குழந்தைகளின் ராஷ்டிரபதி!

By சமஸ்

‘உலகுக்கு உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், குழந்தைகளிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும்’ என்றார் காந்தி. குழந்தைகளின் உலகோடு எப்போதுமே நெருக்கமாகத் தன்னை வைத்துக்கொண்டவர் அவர். நாட்டின் முதல் பிரதமரும் தொலைநோக்காளருமான நேருவிடமும் அந்தப் பண்பு இருந்தது. குழந்தைகள் மீது அவர் காட்டிய அளப்பரிய நேசம், அவர்களுடைய எதிர்காலம் மீதான அவருடைய கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், நாடு முழுவதும் திறக்கப்பட்ட பொதுப் பள்ளிகளில் தொடங்கி எய்ம்ஸ், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். வரை நீண்டது. உண்மையில், சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள் நமக்கு அற்புதமான ஒரு முன்னுதாரணத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கித் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின் அந்த மரபு எங்கே அறுபட்டுப்போனது?

பிரதமர், முதல்வர்கள் இருக்கட்டும்; இன்றைக்கெல்லாம் எத்தனை அமைச்சர்களை மக்களால் நேரடியாக அணுக முடியும்! மூத்தவர்களுக்கே இதுதான் கதி என்றால், சாமானியர்களின் குழந்தைகளையும் பொருட்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்ன? முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமகால இந்திய அரசியல் வர்க்கம் ஏதேனும் கற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், அந்த வரிசையில் முதலாவது இது: குழந்தைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்.

அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து, சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளைப் பார்த்தவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க முடியும். பலர் தங்களுடைய பதிவுகளோடு கூடவே கலாமுடன் அவர்கள் இருக்கும் படத்தையும் பகிர்ந்திருந்தார்கள். நம் காலத்தில் அவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவராக இருந்த ஒரே பிரபலம்-கலாம். உலகின் மிகப் பெரிய ஆட்சியாளர் மாளிகையான, 370 ஏக்கர் ராஷ்டிரபதி பவனில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலகட்டம், கலாமுடைய காலகட்டமாகவே இருக்கும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் - மாணவர்கள். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. அவருடன் தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சல் அனுப்பிப் பதில் பெற முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் வரும்.

குழந்தைகள் மீதும் இயல்பாகவே அவருக்கு மிகப் பெரிய அன்பு இருந்தது. அதனால்தான் தன்னுடைய வாழ்வின் மைல்கற்களாக அவர் குறிப்பிடும் நான்கு சாதனைகளில் ஒன்றாக - செயற்கைக்கோள் ஏவுகலன் (எஸ்எல்வி), அக்னி, பொக்ரான் அணுகுண்டு சோதனை ஆகியவற்றுக்கு இணையானதாக - ஊனமுற்ற குழந்தைகளுக்கான எடை குறைந்த செயற்கைக் கால்கள் வடிவமைப்பை அவரால் செயல்படுத்த முடிந்தது.

ஒரு பத்திரிகையாளனாக அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஊருக்கு அவர் வருகிறார் என்றால், நிச்சயம் அவருடைய நிகழ்ச்சி நிரலில் பள்ளி / கல்லூரிகள் நிகழ்ச்சிகளுக்கு ஒரு இடமேனும் இருக்கும். ஒருகட்டத்தில் அவரைப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைக்க ஒப்புதல் பெற வேண்டும் என்றால், கூடவே பள்ளி - கல்லூரி நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களையும் முன்மொழிந்தால், ஒப்புக்கொள்வார் என்ற சூழல்கூட உருவானது. இப்படிக் கல்வி நிலையங்களைத் தேடி வரும்போதெல்லாம், தான் மேடையில் நின்று பேச ஏனையோர் கீழே அமர்ந்து கேட்டுக் கை தட்டல் பெற வேண்டும் என்று விரும்பியவர் அல்ல அவர். மாறாக, குழந்தைகள் மத்தியில், அவர்களில் ஒருவராகக் கலந்துரையாடியவர். குழந்தைகளை அதிகம் பேசவைத்து தான் கை தட்டியவர். கல்வி நிலையங்களுக்குச் செல்லும்போதும் கூடவே, தாமதமாகச் செல்லும் கலாச்சாரத்தையும் கூட்டிவந்து, குழந்தைகளைக் கடும் வெயிலில் கால் கடுக்க நிற்கவைத்து வதைக்கும் நம்முடைய அரசியல்வாதிகள் மத்தியில், கால தாமதமாகச் செல்வதைக் குற்றமாகக் கருதியவர். “குழந்தைகள் நமக்குத் தெரியாமலே நம்மிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறவர்கள்; நாம் அறியாமலே நமக்கு நிறையக் கற்றுக்கொடுப்பவர்கள்; நாம் ரொம்பவே மதிப்போடும் ஜாக்கிரதையோடும் அணுக வேண்டியவர்கள்” என்பார்.

அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ‘கனவு காணுங்கள்’என்று போதிப்பதைப் பின்னாளில் மோசமாகப் பகடிசெய்தவர்கள் உண்டு. குழந்தைகளின் கனவுகளை வெறும் பிழைப்புக்கான தேடலாக மட்டுமே உருமாற்றிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அவர் விதைத்த சமூகப் பெரும் கனவுகள் அர்த்தமுடையவையாகவும் முக்கியமானவையாகவுமே தோன்றுகின்றன.

கலாமுக்குள் எப்போதும் ஓர் ஆசிரியர் இருந்தார்; எப்போதும் ஒரு மாணவரும் இருந்தார். இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை சொன்னார்:

“என்னை எப்போதும் வழிநடத்தும் கவிதை வரிகள் இவை. நான் சின்ன வயதில் படித்தவை:

‘உனது எல்லா நாட்களிலும்

தயாராக இரு

எவரையும் சம உணர்வுடன் எதிர்கொள்

நீ பட்டறைக் கல்லானால்

அடிதாங்கு

நீ சுத்தியலானால்

அடி!’ ’’

குழந்தைகளின் உலகோடு நெருக்கமானவர்களுக்குத்தான் இது சாத்தியம்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்