இன்றைக்கு சென்னையின் சில இடங்களில் தண்ணீருக்காக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக குழாய்களில் தண்ணீர் வருவதைப் பார்த்த மதராசப் பட்டணத்து மக்கள், என்னவோ ஏதோ என்று தலைதெறிக்க ஓடினார்கள். தமிழகத்தின் நீராதாரங்களை உருவாக்கித் தந்த ஆங்கிலேயப் பொறியாளர்கள்தான் 1914-ல் மெட்ரோ வாட்டருக்கும் விதை போட்ட வித்தகர்கள்.
ஜார்ஜ் டவுன் என்று சொல்லப்பட்ட வெள்ளையர் கோட்டைக்கு அந்தக் காலத்தில் மாட்டுவண்டிகளில் கட்டிய மர பீப்பாய்கள் மூலம்தான் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காகவே பெத்தநாயக்கன் பாளையத்தில் (இப்போதைய வள்ளலார் நகர் பேருந்து நிலையம் எதிரில்) ஏழு கிணறுகள் இருந்தன. இவற்றிலிருந்து ஏற்ற கமலை மூலம் நீர் இறைக்கப்பட்டு, மதராசப் பட்டணத்துக்கு விநியோகம் செய்யப்பட்டது.
1783-லிருந்து 1787 வரை பட்டணத்து மக்களுக்குக் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், குழாய்களில் தண்ணீர் வருவதைப் பார்த்து மிரண்டு ஓடிய மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு, வழக்கம்போலக் கிணறு மற்றும் ஆற்றுத் தண்ணீரையே பயன்படுத்தினார்கள். இதனால், அந்தத் திட்டம் வெற்றிபெறாமல் போனது.
1818-ல் மதராஸ் ஆட்சியர் எல்லீஸ், நகரின் பல்வேறு இடங்களில் மேலும் 27 கிணறுகளைத் தோண்டி, மக்களுக்கான தண்ணீர் தேவையைச் சமாளித்தார். மதராசப் பட்டணம் வேகமாக பெருநகரமாக வளர்வதைக் கவனத்தில்கொண்டு, 1872-ல் கொசஸ்தலை ஆற்றில் தாமரைப்பாக்கம் அருகே தடுப்பணையைக் கட்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்குத் தண்ணீர் திருப்பப்பட்டது. பொறியாளர் ஃபிரேசர் (Fracer) கட்டித் தந்த இந்தத் தடுப்பணையால் மதராசப் பட்டணத்துக்கான புதிய நீராதாரம் உருவாக்கப்பட்டது.
செங்குன்றம் ஏரியிலிருந்து கீழ்ப்பாக்கத்துக்கு மூடப்படாத சிமெண்ட் கால்வாய் (தினமும் 104 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கடத்தக் கூடிய இந்தக் கால்வாய் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது) மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அங்கே பவுல் வடிவ தொட்டியில் சேகரிக்கப்பட்டது. இங்கிருந்து வெள்ளையர்கள் வசித்த ஒயிட்ஸ் டவுனுக்கும் கருப்பர்கள் வசித்த பிளாக்ஸ் டவுனுக்கும் தனித் தனியாகக் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் முதன்முதலில் மூர்மார்க்கெட்
பகுதியில்தான் பொதுமக்களுக்குக் குழாய்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குடிநீரைக் குறிவைத்து செங்குன்றம் ஏரியிலிருந்து கீழ்ப்பாக்கம் வரை சிமெண்ட் கால்வாயின் இருபுறமும் மக்கள் குடியேறினார்கள். கால்வாய் தண்ணீரைத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்ட மக்கள், போதிய விழிப்புணர்வு இல்லாததால், கழிவு நீரையும் அதே கால்வாயில் கலந்தார்கள். இதனால் காலரா போன்ற நோய்கள் பரவின. இதையடுத்து, திறந்த கால்வாய் மூடிய கால்வாயாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், 1911-ல் சென்னை மாநகராட்சியின் சிறப்புப் பொறியாளர் ஜே.டபிள்யூ.மேட்லி ‘பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம்’ ஒன்றை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தார். அந்தத் திட்டம் செயலாக்கம் பெற்று, கீழ்ப்பாக்கத்தில் 14 மிதமணல் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு அங்கே குடிநீர் சுத்திகரிக்கப்பட்டது. 1914 டிசம்பர் 17-ம் தேதி, மதராசப் பட்டணத்து மக்களுக்கு முதன்முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதுதான் ‘மெட்ரோ வாட்டர்’ தொடக்கம்.
இதிலும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு இருப்பதாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதால், முதன்முதலாக 1921-ல் குளோரின் சேர்த்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டது. 1944-ல் சத்தியமூர்த்தி சென்னை மேயராக இருந்தபோது, பூண்டி ஏரியில் சென்னை குடிநீருக்கான புதிய ஆதாரம் ரூ. 60 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, 1983-ல் கிருஷ்ணா நதிநீர்த் திட்டம், 2005-ல் புதிய வீராணம் திட்டம் இவையும் மெட்ரோ வாட்ரின் கூடுதல் நீர் ஆதாரத்துக்குக் கைகொடுத்தன.
குழாய்கள் மூலம் மட்டுமே குடிநீர் வழங்கி வந்த மெட்ரோ நிர்வாகம், 1950-லிருந்து லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகத்தைத் தொடங்கின. இப்போது, தினமும் சுமார் 3,500 லாரிகள் சென்னையின் பல பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீரைச் சுமந்து செல்கின்றன. குழாய்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் தினமும் சுமார் 580 மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தந்து சென்னை மக்களின் தாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறது மெட்ரோ வாட்டர்.
- குள.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago