காந்தி: முன்னுதாரண இந்து

By செய்திப்பிரிவு

ஆர்.வெற்றிகார்த்திக்

பகவத் கீதையைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்றபோதெல்லாம் அதற்கு எதிர்வினை ஆற்றக்கூடிய முதல் மனிதர் யார் தெரியுமா? யார் கீதையைத் தன் தாயாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் கீதா உபதேசம் செய்தாரோ அந்தக் கர்மயோகி காந்திதான்.

இந்து மதத்தைக் காப்பதற்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர் காந்தி. ஒரு சனாதன இந்து என்று தன்னைக் கூறிக்கொண்டவர்; பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியவர்; கீதையை உபதேசம் செய்தவர். ஆனால், இவையெல்லாம் தனிப்பட்ட அலுவல்கள்; அரசாங்க அலுவல்கள் அல்ல. அரசானது அனைத்து மக்களின் பிரதிநிதியாகவும் சமயச் சார்பற்றதாகவும் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள் தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மதச்சார்புள்ள அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருந்தவர் காந்தி. ராமராஜ்ஜியத்தைக் கனவு கண்டவர் காந்தி. ஆனால், அவரது ராமராஜ்ஜியம் பன்மைத்துவம் கொண்ட ஒரு ராஜ்ஜியம்; பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்த ராஜ்ஜியம். அது நல்லிணக்கத்தைப் பேணி, வெறுப்புணர்வைத் தூண்டாத, சிறுபான்மையினரைப் பலவந்தப்படுத்தாத அரசாக இருக்க வேண்டும் என்று தனது ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நாம் வளர்க்க விரும்பும்பட்சத்தில் அதில் சகிப்புத்தன்மையே பிரதானமாக இருக்க வேண்டும். சகிப்புத்தன்மையின் நோக்கம், மற்றவர்களது நம்பிக்கையைப் புரிந்துகொள்வதே. 1889-லிருந்தே லண்டன் வெஜிடேரியன் சொசைட்டி உறுப்பினராக இருந்து, சைவ உணவைப் பிரச்சாரம் செய்த காந்தி, பிற்காலத்தில் தன் ஆசிரமத்துக்கு வரும் இஸ்லாமியர்கள் விரும்பும்பட்சத்தில் மாட்டிறைச்சியைச் சமைத்துத் தரவும் தயாராகவே இருந்துள்ளார். 1910-ல் தென்னாப்பிரிக்காவில் உள்ள டால்ஸ்டாய் பண்ணையிலேயே இப்பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்துக்களுக்குப் பசு புனிதம்தான். ஆனால், இது இந்து மதத்தின் வரையறைக்கு உட்பட்டது. பிற மதத்தினரிடையே இக்கொள்கைகளைத் திணித்து வெறுப்புணர்வைத் தூண்ட அல்ல.

ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக மனிதரைக் கொல்வது என்பது காந்தியைப் பொறுத்தவரை அதர்மமே! இடைக்கால அரசில் உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத்துக்குப் பசு வதைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தபோது... இந்துக்களின் கொள்கையை, இந்தியர்களின் கொள்கையாக மாற்ற முடியாது என்று சொல்லி, அச்சட்டத்துக்கு முதல் எதிரியாக இருந்தவர் காந்திதான். நவீன காலத்தின் மிக உயர்ந்த கிறிஸ்தவராக காந்தியைக் குறிப்பிட்டார் மார்ட்டின் லூதர் கிங். அதாவது, கிறிஸ்தவர் அல்லாத ஒருவரைப் பார்த்து! மற்ற நாடுகளுக்குத் தான் செல்வது சுற்றுப்பயணம்; ஆனால், இந்தியாவுக்குச் செல்வது புனித யாத்திரை என்று சொல்லும் அளவுக்கு காந்தியின் அகிம்சையும் பன்மைத்துவமும் மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்துள்ளன. மத மாற்றத்தை ஆதரிக்காத காந்திதான் மத மாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்தார் என்பதை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம்.

எவ்வாறு ‘என் வாழ்க்கையே என் செய்தி' என்று கூறினாரோ, அவரது மரணம் அதைவிட மிகப் பெரிய செய்தி. ‘ஒரு சமூகம் தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே அளவிடப்படும்’ என்று கருதியவர் காந்தி. சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தன் உயிரைக் கொடுத்தே செய்துகாட்டியவர்; அதன் வழியாக ஒரு இந்துவுக்கான தார்மீகமாக அதை நிலைநிறுத்தியவர். இந்தியாவின் உயிர்நாடி அதன் பன்மைத்துவம் என்றால், அதைக் காக்கும் பணியில் இந்துக்களே முன்வரிசையில் நிற்க வேண்டும். காந்தி சுட்டிச் சென்றதை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது!

- ஆர்.வெற்றிகார்த்திக், காந்திய ஆய்வாளர்.

தொடர்புக்கு: veickarthick.r@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE