நெருக்கடி நிலை- ஃபேஸ்புக் பதிவு: செழியனின் அவசரநிலை

By ஆழி செந்தில்நாதன்

ஒவ்வொரு ஆண்டும் நெருக்கடி நிலை அறிவிப்பு நாள் அருகில் வரும்போது, இந்தியாவின் பல்வேறு முனைகளிலிருந்தும் நமக்கு அழைப்புகள் வரும். Shah Commission Report - Lost, and Regained என்கிற, முதுபெரும் நாடாளுமன்றவாதி இரா. செழியன் தொகுத்த, ஆழி வெளியீடாக வந்த அந்தப் பதிப்பின் பிரதி வேண்டி.

நீதிபதி ஜே.சி. ஷா தலைமையிலான கமிஷன், நெருக்கடி நிலைக் காலத்தில் செய்த அத்துமீறல்கள்குறித்த விசாரணையின் மூன்று தொகுதிகளைத் தொகுத்து ஒரே நூலாக 2010-ல் வெளியிட்டோம்.

1978-ல் ஷா சமர்ப்பி்த்த அறிக்கையின் படிகளை 1980-ல் ஆட்சிக்கு வந்த இந்திரா சிஸ்டமேட்டிக்காகச் செயல்பட்டு, எல்லா இடங்களிலிருந்தும் ‘காணாமல் போகச் செய்திருந்தார்.’ பிற்காலத்தில் ஆய்வாளர் களுக்குக்கூட ஷா கமிஷன் அறிக்கையின் நகல்கள் கிடைக்கவில்லை. “The government (of Indira Gandhi in 1980) took the extraordinary step of recalling every published report and destroyed the copies. It is now believed that not a single copy of this report exists in India” என்று ஏப்ரல் 14, 2010-ல் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் விக்கிபீடியா தகவல் வெளியிட்டது.

அதே ஆண்டு டிசம்பரில் நூல் வெளியாகிவிட்டது.

செழியன் அண்ணாநகரிலுள்ள தனது வீட்டிலுள்ள தன் சொந்த நூலகத்தில் எதையோ தேடப்போய், அந்த அறிக்கையின் மூன்று பகுதிகளையும் கண்டுபிடித் திருக்கிறார். அந்த ஆண்டு அவரது வேறு இரு நூல்களையும் நாங்கள் வெளியிட்டிருந்த நிலையில், அவர் என்னை அழைத்து அரசியல் சென்சிட்டிவான இந்த நூலை வெளியிட முடியுமா எனக் கேட்டார். கரும்பு தின்னக் கூலியா? முடியும் என்றேன்.

அந்த மூன்று நைந்துபோன பிரதிகளையும் பக்குவமாகப் பக்கம்பக்கமாக மானுவல் நெகடிவ் எடுத்து, ரகசியமாக அச்சிட்டோம். மணி ஆப்செட் சண்முகசுந்தரம் அதை மிகவும் அற்புதமாக அச்சிட்டுக்கொடுத்தார். இரண்டு மாதங்களாகக் கடும் உழைப்பு. அந்த நூலின் இரண்டாவது மிகப் பெரும் சிறப்பம்சம் செழியன் எழுதியிருக்கும் அற்புதமான அறிமுகவுரை. நூலும் சரி, செழியனின் அறிமுகமும் சரி, இரண்டுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.

நெருக்கடி நிலைகுறித்து சமீபத்திலும் ஒரு ‘கருத்து’ வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான சங்கப் பரிவாரத்தின் தலைமை இலவுகாத்த கிளியார் எல்.கே. அத்வானிதான் அந்த நூலைச் சென்னைக்கு வந்து வெளியி்ட்டார். சென்னையின் வலதுசாரி முகாம் ஒன்றால் நடத்தப்பட்ட அந்த வெளியீட்டு விழாவுக்காகத் தனி விமானத்தில் அவர் சென்னைக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முழுக்க நான் சங்கடத்தில்தான் இருந்தேன். ஆனால், செழியனின் வழிகாட்டலும் வேலைப் பளுவும் என்னை எந்திர கதியில் செலுத்தின.

நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒரு 50 பிரதிகள் எடுத்துக்கொண்டு டெல்லிக்குக் கிளம்பு என்கிறார் செழியன். ஒரு நீண்ட முகவரிப் பட்டியல் ஒன்றை என்னிடம் தந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயி, இந்தர் குமார் குஜ்ரால், ஜஸ்வந்த் சிங், சோம்நாத் சாட்டர்ஜி, அசோக் மேத்தா, பாலி நாரிமன் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

டெல்லிக்குக் கிளம்பி, அவரவர் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, அவரவர்களிடம் செழியன் சார்பாக ஒரு பிரதியைத் தர வேண்டும் என்பது செழியனது கட்டளை. எனக்கோ சென்னையில் புத்தகத் திருவிழா! இந்த ஒரு நூலுக்காக நான் செய்த செலவும் நேரமும் ஆழியின் சார்பில் வர வேண்டியிருந்த 20 சொச்சம் நூல்களைப் பலிவாங்கிவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவி்ல்லை. ஏதோ ஒரு காரணம், அப்போது செழியன் மிகவும் தனிப்பட்ட முறையில் ஒரு ‘அவசரநிலையில்தான்’ இருந்தார்.

நானும் வேறு வழியில்லாமல் டெல்லிக்குக் கிளம்பி, ஒரு டாக்ஸி எடுத்து, மூன்று நாட்கள் திரிந்து அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று நேரடியாகப் பிரதிகளைக் கொடுத்து விட்டு வந்தேன். சிலரது வீடுகளில் செக்யூரிட்டியைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. பாலி நாரிமன் போன்ற சிலரையோ நன்றாகப் பார்த்துப் பேச முடிந்தது. அவர்கள் அனைவரும் செழியனின் மீது அப்படி ஒரு மதிப்பு வைத்திருந்தார்கள். இரா, இரா என்று அவரை வாயாரப் புகழ்ந்தார்கள். டெல்லி அரசியல் வட்டாரத்தோடு முதல் அனுபவம் அப்படித்தான்.

இப்போது நூலின் பிரதிகள் விற்றுவிட்டன. அடுத்த பதிப்புக்காக செழியன் அவர்களின் அனுமதிக்காக அவரைக் காணக் கிளம்ப வேண்டும்.

இன்றைய காலத்துக்கு ஏற்ப, மேலும் சில அரசியல் அதிரடி நூல்களும் அறிக்கைகளும் கைவசம் இருக்கின்றன. காலம் கனிந்தால், எல்லாம் வெளிவரும்!*

ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், பதிப்பாளர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்