க.சே.ரமணி பிரபா தேவி
மனித குலத்துக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், செடிகொடிகளுக்கும் என ஒட்டுமொத்த சூழலுக்குமே மிகப் பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் மாறிவருவது குறித்துப் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பேசிக்கொண்டும் இருக்கிறோம்.
ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாகத் தடைவிதிக்க முடியவில்லையே, ஏன்? அதிக அளவில் உற்பத்தியாகும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையைக்கூட நம்மால் நிறைவேற்ற முடியவில்லையே, எதனால்? 2018-ல் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சூழலியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு 2020-ல் தடைவிதிக்கப்படும் என்று அறிவித்தார். பிறகு, காலக்கெடு 2022 என மாற்றியமைக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம்? இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காந்தியின் பிறந்த நாளிலும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். நீண்ட காலமாகவே இதுகுறித்து அரசு பேசிவந்தாலும், அதில் எந்தவொரு கொள்கை முடிவும் தீர்க்கமாக இதுவரை எடுக்கப்படவில்லையே, ஏன்? குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர், சிறு-குறு வணிகர்கள், மளிகைக் கடைக்காரர்கள் பயன்படுத்திவரும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கார்ப்பரேட்டுகள் விற்கும் பிஸ்கெட்டுகள், சாக்லேட்டுகள், நொறுக்குத் தீனிகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் பயன்படுத்துகின்றன. அவற்றுக்கு ஏன் இன்னும் தடைவிதிக்கப்படவில்லை?
இந்தியாவில் முதன்முதலாக 2009-ல் இமாச்சல பிரதேசத்தில் பிளாஸ்டிக் உபயோகத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் 2016-லும், டெல்லியில் 2017-லும் சிலவகை பிளாஸ்டிக்குகளுக்குத் தடைவிதிக்கப்பட்டன. கோவா மற்றும் குஜராத்தில் வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுப் பகுதிகள் போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது. பிஹார், மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களும் சமீபத்தில் இணைந்துள்ளன. ஆனால், பிளாஸ்டிக் தடை முழுமையாகச் செயல்பாட்டில் இருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் யதார்த்தம்.
கார்ப்பரேட்டுகளின் வணிகத்துக்காகவும் லாபத்துக்காகவும் பிளாஸ்டிக் தடைக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது என்று ஒலிக்கும் குரல்களை நம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. அதேவேளையில், பிளாஸ்டிக் உபயோகத்துக்கு அரசு தடைவிதித்தபோது, பெருந்திரளாக ஆதரவுதந்த பொதுமக்களால்கூட அதைத் தொடர முடியாததற்கு என்ன காரணம் என்றும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு எப்படி அரசுத் தரப்பிலிருந்து முழுமையாகச் சாத்தியப்படவில்லையோ அதேபோல பிளாஸ்டிக்கைக் கைவிட நினைக்கும் பொதுமக்களால்கூட முழுமையாக அதிலிருந்து விடுபட முடியாததற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது; அது மாற்று ஏற்பாடுகளில் இருக்கும் போதாமைதான்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே இதை முழுமையாக ஒழிப்பது குறித்து நாம் யோசிக்க முடியும். அந்த மாற்றுப் பொருட்கள் விலை மலிவாகவும், பரவலாகக் கிடைக்கும்படியும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அரசு இதையெல்லாம் கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாகத் தடைவிதிப்பதை நோக்கி நகர வேண்டும். ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்த முடியும்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பைச் சாத்தியமாக்க முடியும்போது பிளாஸ்டிக் தடை மட்டும் முடியாதா என்ன?
(தொடர்வோம்...)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago