தமிழ் இதழியல் வரலாற்றைப் பற்றிப் பேசச் சொன்னால், பாரதியில் தொடங்கி சோவில் முடித்துவிடுபவர்கள் அனேகம். ஆனால், இந்திய இதழியலின் வரலாறு 1780-ல் ‘பெங்கால் கெஜட்’டிலிருந்து தொடங்குகிறது என்றால், தமிழ்நாட்டு இதழியலின் வரலாறும் 1782-ல் ‘மெட்ராஸ் கூரிய’ரிலிருந்து தொடங்கிவிடுகிறது. தமிழ் இதழியலின் வரலாறு 1840-ல் ‘தினவர்த்தமானி’யிலிருந்து தொடங்கிவிடுகிறது. அங்கிருந்து தொடங்கினால், இது தமிழ் இதழியலுக்கு 175-வது வருஷம். இந்த ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாற்றைப் பேச நம்மிடம் எத்தனை ஆவணங்கள் இருக்கின்றன?
ஆ.இரா.வேங்கடாசலபதி வரலாற்றின் இருள் மூடிய இடுக்குகளிலிருந்து எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் ஆளுமையை மீட்டெடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துகளின் ஒரு சிறு பகுதியைச் சேகரித்து, ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். கூடவே அவரைப் பற்றிச் சேகரித்த தகவல்கள் மூலம் அவர் வரலாற்றை எழுதியிருக்கிறார்.
ஒரு சின்ன புத்தகம். வெறும் 142 பக்கங்கள். ‘சென்று போன நாட்கள்’. 1886-ல் பிறந்து 1935-ல் மறைந்துவிட்ட எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் பத்திரிகையாளனின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் சுமந்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழ் இதழியல் வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
எழுத்தைத் தன் வாழ்வாக வரித்துக்கொண்ட இராமா நுஜலு நாயுடு ரங்கத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 17-வது வயதில் ‘பிரஜாநுகூலன்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியவர். பின், ‘ஆநந்த/அமிர்தகுணபோதினி’, ‘நகரதூதன்’, ‘சுதேசமித்திரன்’, ‘மஹாவிகடதூதன்’, ‘திராவிடாபிமானி’, ‘வந்தே மாதரம்’, ‘ஆத்மசக்தி’ என்று பல பத்திரிகைகளில் முக்கியப் பங்காற்றியவர் / பங்களித்தவர். இன்னும் கதைகள், சிறுவர்களுக்கான நூல்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு முயற்சிகளிலும் கனவுகளிலும் இருந்த இராமாநுஜலு நாயுடு, 1926-1934-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதிய கட்டுரைகளே ‘சென்றுபோன நாட்கள்’.
நாம் நன்கறிந்த பாரதி, வ.ரா. இருவரோடு, குளித்தலைக்குப் பக்கத்திலுள்ள மருதூரில் பிறந்து, பெரும் கனவுகளுடன் 1895-ல் ‘லோகோபகாரி’, ‘ஞானசந்திரிகா’, ‘தி இந்தியன் நியூஸ்’ பத்திரிகைகளைத் தொடங்கிய வி.நடராஜ ஐயர்; 1878-ல் ‘தி இந்து’, தொடர்ந்து ‘சுதேசமித்திரன்’, பின் ‘இந்து நேசன்’ என்று அந்நாட்களின் மூன்று முக்கியமான பத்திரிகைகளின் உருவாக்கத்தில் இருந்த எம்.விஜயராகவாச்சாரி; ஜில்லா பத்திரிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் தஞ்சாவூரில் திகழ்ந்த ‘ஜனானுகூலன்’ பத்திரிகையை நடத்திய டி.வி.கிருஷ்ணதாஸ்; அதற்குப் போட்டியாகத் திகழ்ந்த – தஞ்சாவூரில் தொடங்கப்பட்டு பின்பு கும்பகோணம் மாற்றப்பட்ட ‘யதார்த்தவசனி’யை நடத்திய டி.வி.கோவிந்தசாமி; திருநெல்வேலியில் கோலோச்சிய ‘சர்வஜனமித்திரன்’ தூண்களில் ஒருவராக இருந்த குருமலை சுந்தரம் பிள்ளை, சென்னையில் ‘சுதேசி’யை நடத்திய ஏ.சங்கரம் பிள்ளை, கோயமுத்தூரில் ‘கோவை சுஜனாபிமானி’, ‘கோவை ஜனாபிமானி’ பத்திரிகைகளை நடத்திய பி.வேணுகோபாலசாமி நாயுடு; சென்னையில் ‘நாஷனலிஸ்ட்’, ‘வந்தே மாதரம்’ பத்திரிகைகளை நடத்திய சி.செல்வராஜு முதலியார்; மதுரையில் ‘விவேகோதயம்’, ‘நச்சினார்க்கினியன்’ பத்திரிகைகளை நடத்திய ம.கோபாலகிருஷ்ண ஐயர்; சேலத்தில் ‘தக்ஷிணதீபம்’ நடத்திய டி.வில்ஸன், டி.ஏ.ஜான் நாடார்; சென்னையில் ‘விஜய விகடன்’ நடத்திய கே.எஸ்.கதிர்வேலு நாடார், ‘பிரம்ம தீபிகை’யை நடத்திய சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்;‘விவேக வர்த்தனி’, ‘சிந்தாமணி’ பத்திரிகைகளை நடத்திய க.வீரேசலிங்கம் பந்துலுகாரு என்று 18 பத்திரிகையாளர்களை நினைவுகூரும் தொடர் இது. இந்த 18 பேர் வாழ்க்கைக் குறிப்புகளினூடே அக்காலத் தமிழ் இதழியல் வரலாறு, நம் சமூகத்தில் வாசிப்புக் கலாச்சாரம் வளர்ந்த கதை, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பட்ட பாடு எல்லாவற்றையும் போகிற போக்கில் சொல்கிறார் இராமாநுஜலு நாயுடு. அவற்றில் பல விஷயங்கள் மிரள/நெகிழ வைக்கின்றன.
இராமாநுஜலு நாயுடுவைக் கொண்டாட நிறையக் காரணங்கள் கிடைக்கின்றன. முக்கியமானது நேர்மை – பாரபட்சமின்மை. சில நாட்களுக்கு முன் ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “எங்கும் சாதி உணர்வு தலைவிரித்து ஆடுகிறது. அறிவுலகம் மட்டும் என்ன வாழ்கிறது? ஒருவரைப் புகழ்ந்து ஒரு மதிப்புரை இன்றைக்கு வெளியானால், முதலில் இருவருக்குமான தொடர்பு என்னவென்று பார்த்துவிட்டுதான் மதிப்புரையை வாசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு அப்பட்டமாக நடக்கிறது சாதி அரசியல் எங்கும்.”
இராமாநுஜலு நாயுடு இங்கு பட்டியலிட்டிருப்பவர்களின் பெயர்கள் பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்கள் எல்லோரையுமே ஒரே சாதியாக அவர் பார்த்ததைச் சொல்கின்றன.
பாரதியைப் பற்றி எழுதும்போது, அவர் படைப்புகளைப் பற்றி எழுதுகிறார். ‘ஞானரதம்’ பற்றிச் சொல்லும்போது “அதற்கு இணையான நூல் தமிழ் மொழியில் இல்லை.” ‘பாஞ்சாலி சபதம்’ பற்றி சொல்லும்போது, “அதற்கு நிகர் அதுவே.” ‘கண்ணன் பாட்டு’ பற்றிச் சொல்லும்போது, “அதன் அற்புதத்தைப் பேச நமக்குச் சக்தி இல்லை.” பாரதியின் குறைகளை விமர்சனபூர்வமாகவும் அணுகுகிறவர் இராமாநுஜலு நாயுடு. ஆனால், சக எழுத்தாளனைப் பற்றி இப்படி விதந்தோத வேண்டும் என்றால், எப்பேர்ப்பட்ட மனம் வேண்டும்!
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச பத்திரிகை நிறுவனத் தலைவர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. காட்சி ஊடகங்களின் யுகத்தில் இனி அச்சு ஊடகங்கள் எப்படி எதிர் நீச்சல் அடிப்பது என்பது மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கியமான கருப்பொருள்களில் ஒன்று. அதில் பலரும் முன்வைத்த முக்கியமான தீர்வு: இனிவரும் காலங்களில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் சிறு நகரங்களை நோக்கிச் செல்வதாகவே அமையும்; அதற்கேற்ப அச்சு ஊடகங்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, மாநிலம் தழுவிய பத்திரிகையாகச் சென்னையிலிருந்து தொடங்க வேண்டும் என்று யோசிக்காதீர்கள்; மாற்றாக கோவை, மதுரை, திருச்சி என்று திட்டமிடுங்கள் என்பது.
நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பத்திரிகையுலகின் முன்னோடிகள் அதை முயன்றிருப்பதையும் சாதித்திருப்பதையும் ‘சென்றுபோன நாட்கள்’ சொல்கிறது. தஞ்சாவூரிலிருந்து வெளியான ‘ஜனானுகூலன்’ 5000 பிரதிகள் விற்றிருக்கிறது. அந்நாட்களில் கிட்டத்தட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுடன் ஒப்பிடத்தக்க விற்பனை இது.
நடராஜ ஐயரைப் பற்றிய கட்டுரையில், ‘லோகோபகாரி’, ‘ஞானசந்திரிகா’ பத்திரிகைகளில் அவருக்கு அலுவல்களில் உறுதுணையாக இருந்த விசாலாக்ஷியம்மாளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் இராமாநுஜலு நாயுடு. அவருடைய அற்புதமான மொழிநடையைப் பற்றிப் பேசுகிறார். விசாலாக்ஷியம்மாள் எழுதிய ‘லலிதாங்கி’, ‘ஜலஜாக்ஷி’ எனும் இரு நாவல்களையும் நடராஜ ஐயர் முதலில்
தன் பெயரில் வெளியிட்டு, அதற்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் அந்நாவல்களை எழுதியவர் விசாலாக்ஷியம்மாள் என்பதை வெளியிட்டு ஏற்படுத்திய பிரமிப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார். விசாலாக்ஷியம்மாளுக்கு மிகப் பெரிய வாசகர் வட்டம் இருந்ததைச் சொல்கிறார். இன்றும் பெண்கள் அரிதான ஊடகத் துறையில் நூறு வருஷங்களுக்கு முன் விசாலாக்ஷியம்மாள் எப்பேர்ப்பட்ட ஆச்சர்யம்!
இன்னும் இன்னும் ஆச்சர்யங்கள்.. தமிழ் இதழியல் உலகம் இராமாநுஜலு நாயுடுவுக்கு நிறையக் கடமை பட்டிருக்கிறது!
*
ஆ .இரா.வேங்கடாசலபதியின் புத்தகம் ஒவ்வொன்றும் பல்லாண்டு கால உழைப்பைக் கோருவது என்றாலும், அவரை ஒரு சாவகாசர் என்று சொல்லிவிட முடியாது. தன்னுடைய 17 வயதில் ‘வ.உ.சி. கடிதங்கள்’ மூலம் அறிமுகமானவர், அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்.
எனினும், அவருக்கு 2015 முக்கியமானது என்று தோன்றுகிறது. ‘பாரதியின் சுயசரிதைகள்’, ‘பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு’, ‘எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் சென்றுபோன நாட்கள்’ என்று இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மூன்று புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். தனிப்பட்ட வகையில் அவர் தனக்கு மிக நெருக்கமானதாகக் கருதும் ‘பெரியார் வரலாறு’ ஆங்கில நூல் வேலைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடலாம் என்கிறார். எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவுக்காக அவர் அலைந்த கதையைப் பேசினோம்.
ஆ .இரா.வேங்கடாசலபதி
எந்த வருஷம் உங்கள் கண்ணில் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு சிக்கினார்?
1987. பொதுவாக பாரதி ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு நாயுடு ரொம்ப சீக்கிரம் அறிமுகமாகிவிடுவார். எப்படி யென்றால், பாரதி மறைவுக்குப் பின் அவரைப் பற்றி வெளியான இரங்கலுரைகளில் ரொம்பவும் முக்கியமானது எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எழுதியது. ‘அமிர்த குணபோதினி’ பத்திரிகையில் 1928 நவம்பரில் தொடங்கி 1929 மே வரை ஒரு தொடர்போல வெளியான கட்டுரை அது. ரா.அ.பத்மநாபன், சீனி.விசுவநாதன், மா.சு.சம்பந்தம் மூன்று பேருமே அந்தக் கட்டுரையை மட்டும் மறுவெளியீடு செய்திருக்கிறார்கள். பாரதியை உயிரோட்டமாக அப்படியே நம் முன் கொண்டுவந்து அதில் நிறுத்துகிறார் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு. அவருடைய ஆளுமை மீது ஒரு மயக்கத்தையே கொண்டுவருகிறார்.
கவனிக்க வேண்டிய விஷயம், இவ்வளவு நேசிக்கும் பாரதி மீதான விமர்சனத்தையும் பதிவுசெய்கிறார். ‘இந்தியா’ பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோதுதான் பாரதி ஆங்கிலேய அரசால் குறிவைக்கப்படுகிறார். அவருடைய நண்பர்களுடைய ஆலோசனைபடி இங்கிருந்து புதுச்சேரி தப்புகிறார். இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். பாரதி இப்படிச் செல்லும்போது, ‘இந்தியா’ பத்திரிகையின் நடைமுறை ஆசிரியராகத்தான் அவர் இருக்கிறாரேயன்றி அதிகாரபூர்வ ஆசிரியர் அவர் அல்ல. அந்தப் பொறுப்பில் இருந்தவர் எம்.நிவாசன்.
ஆனால், அவர் பெயர் அளவுக்கே ஆசிரியர். பாரதி புதுச்சேரிக்குப் போன பின் ஆங்கிலேய அரசு நிவாசனைப் பிடித்து உள்ளே போடுகிறது. இதைத் தன் கட்டுரையில், எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு சுட்டிக்காட்டுகிறார். ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டு தாம் தூரப்போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்’ என்று எழுதுகிறார். எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் நேர்மை அவரைக் கவனிக்க வைத்தது.
அப்புறம் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை எழுதிச் செல்லும்போது புதுமைப்பித்தன் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவைப் பற்றி எழுதுகிறார். கறாரான விமர்சகரான புதுமைப்பித்தன் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்கிறார். 1988-ல் டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் 1920-ம் வருஷ ‘சுதேசமித்திரன்’ நுண்படச் சுருளைப் பார்க்கும்போது, அதில் ‘பரிமளா’ ஒரு நாவல் விளம்பரம். பாரதி பாராட்டியதாகச் சொல்லும் குறிப்புடன்.
பாரதியே பாராட்டியிருக்கிறாரே; ஆனால், யாருக்கும் தெரியவில்லையே என்று பல வருஷங்கள் ‘பரிமளா’ தொடர்பான விவரங்களைத் தேடி அலைந்தேன். கடைசியில், லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தேன். அதன் முகப்பில் உள்ள குறிப்பில் இவர் பெயர். ‘திரிசிரபுரம் பிரஜாநுகூலன் பத்திராதிபர் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு அவர்களால் தமிழிற்கு அவஸியமான சீர்திருத்தங்களுடன் சென்னை நாஷனல் பிரிண்டிங் ஒர்க்ஸில் பதிப்பித்துப் பிரசுரிக்கப்பட்டது’ என்று. இப்படி எங்கெங்கோ எதையெதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இவர் பெயர் வந்து விழுகிறது. ஆனால், அவரைப் பற்றி இன்றைக்குப் பதிவே கிடையாது. இப்படிதான் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு என்னைப் பிடித்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 28 வருஷம் அலையவிட்டிருக்கிறாரா?
இன்னும்கூட நீளக் கூடிய அலைச்சல் இது. நம்முடைய சூழல் அப்படி இருக்கிறது. வேறு என்ன சொல்ல? இதில் பெரிய நகைமுரண், பாரதி உட்பட தன் காலத்து முக்கியமான பத்திரிகையாளர்கள் பலருடைய வாழ்க்கையை ‘சென்றுபோன நாட்கள்’ தொடர் மூலம் பதிவுசெய்த எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவையே நாம் மறந்துபோனதுதான். இந்தத் தேடல் நீண்டது என்றாலும், அதை வேகமாக்கியதில் என்னுடைய மாணவர் ஜெ.பாலசுப்பிரமணியனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழகத்தில் தலித் பத்திரிகையாளர்கள் நடத்திய பத்திரிகைகளின் வரலாறு தொடர்பான அவருடைய ஆய்வு என்னுடைய ஆய்வை நோக்கி நான் வேகமாக நகரவும் உதவியது.
இதுவரை கிடைத்திருக்கும் ஆவணங்கள் வழியே பார்க்கும்போது எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எப்படிப்பட்ட ஆளுமையாகத் தெரிகிறார்?
அவருக்கான அறிமுகம் ‘பிரஜாநுகூலன்’ என்றாலும், அளவிலும் சரி, வாசகர்கள் பரப்பிலும் சரி அது ஒரு சின்ன பத்திரிகையாகவே இருந்திருக்கிறது. ஆனால், தொழில்நிமித்தம் வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றும்போதும்கூட தன்னுடைய 17-வது வயதில் தொடங்கிய ‘பிரஜாநுகூல’னை அவர் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அதன் மூலப் பிரதியைப் பார்த்தபோது, ஒரு தொகுப்புப் புத்தகம் மாதிரியே தோன்றியது. அதாவது, தனக்குக் கண்ணில் படும் எல்லா நல்ல விஷயங்களையும் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டிருக்கிறார்.
கட்டுரைகளைத் தாண்டி கதைகள் எழுதியிருக்கிறார், நாவல் எழுதியிருக்கிறார், இன்னும் நிறையக் கனவுகள் அவருக்கு இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் உணர முடிகிறது. ஆனால், தமிழ் முன்னோடிகள் பலரையும்போல இவர் கதையும் வாழ்ந்து கெட்ட குடும்பத்துக் கதைதான். 49 வயதில் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு இறந்தபோது வயதான தாய், மனைவி ஆறு பிள்ளைகள் நிர்க்கதியில் நின்றிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழ் இதழியல் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை அவர் நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் நமக்கான செய்தி.
இப்படியான புத்தகங்களுக்கெல்லாம் எந்த அளவுக்கு வாசகர்களிடம் வரவேற்பு இருக்கிறது?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் புத்தகம் வெளியாகி 3 மாதங்கள் ஆகின்றன. இதுவரை ஒரு கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை. பத்திரிகைகளில் ‘தி இந்து’வில் இப்போது வரப்போவதுதான் முதல் குறிப்பு. வரலாற்றிலிருந்து தேடியெடுத்து தொகுத்த ‘வ.உ.சி-யும் திருநெல்வேலி எழுச்சியும்’ தொடங்கி ‘பாரதியின் விஜயா கட்டுரைகள்’ உள்ளிட்ட பல முக்கியமான புத்தகங்களை அரசாங்கம் நூலகத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
விற்பனையிலும் இத்தகைய புத்தகங்கள் மந்தம்தான். ஆனால், நேற்று ஒரு வாசகர் செல்பேசியில் அழைத்தார். “இப்போதுதான் நீங்கள் தொகுத்த ‘பாரதி கருவூலம்’ படித்தேன்!” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். இப்படி யாரோ நாலு பேருக்காகத்தான் எழுதுகிறேன். ஆனால், வரலாற்றில் அதன் பங்களிப்பு வேறு இல்லையா!
பெரியார் வரலாற்று நூல் ஆங்கிலத்தில் ஏன்?
முதலில் அது ஆங்கிலத்தில்தான் வர வேண்டும். ஏனென்றால், முழுமையான தரவுகளுடன் ஆங்கிலத்தில் பெரியார் வரலாற்றைச் சொல்லும் ஒரு நூலுக்கான தேவை இருக்கிறது. பெரியார் ஒரு சர்வதேச ஆளுமை. ஆனால், அவரைத் தமிழகத்துக்குள் அடக்கிவிட்டோம். தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால், இப்படி எவ்வளவு பேர் இங்கேயே புதைக்கப்பட்டுவிட்டார்கள்? ஏ.கே.செட்டியாரை எடுத்துக்கொள்வோமே, இந்நேரம் வங்கத்தில் பிறந்திருந்தால் அவரை எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துக் கொண்டாடுவார்கள்? நாம் இன்னும் நிறைய ஓட வேண்டும்!
-சமஸ்,தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
| ஆக.17 - எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் 80-வது பிறந்தநாள் |
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago