பீத்தோவன்: உணர்ச்சிப் பிரவாகன்

By Guest Author

தமிழிசை மும்மூர்த்திகள், கர்னாடக இசை மும்மூர்த்திகள் என்று சொல்வதுபோல மேற்கத்திய இசையின் மும்மூர்த்தியராக பாக், மொஸார்ட் மற்றும் பீத்தோவனைச் சொல்வது உண்டு. மொஸார்ட்டின் காலத்தில் அவரைப் போலவே பிறவி இசை மேதையாக அறியப்பட வேண்டும் என்ற அவரது தந்தையின் விருப்பத்தை வலுக்கட்டாயமாகத் திணித்து வளர்க்கப்பட்டவர் பீத்தோவன். பள்ளிக் கல்வியை முடிக்கும்வரை இசையின் மீது அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையென்றாலும் மொஸார்ட்டின் வரிசையில் பீத்தோவனும் உறுதியான இடத்தைப் பிடித்துவிட்டார்.

மொஸார்ட்டின் இசைப் படைப்புகளில் துள்ளலும் விளையாட்டுத்தனமும் அதிகம் இருக்கும். அவரது வாழ்வும் இயல்பும் விளையாட்டுத்தனமாகவே அமைந்ததால் அப்படியிருக்கலாம். பீத்தோவனின் படைப்புகளோ சட்டென்று உணர்ச்சியின் உச்சநிலைக்கு இட்டுச்செல்பவை. ஏதோ ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காமல் கொட்டும் உணர்ச்சியின் அலைகள்தான் பீத்தோவனின் இசைப் படைப்புகள் என்று எண்ணத் தோன்றுகிறது. பீத்தோவன் எப்போதுமே உள்ளடங்கியவராகவும் உணர்ச்சிவசப்பட்டவராகவும் இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

பீத்தோவனின் இசைக் கோர்வைகள் இன்று உலகம் முழுக்கவும் ஒலித்தபடியே இருக்கின்றன. அலுவலகங்களில் தொலைபேசி அழைப்பு வேறொரு எண்ணுக்கு மாற்றப்படும் நேரத்தில், லிஃப்ட் பயணங்களில், கடிகாரங்களின் அலாரங்களில் எல்லாம் அவரது ‘ஃபூர் எல்லிஸே’ கேட்டுக்கொண்டே இருக்கிறது. பியானோவுக்காக இசையமைக்கப்பட்ட கோர்வை அது. மிகவும் எளிதாகத் தொடங்கி மெதுமெதுவாக ஊர்ந்து இழை பின்னிக்கொள்ளும் மிகச் சிறிய இசைக் கோர்வை. ஏறக்குறைய அதைக் கேட்காதவர்களே இன்றைய உலகில் இருக்க முடியாது.

வியன்னாவை நோக்கி... - பாக், மொஸார்ட் போன்றே பீத்தோவனும் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பீத்தோவனின் தாத்தாவும் தந்தையும் பொண் நகரத்தின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாக இருந்தார்கள். பொண் நகர அவையில் ஆர்கன் இசைக் கலைஞராக இருந்த கோட்லோப் நெஃப் என்பவரிடம் இசையைக் கற்றுக்கொண்டார். ஆனால் ஆச்சரியப்படத்தக்க அளவில் மிக விரைவிலேயே இசைத் துறையில் ஒரு படைப்பாளியாக உருவெடுத்தார் அவர். இசை கற்றுக்கொள்ளத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சொந்தமாக இசையமைத்து புதிய இசைக் கோர்வைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.

பதினேழாவது வயதில் வியன்னாவுக்குச் சென்றார் பீத்தோவன். அன்றைய காலகட்டத்தில் இசையுலகின் தலைநகரமாகப் புகழ்பெற்று விளங்கியது வியன்னா. மேலும், பீத்தோவனின் மனம் விரும்பிய மொஸார்ட்டும் வியன்னாவில்தான் அப்போது வசித்துவந்தார். வெகுவிரைவில் பியானோ வாசிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றார் பீத்தோவன். வியன்னாவில் மொஸார்ட்டிடம் இசை பயில விரும்பினார் பீத்தோவன். ஆனால், தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் அந்த ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரின் மரணம் அவர் வாழ்க்கையில் மேலும் பொறுப்புகளைச் சுமத்தியது. குடிகாரராய் மாறிப் போயிருந்த தந்தையைப் பராமரிக்கும் பொறுப்பும் அவர் மீது விழுந்தது.

மீண்டும் வியன்னாவுக்குச் சென்றபோது பிரபல இசைக் கலைஞர் ஹெய்டனிடம் இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஹெய்டனின் மாணவர் என்றபோதும் பீத்தோவனின் இசை அவரது பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எளிதில் திருப்தியடையாத அவரது இசை வேட்கை ஆசிரியருக்குத் தெரியாமல் மேலும் சில இசைக் கலைஞர்களிடமும் கற்றுக்கொள்ள வைத்தது.

இயற்கையின் காதலர்: பீத்தோவன் இயற்கையின் தீவிரக் காதலராகவே இருந்தார். தனது இசைக்கான உந்துதல்களை எப்போதும் இயற்கையிடமிருந்து பெற்றுக்கொள்வதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கிராமப்புறங்களின் வழியே நடக்கும் வழக்கத்தை அவர் மிகவும் விரும்பினார். அப்போது தனது மனதில் தோன்றும் கருத்துகளையெல்லாம் கூடவே கொண்டுசெல்லும் சிறிய குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். பீத்தோவனின் இசையில் எப்போதும் இயற்கையின் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவரது இசைப் படைப்புகளில் ‘பாஸ்டோரல் சிம்பொனி’ என்பது மிகவும் பிரபலமானது. அந்த இசைப் படைப்பில் பறவைகள் சிறகடிக்கும், அருவி ஆர்ப்பரிக்கும், செம்மறிகள் கனைக்கும்.

இதே காலக்கட்டத்தில் கில்லியட்டா கிச்சியார்டி என்ற பெண்ணை அவர் மிகத் தீவிரமாக காதலித்தார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்தது. காதலித்த பெண், வேறொருவரை மணந்துகொண்டார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், காதலிக்காக அவர் படைத்த ‘மூன்லைட் சோனாட்டா’வைக் கேட்டபடி இன்னும் எத்தனையோ காதல்கள் துளிர்த்துக்கொண்டிருக்கின்றன.

தனது முப்பதாவது வயதில் கேட்கும் திறனில் பாதிப்பை உணர்ந்தார் பீத்தோவன். ஆனால், அதை யாரிடமும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. கேட்கும் திறன் மங்கிவிட்டதாய் அறிந்தால் தனது புகழுக்கு இழுக்குவந்து சேருமோ என்று அச்சம் கொண்டிருந்தார். தனது கேட்கும் திறன் குறைந்ததை மற்றவர்கள் அறிந்துகொள்ள ஆரம்பித்தபோது விரக்தியில் தன்னை ஒடுக்கிக்கொண்டார் பீத்தோவன். அப்போது அவர் எழுதிய மற்றொரு துயரக் காவியம்தான் ‘ஹெய்லிஜென்ஸ்டாட் டெஸ்டமெண்ட்’.

மிஷேல் பக்தின் போன்ற நவீன இலக்கிய விமர்சகர்கள் நாவல் வடிவத்தை சிம்பொனியுடன் ஒப்பிடுகிறார்கள். சிம்பொனி வெவ்வேறு இழைகளாகப் பிரிந்து செல்லும் ‘பாலிபோனிக்’ தன்மை கொண்டது. இலக்கியத்தில் நாவல் வடிவமும் அவ்வாறு பல்வேறு இழைகளாக ஊடுபாவுமாக ஒன்றுசேர்வது என்று விவரிக்கிறார்கள். சிம்பொனி இசைக் கோர்வையின் பல்வேறு இழைகளைக் கவனமாக ஒன்றிணைப்பதில் பீத்தோவனுக்கு நிகர் யாருமில்லை. அவரது ஒன்பதாவது சிம்பொனியையே அதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். நான்காவதாக ஒலிக்கவிருக்கும் அசைவுகளுக்கான பீடிகைகள் முதலாவது அசைவிலேயே இடம்பெற்றிருக்கும். உடலில் இருக்கும் அவயங்கள் ஒவ்வொன்றையும் இணைத்து உயிர்கொடுப்பதுபோல இசைக்கோர்வையின் பிரிந்து ஓடும் இழைகளை ஒன்றுசேர்ப்பதில் துல்லியம் காட்டியவர் என்பதால்தான் பீத்தோவனை ‘ஆர்கானிக் கம்போஸர்’ என்று அழைக்கிறார்கள்.

விடுதலைப் பாடகன்: உலகத்தில் மிக அதிகம் கேட்கப்பட்ட சிம்பொனிகளில் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியும் ஒன்று. பீத்தோவனுக்குப் பிறகு பிறந்த இசையமைப்பாளர்கள் தங்களது ஒரே ஒரு படைப்பிலாவது அவரது ஒன்பதாவது சிம்பொனியில் தாக்கத்தை வெளிக்காட்டியிருப்பார்கள். அந்த இசைக் கோர்வையின் நான்காவது அசைவு, விடுதலைக் கீதமாகவே வர்ணிக்கப்படுகிறது.

இசைத் துறையில் மாபெரும் மேதையாக விளங்கிய பீத்தோவனுக்கு நெப்போலியன் போனபார்ட் விருப்பத்துக்குரிய தலைவராக இருந்தார். தனது மனம் கவர்ந்த தலைவனுக்காக சிம்பொனி எண் 3, எரோஸியா ஆகிய படைப்புகளை சமர்ப்பித்தார். ஆனால், அத்தனை ஈடுபாடுகளும் நெப்போலியனின் ஒற்றை அறிவிப்பால் தலைகீழாய் மாறியது. அவர் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தியாகத் தன்னை அறிவித்துக்கொண்டபோது தனது படைப்பின் சமர்ப்பணக் குறிப்பிலிருந்து நெப்போலியனின் பெயரை நீக்கினார் பீத்தோவன். அதற்குப் பதிலாக மிகச் சிறந்த மனிதனின் நினைவுக்காக என்று திருத்தி எழுதினார்.

ஆச்சரியம்தான். ரால்ப் வால்டோ எமர்சனும் நெப்போலியனை அப்படித்தான் எழுதினார். ‘தி ரெப்ரென்ஸேட்டிவ் மென்’ என்ற தலைப்பில் எமர்சன் ஆற்றிய உரைகளில் கதே அல்லது எழுத்தாளர், ஷேக்ஸ்பியர் அல்லது கவிஞர் என்ற பட்டியலில் நெப்போலியன் அல்லது இந்த உலகின் மாமனிதன் என்றே எமர்சனும் குறிப்பிட்டிருந்தார். நிறைவடையாமல் தொடரும் அந்த மாமனிதர்களின் பட்டியலில் பீத்தோவன் அல்லது இசை மேதை என்பதும் ஒன்றாக இருக்கும்.

- வளன் சுபராஜா, போட்டித்தேர்வு பயிற்றுநர். தொடர்புக்கு: valansubaraja@gmail.com

| டிசம்பர் 16: பீத்தோவனின் 250-வது பிறந்த நாள் ஆண்டு தொடக்கம் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்