யாருமே பிராமணராகவோ தலித்தாகவோ பிறப்பதில்லை: டி.எம்.கிருஷ்ணா பேட்டி

By சமஸ்

இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமானது டி.எம்.கிருஷ்ணாவினுடையது. கர்நாடக சங்கீத மேடைகளில், லவங்கி ராகத்தில் 'ஓம்கார காரிணி...' பாடலைப் பாடும்போது அவரிடத்தில் வெளிப்படும் குரலைவிடவும் முக்கியமானது இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடான இனப் பாகுபாட்டுக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக அவர் வெளிப்படுத்தும் குரல். கச்சேரிகளில் கட்டமைப்புகளை மீறுவதற்குப் பேர் போன கிருஷ்ணா, இப்போது தன்னுடைய மீறல்களை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்கிறார். இந்திய சாதியக் கட்டுமானத்தின் கலாச்சாரப் பீடங்களில் ஒன்றாக மாறிவிட்ட கர்நாடக சங்கீதத் துறைக்கு உள்ளேயே இருந்துகொண்டு அவர் வெளிப்படுத்தும் கலகக் குரல் சபாக்களைத் தாண்டி வீதிகளில் படர்ந்து மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் தீண்டுகிறது. வெளியே சமத்துவ வேஷத்துடன் திரியும் இனவாதிகளின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. நம் மனசாட்சியுடன் உரையாடுகிறது.

உங்களுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது நீங்கள் எழுப்பும் குரல் ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு பிராமண ராக, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். கல்வி ஒரு சுமையாக இல்லாத ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிக் கூடத்தில் படித்திருக்கிறீர்கள். இளவயதிலேயே ஒரு நல்ல பாடகராக அடையாளங்காணப்பட்டு, அங்கீகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். சகலமும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், உங்களுக்கு இந்தச் சாதிய அமைப்பு உதவவே செய்திருக்கிறது. பின் எது உங்களைச் சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசவைக்கிறது?

ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. வழக்கமான பொருளில் சொல்வ தென்றால், நான் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறந்தேன். ஆனால், பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங் கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. ஆனால், மதரீதியிலான சகிப்பின் மையோ மூடநம்பிக்கைகளிலும் ஆச்சார அனுஷ்டானங்களிலும் ஊறிப்போன வைதீகத்தின் தாக்கமோ நல்லவேளை எங்கள் குடும்பத்தில் இருந்ததில்லை. நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிப்பதற்கு ஏற்ற வீட்டுச் சூழலிலிருந்து வந்தேன் என்று சொல்லக் கூடாது. அந்தப் பள்ளியில் சாதி, மதம் போன்றவற்றுக்குக் கொஞ்சமும் இடம் இல்லை.

ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது என்று சொன்னேன் அல்லவா? உண்மைதான், ஆனால், “நீயே சுயமாகச் சிந்தித்துப்பார், உனது அறிவைப் பயன்படுத்து, உன் உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்து, வெறும் மையுறிஞ்சு தாளாக இருக்காதே, எவ்வளவு அழகான மையாகவும் வடிவமைப்பாகவும் இருந்தாலும்கூட” என்று நம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டு ஏதோ ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்கிறது. வழிவழியாக வந்த சங்கீதம், கச்சேரியில் முழு வீச்சில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும்போது இசைக் கலைஞரும் மேற்கண்ட புள்ளியைச் சந்திப்பார். அப்போது, ஓர் உள்ளொளி அவரைத் தொட்டுச் சொல்லும்: “இதோ பார், இப்போது நீ முழுக்க விடுதலை அடைந்தவன்… பறக்கத் தொடங்கு…”

சாதிய அதிகாரப் படிநிலையின் உயர்பீடங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டு, நீங்கள் தொடர்ந்து இந்திய சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசுகிறீர்கள். எந்த வகையில் சாதியப் படிநிலைகளைத் தூக்கிப் பிடிப்பதில் பிராமணியம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதுகிறீர்கள்?

நீங்கள் சரியான சொற்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால், நான் முன்வைக்கும் விமர்சனங்களை யும் கருத்துகளையும் கேட்கும் சிலர் பிராமணர்கள் என்று தங்களைச் சொல்லக் கூடிய குழுவுக்கு அல்லது சமூகத்துக்கு அல்லது சாதிக்கு எதிரானவன் நான் என்று எடுத்துக்கொள்கிறார்கள். நான் எந்தக் குறிப்பிட்ட சாதிக்கும் ஆதரவானவனோ எதிரானவனோ கிடையாது. நான் சாதி மாச்சர்யங்களுக்கு எதிரானவன், காலங்காலமாக சாதி என்ற அமைப்பு இழைத்துவந்த கொடுமைகளுக்கும், மறை முகமாக அது இன்னமும் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்கும் எதிரானவன். மேன்மையான இனம் என்ற கோட்பாட்டுக்கு எப்படி நான் எதிரானவனோ அதேபோல், உயர்ந்த சாதி, ஆசீர்வதிக்கப்பட்ட சாதி என்ற உணர்வுகளுக்கெல்லாமும் எதிரானவன். ஆரியர் என்பவர் யார் என்பதற்கு புத்தர் மிக அற்புதமாக மறுவரையறை செய்திருப்பார் - உன்னத குணங்களைக் கொண்டவர் என்று. வெறும் உடல்ரீதியாக அதாவது கண்கள், தோல், முடி போன்ற வற்றின் நிறத்தால் அவர் வரையறை செய்யவில்லை. அதேபோல் சாஸ்திரிய சங்கீதமும் - அதை நான் கலை இசை என்றே குறிப்பிட விரும்புகிறேன் - ஒரு கலைஞரின் கற்பனை யைச் சார்ந்தத்தேயொழிய அவருடைய சாதியைச் சார்ந் தது இல்லை. கோயிலும் சம்ஸ்கிருதப் பின்னணியுள்ள குடும் பங்களும் அவர்களுடைய உறவினர்களும் என்று வரலாற்றுப் பின்புலமுள்ள கர்நாடக சங்கீதம் அவர்களுடைய சொத்தாக ஆகிவிட்டது. ஒன்றின் சொத்தாக இருப்பதென்பதும் ஒன்றால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதென்பதும் வேறுவேறு. இந்தக் கலையின் வாரிசுகளாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் இந்தக் கலையைத் தங்களுடைய தனியுடைமையாகக் கருதாமல் பொது வுடமையாகக் கருதி பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். என்னுடைய கலை வடிவம் என்பது என்னுடைய உயிர்மூச்சு, அது ஒரு அனுபவம். அது மந்திர உச்சாடனம்போல் இறுகிப்போய்விடக் கூடாது.

வேதங்களில் தொடங்கி ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை இந்தி யாவுக்கு என்று ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. நாம் அதை யெல்லாம் கொண்டாடுகிறோம். ஆனால், இப்படிப் பட்ட ஒரு நாட்டில்தான் மனித உரிமைகளை மிதித்து நசுக்கும் மோச மான சாதிய படிநிலையும் இருக்கிறது. இதை எப்படிப் பார்ப்பது?

மிக நேர்மையான கேள்வி இது. மிகவும் அவசியமானதும்கூட. நாம் நமது தேசம்குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் நிறைகுறைகளைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அதன் கண்மூடித்தனமான வழிபாடிகளாக நாம் ஆகிவிடக் கூடாது. ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு வாழிடமும் தனக்கே உரிய மனித இனங்களையும், மனித இயல்புகளையும் உருவாக்குகிறது. உயர்ந்த மனிதர்களை மட்டுமோ, அல்லது தாழ்ந்தவர்களை மட்டுமோ, அல்லது தீயவர்களை மட்டுமோ கொண்டதாக எந்த நாடும் இருக்க முடியாது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பனியால் மூடிய இடங்கள், தகிக்கும் பாலைவனம் என்று ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் எதிரெதிர் தட்பவெப்பத்தைக் கொள்வது இந்தியா. அதேபோல், மனித இயல்புகளின் அனைத்து உச்சங்களுக்கும் இந்தியா தாயகமாக இருக்கிறது, கொடூரர்களிலிருந்து உத்தமர்கள் வரை. தீயவர்களிலிருந்து மகோன்னதர்கள் வரை. மனித மனத்தின் மிக அற்புதமான வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பவை நமது மொழிகள். அதே நேரத்தில், உலகிலேயே கெட்ட வார்த்தைகள், வசவு வார்த்தைகளின் மிக முக்கியமான உற்பத்திக் களமும் நமது மொழிகள்தான் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். புத்தர், மகாவீரர், நவீன காலத்தில் காந்தி, கான் அப்துல் கஃபார் கான் ஆகியோர் உருவான நாடு இது. எனவே, அகிம்சையின் பிறப்பிடம் என்ற நமது முக்கியமான ஸ்தானத்துக்கு அருகில் எந்த நாடும் வர முடியாது. ஆனால், வன்முறையின் கொடூர ஆயுதங்களையும் கொடூர வழிமுறைகளையும் பட்டை தீட்டிவைத்திருப்பதில் - ஒருவேளை ஜப்பானுக்கு அடுத்தபடியாக - நாம்தான் உலக சாம்பியன்கள் என்பதையும் நாம் மறுக்கக் கூடாது. பெண்களை இந்திய ஆண்கள் நடத்தும் விதத்தையெல்லாம் பார்க்கும்போது நம்மால் என்ன சொல்ல முடியும்? நமது புராணங்களில் பெண்களெல்லாம் தெய்வம்; நமது அன்றாட வாழ்க்கையிலோ அவர்கள் அடிமைகளைவிட ஒரு படிமேல் அவ்வளவுதான். இந்தியாவில் தோன்றிய வலிமையான பெண்களெல்லாம் இதற்கு விதிவிலக்குகளே.

இவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன? மனித நாகரிகங்களெல்லாம் இடைவெளிகள் அல்ல; செல்வதற்கான திசைகள்தான். மேன்மை என்பது பயணத்தின் அல்ல, பரிணாமம் அடையக்கூடிய ஒரு மனித நிலைதான் அது. நமது சுய முயற்சியில் நாம் அதை நோக்கிப் பயணிக்க நிச்சயம் எத்தனிக்க வேண்டும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல், சாதி, மதம், இனம், தேசம் என எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை இந்தியா போன்ற ஒரு நாட்டில் சாத்தியம் என்று நம்புகிறீர்களா?

சந்தேகமின்றி நான் நம்புகிறேன். நாமெல்லாரும் அடிப்படை யில் மனிதர்கள்தான், மற்ற அடையாளங்களெல்லாம் மனிதனுக்கு உபரிகள்தான்.

ஒரு தனி மனிதனால் சாதி, மத, இன வெறிக்கு எதிராக எந்த வகையில் போராட முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு கலைஞர் எந்த வகையில் போராட முடியும் என்று நம்புகிறீர்கள்?

ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இடைவிடாமல் இதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகத்தையே நாம்தான் மாற்றப்போகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் இதைச் செய்ய வேண்டும். ‘நீ எப்படியோ உலகமும் அப்படியே' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. சாதி, மத, இன மாச்சர் யங்களை ஒழிப்பது சாத்தியமாக வேண்டுமென்றால் ஒரு தனிநபர் தனிநபராகத்தான் இருக்க வேண்டும். இதில் கலை ஞர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகத்தின் அறிவிக்கப்படாத அரசியல் சாசன சிற்பிகள் கவிஞர்கள்தான் என்று சொல்வார்கள். எல்லாக் கலைஞர் களும் ஒருவகையில் கவிஞர்களே. ஏனெனில் ரசிகர்களை வலியுறுத்தும் விதத்தில் அல்ல, அவர்களை ஆரத்தழுவும் விதத்தில்தான் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியாக, மக்களின் கற்பனாசக்தியை ஆரத்தழுவுவதன் மூலம் கலைஞர்களால் மக்களின் அணுகுமுறைகளை மாற்ற முடியும்.

நீங்கள் சின்ன வயதில் படிக்கும் காலத்தில் அம்பேத்கரைப் பற் றிப் படித்ததற்கும் பார்த்ததற்கும் இப்போது அவரைப் படிப்பதற் கும் பார்ப்பதற்கும் ஏதேனும் வேறுபாடுகளை உணர்கிறீர்களா?

நான் மாணவனாக இருந்தபோதும் அம்பேத்கர் பிரம்மாண்டமாகவே எனக்குத் தெரிந்தார். ஆனால், அப்போது அவரை தலித் மக்களின் தலைவராக மட்டுமே பார்த்தேன். அது அவரைப் பற்றிய முழுமையான பார்வை கிடை யாது. ஒரு மாபெரும் பயணத்தில் பங்குபெறுபவர்களாக இந்தியர்கள் அனைவரும் தங்களை உணர்வதற்கான வாய்ப்பை, தளைகளை அறுக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் மூலமும், அதாவது சமூகநீதியை எல்லாவற்றுக்கும் மேலாக வைக்கக்கூடிய சட்டங்கள் மூலமும் வழங்கியவர் அவர் தான் என்பதைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நான் உணர்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தின் உருவாக்கத் தையும் அதில் அம்பேத்கரின் மகத்தான பங்கையும் குறித்த தொலைக்காட்சித் தொடரை ஒருநாள் பார்த்தபோது அந்த யுகம் நமக்கு என்னென்ன கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற எண்ணத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்போனேன். அந்தக் கதவுகளைப் பெரும் கொண்டாட்டத்துடன் கடந்து போயிருக்க வேண்டும். ஆனால், நமது பழைய மாச்சரியங்கள், அற்பத்தனங்கள் எல்லாம் நமக்கு முட்டுக்கட்டை போட நாம் அனுமதித்திருக்கிறோம். இன்னும் துயரம் என்னவென்றால் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களும்கூட, அம்பேத்கர் பேரைச் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்களிடம் அம்பேத் கர் என்ன எதிர்பார்த்திருப்பாரோ அதை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். கதாநாயக வழிபாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்பேத்கரை வழிபடுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. காந்திக்கு நேர்ந்ததுபோல் அம்பேத்கருக்கும் நேர்ந்து விடக் கூடாது. மாறாக, அவருடன் அறிவுபூர்வமான உரையாட லில் ஈடுபட வேண்டும். எக்காலத்துக்கும் உரிய ஒரு அரசியல் தலைவராக, சித்தாந்தவாதியாக அவரை நாம் அடையாளம் காண வேண்டும். அவர் நமக்கு நிர்ணயித்த இலக்குளை நாம் எட்டுவதற்கு இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும்.

நாம் விரும்பும் இந்த மாதிரிச் சூழலுக்கு நமக்கு வழிகாட்டும் குரலாக யாருடைய குரல் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்தியத் தலைவர்களில் யார் நமக்கு வழிகாட்டுபவராக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் பிரச்சினை இதுதான்: நமக்கு எல்லா வற்றுக்கும் குறுக்குவழிகள் தேவை. தீவிரமாகச் சிந்தனையில் ஈடுபடுவதென்பது மூளைக்கு வேலை கொடுக்கும் செயல். அதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு அரசியல் சிந்தனைகளின் ஆயத்த அரிச்சுவடிகளின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. நமது மூளையின் அணுக்களுக்குப் பதிலாக சிறுசிறு சிவப்புப் புத்தகங்கள் அல்லது நீலநிறப் புத்தகங்கள். நிரந்தர மனச்சோர்வுக்கான வழிதான் அது. உத்வேகம் தரும் தலைவர்களுக்கு எனது பச்சைக்கொடி, கருத்து முகமூடிகளுக்கு எனது சிவப்புக் கொடி!

இந்தக் கேள்வியை உங்களைப் பரிசோதிக்கக் கேட்கவில்லை. நீங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர என்ன மாதிரி யான முயற்சிகளில் இறங்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனேயே கேட்கிறேன். உங்களிடம் சங்கீதம் கற்றுக்கொள்பவர்களில் பிராமணர் அல்லாத மாணவர் களோ, தலித் மாணவர்களோ யாரும் இருக்கிறார்களா?

இப்போது அதற்கான முயற்சிகளில்தான் இறங்கியிருக் கிறேன். தலித் சமூகம் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தையும் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நானும் என்னுடன் ஒத்த சிந்தனையுள்ள இசைக்கலைஞர்களும் சங்கீதம் கற்றுத் தருவதைப் பற்றிய திட்டத்தில் இருக்கிறோம். அதேபோல சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகள் மூன்றில் கர்நாடக சங்கீதப் பயிற்சிகள் அளிக்க நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் குழந்தைகள் வேற்று சாதியில் / மதத்தில் திருமணம் செய்துகொள்ள ஊக்குவிப்பீர்களா?

அவர்கள் திருமணம் செய்துகொள்வதும், செய்துகொள்ளாத தும் அவர்கள் விருப்பம். அப்படி செய்துகொள்ள விரும்பி னால் தங்களை நேசிப்பவர்களையும் தங்களின் நேசத்துக் குப் பாத்திரமானவர்களையும் தேர்ந்தெடுப்பதும்கூட அவர்களு டைய விருப்பம். இதில், சாதி என்ற பேச்சே கிடையாது.

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்