ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-ன் வெற்றி, ராக்கெட் துறையில் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) ஜிசாட்-6 என்னும் செயற்கைக்கோளை உயரே செலுத்த விருக்கிறது. இதைச் செலுத்தவிருக்கும் ஜி.எஸ். எல்.வி. ராக்கெட் இன்னும் பரீட்சார்த்த நிலையில் இருக்கிறது. எனவே, இதன் வெற்றி ராக்கெட் துறையில் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 35 ஆண்டுகளில் எவ்வளவோ செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளது. அந்த ராக்கெட் 30 தடவை தொடர்ந்து வெற்றி கண்டு மிக நம்பகமான ராக்கெட் என்று பெயர் பெற்றுள்ளது.
ஆனால், அந்த ராக்கெட்டால் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோளைத்தான் சுமந்து செல்ல இயலும். செயற்கைக்கோள்களைச் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிட்டால் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறன் மிகவும் குறைவு.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
ஆனாலும், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த ராக்கெட்டைப் பயன்படுத்தி சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினோம். செவ்வாய்க்கு ஒரு சிறிய விண்கலத்தை அனுப்பினோம். ஒரு சிறிய ராக்கெட்டை வைத்துக்கொண்டு எப்படி செவ்வாய்க்கு இந்தியாவால் விண்கலத்தை அனுப்ப முடிந்தது என்று உலகமே வியந்தது.
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். செயற்கைக்கோள்களை உயரே செலுத்த ஒரு ராக்கெட் தேவை என்ற அதே நேரத்தில், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வேறு. ராக்கெட்டுக்கான தொழில்நுட்பம் வேறு. இந்தியா விண்வெளித் துறையில் காலடி எடுத்து வைத்தபோதே இதை நன்கு உணர்ந்து, அந்த வகையிலான அணுகுமுறையைக் கையாண்டது. அதாவது, ராக்கெட்டை உருவாக்குவதையும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதையும் இந்தியா ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போடவில்லை. சொந்தமாக ராக்கெட்டுகளை உருவாக்கிய பின்னர், செயற்கைக் கோள்களைத் தயாரிக்க வேண்டும் என இந்தியா காத்திருக்கவில்லை.
அந்த வகையில் இந்தியா முதன்முதலாகத் தயாரித்த ஆரியபட்டா செயற்கைக்கோள் 1975-ல் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோளின் எடை 360 கிலோ. அப்போது இந்தியாவிடம் எந்த ராக்கெட்டும் கிடையாது. இந்தியா முதல் முறையாக உருவாக்கிய எஸ்.எல்.வி-3 ராக்கெட் 1980-ம் ஆண்டில்தான் முதல் தடவையாக இந்திய மண்ணிலிருந்து ரோகிணி என்னும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக உயரே செலுத்தியது. ரோகிணி செயற்கைக்கோளின் எடை 35 கிலோ.
தொழில்நுட்ப முன்னேற்றம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால் கடந்த பல ஆண்டுகளில் நாம் மேலும் மேலும் அதிக எடை கொண்ட அத்துடன் அதிக நுட்பத்திறன் கொண்ட நவீன செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் முனைந்தோம். அதில் வெற்றியும் கண்டோம். உள்ளபடி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நாம் மிகவும் முன்னேறியிருக்கிறோம். ஆனால், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய அளவுக்கு நாம் ராக்கெட் துறையில் முன்னேறவில்லை.
செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் நம்மிடம் உள்ளதே தவிர, இவற்றை அவ்வளவு உயரத்துக்குக் கொண்டுசென்று செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் ஆரம்பம் முதலே நம்மிடம் கிடையாது. ஆகவே, 1988-ம் ஆண்டிலிருந்து இவை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் சக்திமிக்க ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுவருகின்றன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். பொதுவில் ஒரு ராக்கெட்டுக்கு இரண்டு விதத் திறன் உண்டு. சுமார் 500 முதல் 700 கி.மீ. உயரத்தில் செலுத்துவதானால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் சுமார் இரண்டு டன் வரை சுமந்து செல்ல முடியும். ஆனால், 36 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அந்த ராக்கெட்டால் சுமார் ஒன்றரை டன்தான் சுமந்து செல்ல இயலும். ஆனால், ஆரம்பம் முதலே நமது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிக எடை கொண்டவையாக அமைந்தன. எனவேதான் நாம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட்டை நாடினோம்.
எனினும், சுமார் நான்கு டன் எடை கொண்ட செயற்கைக் கோளை 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய ராக்கெட்டைச் சொந்தமாக உருவாக் கும் முயற்சியில் இஸ்ரோ கடந்த பல ஆண்டுக ளாகவே முயன்றுவருகிறது. ஒரு ராக்கெட் என்றால், அது பொதுவில் மூன்று அடுக்குகளைக்கொண்டதாக இருக்கும். வெளிப் பார்வைக்கு ஒரே ராக்கெட் போலத் தோன்றினாலும் ஒன்றன்மீது ஒன்று பொருத்தப்பட்டதாகவே ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இவ்வித அடுக்கில் மூன்றாவதான ராக்கெட்டின் முகப்பில் செயற்கைக்கோள் பொருத்தப்படுகிறது.
பல ஆண்டு முயற்சி
முகப்பு ராக்கெட் திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் எரிபொருளாகப் பயன்படுத்துகிற (கிரையோஜெனிக்) இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருந்தால், அந்த ராக்கெட் அதிக எடையைச் சுமந்து அதிக வேகத்தில் செல்லும் திறன் பெற்றதாக இருக்கும். இப்படியான ராக்கெட்டை உருவாக்குவதில்தான் நாம் பல ஆண்டுகளாக முயன்றுவருகிறோம். இவ்வித சக்திமிக்க ராக்கெட்டுக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த வகை ராக்கெட் முதன் முதலாக 2001-ல் ஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப் பட்டது.
ஆரம்பத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-1 வகை ராக்கெட்டு களில் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் பெரிதாக வெற்றி கிட்டவில்லை. பின்னர், நாம் சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜினை உருவாக்கினோம். நாம் உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப் பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 வகை ராக்கெட் 2014 ஜனவரியில் உயரே செலுத்தி சோதிக்கப்பட்டபோது வெற்றி கண்டது. அது சுமார் இரண்டு டன் எடை கொண்ட ஜிசாட்-14 செயற்கைக்கோளை 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் செலுத்தியது.
நிரூபிக்க வேண்டிய நம்பகத்தன்மை
வருகிற 27-ம் தேதி செலுத்தப்படவிருப்பதும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 வகை ராக்கெட்டே. இதில் வைத்துச் செலுத்தப்படவிருக்கும் ஜிசாட்-6 செயற்கைக்கோள் 2,132 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் ராணுவ நோக்கு கொண்டது. இது வெற்றி பெற்றால், நாம் சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜினின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும். ஆனால் ஒரு தடவை அல்ல, பல தடவை அதன் நம்பகத் தன்மை நிரூபிக்கப்பட்டாக வேண்டும். அப்போதுதான் நாம் இதைவிட மேலும் திறன்கொண்ட ராக்கெட்டைத் தயாரிப்பதில் உறுதியுடன் முன்னேற முடியும்.
ஜி.எஸ்.எல்.வி. வரிசையிலான மார்க்-1, மார்க்- 2 ஆகிய இரண்டுமே இடைப்பட்ட தயாரிப்புகளாகும். இந்த இரண்டும் நமது எதிர்காலத் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய திறன் கொண்டவை அல்ல.
ஆகவேதான், நான்கு டன் எடையைச் சுமந்து (36 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு) செல்லக்கூடிய முற்றிலும் புது வகையான ராக்கெட்டைத் தயாரிப்பதில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதன் பெயர் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்பதாகும். அது 2017-ல்தான் முதல் தடவையாகச் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது. அது பல தடவை செலுத்தப்பட்டு வெற்றி கண்டால், நாம் சுயசார்பு நிலையைப் பெற்றவர்களாகிவிடுவோம்!’
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago