கூலி கேட்ட அத்தான்
குண்டடி பட்டு செத்தான்!
- இப்படிப்பட்ட வாசகங்களைச் சுவரொட்டியாக்கி, தேர்தலிலே பிரச்சாரம் செய்து வெற்றிகண்டது திராவிட முன்னேற்றக் கழகம். 1967-ல் அக்கட்சி ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் மிகப் பெரும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. அதுவரை தொழிலாளர் உலகில் நுழையாத திமுக தனது தொழிற்சங்கப் பிரிவைத் துவங்கியது. அதையொட்டியே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலும் தனது தொ.மு.ச. பேரவையை ஆரம்பித்தது. பின்னர், அச்சங்கத்துக்கு நிர்வாகத்தால் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடப்பதென்ன? அங்குள்ள தொழிலாளர்களது வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கி, நான்காவது வாரத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில், அங்குள்ள தொழிற்சங்கத் தலைவர்களை ஏன் வேலைநீக்கம் செய்யக் கூடாது என்று நிர்வாகம் காரணம் கோரும் அறிவிக்கையைக் கொடுத்துள்ளது. தொழிலாளர்களது வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாதென்று நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடையாணை பெற்றுள்ளது. அதையும் மீறிப் போராட்டம் நடத்தும் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதையொட்டி தொழிலாளர் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
நூறாண்டுக் கேள்வி
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது அதற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முன், தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமையும் அப்படிச் சங்கம் அமைத்தால் அவர்கள் மீது வேலைநிறுத்தக் காரணங்களுக்காக சிவில், கிரிமினல் வழக்குகள் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இன்று நேற்றல்ல; சுமார் 100 வருடங்களுக்கு முன்னால்.
சென்னை சூளையில் அமைந்த பக்கிங்காம் மற்றும் கர்னாடிக் நூற்பாலைகளில் (பின்னி) வேலை பார்த்த ஊழியர்கள், மிகக் கடுமையான பணி நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இரவு நேரங்களில் சன்மார்க்க சங்க போதனைகளை அளித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க., பின்னி ஊழியர்களின் வேலை நிலைமைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பி.பி.வாடியா (பார்சி வழக்கறிஞர்) மற்றும் அன்னி பெசன்ட் அம்மையாரையும் கலந்தாலோசித்ததில் உருவானதே ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ (எம்.எல்.யூ).
கோவணத்துடன் போராட்டம்
வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக ஆலை நிர்வாகம், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மிகப் பெரும் நஷ்டஈட்டுத் தீர்ப்பைப் பெற்றது. தீர்ப்பின்படி, தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து தொகையைப் பெற முயன்றபோது, அகில இந்திய எழுச்சி ஏற்பட்டது. தொகையைக் கட்ட முடியாத சங்கத் தலைவரில் ஒருவரான சக்கரைச் செட்டியார், உயர் நீதிமன்றத்தின் முன்னால் அளித்த வாக்குமூலம் எவரது மனதையும் நெகிழவைக்கும். “நீதிமன்றத்தின் முன்னால் சுவிசேஷ ஊழியராக வாரம் 10 ரூபாயில் வாழ்க்கை நடத்தும் தான் போட்டுள்ள உடைகளும், சில மாற்றுடைகளும் மட்டுமே தனது சொத்து. அதை வேண்டுமானால் ஏலமிட்டு வரும் பணத்தை ஆலை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் கொடுத்துக்கொள்ளலாம் என்றும், அப்படிச் செய்தாலும் கட்டியிருக்கும் கோவணத்துடன் தொடர்ந்து போராடுவேன்” என்றும் கூறினார்.
பின்னி ஆலை போராட்டத்துக்குப் பின்னர்தான் 1926-ல் தொழிற்சங்கச் சட்டம் காலனியாதிக்கத்தால் இயற்றப்பட்டது. அச்சட்டத்தில், சங்கத்துக்கு வெளியாள் தலைமை அனுமதிக்கப்பட்டது. நாம் சுதந்திரம் அடைந்த பின் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திலும் சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மீது அவர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் என்ற காரணத்துக்காக சிவில், கிரிமினல் வழக்குகள் தொடர்வது தடை செய்யப்பட்டது.
அதற்குப் பின் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைக் குறித்து இங்கிலாந்தில் எழுப்பப்பட்ட குரல்களைச் சமாளிக்க ஒரு தொழிலாளர் ஆணையம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. ‘ராயல் கமிஷன் ஆஃப் லேபர்’ என்று கூறப்பட்ட அந்த ஆணையம், 1929-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இங்கிலாந்தில் உள்ளதுபோல் தொழிலாளர் பாதுகாப்புக்கான சட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் அவர்களது பணிநிலைமைகளை உயர்த்தலாம் என்பதற்குப் பதிலாக, பலமான தொழிற்சங்கங்களை உருவாக்கி அவர்களது கூட்டுபேர முயற்சிகளால் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்று அவர்களது அறிக்கை கூறியது. எனவே, பெயர் சொல்லும் அளவுக்கு காலனியாட்சியில் தொழிலாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை.
வேலை நிறுத்தம் ஒரு ஆயுதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தொழிலாளர்-முதலாளிகள் உறவை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் விளைவாக உருவாக்கப்பட்டதே 1947-ம் வருட தொழிதகராறுச் சட்டம். அச்சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும்வண்ணம், சமரச முயற்சிகளுக்கான சமரச அதிகாரிகளும், கட்டாய மத்தியஸ்தம் செய்யத் தொழிலாளர் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. தவிர, தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதற்குச் சட்டம் அனுமதித்தாலும் அச்சட்டம் சுற்றுவழியில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்ய முற்பட்டது. தொழிலாளர்கள் தங்களது கூட்டுபேர முயற்சிகளை வலியுறுத்துவதற்கு வேலைநிறுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதே உலகெங்கிலும் உள்ள நடைமுறை.
தொழிற்தகராறு சட்டத்தில், பொதுச் சேவை நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்ய முன் அறிவிப்பு கொடுப்பதற்குச் சட்டம் நிபந்தனை விதித்தது. பொதுச் சேவை நிறுவனங்கள் என்ற வரையறைக்குள் பலதரப்பட்ட தொழில் நிறுவனங்கள் அரசாணைகளால் புகுத்தப்பட்டன. வேலைநிறுத்த அறிவிக்கை கொடுத்த பின்னரும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியாது. ஏனெனில், வேலைநிறுத்த அறிவிக்கை கொடுத் தவுடனேயே சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகக் கருதப்படுமென்று சட்டம் கூறுகிறது. சமரசப் பேச்சுவார்த்தை களின்போது ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சமரச அதிகாரி அரசிடம் பேச்சுவார்த்தை முறிவு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை உத்தரவின் மூலம் கட்டாய மத்தியஸ்தம் செய்ய தொழிலாளர் நீதிமன்றங்களின் இறுதி முடிவுக்கு அனுப்பிவிடும். தொழிலாளர் நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்பே (அவார்ட்) இறுதியானது. சமரசப் பேச்சுவார்த்தைகளின்போதும் தொழிலாளர் நீதிமன்றங்களின் முன் விசாரணையின்போதும் வேலைநிறுத்தம் செய்யச் சட்டம் தடை விதித்துள்ளது. நேர்மையற்ற வேலை நடைமுறைகளில் ஒன்றாக சட்டவிரோத வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுச் சேவை நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோத வேலைநிறுத்தமாகத்தான் இருக்கும். கூட்டுபேர முயற்சிக்கு ஆதரவாக சட்டபூர்வ வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும் என்ற பேச்சுக்கே வழியில்லை. அமெரிக்க தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கூறியதுபோல் “இன்று கூட்டுபேரத்துக்கு வழியேதும் இல்லை. பதிலாக, கூட்டாகப் பிச்சை எடுக்கத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.” இத்தடைகளை மீறியே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத்தண்டனை அளிக்கச் சட்டம் வழிவகுத்துள்ளது. நிலையாணைகளின்படி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைள் எடுக்கலாமே தவிர, சட்டவிரோத வேலைநிறுத்தத்துக்கான வேறு தண்டனைகள் எங்கும் கூறப்படவில்லை.
1976-ல் உச்ச நீதிமன்றம் ரோஹ்டாஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற வழக்கில், வேலைநிறுத்தம் என்ற செயல் பொதுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதல்ல. அது தொழிற்தகராறு சட்டத்தின் சிருஷ்டி. தொழிலாளர் வேலைநிறுத்தத்தைப் பொறுத்தவரை அதற்கான தண்டனைகள் / தீர்வுகள் தொழிற்தகராறு சட்டத்துக்கு உட்பட்டே காணப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அவ்வழக்கில், வேலைநிறுத்தம் செய்ததற்காக மத்தியஸ்தர்கள் தண்டனையாகப் பெருந்தொகையைக் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தனர். அத்தண்டனையை ரத்து செய்யும் வகையில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்றைய தொழிற்சங்கச் சட்டத்தின்கீழ், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்வதற்கு சிவில் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. அது தவிர, சிவில் நீதிமன்றங்கள் செயல்படுத்தும் தடையாணைகளை வழங்கும்போது அவ்வாணைகளை நிறைவேற்றுவது கடினம் என்னும்போது, ஒருவர் மற்றொருவருக்குத் தனிப்பட்ட முறையில் சேவை செய்யக் கட்டளையிடக் கோரும்போதும் வழங்கக் கூடாதென்று சட்டம் கூறுகிறது.
சிவில் நீதிமன்றங்களுக்கு இல்லாத அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா? அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிப்பேராணை விடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வதிகாரத்தை அரசுக்கு எதிராகவும் (அ) அரசின் கருவி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். தனிப்பட்ட நிறுவனங்கள் / நபர்கள் மீது அப்பேராணைகளைச் செலுத்த அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ஒரு தனிப்பட்ட நபரோ (அ) அமைப்போ மற்றொருவரது சுதந்திரத்தைப் பறித்தாலோ (அ) அவர்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலோ அவர்கள் மீது ஆட்கொணர்வு நீதிப்பேராணையின்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. இதைப் பயன்படுத்தித்தான் கடத்திச் செல்லப்படும் பெண்களை / மகள்களை / மனைவிகளை விடுவிக்க உத்திரவிடும்படி தனிநபர்கள் மீது மனுக்கள் போடப்படுகின்றன.
மறுக்கப்பட்ட தடையுத்தரவு
2007-ல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், தனது அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி தடையாணை கேட்டபோது, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொழிலாளர் - நிர்வாகங்களுக்கு இடையேயுள்ள தொழிற்தகராறு பிரச்சினைகளில் நீதிமன்றத் தலையீடு என்பது தொழிலாளர்களுக்கு விரோதமானது என்று கூறியது. வழக்கறிஞர்கள் நிகழ்த்தும் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்கள்கூட வழக்கறிஞர் சட்டத்துக்கு விரோதமெனக் கூறி, நீதிமன்றங்கள் அதுபோன்ற தடையாணையை வழங்குவதில்லை. ஆனால், ‘‘தொழிலாளர்களது ஒரே ஆயுதமான வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தைப் பறித்து, அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களது கூட்டுபேர முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது முதலாளிகளுக்கு / நிர்வாகங்களுக்கு ஆதரவான செயல்களாகத்தான் இருக்கும் என்று’’ குறிப்பிட்டது. அதே நிறுவனம் பம்பாய், டெல்லி, கேரள நீதிமன்றங்களில் தடையுத்தரவுகளைப் பெற்றிருந்தபோதிலும், சென்னை உயர் நீதிமன்றம் மேற்படி காரணங்களால் தடையுத்தரவு தர மறுத்தது. மேலும், அந்நிறுவனம் 2011-ல் அதேபோன்ற ஒரு வழக்கு தொடர்ந்தபோது தடையுத்தரவு மறுக்கப்பட்டது.
இருப்பினும், நெய்வேலி நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படிப்பட்ட தடையுத்தரவுகளை வேலைநிறுத்தத்தின்போது உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்று தொழிலாளர்களது போராட்ட உத்திகளை முடக்கிவருகிறது. தடையுத்தரவை மீறியதாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்ததுடன், இன்று அத்தலைவர்களை அதே காரணத்துக்காக ஏன் வேலைநீக்கம் செய்யக் கூடாது என்று காரண அறிக்கையும் கொடுத்துள்ளது முறையற்ற செயல். உயர் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அவை தொழிலாளர் - நிர்வாகங்கள் உறவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் அமைப்பல்ல.
தொழிலாளர்களுக்கும், அவர்களது தலைமைக்கும் தொழிற்தகராறு சட்டத்தின் மூலமே தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக ஏன் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுபற்றிய புரிதல் தேவை. இன்றுள்ள நிலையில், தொழிலாளர்களது தகராறுகளை உரிய நேரத்துக்குள் தகுதியான முறையில் தீர்ப்பதற்குத் தொழிலாளர் நீதிமன்றங்களால் முடிவதில்லை. தொழிலாளர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அடுத்து இரு நீதிபதிகள் அமர்வு அதையும் தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று மூன்றடுக்கு மேல்முறையீட்டு அதிகாரங்களைச் சட்டம் வழங்கியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் நீதிமன்றங்களில் தங்களுக்குச் சார்பாகத் தீர்ப்புகளைப் பெற்றாலும் அதன் பலனை அனுபவிக்க அவர்களுக்குக் கிட்டத்தட்ட பத்து முதல் பதினைந்து ஆண்டுகளாகலாம். இதனால்தான் இந்தியாவில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களும், பெரிய தொழிற்சங்கங்களும் தொழிற்தகராறு சட்டத்தைப் பயன்படுத்துவதே இல்லை.
கடந்த 15 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னர், உச்ச நீதிமன்றத்தில் அந்தத் தொழிலாளர்கள் பெற்ற தீர்ப்பை இன்னும் என்.எல்.சி. நிறுவனம் முழுமையாக நிறைவேற்றவில்லை. தீர்ப்புகளை நிறைவேற்ற மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சொல்லிக்கொள்ளும்படியாக எவ்வித நடவடிக்கைகளையும் நீதிமன்றங்கள் மேற்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.
தொழிலாளர் சட்டத்தை இயங்கும்படி செய்யப்போவதாகக் கூறிய பாஜக, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் சட்டத் திருத்தங்களில் தொழிற்சங்கங்களுக்கு கட்டாய அங்கீகாரமும், கூட்டுபேர முயற்சிகளுக்கு ஆதாரமாகத் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த உரிமையையும் கொடுக்கத் தயாரில்லை.
சட்டத்தின் கீழ் தீர்வு என்பது கானல்நீராகிவிட்ட நிலையில், தங்களது பிரச்சினைகளை நேரடி நடவடிக்கைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முற்பட்டுள்ள நெய்வேலி தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தைத் தடை செய்ய நீதிமன்றம் முன்வரக் கூடாது!
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago