பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு

By க.சே.ரமணி பிரபா தேவி

க.சே.ரமணி பிரபா தேவி

எங்கும் பிளாஸ்டிக் ராஜ்ஜியம். தலை சீவும் சீப்பில் தொடங்கி காலில் அணியும் செருப்பு வரை பிளாஸ்டிக். ஒரு மனிதரின் ஆதாரத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மூன்றிலுமே பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்திருக்கிறது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வசனம் நம் யுகத்தில் பிளாஸ்டிக்குக்குத்தான் பொருந்தும்.
ஒருகாலத்தில், செய்தித்தாள்களில் மடித்துக் கொடுக்கப்பட்ட பொருட்கள் ஏன் இன்று பிளாஸ்டிக் பைக்கு மாறின? மரத்தாலான மேசை, நாற்காலிகள், கண்ணாடிகளையும், அலுமினியம், பித்தளை, செம்பினாலான பாத்திரங்களையும், மண், செங்கற்களைக் குழைத்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களையும் இன்று பிளாஸ்டிக் தனதாக்கிக்கொண்டது எப்படி? தூக்குச்சட்டிகள், பாத்திரங்கள், இலைகள், மஞ்சப்பை, கோணிப்பை என்று புழங்கிய நம்மை எது பிளாஸ்டிக் நோக்கி இழுத்தது?
இதற்கு நாம் பிளாஸ்டிக்கின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் சாதக பாதகங்களை அலசி, பிளாஸ்டிக் பயன்பாட்டை மறுவரையறுத்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியம்.

பிளாஸ்டிக்கின் ஆதிகாலம்

ஆரம்ப காலத்தில் இயற்கையான பொருட்களே பிளாஸ்டிக்காகப் பயன்படுத்தப்பட்டன; சூயிங்கம், பிசின் இதில் முக்கியப் பங்குவகித்தன. அடுத்ததாக, இயற்கைப் பொருட்களை வேதியியல் வினைகளுக்கு உட்படுத்தி பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டது. மனித உடலில் உள்ள கொலாஜன் புரதம், ரப்பர் இதில் பயன்படுத்தப்பட்டன. இறுதியில், முழுமையாக செயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்பட்டன; இதில் பேக்கலைட்டும் பாலிவினைல் குளோரைடும் முக்கியப் பங்குவகித்தன.

மனிதரால் உருவாக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக்காக பார்க்கசின் (நைட்ரோ செல்லுலோஸ்) கருதப்படுகிறது. இதை 1856-ல் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் உருவாக்கினார். 6 ஆண்டுகள் கழித்து, 1862-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் இது உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தாவரங்களின் செல்லுலோஸ் மற்றும் கரைப்பானான நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி நைட்ரோ செல்லுலோஸ் அல்லது செல்லுலோஸ் நைட்ரேட்டைத் தயாரித்தார் பார்க்ஸ். இதை ஆல்கஹாலுடன் கரைக்கும்போது இறுகி, எலாஸ்டிக்காக மாறியது. இதைச் சூடாக்கி நினைத்த வடிவத்துக்கு உருமாற்றினார் பார்க்ஸ்.

நவீன பிளாஸ்டிக்; விரிந்த சந்தை

நவீன பிளாஸ்டிக் தொழிலுக்கு வித்திட்டவர் லியோ பேக்கலேண்ட். இவர்தான் பிளாஸ்டிக் தொழில்துறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பெல்ஜியத்தைச் சேர்ந்த வேதியியல் நிபுணரான இவர், 1907-ல் நியூயார்க்கில் பேக்கலைட் எனும் உலகின் முதல் நவீன, முழுமையாகவே செயற்கையான பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார். ஃபினால், ஃபார்மால்டிஹைடைப் பயன்படுத்தி பேக்கலைட் உருவாக்கப்பட்டது. பேக்கலைட் என்பது தீப்பிடிக்காத, விலை மலிவான, மின்சாரத்தைக் கடத்தாத, சூட்டைத் தாங்கக்கூடிய பண்புகளைக் கொண்ட பிளாஸ்டிக். பேக்கலைட் கண்டுபிடிப்பால் பிளாஸ்டிக் சந்தை உருவெடுக்கத் தொடங்கியது. இதன் பிறகு டெலிபோன், ரேடியோ, சுவிட்ச் போர்டு, நகை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மை என ஏராளமான பொருட்கள் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டன.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்றம் கண்ட வேதியியல் துறையால், புதிய வடிவிலான பிளாஸ்டிக்குகள் தோன்ற ஆரம்பித்தன. இரண்டாம் உலகப் போரின்போது பிளாஸ்டிக்கின் வீச்சும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. தனியார் நிறுவனங்கள் பாலிஸ்டிரைன், பாலிவினைல் குளோரைடு ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கின. இதன் மூலம் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிளாஸ்டிக் தொழில் அசுர வளர்ச்சியடைந்தது. மிக ஆழமாக பிளாஸ்டிக் வேரூன்றிய பிறகுதான் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து குற்றச்சாட்டுகள் எழத் தொடங்குகின்றன.

(தொடர்வோம்...)

- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்