இந்திய விடுதலைக்காகப் பாடல்கள் இயற்றியதோடு அந்தப் பாடல்களை மக்கள் மன்றங்களிலும் பாடியவர் மகாகவி பாரதி. அவர் பாடல்களைப் பாடிய விதத்தால் மாபெரும் தலைவர்களும் சாதாரண மனிதர்களும் ஈர்க்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னைக் கடற்கரையிலும் புதுவைக் கடற்கரையிலும் தாமிரபரணி ஆற்று மணற்பரப்பிலும் அவர் பாடியிருக்கிறார்; தனிமையிலும் நண்பர்களிடையேயும் பாடியிருக்கிறார்; பல்லாயிரம் மக்கள் கூடிய கூட்டத்திலும் பாடியிருக்கிறார்; தன்னைச் சந்திக்கவந்த அன்பர்களின், தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் பாடியிருக்கிறார். சென்னையிலும் திருவண்ணாமலை, கடலூர், மணலி, ரவணசமுத்திரம் முதலிய ஊர்களிலும் தான் சொற்பொழிவாற்றிய கூட்டங்களிலெல்லாம் பாரதி தன் பாடல்களைத் தவறாமல் இசைத்திருக்கிறார்.
இப்படி பாரதி, தான் இயற்றிய கவிதைகளைத் தானே பாடி, கேட்டவர்களை உணர்வு வெள்ளத்தில் ஆழ்த்திய வரலாறு குறிப்பிடத்தக்க நிலையில் பாரதிய உலகத்தால் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பாடல்கள் தமிழகமெங்கும் சென்னை நகரம் தொடங்கிப் பட்டிதொட்டிகளிலெல்லாம் காங்கிரஸ் இயக்கக் கூட்டங்களிலும், விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளிலும், தொழிலாளர் கூட்டங்களிலும் மற்றவர்களால் பாடப்பெற்று மக்களை ஈர்த்த வரலாறு இதுவரை அறியப்படவில்லை. அந்த வரலாற்றின் பல பதிவுகள் இப்போது முதன்முறையாக ‘சுதேசமித்திரன்’ வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளன.
வந்தே மாதரம் என்போம்
1919, 1920, 1921 ஆகிய ஆண்டுகள் உலகளாவிய நிலையிலும் இந்திய அரசியலிலும் பாரதியின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் வட்டம், அந்தணப்பேட்டை, திருவாரூரை அடுத்த அம்மையப்பன், சீர்காழி வட்டம், வடரங்கம், பனங்காட்டான்குடி, சென்னை எனத் தமிழகத்தின் பல ஊர்களிலும் காங்கிரஸ் இயக்கக் கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் பல நிகழ்ச்சிகளில் பாரதியின் பாடல்கள் பாடப்பெற்றிருக்கின்றன. நாகப்பட்டினம் வட்டம் அந்தணப் பேட்டையில் 01.02.1920-ல் பெருமாள் குளக் கீழ்க்கரையில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் தருமலிங்க மேஸ்திரி என்பவர் பாரதியார் இயற்றிய நாட்டுப்பாட்டை வெகு அழகாகப் பாடியிருக்கிறார். (சுதேசமித்திரன், 04.02.1920).
1920 மார்ச் இறுதியில் அருப்புக்கோட்டையிலும் சுற்றுவட்டாரங்களான சொக்கலிங்கபுரம், பந்தல்குடி, செட்டிப்பட்டி முதலிய இடங்களிலும் காங்கிரஸ் இயக்கப் பிரசாரக் கூட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. இந்துக்களும் முஸ்லிம்களும் பெருந்திரளாக இந்தக் கூட்டங்களுக்கு வந்திருந்தனர். இந்தக் கூட்டங்களில் பாரதி பாடல்கள் பாடப்பட்டதைப் பின்வருமாறு ‘சுதேசமித்திரன்’ பதிவுசெய்துள்ளது: ‘ஒவ்வொரு இடத்திலும் பிரசங்கத்திற்கு முதலிலும், கடைசியிலும் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதியின் பாட்டுக்களைத் தேசபக்தன் மதுரை ஏஜண்டு மிஸ்டர் ஸ்ரீநிவாஸவரதன் சந்தர்ப்பத்திற்கேற்பப் பாடியது குறிப்பிடத்தக்கது என்று ஒரு நிருபர் எழுதுகிறார்.’ (சுதேசமித்திரன், 04.04.1920)
1920 ஜூன் 13 மாலை தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தலைமையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் தி.ரா.மகாதேவையர் ‘வந்தே மாதரம் என்போம்’ என்னும் தேசிய கீதத்தைப் பாடியிருக்கிறார். (சுதேசமித்திரன், 17.06.1920). 1920 செப்டம்பர் 27அன்று சென்னை முத்தியாலுப்பேட்டையில் அமரகலாவிலாஸினி சபையில் சில மாணவர்கள் பாரதியின் தேசிய கீதங்களில் சிலவற்றை மிக்க உற்சாகத்துடன் பாடினர். திருவாரூரை அடுத்த அம்மையப்பன் என்னும் ஊரில் 15.03.1921-ல் திலகர் வாசகசாலையின் ஆதரவில் கிருஷ்ணன் கோயில் சன்னதியில் கூடிய ஒரு மகாநாட்டில் பாரதியாரின் நாட்டுப்பாட்டு முதலியவை பாடப்பட்டன (சுதேசமித்திரன், 18.03.1921).
கரும்புத் தோட்டத்திலே
சென்னை பிராட்வேயில் 28.03.1921-ல் சுயராஜ்ய பாடசாலையும் மதரஸேயும் தொடங்கப்பட்டபோது அரபி, சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் தெய்வப் பிரார்த்தனை செய்யப்பட்ட பின் பாரதியின் தேசீய கீதங்கள் பாடப்பட்டன (சுதேசமித்திரன், 30.03.1921). சீர்காழி வட்டம் வடரங்கன் கோவில், பனங்காட்டான்குடி ஆகிய ஊர்களில் 23.05.1921, 29.05.1921 ஆகிய தேதிகளில் நடந்த கூட்டங்களில் சி.சுப்பிரமணிய ஐயர், பாரதியாரின் தேசீய கீதங்களை முதலில் பாடிவிட்டு, மகாத்மாவின் சரித்திரம், திலகர் சுயராஜ்ய நிதிக்கு உதவுதல், மதுவிலக்கு முதலியவற்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் (சுதேசமித்திரன், 30.05.1921, 10.06.1921).
இந்திய அரசியல் நிலவரம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றோடு இந்தியர்கள் அயல்நாடுகளில் பிழைப்புநாடிச் சென்று படும் துன்பங்களையும் மக்களிடையே எடுத்துரைத்து உணர்வூட்டிய பல நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன. அக்கூட்டங்களில் புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் படும் துன்பங்களை உணர்த்த பாரதியின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்னும் பாடல் பேச்சாளர்களால் எடுத்தாளப் பெற்றிருக்கிறது.
அம்பாசமுத்திரத்தில் 1921 மார்ச் 5 மாலை 5 மணி தொடங்கி 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் ‘தமிழாபிமானி’ பத்திரிகையின் ஆசிரியரான வாசுதேவராவ் கெய்க்வாட் தலைமையில் ராமச்சந்திரய்யர் நாகபுரி காங்கிரஸ் பற்றியும் தென்னாப்பிரிகா, பீஜி தீவு முதலிய இடங்களில் காப்பித் தோட்டம், கரும்புத் தோட்டங்களில் இந்தியர்கள் படும் துன்பங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். இதைப் பற்றிப் பின்வருமாறு சுதேசமித்திரன் செய்தி வெளியிட்டிருந்தது: ‘ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரின் காப்பித் தோட்டப் பாட்டு முதலியவைகளை மேற்படி ஐயர் பாட, அதைக் கேட்டு ஜனங்கள் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை என்று ஒருவர் அறிவிக்கிறார்.’ (சுதேசமித்திரன் 12.03.1921)
எல்லோரையும் ஈர்த்த பாரதி
விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் மட்டுமன்றித் தொழிலாளர் கூட்டங்களிலும் பாரதியின் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. 1921 பிப்ரவரி 13 அன்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் கடற்கரைப் பகுதியை ஒட்டியிருந்த சவுக்குத் தோப்பின் அருகில் சென்னை தொழிலாளர்களும் பொது ஜனங்களும் அடங்கிய பெரிய கூட்டமொன்று கூடியிருக்கிறது.
இக்கூட்டம் மத்திய தொழில் சபையின் ஆதரவில் கூடியது. அதிலே, ம்ருநாளினி சடோபத்தியாயா, லட்சுமிதேவி அம்மாள், ஜி.ஹரிஸர்வோத்தமராவ், வி.சக்கரை செட்டியார், டி.வி.வேங்கட்டராமய்யர், எஸ்.ஸ்ரீனிவாசய்யங்கார், ஸி.ராஜகோபாலாச்சாரியார், ஸி.விஜயராகவாச்சாரியார், இ.எல்.அய்யர், எம்.எஸ்.சுப்பிரமணியய்யர், ராமபத்ர உடையார், வி.எல்.சாஸ்திரி முதலியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் ஒரு தொழிலாளர் பாரதியாரின் கீதங்கள் சிலவற்றைப் பாடினார்.
இவ்வாறு 1920-21களில் ஏராளமான கூட்டங்களில் பாரதியார் பாடல்கள் பாடப்பட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன. அக்காலத்தில் மக்களைத் திரட்டுவதற்கும் விடுதலைப் போராட்டத்தில் படித்தவர்கள், பாமரர்கள் அனைவரையும் ஈடுபடச் செய்வதற்கும் சிறந்த கருவியாக பாரதியாரின் பாடல்களைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியோர் கருதியிருக்கின்றனர்.
இதனை உணர்த்தும் பதிவொன்று சுதேசமித்திரன் இதழில் வெளிவந்தது: ‘தேச சேவையில் ஈடுபட்டுப் பிரச்சாரம் செய்துவரும் தேச பக்தர்கள் ஆங்காங்கு பிரசங்கம் செய்யும்போது மிஸ்டர் சி.சுப்ரமணிய பாரதியின் தேசீய கீதங்களைப் பாடி பிரசங்கம் செய்தால் அறிவாளர்களையும் பாமரர்களையும் தேச சேவையில் ஈடுபடும்படி செய்து, நமது சுயராஜ்யப் போரை செவ்வனே நடத்தலாம் என்று வேண்டுகிறேன் என்று பிரசாரகர் நா.இராமச்சந்திரய்யர் யோசனை சொல்லுகிறார்.’ (சுதேசமித்திரன், 31.03.1921) அறிவாளிகளையும் பாமர மக்களையும் ஒருசேர ஈர்க்கக்கூடியது பாரதியின் பாடல்கள் என்னும் குறிப்பு அக்காலத்தில் நிலவிய பாரதி பாடல் பற்றிய மதிப்பீடாக அமைகிறது.
கிறுகிறுத்துப்போன தமிழகம்
சென்னை வாழ்வின் தொடக்கத்தில் பாரதியின் வந்தே மாதரப் பாடல் முதலியன சில கூட்டங்களில் பாடப்பட்டன என்பது ஏற்கெனவே அறியப்பட்டுள்ளது. ஆனால், 1920-21ல் தமிழகம் எங்கும் பரவலாகப் பல கூட்டங்களில் பாடப்பட்டன என்பதும், சுதந்திரப் போரில் மக்களைத் திரட்டும் முக்கியமான கருவியாக பாரதி பாடல்கள் கருதப்பட்டன என்பதும் இப்போது கண்டறியப்பட்டுள்ளன. பிறிதொரு வகையில் எண்ணிப்பார்த்தால், வாழும் காலத்திலேயே பாரதியின் பாடல்கள் தமிழகம் முழுதும் பாடப்பட்டிருக்கின்றன, பாரதி தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்டிருக்கிறார் என்னும் உண்மை தெளிவாகிறது.
பாரதி உயிருடன் வாழ்ந்தபோது 1918-ல் அவரைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் எழுத நேர்ந்த ‘சுதேசமித்திரன்’ இதழ், ‘தமிழுலகம் நன்கறிந்த ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதி’ எனவும், 1920-ல் எழுத நேர்ந்த பிறிதொரு சந்தர்ப்பத்தில் ‘தமிழ் மக்கள் பலராலும் மதிக்கப்படும் ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியார்’ (04.04.1920) எனவும் குறிப்பிட்டிருந்தது. இவற்றின் வாயிலாகவும் பாடல்கள் பாடப்பட்ட வரலாற்றாலும் அக்காலங்களில் பாரதி தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்தார், மதிக்கப்பட்டிருந்தார் என்பதை உணர முடிகிறது.
பாரதி வாழ்ந்தபோதே அவரது பாடல்கள் மக்கள் மத்தியில் பரவலாக ஒலித்திருக்கின்றன; உணர்ச்சியை விதைத்திருக்கின்றன; எழுச்சியை விளைவித்திருக்கின்றன. பாரதி பாடல்கள் பண்ணோடு ஒலித்தபோது, கேட்டுக் கிறுகிறுத்துப்போனது, கிளர்ச்சியுற்றது கவிமணி மட்டுமல்ல, தமிழகமும்தான் என்பதை வரலாற்றின் கண்டறியப்பட்ட புதிய பக்கங்கள் இப்போது வழிமொழிகின்றன.
- ய.மணிகண்டன், பேராசிரியர் - தலைவர்,
தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com
டிசம்பர் 11: பாரதி பிறந்தநாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago