காந்திநகரில் மையம் கொண்ட புயல் கரை யைக் கடந்து டெல்லி சென்ற வழியில் ஏகப்பட்ட கோட்டைகளைச் சிதைத்து வீசிவிட்டது. தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்குப் பின்னர் மாநிலக் கட்சிகள் பலவற்றில் குழப்பமும் அதிருப்தியும் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வென்ற 71 தொகுதிகள் போக மாநிலத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சிக்குக் கிடைத்த தொகுதிகள் ஐந்தே ஐந்துதான். கட்சியின் தலைவரும் முதல்வர் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங், அகிலேஷின் மனைவி டிம்பிள் மற்றும் அவரது உறவினர்கள் எல்லாரும்தான் அந்த ஐவர்.
சமாஜ்வாதி வேற மாதிரி
இந்தத் தோல்விக்குக் காரணம் என்ன என சுயபரிசோதனையில் இறங்கியுள்ள சமாஜ்வாதி கட்சி அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கட்சியில் செல்வாக்குள்ள, 36 நிர்வாகிகளை நீக்கி யிருக்கும் அகிலேஷின் முடிவு, பல புருவங்களை உயர்த்தியுள்ளது. அருகில் உள்ள பிஹார் மாநிலத்தில் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து நிதீஷ் குமார் விலகியதுடன் ஜிதன்ராம் மாஞ்சியை அந்தப் பதவியில் அமரவைத்திருக்கிறார். என்றாலும், “உத்தரப் பிரதேசத்தின் அரசியல் நிலையைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது” என்ற நிலைப்பாடு எடுத்துவிட்ட அகிலேஷ், தோல்விக்குப் பொறுப் பேற்று ராஜினாமா என்ற பேச்சுக்கே இட மில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
சூழலைப் புரிந்துகொள்ள தோல்விகள் அவசியம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர் அகிலேஷ். என்றாலும், காயங்களுக்கு பிளாஸ்திரி போட்டு மறைப்பதைவிட அறுவைச் சிகிச்சையே சிறந்தது என்ற கருத்திலும் தீவிரமாக இருப்பவர். அதே சமயம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்குவதில் அவரது தந்தை முலாயம் சிங்குக்கு அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை என்றாலும், இந்தத் தேர்தலில் கிடைத்த பெரும் தோல்வியை முலாயம் ரசிக்கவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் முதல்வர் அகிலேஷ், மாநில அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய முலாயம் தன் மகனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தார். “மக்களவைத் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் நீக்கப்படுவார்கள்” என்றார். அகிலேஷின் ஆட்சியின் பலவீனங்கள் கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். துதிபாடிகளின் வார்த்தைகளுக்கு மயங்கினால் பின்னர் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்றும் அகிலேஷுக்கு அறிவுறுத்தினார்.
விளக்கமும் அதிருப்தியும்
தந்தை என்றாலும் பொது இடங்களில் ‘நேதாஜி’ (தலைவர்) என்றே அழைக்கும் அகிலேஷ், “தலைவர் அவர்களே, நீங்கள் விரும்பியபடியே நல்லாட்சிதான் நடக்கிறது. தவிர, கட்சியில் இருந்த துதிபாடிகள் உங்கள் காலத்திலேயே நீக்கப்பட்டுவிட்டார்கள்” என்று பதிலடி கொடுத்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் கட்சிக்கு மக்களிடையே இருந்த அதிருப்தியைக் காட்டிவிட்டது. இதையடுத்து, முலாயமின் கவலை மேலும் அதிகரித்துவிட்டது.
“முதல்வராக இருந்தபோது 2009 மக்களவைத் தேர்தலில் 36 இடங்களை வென்றிருக்கிறோம். இந்தத் தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சியினர் வெற்றி யடைந்திருக்கின்றனர். நமக்கு ஏன் இது நிகழவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “வாக்குக் கணிப்பு முடிவுகள் பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணை உயர்த்த மட்டுமே உதவியிருக்கின்றன. உண்மையான முடிவுகள் நிச்சயம் வேறுமாதிரி இருக்கும்” என்று கூறிவந்த அகிலேஷ், தற்போது, “நாங்கள் செயல்படுத்திய பல திட்டங்கள் பற்றிச் சரியான முறையில் மக்களிடம் விளம்பரம் செய்யத் தவறிவிட்டோம். தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்” என்று அகிலேஷ் விளக்கம் சொல்கிறார். அவரது விளக்கம் முலாயமுக்குத் திருப்தியளிக்கவில்லை.
கணிசமான இடங்களில் வென்றால் மத்திய அரசில் சமாஜ்வாதி கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்த்திருந்த முலாயம், இந்தத் தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்தார். தோல்விக்கான காரணம்பற்றிக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த முலாயம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்க முடிவுசெய்ததாகவும், இளம் தலைவர்களைக் கட்சியிலும் மாநில அரசியலிலும் நுழைக்கத் திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் திட்டத்தை அகிலேஷ் நிறைவேற்றிவிட்டார். இரண்டாவது திட்டம்
அதேபோல, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத அதிர்ச்சியில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கட்சிக்குள் களையெடுக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். 20 மக்களவை உறுப்பினர்களைக் கையில் வைத்திருந்ததுடன், இந்த முறையும் கணிசமான இடங்களில் வென்றால், மூன்றாவது அணியின் ஆதரவுடன் பிரதமராகிவிடலாம் என்ற நினைப்பில் இருந்த மாயாவதிக்கு, தேர்தல் தோல்வி கடும் அதிர்ச்சியளித்திருக்கிறது. கட்சிக்கு மக்களிடையே இருந்த ஆதரவு நிலைபற்றி சரியான தகவல் தராத கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியடைந்த மாயாவதி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கட்சியின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் எதிர்பார்த்திராத வெற்றியடைந்துள்ள பா.ஜ.க. அந்த மாநிலத்தில் வேரூன்றிவிட்டால் தங்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் மாநிலக் கட்சிகள் களையெடுப்பில் இறங்கியிருப்பதில் ஆச்சரியமில்லை.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago