இந்தியும் இந்தியாவும்

By பி.ஏ.கிருஷ்ணன்

இரட்டை மொழி முறை நீடிப்பதுதான் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லது

இந்த சுதந்திர தினத்தன்று சில போராளிகள் பெங்களூரை மையமாகக் கொண்டு ட்விட்டர் போர் ஒன்றைத் தொடங்கினார்கள். 50,000 ஆண்டுகள் மூத்த தமிழைக் காக்க உறுதிபூண்டிருக்கும் இனமான இளஞ்சிங்கங்களும் (சில பல் போன சிங்கங்களும் இருக்கலாம்) தங்கள் செல்போன்களைக் கைகளில் எடுத்து ட்விட்டர் கணைகளால் இந்தியை வீழ்த்தும் புனிதப் போரில் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் கோரிக்கை விநோதமானது. அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் இருக்கும் 22 மொழிகளும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது.

அரசு அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதுபற்றிய புரிதல் சிறிதும் இல்லாதவர்களால்தான் இத்தகைய கோரிக்கையை வைத்திருக்க முடியும். இந்தித் திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் என்பதை அரசுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இந்தியை டெல்லி அலுவலகங்களிலேயே திணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

பாவப்பட்ட அதிகாரிகள்

நான் வேலை பார்த்த அலுவலகங்களில் பாவப்பட்ட ஜீவன்கள் இந்தி அதிகாரிகள்தான். எப்போதும் ஒதுங்கியே இருப்பார்கள். வெளிச்சத்துக்கு வருவது இந்தி பக்வடா என்று அழைக்கப்படும் ‘இந்தி போற்றுவோம்’ நாட்களில். அந்த நாட்களில் இந்தியில் கோப்புக் குறிப்புகள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று குலாப் ஜாமூன், சமோசா மற்றும் முந்திரிப் பருப்பு போன்ற சமாச்சாரங்களைத் தின்றுகொண்டே மொழி விற்பன்னர்கள் பேசுவார்கள். பேசியதற்குப் பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். அடுத்த வருடம்தான் பிலாக்கணம் பாடத் திரும்ப வருவார்கள். என்னுடைய 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தில், நான் ஓர் அசல் கடிதம்கூட இந்தியில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு எழுதியது இல்லை. எந்த மொழியில் எழுதினாலும் அவர்களிடமிருந்து பதில் வருவது கடினம் என்பது வேறு விஷயம். ஆங்கிலத்தில் எழுதிவிட்டு இந்தி மொழிபெயர்ப்புக்குக் கடிதத்தை அனுப்பிவிட்டுக் கை கழுவிவிடுவேன். எல்லாம் நடந்து முடிந்த பிறகு, மொழிபெயர்ப்பு வரும். அதில் இந்தியில் கையெழுத்திட்டு அனுப்புவேன். இந்தித் திணிப்பு வராமல் மத்திய அலுவலகங்களில் வேலை செய்பவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இப்போதும் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை.

முன் பரிசோதனை

இந்த ட்விட்டர் போராளிகள் முன்வைக்கும், ‘22 ஆட்சி மொழிகள் கோரிக்கை’ வெற்றி பெறுமா இல்லையா என்பதை எளிதாகச் சோதிக்க ஒரு வழி இருக்கிறது. தமிழகத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும் இதே நிலைதான். ஏன் இந்த மாநிலங்களில் இம்மொழிகளை (ஆங்கிலத்தோடு) ஆட்சி மொழிகளாக அறிவிக்கக் கூடாது? மத்திய அரசிடம் எல்லோருக்கும் மொழி அளவில் சம உரிமை வேண்டும் என்று கேட்பவர்கள், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் ஏன் அந்தக் கோரிக்கையை வைக்கக் கூடாது?

உண்மையில், மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி; இந்தக் கோரிக்கை சாத்தியமே இல்லை. இரண்டு ஆட்சி மொழிகள் இருக்கும்போதே இத்தனை பிரச்சினைகள். 22 இருந்தால், யார் என்ன சொல்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.

திணிப்பு இல்லையா?

இந்தி பல்வேறு முறைகளில் நுழைந்து, நமது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் இந்தியும் ஆங்கிலமும்தான் பெரும்பாலும் ஆட்சி செலுத்துகின்றன. நெல்லை வங்கி ஒன்றில் இந்திப் படிவத்தைப் பார்த்த எரிச்சல் எனக்கு இன்று வரை அடங்கவில்லை. நண்பர் ஒருவர் காங்கேயத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டும் அடங்கிய ஓர் அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தை எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

மாநிலங்களில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழி இயங்குவதற்கான வரையறை இதுவரை செய்யப்படவில்லை. ஆனால், இவற்றில் எதுவும் தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. இன்றைய தொழில்நுட்பம் இவற்றுக்குத் தீர்வுகளை எளிதாகத் தர முடியும். ஆனால் பிரச்சினை வேறு. ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம் என்று நினைப்பவர்கள், இந்தியும் ஆட்சி மொழியாக இருப்பது தங்கள் இனமானத்துக்கு ஊறு விளைவிப்பதாக நினைக்கிறார்கள். இதுதான் பிரச்சினை.

என்ன செய்யலாம்?

1968-ல் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. அவற்றில் முக்கியமாகச் சொல்லப் பட்டவை இவை:

1. நாடு கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேற வேண்டும் என்றால், எட்டாவது பட்டியலில் இருக்கும் எல்லா மொழிகளும் முன்னேற வேண்டும்.

2. மத்திய அரசு, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு, இம்மொழிகளின் முன்னேற்றத்துக்கும் வழிமுறை வகுக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்தும்.

3. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் எட்டாவது பட்டியலில் இருக்கும் எந்த மொழியிலும் எழுதக் கூடிய வழிவகையை நடைமுறைப்படுத்தும்.

ட்விட்டர் போராளிகள் உண்மையிலேயே மொழியின்மீது பற்றுக்கொண்டிருந்தால், தங்கள் தொகுதிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

இது நடந்தாலும் இந்திதான் ஆட்சிமொழியாக இருக்கும்.

ஏன்?

அரசியல் சட்டத்தின் பாகம் 17-ல் இருக்கும் பிரிவுகள் 343-லிருந்து 351 வரை ஆட்சி மொழிகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை இந்தி மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கும் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன. 351-ம் பிரிவு இந்தியின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தி வயதுக்கு வரும் வரையில்தான் ஆங்கிலம் இருக்கும் என்பதையும் அவை கூறுகின்றன. ஆனால், இந்தி வயதுக்கு வருவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதை நமது 68 ஆண்டு வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அது என்றும் முதிரா இளமையோடு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆங்கிலம் அடியோடு மத்தியிலிருந்து நீங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. இரட்டை மொழி முறை நீடிப்பதுதான் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லது என்ற முடிவுக்கு நமது அரசியல் தலைவர்கள் என்றோ வந்துவிட்டார்கள்.

ஆனால், இந்தி மத்தியில் வேண்டாம்; ஆங்கிலம் மட்டும்தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்யும் மொழி மானப் புலிகள் என்ன செய்யலாம்? அரசியல் சட்டத்தின் இந்தப் பாகம் முழுவதும் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம். ஆனால், கோரிக்கை நிறை வேறுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சம்மதம் பெற வேண்டும். அது நடக்காத காரியம். இந்தியை விலக்கு அல்லது நாங்கள் இந்தியாவை விட்டு விலகிக்கொள்கிறோம் என்று அவர்கள் சொல்லலாம். நான் சொல்ல மாட்டேன். இந்தியாவின் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்களும் அவ்வாறு சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்!

- பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய

நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

23 days ago

மேலும்