மானுடவியல், நாட்டார் வழக்கியல் துறைகளில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவருபவர் டி.தருமராஜ். சமீபத்திய அவரது நூலான ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ இந்தப் புத்தகக்காட்சியில் அதிகம் விற்ற ஆய்வுநூல்களில் ஒன்று. அயோத்திதாசர் படைப்புகள் தொகுக்கப்பட்டு இருபது ஆண்டுகளாக தமிழ்ச்சூழலில் பேசப்பட்டுவரும் விஷயங்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். தருமராஜ் உடனான உரையாடலிலிருந்து...
1845-ல் பிறக்கும் காத்தவராயன் எந்தக் காலகட்டத்தில் அயோத்திதாசர் ஆகிறார்? 1892 சென்னை மஹாஜன சபைக் கூட்டத்துக்குப் பிறகு, பிராமணியத்துக்கு எதிராகவும் இந்து அடையாளத்துக்கு வெளியிலும் அவருடைய புதிய பயணம் தொடங்குகிறது என்பது தெரிகிறது. அதற்கு முன் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது, என்னவாக இருந்தார்?
அயோத்திதாசரைப் பற்றிய விவரங்கள் எதுவாக இருந்தாலும் அவர் 1907 முதலாக 1914 வரை நடத்திய ‘தமிழன்’ பத்திரிகையின் வாயிலாக நமக்குக் கிடைப்பவைதான். அதில் அவர் தனது வாழ்வைப் பற்றி என்ன சொல்கிறாரோ அதுதான் அவரைப் பற்றிய சித்திரத்துக்கு உதவுகிறது. அதை வைத்துப் பார்க்கிறபோது 1845-ல் அவர் பிறந்ததாக அறிகிறோம். இயற்பெயர் காத்தவராயன்- பிற்காலத்தில் தன்னுடைய ஆசிரியர் அயோத்திதாசக் கவிராயரின் தாசனாகத் தன்னை வரித்துக்கொள்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் இரு தலைநகரங்களில் ஒன்றாக இருந்த நீலகிரியில்தான் அவருடைய இளம்பிராயம் கழிகிறது. ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு பட்லராகப் பணியாற்றிவந்த அவருடைய தாத்தா கந்தப்ப பட்லர்தான் திருக்குறள் பிரதியை எல்லீஸுக்குக் கொடுத்தவர். பாரம்பரியமாக சித்த மருத்துவம் செய்துவரும் பறையர் சமூகத்தின் வள்ளுவர் பிரிவைச் சேர்ந்தவர் என்று தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார்.
அயோத்திதாசக் கவிராயரிடம் குருகுல முறையில் தமிழ் இலக்கிய, இலக்கண பனுவல்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார். 1892-ல் சென்னை மஹாஜன சபைக் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் வழிபாட்டு உரிமைக்காக பேசும்போது அவருடைய குரல் நிராகரிக்கப்படும் இடத்திலிருந்து அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். பிராமணியத்துக்கு எதிராக இந்து அடையாளத்தைப் புறந்தள்ளி பிற்பாடு அவர் உருவாக்கும் பூர்வ பௌத்தன் எனும் அடையாளத்துக்குப் பின் நெடிய பயணமிருக்கிறது. எனவே குடும்பத்திலிருந்து கிடைத்த சித்த மருத்துவ அறிவு, அயோத்திதாசக் கவிராயரிடமிருந்து பெற்ற தமிழறிவு, கர்னல் ஆல்காட் மூலமாக அறிமுகமான பௌத்தம் என்று இவை மூன்றும் கலந்ததாகத்தான் பின்னாளில் ‘பூர்வ பௌத்தன்’ என்ற அடையாளத்தை உருவாக்குகிறார்.
நீலகிரியில் இருந்தபோதே அவர் பொதுவாழ்க்கையில் அடியெடுத்துவைத்துவிட்டார் என்று கொள்ளலாமா?
1880-ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அதை ஆட்சேபித்து அவர் மனுக்கள் கொடுத்தது, நீலகிரியில் வாழ்ந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சம்பவம். இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் எங்களைச் சேர்க்கக்கூடாது என்று அப்போதே வாதிட்டிருக்கிறார். அதற்குப் பதிலாகத்தான் ‘ஆதித் தமிழர்’, 'தொல் தமிழர்’ , ‘ஆதி திராவிடர்’ என்ற அடையாளங்களையெல்லாம் அவர் சொல்லிப்பார்க்கிறார். ஆனால், காலனிய அரசாங்கம் இதை எதையுமே ஏற்கவில்லை. இவை எல்லாம் இன அடையாளங்கள் அல்லது மொழி அடையாளங்கள் மட்டுமே; சமய அடையாளங்கள் இல்லை என்று மறுத்தது. அங்கிருந்துதான் பூர்வ பௌத்தர் என்று அடையாளத்தை நோக்கி அவர் நகர்கிறார்.
அயோத்திதாசரின் சிந்தனையில் அன்றைய சென்னை எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது?
அது சென்னையில் வெவ்வேறு சிந்தனைகளும் தேடல்களும் அலைமோதிய காலகட்டம். இதில் முக்கியமான மையத்தில் ஒன்றாக இருந்த அடையாறு தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அப்போது தியாசபிகல் சொசைட்டியில் பௌத்தத்தை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஆல்காட்டின் தொடர்புக்குப் பிறகு, இலங்கைக்குச் சென்று பௌத்தராக மதம் மாறுகிறார் அயோத்திதாசர். ஆனால், காலனிய ஆட்சியாளர்கள் பௌத்தத்தைப் பார்த்த விதம் வேறானதாக இருக்கிறது. பௌத்தம் இந்தியாவில் இருந்தது, ஆனால் தற்போது அது அழிந்துபோய்விட்டது என்பதே அவர்களுடைய பார்வை. அயோத்திதாசப் பண்டிதர் இதிலிருந்து மாறுபட்டார். மக்களிடம் இன்னும் பௌத்தம் வாழ்கிறது என்று சொல்லி, நாட்டுப்புறச் சடங்குகளை அதற்கான சான்றுகளாகக் காட்டினார். தன்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்க அவர் பாலி, சம்ஸ்கிருத நூல்களையும் ஆங்கிலத்தில் வெளியான தொல்லியல் நூல்களையும் வாசித்தார். தமிழோடு சேர்ந்து நான்கு மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1898-ல் அவருடைய தேடல் தொடங்குகிறது. 1907 முதலாக ‘தமிழன்’ பத்திரிகை வழி அவருடைய சிந்தனைகள் வெளிப்படலாகின்றன.
அயோத்திதாசர்தான் முதன்முதலில் ‘திராவிடர்’ ‘ஆதித் தமிழர்’ எனும் சொல்லாடல்களைக் கையாளுகிறார் என்றாலும், பறையர் சமூகத்தினரை மட்டுமே அந்த வரையறைக்குள் கொண்டுவருகிறாரா? அதாவது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரோ அல்லது ஒட்டுமொத்த பிராமணரல்லாதோரோகூட அந்த வரையறைக்குள் வருவதாக தெரியவில்லையே! தன்னுடைய சமூகத்தைத் தாழ்ந்தோர் இல்லை என்று கூறும் அவர், தாழ்ந்தவராகிய ஒரு வகுப்பாரும் உண்டு என்று இன்றைய தலித் சமூகத்தில் சில பிரிவினரைக் குறிப்பிடவும் செய்கிறார். அதேபோல, இன்றைய பிராமணர்களை வேஷ பிராமணர்கள் என்றும் தங்களுடைய இடத்தைப் பறித்துக்கொண்டவர்கள் என்றும் சொல்வதன் மூலம் சாதியப் படிநிலையைத் தலைகீழாக்கம் செய்கிறாரே தவிர, அம்பேத்கரைப் போல சாதிய அமைப்பை உடைக்க முற்படுபவராகத் தெரியவில்லை என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்படிச் சொல்ல முடியாது. அயோத்திதாசர் முன்மொழிந்த அடையாளங்கள் எல்லாமே ஒரு புதிய கருத்தியலை உருவாக்குவதானது. உதாரணமாக, பூர்வத்தில் பௌத்தர்களாக இருந்தவர்கள் என்று அயோத்திதாசர் வழி சுட்டப்படும் நாம் புரிந்துகொள்ளும் ‘பறையர்’ சமூகத்தினர் அயோத்திதாசரின் சொல்லாடலில் ஒரு சாதியாக இருந்தார்கள் என்று வரவில்லை. ஆக, பூர்வ பௌத்தர்கள் என்று அவர் குறிப்பிடுவது இன்றைக்கு பறையர் சமுகம் என்ற சாதியை அல்ல. ஒரு கருத்தியல் அடிப்படையில் ஒரு குழுவுக்குச் சொல்லப்பட்ட பெயர் அது. இன்றைக்கு பூர்வ பௌத்தர்கள் யார் என்று தேட முடியாது.
அயோத்திதாசரின் மிக முக்கியமான பங்களிப்பு என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
தமிழின் பாரம்பரியமான சிந்தனாமுறையை வைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட சமூகச் சிக்கலை அவர் எதிர்கொண்டதுதான். அவருடைய பூர்வ பௌத்தம் ஒரு கற்பனை இல்லை. அதற்கு ஆதாரமாக அவர் வாய்மொழி மரபுகளையும் தமிழ்ப் பனுவல்களையும் சித்த மருத்துவ நூல்களையும் பயன்படுத்துகிறார். வள்ளுவரையும், திருமூலரையும் பௌத்த பிக்குகளாக அவர் குறிப்பிடுகிறார். பௌத்தமும் சமணமும் ஒன்று என்பதும் பிற்பாடு அப்படியான பௌத்தத்தை சைவம் முழுக்க உள்வாங்கிச் செரித்துவிட்டது என்பதும் அவர் பார்வை. அதனால்தான் அயோத்திதாசரின் பௌத்தத்தை தமிழ் பௌத்தம் என்று அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. இதைத் தாண்டி சித்த மருத்துவத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. திரு.வி.க.வின் நாட்குறிப்பு இதற்குச் சான்று பகிர்கிறது.
தமிழின் முன்னோடி பத்திரிகையாளர்களில் ஒருவராக அயோத்திதாசரை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தொடங்கியதிலிருந்து தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏழாண்டுகள் வாரந்தோறும் இடைவெளியின்றி ‘தமிழன்’ பத்திரிகையை அவர் நடத்தியிருக்கிறார். அதில் ஏராளமான தொடர் கட்டுரைகள் அவருடையவை. தன்னுடைய கட்டுரைகளின் வழி இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைக்கிறார். ‘இந்திர தேச சரித்திரம்’ அதன் உச்சம்.
அம்பேத்கருடன் ஒப்பிட, பூர்வ பௌத்தம் என்ற அயோத்திதாசரின் கருதுகோள் நவீன வரலாற்று கால வரிசையோடும் இன்றைய சூழலோடும் பொருந்துவதாகக் கருதுகிறீர்களா?
அயோத்திதாசர் வரலாற்று ஆசிரியர் இல்லை என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். அவர் சொன்னது வரலாறு என்றோ அறிவியல்பூர்வமானது என்றோ நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அவர் வரலாற்றை ஒரு புராணக் கதையைப் போலவே எழுத முயற்சிக்கிறார். அது வரலாற்றையும் புராணங்களையும் இணைக்கிற ஒரு முயற்சி. பௌத்தப் பெருங்கதையாடல் என்றே நான் அதை அழைக்கிறேன்.
அயோத்திதாசர் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் மறதிக்குள் சிக்கியதற்கு ‘அவர் வெகுஜன மக்களிடம் செல்லவில்லை’ என்பதும் ‘ நவீன வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறை அவரிடம் இல்லை’ என்பதும் காரணம் என்று உங்கள் நூலில் சொல்கிறீர்கள். மாறாக, சாதாரணர்களை மையப்படுத்திப் பேசியதும், நவீனம் நோக்கி அவர்களை இழுத்ததுமே பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் வெற்றி என்றும் சொல்கிறீர்கள். இப்படியிருக்கையில், பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் அயோத்திதாசரை மறைத்தார்கள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெரியார் ஒரு ஆய்வாளர் அல்ல. அதனால் அவர் மீது எவரும் குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால், இவ்வளவு நாள் பிராமணியத்துக்கு எதிரான இப்படிப்பட்ட ஒரு ஆளுமை வரலாற்று இருளில் மறைபட்டிருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த நிலத்தில் பெரியாரையும் திராவிட இயக்கத்தினரையும் தாண்டி உரிமையோடு வேறு யாரை நோக்கி ‘அயோத்திதாசர் ஏன் இங்கே மறைபட்டிருந்தார்’ என்று கேட்க முடியும்?
இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்ள எந்தெந்த வகைகளில் எல்லாம் அயோத்திதாசரை நாம் கருவியாகக் கொள்ள முடியும்?
அயோத்திதாசர் ‘தமிழன்’ என்ற பெயரில் அவர் பத்திரிகை நடத்தியதே மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த பொது அடையாளத்தை நோக்கி அவர் எடுத்து வைத்த அடிதான் நமக்கான முன்கருவி. சாதிய அடிமைத்தளத்திலிருந்து வெளியே வரும் அவர், மொழி அடையாளத்தை ஏன் வரித்துக்கொண்டார் என்றால் மொழி வழியேதான் இந்தச் சாதி அடையாளத்திலிருந்து முழுமையாக வெளியே வர முடியும் என்று அவர் நம்பினார் என்று நான் நினைக்கிறேன். சாதியத்திலிருந்தான விடுதலையை சாதிக்குள் இருந்துகொண்டு பெற முடியாது. சாதியிலிருந்து வெளியேற மொழி நமக்கு வழிகாட்டுகிறது.
அயோத்திதாசரை அறிந்துகொள்ள நீங்கள் பரிந்துரைக்கும் நூல்கள்?
ராஜ் கௌதமனின் ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள்’, ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்’ ஆகிய இரண்டு நூல்களும் நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago