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் ஏனைய நாடுகளைப் போல அல்லாமல், அதிகாரப் பகிர்வுக்கும் ஜனநாயகத்துக்கும் இங்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் அரச வம்சத்தினரே என்பதுதான். ஆகையால், பிரிட்டன் மக்கள் இடையே இன்னமும் அரசக் குடும்பத்துக்குத் தனி மதிப்பு உண்டு. விக்டோரியா, எலிசபெத் மகாராணிகள் மூன்றாவது உலக நாடுகளில் ஏழைக் குடும்பங்களுக்குக்கூட நன்கு அறிமுகமானவர்கள். தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர்களை அந்தக் காலத்தில் சூட்டி மகிழ்ந்தவர்கள் அநேகம்.

உலகையே ஒருகாலத்தில் கட்டி ஆண்ட பேரரசின் குடும்பம் இன்றைக்கு அரசு மானியத்தால் மட்டுமே வாழ்கிறது. இந்தக் குடும்பத்துக்கு ஆகும் செலவு மக்களுடைய வரிப்பணத்திலிருந்துதான் எதிர்கொள்ளப்படுகிறது என்றாலும் அரசியல், வணிகம், ராணுவம், வெளியுறவுத் துறைகளில் அரசக் குடும்பத்தின் செல்வாக்கு பல நன்மைகளையும் பெற்றுத்தருகிறது.

புதிய வாரிசுகளின் போக்குகள்

எலிசபெத் - பிலிப் தம்பதியின் மகன் சார்லஸின் வாரிசுகள் வில்லியம், ஹாரி இருவரும்தான் இந்தத் தலைமுறை அரசக் குடும்பத்து வாரிசுகள். இவர்களில் வில்லியம் இப்போது கேம்பிரிட்ஜ் சீமானாகவும் (பிரபு), அவருடைய மனைவி கேதரின் கேம்பிரிட்ஜ் சீமாட்டியாகவும் திகழ்கிறார். இளைய மகன் ஹாரி, மேகன் மார்கெல் என்ற நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சஸ்ஸெக்ஸ் சீமான், சீமாட்டிகளாக நியமிக்கப்பட்டனர். இவை அலங்கார, கௌரவப் பதவிகள்.

முப்பத்தெட்டு வயதாகும் மேகன் மார்கெல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் பிறந்தவர். அவருடைய தாய் டோரியா ரேக்லேண்ட் ஆப்பிரிக்க இன அமெரிக்கர். அப்பா ஐரோப்பாவின் காகசஸ் மலைப்பகுதியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர். எனவே, மார்கெல் ஆப்பிரிக்க-அமெரிக்கர். மேகன் மார்கெல் முதலில் நடிகர் - தயாரிப்பாளரான டிரெவர் ஏங்கல்சன் என்பவரை 2011-ல் மணந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மணவிலக்கு பெற்றார். பிறகு, புகழ்வாய்ந்த சமையல் கலைஞர் கோரி விடியல்லோவுடன் இரண்டாடுகள் நட்பில் இருந்தார். அதன் பிறகே இளவரசர் ஹாரிக்கு அறிமுகமாகி, அவரை மணந்தார்.

அரசக் குடும்ப வழக்கப்படி படிப்பு, ராணுவப் பயிற்சி, பட்டம் எல்லாம் பெற்றிருந்தாலும், அடங்காத பிள்ளை என்ற பெயரையும் பெற்றவர் ஹாரி. அதற்குக் காரணம் அவருடைய 12 வயதின்போது தாய் டயானா, தந்தை சார்லஸ் மணவிலக்கு நிகழ்ந்ததும் வெகு விரைவிலேயே பாரிஸ் நகரில் நடந்த விபத்தில் தாய் டயானாவை இழந்ததும்தான். ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த செல்ஸி டேவி என்ற பெண் தொழிலதிபர், வழக்கறிஞருடன் ஐந்து ஆண்டுகள் நட்பிலிருந்த ஹாரி பின்னர் அவரைப் பிரிந்தார். பின்னரே மேகன் மார்கெல்லை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு பல குடும்பங்களில் அண்ணன் - தம்பிகளுக்கு இடையே இடைவெளி ஏற்படுவதைப் போல வில்லியம், ஹாரி இடையேயும் இடைவெளி ஏற்பட்டது. இதற்கு மேகன் மார்க்கெல்லின் பின்னணியும் ஒரு காரணம். தன்னைக் காட்டிலும் மூன்று வயது இளையவரான ஹாரியின் முடிவுகளில் மேகன் மார்க்கெல் நிறைய செல்வாக்கு செலுத்துகிறார் என்ற பேச்சும் உண்டு. அதன் தொடர்ச்சிதான் ஹாரி – மேகன் மார்க்கெல்லின் இந்த அறிவிப்பு என்று பேசப்பட்டாலும், இதை ஒரு புதிய தொடக்கமாகவும் பார்க்கிறார்கள் பிரிட்டிஷார். அரசக் குடும்பத்தை இனியும் தூக்கிச் சுமக்கக்கூடாது என்று பேசிவரும் விமர்சகர்களுக்கு இது கூடுதல் உவகை அளிப்பதாக மாறியிருக்கிறது. வில்லியமும் ஹாரியைப் போலவே எதிர்காலத்தில் முடிவெடுத்தால் பிரிட்டன் ஜனநாயகமும் முழுமை பெறும் என்று பேசுகிறார்கள் அவர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்