இந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்! 

By செய்திப்பிரிவு

மோகினி விஷ்ணோய்

விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த வேளையில், இந்தியாவின் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் குறித்த தீவிர சிந்தனையும் ஏற்படுகிறது.

இந்தியாவின் உயர் கல்வி அமைப்பு அடித்தளக் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் உள்ளதாகவும், போதிய நிதியின்றித் தள்ளாடும் நிலையிலும் இருக்கிறது. இது இப்படியே நீடித்தால், மனிதவளம் கிடைப்பதிலும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியர்கள் ஈடுபடுவதும் பெரிதும் பாதிக்கப்படும். இந்த இரண்டும்தான் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனுக்கும், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் (ஜிடிபி) மூல ஆதாரங்களாகும். இதில் சரியாக முதலீடு செய்யாவிட்டால், அது இந்தியாவின் மக்கள்தொகையின் வளங்களைப் பெருக்காமல் தடுக்கும் மோசடியாகிவிடும்.

இந்திய உயர் கல்வி தொடர்பாகக் கற்பனைக்கு எட்டாத புள்ளிவிவரங்களையும் இதர தரவுகளையும் தந்து பெருமைப்படுவதைவிடப் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு எப்படி என்று ஆராய்வது அவசியம். உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்காகப் பதிவுசெய்யும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துவிட்டது என்று அதையே சாதனைபோல் பேசுகின்றனர்.

இப்படி அதிக எண்ணிக்கையில் சேர்வதாலேயே நாட்டுக்குப் பலன் கிடைத்துவிடாது. இந்தியரின் திறன்கள் பற்றிச் சமீபத்தில் வெளியான தேசிய அறிக்கை, இந்தியாவில் பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்களில் 47% பேர் மட்டுமே புதிய வேலைகளில் சேரும் தகுதியோடு உள்ளனர் என்கிறது. இதற்கு முக்கியக் காரணம், ஆசிரியர் பணியிடங்களில் காணப்படும் மிகப் பெரிய பற்றாக்குறைதான்.

காலிப் பணியிடங்கள்

அரசு கல்விக்கூடங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சராசரியாக 50% ஆக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்விக்கூடங்கள் என்று கருதப்படும் 63 நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், ஆசிரியர்களுக்குத் தகுந்த திறன் இல்லை என்று அந்தத் தலைவர்களில் 80% பேர் கவலை தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்குத் தேவை அதிகரித்துவருகிறது. ஆனால், தகுந்த திறமை உள்ளவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 2000-க்குப் பிறகு இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துவருகிறது.

பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு ஆய்வில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் பிறந்த பி.ஹெச்டி. பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. அற்பமான சம்பளமும், கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் அற்பமான தொகையும்தான் இவர்களை இந்தியாவுக்கு வர முடியாமல் தடுக்கிறது. சீனா இந்தப் பிரச்சினையை வெகு எளிதாகத் தீர்த்தது. வெளிநாடுகளில் உள்ள சீன ஆராய்ச்சியாளர்களை டாலரில் ஊதியம் தருவதாகக் கூறி வரவழைத்தது.

அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைகளுக்காகச் சிறப்பு ஊதியத்தையும் அளித்தது. சிங்ஹுவா பல்கலைக்கழகம் மேற்கத்திய பல்கலைக்கழகங்களைப் போலவே அமைப்பு, நிர்வாக முறைகளைக் கொண்டது. அங்கு கல்வியைக் கற்றுத்தருவதும் ஆய்வுகளை மேற்கொள்வதும் மேற்கத்தியப் பல்கலைக்கழக பாணியிலேயே இருக்கின்றன. அமெரிக்காவின் எம்ஐடியைவிட சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கைகளை வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பிப்பதையும் ஆய்வையும் தனித்தனியாக மேற்கொள்வதில் தொடர்ந்து கண்டிப்பாக இருக்கின்றன.

இதனால் இளங்கலை, முதுகலை மாணவர்கள் தங்களுடைய துறைகளில் புதிதாக என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறியாமலேயே படிப்பை முடிக்க நேர்கிறது. கல்விக்கூடங்களில் சேரவும் ஆய்வுசெய்யவும் ரொக்க ஊக்குவிப்பு என்பது அறவே கிடையாது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 0.62% மட்டுமே ஆராய்ச்சி-வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

வளரும் நாடுகளிலேயே இந்தியாவில்தான் இது மிகவும் குறைவு. எனவே, கல்வியிலும் ஆய்விலும் இந்திய பல்கலைக்கழகங்கள் கீழ் வரிசைகளிலேயே தொடர்வது குறித்து வியப்படைய ஏதுமில்லை. இந்தியாவின் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சிக்கான பேரவை (சிஎஸ்ஐஆர்) உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், ஷிமாகோ நிறுவனங்கள் மேற்கொண்ட தரப்பட்டியலில் சிஎஸ்ஐஆர்தான் ஆராய்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது! சீனாவின் ஆறு உயர் கல்வி நிறுவனங்கள் முதல் 50 இடங்களுக்குள் இருக்கின்றன.

பேரியியல் பொருளாதார விளைவு

உயர் கல்வியில் நிலவும் குறைந்த முதலீடு, தொழிலாளர்களின் உற்பத்தித் திறனில் அப்பட்டமாகத் தெரியும். இதனால், பேரியியல் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறன் என்பது புதிய கண்டுபிடிப்புகள், மனிதவள மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. நாளைய தொழிலாளர்கள் வேளாண்மை சாராத துறைகளில், நவீனக் கல்வி தொழில்நுட்பங்களில் தேர்ச்சிபெற்றவர்களாக வேண்டும்.

ஆராய்ச்சிகளில் செய்யப்படும் அதிக முதலீட்டால் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதனால் குறைந்த செலவில், தொழிலாளர் மூலமான உற்பத்தியைப் பலமடங்கு பெருக்க முடியும். உயர் கல்விக்கும் உற்பத்தித்திறனை இரு மடங்காக்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை (டிஎன்இபி) மத்திய அரசு 2019 ஜூனில் வெளியிட்டது. அது பல ஆர்வம்மிக்க சீர்திருத்தங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக்கி மொத்த ஜிடிபியில் 6% அளவுக்கு கல்விக்கு ஒதுக்கப் பரிந்துரைத்துள்ளது. உயர் கல்வியில் ஆய்வுக்கும் கற்பித்தலுக்கும் உள்ள இடைவெளி குறைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

கல்வி நிலையங்களிலேயே தன்னிகரற்றது என்று சிலவற்றை அடையாளம் கண்டு, ஆய்வுகளில் ஈடுபட அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசியல்ரீதியாக இது சாத்தியமா என்று நிபுணர்கள் சந்தேகப்படுகின்றனர். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்பு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. முன்பு அத்தகைய சீர்திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு முடக்கப்பட்டுவிட்டன.

அடுத்து என்ன?

உயர் கல்வி தொடர்பாக மத்திய அரசின் அலட்சியப்போக்கை எதிர்க்கும் மக்களின் கோபத்தை இனியாவது அரசு உணர வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளிலும் மனித மூலதனத்துக்குச் செலவிடுவதிலும் உயர் கல்வி நிலையங்களுக்குள்ள பங்கை அரசு அலட்சியம் செய்யக் கூடாது. சீர்திருத்தங்களுக்குத் தேவைப்படும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

ஆய்வை அடிப்படை வேலையாகக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு அதிக முதலீடு கிடைக்க வேண்டும். இது மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், இந்தியாவின் உயர் கல்வி தரமாக இருப்பதையும் உறுதிசெய்யும்.

‘தி இந்து’, தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்