க.சே.ரமணி பிரபா தேவி
பிளாஸ்டிக் கழிவுகளில் அக்கறை காட்டாமல் நாம் தொடர்ந்துகொண்டிருந்தால், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் என்கிறது, உலகப் பொருளாதார மையம். இந்த மிகப் பெரும் அபாயத்திலிருந்து மீள்வதற்காக நம் ஒவ்வொருவரின் பங்களிப்புமே அவசியமானதாகிறது. சில ஆச்சரியகரமான முன்னெடுப்புகளைச் சில மாநிலங்கள் கையில் எடுத்திருக்கின்றன.
பிளாஸ்டிக் கட்டணம்
அசாமின் பமோஹி பகுதியில் உள்ள அக்ஷர் பள்ளியில் அங்கு படிக்கிற பிள்ளைகளுக்குக் கட்டணம் கிடையாது. அதற்குப் பதிலாக வீட்டிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவரச் சொல்கிறார்கள். பமோஹிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சமூக ஆர்வலர்கள் பர்மிதா சர்மா, மஸின் முக்தர் இருவரும் அங்குள்ள மக்கள் பின்பற்றிவந்த ஒரு மோசமான வழிமுறையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குளிரைத் தாங்க முடியாத அசாம் மக்கள், பிளாஸ்டிக்கை எரித்து குளிர்காய்ந்துகொண்டிருந்ததுதான் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிளாஸ்டிக்கை எரிப்பதால் விளையும் கெடுதலை வார்த்தைகளால் எடுத்துச்சொல்லி பெரும் மாற்றத்தைக் காண முடியாத நிலையில், செயலில் இறங்க முடிவெடுத்தனர். விளைவாக, அக்ஷர் பள்ளி தொடங்கப்பட்டது.
இங்கே பள்ளிக் கட்டணமாக பிளாஸ்டிக் கழிவுகள்தான் வசூலிக்கப்பட்டன. இதன்படி, ஒவ்வொரு வாரமும் பள்ளிக் குழந்தைகள் குறைந்தது 25 பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவந்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சிறுவர்கள் உற்சாகத்துடன் பிளாஸ்டிக்கைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலை அமைக்கவும், பிளாஸ்டிக் செங்கல் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்களைக் கொண்டே பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு அங்கே நல்ல வரவேற்பு.
கடலும் பிளாஸ்டிக்கும்
இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 11 கிலோ பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட கழிவுகளில் பெரும்பாலானவை கடலில்தான் கலக்கின்றன. இப்போதெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வலை விரித்தால், மீன்களைவிட பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகம் சிக்குகின்றன. பொதுவாக, வலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் கடலிலேயே கொட்டிவிடுவதுதான் மீனவர்களின் வழக்கம். அதைக் கரைக்குச் சுமந்துவரச் சொல்லி நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இதுவும் சாத்தியப்பட வேண்டுமென்றால், அதற்கு அரசு மனது வைக்க வேண்டும்.
இதற்கு முன்னோடியாக இருக்கிறது கேரளம். கேரள மீன்வளத் துறை அமைச்சர் மெர்சிக்குட்டி அம்மாவின் வழிகாட்டுதலின்படி 2018 மே மாதத்தில் ‘சுசித்வ சாகரம்’ (தூய்மையான கடல்) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கேரள மீனவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து, கரைக்கு எடுத்துவரும் நடைமுறையைக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் முதல் 10 மாதங்களில் மட்டும் அரபிக் கடலிலிருந்து 25 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.
கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்களிடமிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் மீனவச் சமூகத்தினர், அவற்றைச் சிறுசிறு துண்டுகளாக்கி பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க விற்றுவிடுகின்றனர். இதன் மூலம் கடல் மடியும் தூய்மையாகத் தொடங்கியிருக்கிறது; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகத் தொடங்கியுள்ளன.
அவசரம்... அவசியம்...
இந்தியா முழுவதும் சுமார் 34,000 கிமீ நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியத் தட்பவெப்பநிலையைத் தாங்கிநிற்கும் அளவுக்கு, பிளாஸ்டிக் சாலைகள் உறுதியாக உள்ளன. வழக்கமான சாலைகளின் உருகுநிலை 50 டிகிரி செல்சியஸ் என்றால், பிளாஸ்டிக் சாலைகளின் உருகுநிலை 66 டிகிரி செல்சியஸாக உள்ளது. அதேபோல, வழக்கமான சாலையைக் காட்டிலும் பிளாஸ்டிக் சாலைகளுக்கு 8% குறைவாகவே செலவாகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றாக நிறுத்தும் வரை, நாம் இதுவரை தேக்கிவைத்திருக்கும் பிளாஸ்டிக் மலைகளை இப்படியான முன்னெடுப்புகளால்தான் தகர்த்தெறிய முடியும்.
(நிறைந்தது..!)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago