இமையம்
சிறுநீரகம் செயலிழந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக தமிழ்நாடு அரசு ‘உயிர் காக்கும் மருந்துகள்’ என்று வழங்குகிறது. உயிர் காக்கும் இலவச மாத்திரைகள் பெறுவதற்குத் தகுதியானவர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்கள் மட்டுமே. உயிர் காக்கும் இலவச மாத்திரைகள் பெறுவதற்குக் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைச் செயலரிடம் அனுமதி ஆணை பெற வேண்டும். பெறப்பட்ட ஆணையை மூன்று மாதத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கத் தவறினாலோ, புதுப்பித்த ஆணையின் நகல் நோயாளியின் கைக்குக் கிடைப்பதற்குத் தாமதமானாலோ நோயாளி மாத்திரைகளைப் பெற இயலாது. அதேபோல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.73,000 இருந்தாலும் உயிர் காக்கும் இலவச மாத்திரைகளைப் பெற முடியாது.
மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் எல்லா மாத்திரைகளுமே அரசு மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கும் என்று கூற இயலாது. அரசு மருத்துவமனையில் கிடைக்காத மாத்திரைகளை நோயாளிகள் தனியாரில் வாங்கித்தான் சாப்பிட வேண்டும். இலவசமாக அரசு வழங்கும் மாத்திரைகளைக்கூட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும்தான் வாங்க முடியும். விலை உயர்ந்த உயிர் காக்கும் மருந்துகள் தஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அங்கே போய்க் கேட்டால் ‘ஸ்டாக் இல்ல. சென்னைக்குப் போங்க’ என்றுதான் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நோயாளிகளும் மாதந்தோறும் சென்னைக்கு வந்துதான் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். கன்னியாகுமரியிலுள்ள நோயாளி சென்னைக்கு வந்து செல்ல குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவாகும். பயணச் செலவுக்குப் பணம் இல்லாததாலேயே பல நோயாளிகள் மாத்திரைகள் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட இயலாத நிலையில், புதிதாகப் பொருத்திக்கொண்ட சிறுநீரகமும் பொருந்தாமல் போய்விடுகிறது. மாத்திரைகளை வாங்குவதற்காக சென்னைக்கு வந்து செல்லும்போது பல நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டு, புதிதாகப் பொருத்திய சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இப்படியாக, உயிரைக் காத்துக்கொள்ள மாத்திரை வாங்குவதற்காகப் போய், உயிரை விடும் அவல நிலை ஏற்படுகிறது.
தமிழக அரசின் முரணான சட்டம்
2017-ம் ஆண்டு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனிநபரின் குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்று தீர்மானிக்க அனுப் சத்பதி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. ஓராண்டு ஆய்வுசெய்த வல்லுநர் குழு 2018-ல் தனிநபருக்கான ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து மத்திய அரசுக்கு அளித்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் ஒரு நாள் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.414 அல்லது ஒரு மாதத்துக்கு ரூ.10,794 என்பதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்களுக்கு மட்டுமே உயிர் காக்கும் மாத்திரைகளை இலவசமாக வழங்க முடியும் என்று நிர்ணயித்திருக்கிறது. உயிர் காக்கும் இலவச மாத்திரைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல; தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்ளவும், அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அரசு வழங்கும் உதவித்தொகையான 4 லட்சம் ரூபாயைப் பெறுவதற்கும் குடும்ப ஆண்டு வருமானமாக நிர்ணயித்திருப்பது ரூ.72,000 மட்டுமே. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்வதற்கு மட்டுமல்ல; கல்லீரல், கணையம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் இதே வருமான விதிமுறையைத்தான் தமிழ்நாடு அரசு பின்பற்றுகிறது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டத்தின்படி தனிநபரின் ஒரு நாள் ஊதியமாக எவ்வளவு நிர்ணயித்திருக்கிறது? ஒரு நாளுக்கு ரூ.300 என்று வைத்துக்கொண்டால்கூட, மாதத்துக்கு ரூ.9,000 வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,08,000. கணவனுக்கும் மனைவிக்கும் என்று சேர்த்துக்கொண்டால் ரூ.2,16,000 என்றாகிறது. இந்தக் கணக்கு சட்டத்தின்படி மட்டுமே. நிஜத்தில் கூடலாம், குறையலாம். தனிநபருக்கு ஆண்டு வருமானம் ரூ.1,08,000 என்று சொல்கிற தமிழக அரசின் சட்டமானது, உயிர் காக்கும் மருந்து பெறவும், மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்வது முரண் அல்லவா? அரசே, அரசின் சட்டத்தை மீறுகிறது. உழவர் காப்பீட்டுத் திட்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே இச்சலுகையை வழங்குகிறது. 2019-ல் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் ஆண்டு வருமானம் நிச்சயம் ரூ.72,000-த்தைத் தாண்டித்தான் இருக்கும். அரசே ஒரு லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கும்போது, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருப்பவர்களால் எப்படி உயிர் வாழ முடியும்? தமிழ்நாட்டில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மட்டுமே உள்ள எத்தனை குடும்பங்களைத் தமிழக அரசால் இன்று காட்ட இயலும்?
தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.205 ஊதியமாக வழங்கப்பட்டுவந்தது. ஏப்ரல் 2018 முதல் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.224 ஊதியமாக வழங்குகிறது. இதன்படி, மாதத்துக்கு ரூ.6,720 என்றும், ஆண்டுக்கு ரூ.80,640 என்றும் வருகிறது. கணவனுக்கும் மனைவிக்குமாக ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டால் ரூ.1,61,280. ஆகவே, எந்த விதத்தில் கணக்கிட்டுப் பார்த்தாலும் தமிழக அரசு நிர்ணயித்திருக்கிற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 என்பது தவறானதாகவே இருக்கிறது. மத்திய அரசு பொதுப் பிரிவினருக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 என்று நிர்ணயித்திருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் முரணான அணுகுமுறையானது உழவர் காப்பீட்டு அடையாள அட்டை பெறவும், ஆண்டு வருமானம் ரூ.72,000 என்று சான்று பெறவும், மறைமுகமாகப் பொதுமக்களைக் குற்றச்செயல்கள் செய்யத் தூண்டுகிறது.
சிறுநீரகச் செயலிழப்பு என்பது இப்போது வேகமாகப் பரவிவரும் நோயாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரகம் செயலிழந்துவிட்டது என்றால், அந்தக் குடும்பத்தின் துயரைச் சொல்ல இயலாது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட ஒரு நோயாளி சாகும் நாள்வரை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மாதத்துக்குக் குறைந்தது ரூ.12,000-க்கும் அதிகமாக மாத்திரைக்கு மட்டுமே செலவிட வேண்டும். வசதியான குடும்பம் என்பதுகூட சிறுநீரகச் செயலிழப்பு என்ற நோயால் தெருவுக்கு வந்துவிடும், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளைக்கு 150 பேர் டயாலிஸிஸ் செய்துகொள்கிறார்கள் என்றால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது பத்தாயிரமாவது இருக்கும்.
தமிழக அரசு செய்ய வேண்டியவை
உயிர் காக்கும் இலவச மருந்துகள் பெறவும், தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம், கல்லீரல், கணையம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அரசு நிர்ணயித்திருக்கும் ஆண்டு வருமானம் ரூ.72,000 என்பதை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என மாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்ள அரசு வழங்கும் உதவித்தொகையான ரூ.4 லட்சம் என்பதை மாற்றி ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். உயிர் காக்கும் இலவச மருந்துகள் பெறுவதற்குக் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைச் செயலரிடம் ஒரு முறை அனுமதி ஆணை பெற்றாலே போதும். பெறப்பட்ட ஆணையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும். அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று ஆணை வழங்க வேண்டும். மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற அடையாள அட்டை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். இலவசமாக வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே வழங்க வேண்டும்
உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்காகப் போய் உயிரை விட நேர்கிற நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை, உணவுப் பொருட்களை வீடு தேடிச் சென்று கொடுப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது தமிழக அரசு. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கும் ஏன் வீடு தேடிப் போய் மாத்திரைகளை வழங்கக் கூடாது? மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளை மட்டும் அரசு ஏன் அலைக்கழித்துக் கொல்கிறது? தமிழக அரசு நோயாளிகளைக் காக்க விரும்புகிறதா? சாகடிக்க விரும்புகிறதா?
ஏனைய மாநிலங்களை விட தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முன்னோடியானது. இப்படிப்பட்ட மாநிலத்தில், ஒரு மக்கள் நல அரசு என்பது மக்களுக்கு உதவும்போது நடைமுறையில் உள்ள பிரச்சினைகளையும் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர, உதவி பெறுவோரைக் கழித்துக் கட்டுவதற்காக விதிமுறைகளைத் திணித்து, மக்களைத் திண்டாட வைக்கக் கூடாது. ஆகவே, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டவர்களுக்கு எளிதில் மருந்துகள் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்தால், வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களும் அரசை வாழ்த்தும்.
- இமையம், ‘கோவேறு கழுதைகள்’, ‘செல்லாத பணம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago