வழியில் ‘லாத்திமோட்டா’ என் றொரு இடம் வருகிறது. இங்கே யானைகள் வந்தால் பாதுகாப்புக் காக ஓடி ஒளிய சிறு குடில் இருக்கிறது. அகழி தோண்டி அதில் மனிதன் நடக்கும் வகையில் சிறு மரப்பாலம் அமைத்து, மறுபக்கம் குடிலை கட்டியிருக்கிறார்கள். தொலைவில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தாலும் குடிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படவில்லை.
காட்டு வழியில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. ஆண்டுக்கணக்கில் விழுந்து கிடந்த பிரம்மாண்டமான சில மரங்கள் பாறைகளைப் போல இறுகிக் கிடந்தன. சில இடங்களில் விழுந்த மரங்களே சிற்றாறுகளுக்கு பாலங்களாக அமைந்தன. உயரமான அத்தி மரங்களில் இருந்தும், நீர்மத்தி மரங்களில் இருந்தும் சிங்கவால் குரங்குகள் (Lion tailed macaque) கொத்துக் கொத்தாக கொழுந்து இலைகளையும் பூக்களையும் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தன. மந்திகள் பறித்துப் போடும் அந்த கொழுந்து இலைகளை மான்கள் விரும்பி சாப்பிடும். மந்திகளுக் கும் மான்களுக்குமான பந்தம் அது. அதேபோல புலிகள், சிறுத்தைகள் மான்களை வேட்டையாட பதுங்கினால் கடுமையாக குரல் எழுப்பி மான்களை உசுப்பிவிடும் இந்தக் குரங்குகள்.
பொதிகை மலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளான சிங்கவால் குரங்கு, நீலகிரி கருமந்தி (Nilgiri langur), செந்தேவாங்கு (Slender loris), தமிழ கத்தின் மாநில விலங்கான வரையாடு (Nilgiri thar) ஆகியவை வசிக்கின்றன. இவைத் தவிர, பழுப்பு மரநாய் (Brown palm civet), பழுப்பு மர எலி (Malabar spiny dormouse), இலிங்கன் (Nilgiri marten) ஆகியவையும் இங்குள்ளன. இவை அனைத்துமே அழியும்தருவாயில் இருக்கும் அரிய வகை உயிரினங்கள்.
தவிர மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய 1,500 அரிய வகை தாவரங்களில் பொதிகையில் மட்டுமே 150 வகை தாவரங்கள் இருக்கின்றன. இவை மருத்துவப் பலன்கள் மிக்கவை. இந்தத் தாவரங்களை கையாள்வதில் பாரம்பரிய அறிவைப் பெற்றவர்கள் ‘காணி’கள்.
அழியும் பட்டியலில் இருக்கும் அரிய வகை ‘அமிர்தபலா’ தாவரம் (Decalepis arayalpathra) இங்கு விளைகிறது. இது முற்றிய வயிற்றுப் புண், புற்றுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.
ஒரு மணி நேரம் நடந்ததும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. கருமனை ஆறு. தொடர்ந்து வாலைபிந்தியாறு அருவியில் குளியலை முடித்துவிட்டு, நாலாறு என்ற சிற்றாற்றைக் கடந்து நடந்தோம். நாலாற்றைக் கடந்தவுடன் ஏராளமான பறவைகளின் கான கீதங்கள் மயக்கின. அரிய பறவையினமான மலபார் தீக் காக்கையை (Malabar trogon) பார்க்க முடிந்தது. அரிய வகை சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey breased laughing thrush) இங்கு காணக் கிடைத்தது ஆச்சர்யமே. நீட்டி, நிதானமாகவும், நல்ல சத்தமாகவும் ‘ப்ப்பீ... கோகோ... ப்ப்பீ... கோகோ...’ என்று இவை கூவுவது ஏதோ குழந்தை கொஞ்சுவதுபோல இருக்கிறது. இந்தப் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித் ததும் தங்கள் கூடுகளை அழித்துவிடும். பச்சை நிறத்திலான சாம்பல் தலை சின்னானும் இங்குக் (Grey headed bulbul) காணக் கிடைத்தது.
பொதிகை மலை உச்சியில் அமைந்துள்ள அகத்தியர் சிலை.
புல்வெளி தந்த குளியல்
இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் மிகப்பெரிய புல்வெளி வந்தது. ஆளை விழுங்கும் புல்வெளி அது. கண் கண்ணாடி அணிந்துக்கொண்டு முகத்தை துணியால் சுற்றிக்கொள்ளச் சொன்னார்கள். இல்லை எனில் முகத்தில் சிராய்ப்பை ஏற்படுத்திவிடும் இந்த புற்கள். புல்வெளியைக் கடப்பதற்குள் தெப்பலாக நனைந்துவிட்டோம். காலுக்கு கீழேயும் சதுப்புநிலம் போலி ருந்தது. அவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றன அந்தப் புற்கள். இதுவும் ஒருவகையில் தாமிரபரணி குளியல்தான். ஏனெனில் தாமிரபரணி உள்ளிட்ட தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமே இதுபோன்ற புல்வெளிக் காடுகள்தான். இதனை முதன்முறையாக அனுபவரீதியாகவும் அறிந்துக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து முட்டு இடிச்சான் தேரி மலை, அட்டைக்காடு கடந்து வந்துதான், அத்திரிமலை பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வரையாடு
மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். இருளில் கண் முன் மலை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. வானம் புலர்ந்த பொழுதில் ஈத்தல் காட்டுக்குள் நுழைந்தோம். ஈத்தல் என்பது ஒருவகையான மூங்கில். அடுத்து கடும் ஏற்றம். உருண்டையான வழுக்குப் பாறைகளின் மீது ஏற வேண்டியிருந்தது. நடுவே சிறிய சமதளம் வந்தது. தாமரைக் குளம் என்றார்கள். காட்டாறு இது. ஆற்றில் இறங்கிக் கடக்கும் முன்பு மேகத்தை உற்று கவனித்தார்கள். மேகக்கூட்டத்தை வைத்து காட்டாற்று வெள்ளம் வருமா என்பதை கணிக்கிறார்கள்.
நண்பகல் 12 மணி வாக்கில் இன்னொரு சமதளம் வந்தது. ‘பொங் கலா பாறை’ என்றார்கள். இங்கிருந்து அரை மணி நேரம் ஏற்றம் ஏறியதும், உயர்ந்த பாறைச் சரிவில் இரும்பு ரோப் கட்டியிருந்தார்கள். நல்ல உயரம். “கீழே பார்த்தால் தலை சுற்றும். ஒரே மூச்சில் ஏறிவிடுங்கள்” என்றார்கள். ஒருவழியாக ஏறிவிட்டோம். இங்கிருந்து உரலிடிச்சான் பாறை, வழுக்குப் பாறை, இடுக்குப் பாறை ஆகிய மூன்று பகுதிகளை கடந்தோம். மீண்டும் அதேபோல ஒரு இரும்பு ரோப். இன்னும் இது உயரம். “இங்கு மட்டும் ஏறிவிட்டால் பொதிகை மலை உச்சி” என்றார்கள். மூச்சு முட்டியது. உடல் நடுங்கியது. தாமிரபரணி தாய் மீது பாரத்தை போட்டுவிட்டு, ஒரே மூச்சில் ஏறி, சமதளத்தில் சரிந்து விழுந்தோம்.
பொதிகை உச்சியில் அகத்தியர் சிலையாக காட்சியளித்தார். பக்தர்கள் பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். ‘ஊ...’ என்ற சத்தத்துடன் ஆளையே அடித்துச் செல்வதுபோல காற்று வீசி யெறிந்தது. கடல் மட்டத்தில் இருந்து 6,122 அடி உயரத்தில் மலை உச்சியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த் தோம். வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது.
வண்டுகளின் இடையறாத ரீங்காரம், விதவிதமான விலங்குகளின் குரல்கள் என இரவுக்காடு இன்னொரு அனுபவம் அளித்தது. தூரத்தில் ஒரு பக்கம் திருவனந்தபுரம் ஒளிர்கிறது. விண்ணில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின. நிலா பொழிந்தது. வானம் அருகில் இருப்பதைப் போல பிரமிப்பு. மறுநாள் காலையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளத்தை பார்த்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது!
(தவழ்வாள் தாமிரபரணி)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago