இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதையுலகில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் குட்டி ரேவதி. இதுவரை இவரது 12 கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. தற்போது குட்டி ரேவதியின் ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுதி ‘எழுத்து பிரசுரம்’ வெளியீடாக வந்திருக்கிறது. கவிஞர், சிறுகதையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர் என்று பல முகங்களைக் கொண்ட குட்டி ரேவதியுடன் உரையாடியதிலிருந்து...
கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்?
அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால், எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்த மருத்துவத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை அள்ளிவந்து எனக்கு வழங்கியது. கூடவே, 90-களில் திருநெல்வேலியில் நிலவிய இலக்கியப் பண்பாடு எனப் பல காரணங்கள் ஒன்றிணைந்துதான் கவிதைக்குள் நுழைந்தேன்.
நீங்கள் எழுதவந்த காலத்தின் பெண் கவிமொழியும் தற்போதைய பெண் கவிமொழியும் மாறியிருக்கிறது ௭ன்று நினைக்கிறீர்களா?
பெண் கவிமொழி காலந்தோறும் நிறைய மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய பரிமாணம் பெறுகிறது. உள்ளடக்கங்களில், கவிதை எழுத வேண்டிய நோக்கங்களில், மொழியின் திறத்தில் என எல்லாவற்றிலும். தற்போதைய பெண் கவிஞர்கள் மொழியை எளிதான ஓர் ஊடகமாகப் பயன்படுத்த முடிகிறது. நாங்கள் எழுத வந்தபோது, அது ஒரு போராட்டத்துக்கான வேகத்துடன் இருந்தது. எழுதுவதே விடுதலையாக இருந்த காலகட்டத்திலிருந்து விடுதலைக்கான குரலாய் கவிதையை ஆக்கும் சவால், இன்றைய பெண் கவிஞர்களின் செயல்பாட்டில் இருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் ௧விதை எழுதிவருகிறீர்கள். இந்தப் பயணத்தில் கவிதை உங்களுக்கு என்ன விதமான சாத்தியங்களை, திறப்புகளைத் தந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். பெருவாரியான ஆண் எழுத்தாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்த என் கவிதைகள், தற்போது இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளை ஒரு கல்லூரி மாணவன் எந்த மனத்தடையும் சுய இறுக்கமும் இன்றி வாசிக்கத் தொடங்குகிறான்.
தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன். கவிதைகள் வழியாக, நம் தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு போராட்ட காலகட்டங்களின் ஊடாக நான் என் மொழியின் துணை கொண்டு கடந்து வந்திருக்கிறேன். இயன்றவரை, கவிதை மொழி சார்ந்த அத்தனை சாத்தியங்களையும், விடுதலைக்கான வழிகளையும் தொடர்ந்து கண்டறிந்துகொண்டே இருக்கிறேன்.
புனைவை முயன்று பார்த்தாலும் கவிதை உங்கள் பிரத்யேகத் தேர்வாக இருக்கிறது அல்லவா... அது ஏன்?
ஆமாம்! ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’ என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. மூன்றாவதாக, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘மீமொழி’ வெளிவரவிருக்கிறது.
உயிர் வாழ, தனிமனித மறுமலர்ச்சிக்கு எப்போதும் கவிதையுடன்தான் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. கவிதை, தீப்பந்தம் போன்றது. எனக்கு நானே வழிகாட்டிக்கொள்ளவும், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் கவிதை தரும் ஊக்கம் எல்லா காலங்களிலும் தேவையாக இருக்கிறது. சமூக மாற்றங்களை உணர்ந்துகொள்ள, அநீதிகளை எதிர்க்க, தனிமனித வாழ்வைத் தாண்டிச் சமூக உறவுகளைப் பேண என எல்லாவற்றுக்கும். கவிதைக்குள் ஒரு குரல், தீவிரத்தின் தீவிரமான குரல் ஒன்று தீப்பிழம்புபோல் எரிந்துகொண்டே இருக்க வேண்டும்.
இலக்கிய உலகில் பெண்களுக்கான இடம், அங்கீகாரம் எப்படி இருக்கின்றது?
எப்போதுமே இலக்கிய உலகம் பெண்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் கொடுப்பதில் தயக்கத்துடனும் மனத்தடையுடனும்தான் செயல்படுகிறது. ஆனால், அதை எதிர்பார்த்து இன்று எந்தப் பெண் எழுத்தாளரும் செயல்படுவதில்லை. கறாரான சமூக விமர்சனங்களை பெண்கள் தங்கள் எழுத்தில் முன்வைத்துக்கொண்டே இருப்பதும், அதற்கான வாய்ப்புகளைத் தம்மளவில் உருவாக்கிக்கொண்டே இருப்பதும், சமூகத்தை அதை நோக்கி இணங்கச் செய்வதும்தான் அங்கீகாரங்களில் சேரும். எனில், பெண் எழுத்து பெருமளவில் இதை வென்றிருக்கிறது.
‘முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது இன்றைய சூழல் எப்படி இருக்கிறது?
இருபது ஆண்டுகளில் பொதுச் சமூகம் பெண் எழுத்தை அணுகுவதில் நிறைய மாறியுள்ளது. பெண் எழுத்துதான் இன்று இலக்கியத்தில் முதன்மையானதாக இருக்கிறது. பெண் வாசகர்கள் இந்தப் புத்தகக்காட்சியில் அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனில், பெண் எழுத்தின் செயல்பாடும், பெண்கள் மொழியை நோக்கி வேகமாக நகரும் சமூக அசைவும்தான் காரணம்.
இன்று வெகு எளிதாக, ஒரு பெண் தனது கவி ஆளுமையைக் கையாள முடிகிறது. கவிதையில் சமூகக் கட்டமைப்பை எழுதுவது அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றைய பெண் கவிதை, சாதி, மதம், கடவுள், திருமணம் என எந்தச் சமூக நிறுவனத்தையும் கவிதையில் விமர்சிக்கும் பொதுவெளியும் பயிற்சியும் அழகு நிலையும் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றி நிறையப் பெண் கவிஞர்கள் நிலைத்த தீவிரத்துடனும், பொதுப்பொருள் சார்ந்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், பெண் எழுத்தைக் கவனப்படுத்துகின்றன. பதிப்பாளர்கள், பெண் படைப்புகளை முன்னணிப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தில் பெண் கவிதை ஒரு முழக்கம்போல், அழியாத பாடல்போல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் இன்னும் கவிதை வழியாக நாம் மாற்றியமைக்க வேண்டிய சிந்தனைகளும் போக்குகளும் நிறைய இருக்கின்றன.
உங்கள் திரைப் பயணம் எப்படி இருக்கிறது?
சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. ‘சிறகு’ என்ற என் முதல் படத்தை இயக்கிவருகிறேன். எப்போதுமே திரைத்துறையில் நான் இயங்க விரும்பினேன். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றத் தொடங்கிய பின்பு, அது சீரான தொழில் துறை சார்ந்த பயணமாக மாறியது. எதைச் செய்தாலும் எப்படிச் சிறப்பாக செய்வது என்று கற்றுக்கொடுக்க, அவருக்கு நிகர் அவரே. விரைவில், எனது ‘சிறகு’ திரையைத் தொடவிருக்கிறது.
உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்? சமகாலத்தில் நம்பிக்கை தருபவர்கள் யார்?
என் ஆதர்ச எழுத்தாளர் கவிஞர் பிரமிள்தான். காரணங்கள், நான் எழுத வந்தபோது சந்தித்த எதிர்ப்பின் அரசியலை, சாதிய ஒடுக்குமுறை அரசியலை அவர் எழுத்து வழியாகவே தெளிந்தேன். கவிதை மொழியை அவர் அளவுக்குக் கூர்மையான சமூக ஆயுதமாக மாற்றியவர் எவரும் இல்லை. கவிஞர் தேவதேவனின் சமரசமின்மை, அரிய ஒரு சமூக விழுமியம். எவரிடமும் காணக் கிடைக்காதது. நான் என்றென்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒன்று.
என்னுடன் எழுத வந்தவர்களை, இன்றைய இளங்கவிஞர்களைத் தொடர்ந்து நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். கவிதையின் திசையும் மொழியின் போக்கும் எங்கே மாறுகின்றன என்பதை உணர்த்த வல்ல அரிய உரைகற்களாக தற்காலக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். பெண் கவிஞர்களில், சஹானா, மனுஷி, முபீன் சாதிகா, தனசக்தி, யாழினி ஸ்ரீ, தீபு ஹரி, தென்றல் சிவக்குமார், கயல், சிங்கப்பூர் கனகலதா என்று நிறைய பெண் கவிஞர்களைப் பின்தொடர்கிறேன். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து கவிஞராக உருவெடுத்திருக்கும் சுபா செந்தில்குமாரின் கவிதைகள் நவீனக் கவிதையின் அடுத்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. புதிய தலைமுறையினர் ஒவ்வொருவரின் கவிதை வெளிக்குள்ளும் பயணிப்பது, நான் மேற்சென்று எழுதிச்செல்ல உதவுகிறது.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago