சி.ஆன்றனி விஜிலியஸ்
பிரிட்டன் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்ற வழக்கு காலனிய காலத்தில் உண்டு. இன்றைய பிரிட்டனோ வெறும் 6.64 கோடி மக்கள்தொகையுடன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து ஆகிய பிராந்தியங்களுடன் சுருங்கி நிற்கிறது. பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து சுதந்திரம் பெறவும், அயர்லாந்து குடியரசுடன் வடஅயர்லாந்து ஒருங்கிணையவும் உணர்வுபூர்வமான அரசியல் ஸ்காட்லாந்திலும், வடஅயர்லாந்திலும் மேலெழுந்து நிற்க ஏற்கெனவே வெல்ஷ் மொழி வழி தனித்துவ அடையாளம் பேணும் வேல்ஸும் இதையெல்லாம் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது. எங்கே எதிர்காலத்தில் பிரிட்டன் வெறுமனே இங்கிலாந்தாக மட்டுமே சுருங்கிவிடுமோ என்ற கவலையும் பிரித்தானியர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. இத்தகு சூழலில்தான் சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தல் என்னென்ன விளைவுகளைக் கொண்டுவருமோ எனும் கேள்வியை எழுப்புகிறது.
சோவியத் ஒன்றியத்துக்குப் பிந்தைய காலகட்டத்தின் தனித்த பொருளாதார வல்லரசாகப் பீடுநடை போட்டுவந்த அமெரிக்காவையும், அன்றைய ரஷ்யாவின் இடத்தை நோக்கி மெல்ல நகரத் தொடங்கிய சீனாவையும் பொருளாதாரப் போட்டியில் எதிர்கொள்ளும் நோக்கோடுதான் 28 ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியமாகப் புத்துயிர் பெற்றது ஐரோப்பிய ஒன்றியம். சுமார் 51.3 கோடி மக்கள்தொகை - அதாவது உலகின் ஏழு சதவீத மக்களின் தொகுப்பு இதுவென்றாலும், பொருளாதாரத்தில் உலகின் நான்கில் ஒரு பங்கைப் பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இது நிலைத்து நின்றது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பெருகிய குடியேற்றம் ஏற்படுத்திய அதிருப்தியும், பிரிட்டன் தன்னுடைய பழைய அடையாளத்தோடு தனித்துச் செயல்படுவதே அதன் எதிர்காலத்துக்கு நல்லது என்ற எண்ணமும் மெல்ல வளர்ந்து நாளடைவில் வலுத்தபோது இதற்காக நடத்தப்பட்ட கருத்தெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதே சரி எனும் முடிவை உறுதிசெய்தது; இதைத்தான் ‘பிரெக்ஸிட்’ என்கிறோம். இந்த வெளியேற்றம் எவ்வளவு வேகமாக, எப்படி நடக்க வேண்டும் என்பதை மையப்படுத்துவதாகவே சமீபத்திய தேர்தல் அமைந்துவிட்டது. பிரிட்டனின் வெளியேற்றத்தை உரக்கப் பேசிய போரிஸ் ஜான்சனின் வெற்றியை உலகெங்கும் பரவிவரும் தேசியவாதத்தின் தொடர்ச்சியோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
எப்படியானது பிரிட்டன் அரசியல்?
பிரிட்டனின் மேல்சபை பிரபுக்கள் அவையில் (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) 300 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 240 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 60 பேர் நியமிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கீழ்சபை ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ என்றழைக்கப்படுகிறது. இதில் 650 உறுப்பினர்கள் இருப்பார்கள். கிட்டத்தட்ட இதன் வேறொரு வடிவம்தான் இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது.
பிரிட்டனின் இரு பெரும் கட்சிகள் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் மரபுத்துவக் கட்சியும், லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி எனப்படும் தாராளத்துவ ஜனநாயகக் கட்சியும். இவற்றோடு ஸ்காட்லாந்தின் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி, வடஅயர்லாந்தின் ஜனநாயகத் தொழிற்சங்கக் கட்சி ஆகியவை பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஏனைய கட்சிகள்.
பிரெக்ஸிட்டின் பேரால், இரண்டு ஆண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் பிரிட்டன் மக்கள் மீது திணிக்கப்பட்டது. சென்ற வாரம் நடந்து முடிந்த தேர்தலானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவதாகும்.
2015-ல் நடந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக மரபுத்துவக் கட்சியின் டேவிட் கேமரூன் பெரும்பான்மையுடன் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் பிரிட்டன் இருக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவருக்கு எதிராகத் திரும்பியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் தந்ததால் 2016-ல் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அடுத்து, தெரேசா மே பிரதமராகப் பொறுப்பேற்றார்; மக்களின் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவேன் என்றார். பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பம் முதலே சிக்கல்தான். தெரசா மே திணற ஆரம்பித்தார். எதிர்பார்த்த ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
பிரெக்ஸிட்டை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்தப் பளு பிரிட்டன் அரசின் மீது விழுந்தது. அனைவரின் கோரிக்கைக்கும் மதிப்பளிக்கும் ஒருங்கிணைந்த கருத்தை தெரசா மேயால் உருவாக்க முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர் பேச்சுவார்த்தையிலும், கட்சிக்குள் தன்னை எதிர்ப்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர, ‘என் கரத்தை வலுப்படுத்துங்கள்’ என்ற கோரிக்கையுடன் 2017-ல் மக்கள் மன்றத்தை அணுகினார். தேர்தல் வந்தது. மிகுந்த குழப்பத்தில் மக்கள் வாக்களித்தனர். மக்களவையில் 2015-ல் கிடைத்த பெரும்பான்மையை இழந்து 330 இடங்களிலிருந்து 317 இடங்கள் என்ற நிலைக்குச் சரிந்து, வடஅயர்லாந்தின் ஜனநாயகத் தொழிற்சங்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தொடர்ந்தார் தெரசா மே. பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் பெரும் பின்னடைவைத் தந்தன. இந்த ஆண்டு ஜனவரி 15, பிப்ரவரி 14, மார்ச் 12, மார்ச் 29-ல் அவர் கொண்டுவந்த பிரெக்ஸிட் தொடர்பான நாடாளுமன்றத் தீர்மானங்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவின. விளைவாக, பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே ராஜினாமா செய்ய நேர்ந்தது.
அடுத்து பிரதமராக வந்த ஜான்ஸன் தன் கரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் விதமாகவே புதிய தேர்தலுக்கு வழிவகுத்தார்.
பிரெக்ஸிட்டுக்குப் பச்சைக் கொடி
டிசம்பர் 12 அன்று நடந்து முடிந்த தேர்தலில் 365 இடங்களை மரபுத்துவக் கட்சி வென்றிருப்பதானது, போரிஸ் ஜான்சனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வெற்றி மட்டும் அல்ல; கடந்த 30 ஆண்டுகளில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றியும் ஆகும். பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 203 உறுப்பினர்களுடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்றாவது பெரிய கட்சியான தாராளத்துவ ஜனநாயகக் கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், பிரிட்டனிலிருந்து சுதந்திரம் கேட்டுப் போராடும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியோ 48 உறுப்பினர்களை வென்றிருக்கிறது.
தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த புதிய கெடு ஜனவரி 31, 2020-க்குள் பிரெக்ஸிட்டை நடைமுறைக்குக் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிகம், இதர முக்கியமான துறைகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் அவர் கவலைப்படப்போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சரிகட்ட இந்தியா, சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை உருவாக்கிக்கொள்வார் என்பதாகவும் தெரிகிறது.
ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரிட்டனுக்கு பிரெக்ஸிட் பெரும் சறுக்கலாகவே அமையும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்பு, வெளியுறவு தொடர்பான நடவடிக்கைகளில் போரிஸ் ஜான்சன் எப்படியான முன்னெடுப்புகளைக் கையில் எடுப்பார் என்பதை இப்போது யூகிக்க முடியாவிட்டாலும், ட்ரம்ப் பாணி அரசியலர் ஒருவரின் முடிவு எப்படியானதாக அமையும் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது அல்லவா? இந்தியா, சீனா, அமெரிக்கா என்று ஒவ்வொரு அரசும் தத்தமது நலன்களை முன்னிறுத்தும் கொள்கைகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் பிரிட்டனும் இதே அலையில் செல்வதும், எல்லோரும் ஏற்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையைக் கட்டியமைப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.
பிரெக்ஸிட்டோடு முடியுமா பிளவு?
இங்கே மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ஸ்காட்லாந்து தேசியக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் பெருவாரியான ஆதரவானது அவர்களுடைய சுதந்திரக் குரலுக்கான அறைகூவல் மட்டும் அல்ல; பிரெக்ஸிட்டுக்குமான எதிர்ப்பும்கூட என்பதுதான். 2016 கருத்தெடுப்பு நடத்தப்பட்டபோது ஸ்காட்லாந்தின் 62% பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும் எனும் முடிவையே எடுத்தனர்; ஆக, ஸ்கார்லாந்து தேசியக் கட்சி பிரெக்ஸிட்டுக்கு எதிராகவே நிற்கிறது. விளைவாக, ஜான்சன் பிரெக்ஸிட் நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்தைத் தொலைவுக்கு அனுப்புவதாகவும் அமைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனே, அந்தக் கட்சியின் தலைவர் நிக்கோலா ஸ்டர்ஜன், “ஸ்காட்லாந்துக்கு இன்னொரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டி லண்டனை வற்புறுத்துவோம்” என்று அறிவித்துள்ளார். அசுர பலத்துடன் ஆட்சிசெய்யும் போரிஸ் ஜான்சனிடம் ஸ்காட்லாந்தின் கோரிக்கை பரிசீலிக்கப்பட எந்த வாய்ப்பும் இருக்கப்போவதில்லை. வடஅயர்லாந்தின் கோரிக்கைக்கும் எந்த நியாயமான பதிலையும் போரிஸ் ஜான்சனிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பிரெக்ஸிட் நடைமுறைப்படுத்தும்போது, ஸ்காட்லாந்து போலவே வடஅயர்லாந்தும் ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் நாங்கள் தொடரப்போகிறோம்’ என்று உரக்கக் கூறும். இது இன்னும் சிக்கலை அதிகரிக்கும்.
ஸ்காட்லாந்து தனி நாடானால், வடஅயர்லாந்து நெடுங்காலம் பிரிட்டனில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது; இன்றைக்கு தனி நாடு வேட்கை இல்லையென்றால், பிற்பாடு வேல்ஸ் என்ன முடிவெடுக்கும் என்பதையும் இன்றே தீர்மானிக்க முடியாது. ஆக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதோடு ஜான்சன் நிறுத்திக்கொள்வாரா, பிரிட்டனின் பிளவுக்கும் வழிவகுத்துவிடுவாரா எனும் அச்சமும் தேர்தல் முடிவோடு சேர்ந்து பிரிட்டிஷாரைப் பீடித்திருக்கிறது. வரலாற்றை யார் முன்கூட்டித் தீர்மானிக்க இயலும்?
- சி.ஆன்றனி விஜிலியஸ், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.
தொடர்புக்கு: casvvigilious@googlemail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago