சிறந்த விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் போன்ற அடையாளங்களைவிடவும் ஒரு ஆசிரியராக மக்கள் மனதில் பதிய வேண்டும் என நீங்கள் ஆசை கொண்டிருக்கிறீர்கள். கற்பித்தலை அத்தனை உயர்வாகக் கருதுவது ஏன்?
தனி மனிதப் பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கவுரவம்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் அபரிமிதமான தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இக்காலகட்டத்தில், ஆசிரியருக்கான அர்த்தமும் முக்கியத்துவமும் மாறிவிட்டனவா?
உண்மையைப் பின்தொடர்வதே கல்வியின் குறிக்கோள். ஞான மார்க்கத்தில் செல்லும் முடிவில்லாப் பயணம் கல்வி. மனிதத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் அப்பயணத்தில் குறுகிய சிந்தனை, பிளவு, பொறாமை, வெறுப்பு, பகைமை போன்றவற்றுக்கு இடமில்லை.
முழுமையானவராக, உன்னத ஆன்மாவாக, பிரபஞ்சத்துக்குக் கிடைத்த பொக்கிஷமாக ஒருவரை மாற்றும் வல்லமை படைத்தது கல்வி. ஒரு மனிதரின் கண்ணியத்தை வளர்த்து அவருடைய சுயமரியாதையை மேலும் வளர்த்தெடுப்பதுதான் உண்மையான கல்வி.
கல்வியின் சரியான அர்த்தத்தை அனைவரும் உள்வாங்கிக்கொண்டு அவர்களுடைய செயல்பாடுகளில் பின்பற்றத் தொடங்கினால், இவ்வுலகம் அற்புதமான இடமாக மாறும். இவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஞானம், அர்ப்பணிப்பு, கருணையிலிருந்து தோன்றுபவர்கள்.
சந்தேகத்துக்கு இடமின்றித் தகவல்களைச் சுலபமாகப் பெற இணையம் உதவுகிறது. சொல்லப்போனால், நவீன கருவிகளும் கல்வி தொடர்பான வலைதளங்களும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவியாக உள்ளன. ஆனால், ஒருபோதும் தொழில்நுட்பத்தால் ஆசிரியரின் இடத்தை நிரப்ப முடியாது.
குழந்தைகள் குதூகலமாக இருக்கும் இடமாகப் பள்ளிகள் மாற்றப்பட வேண்டும் என நீங்கள் அறிவுறுத்துகிறீர்கள். ஆனால், தங்களை வருத்திக் கொண்டால் மட்டுமே தொழில்சார் படிப்புகளில் சேர முடியும் என்கிற நிலையே இன்றைய மாணவர்களுக்கு உள்ளது. உயர் கல்வியைப் பெறும் நோக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே நேரத்தில், போட்டியின் வேகத்தை மட்டுப்படுத்துவது எப்படி?
பள்ளி எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய இடமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், கடினமான பாடங்களைச் சொல்லித்தருவதில் தவறில்லை. மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடியபடி மாணவர்களும் நேரடியாகப் பங்குபெறும் வகையில் வகுப்புகள் மாற்றப்பட வேண்டும். வெறும் வீட்டுப்பாடம் தருவதற்குப் பதிலாக சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாகக் கல்வியை மாற்ற வேண்டும். இதைத்தான் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
நம்முடைய ஆரம்பக் கல்வி முறை படைப்பாற்றல் அற்று உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கற்றல் முறையை எளிமைப்படுத்தப் படைப்பாற்றல்மிக்க வகுப்புகள், கற்பனைத்திறன்மிக்க ஆசிரியர்கள், படைப்பாற்றல் மிக்க பாடத் திட்டம் தேவை. மாணவர்களிடம் நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்து அவர்களுக்கு ஆராய்ச்சி மனோபாவத்தைத் தூண்டி, ஞானம் அடையும் பாதைக்கு இட்டுச்செல்வதே ஆசிரியர்களின் கடமை.
புதிய தலைமுறை ஆசிரியர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? பிரம்புக்கு இடமில்லாத வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்ட முடியும்? நீங்கள் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் நினைவிருக்கிறதா? ஆம் எனில், எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
அறிவு தனித்துவம் வாய்ந்தது. எங்களுடைய ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போதே அவர்களுடைய கல்வி ஞானம் சுடர்விடும். காந்தியின் வாழ்வியலைப் பின்பற்றிய அவர்களிடம் தூய்மையின் ஒளி வீசும். என்னுடைய வகுப்பறை அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறிவு தீட்சண்யம், சிந்திக்கும் விதம், வாழ்க்கை முறை இவை அத்தனையும் பொருத்தே ஒருவர் சிறந்த ஆசிரியர் எனும் மரியாதை பெறுகிறார். அத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் பிரம்புக்கு அவசியமே இல்லை. சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் இருக்கும் சூழலில்தான் இது சாத்தியம். ஆனால், சில நேரங்களில் பிரம்பைத் தவிர்க்கவே முடியாது.
உதாரணத்துக்கு, பாடம் ஒழுங்காகப் படிக்காமல் என்னுடைய கணித ஆசிரியர் ஸ்ரீ ராமகிருஷ்ணனிடம் நான் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அப்படி அடிவாங்கிய பிறகுதான் நான் பொறுப்பாகப் படித்து 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கினேன். ஆக அன்பு, கண்டிப்பு இரண்டையுமே புகட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
சுதந்திரமான ஆற்றல், சுயசார்புத்தன்மை, நிலையான பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற வேண்டுமானால், சிறப்பான கல்வியும் வேலை அளிக்கும் தகுதியும் உடைய இளைஞர்கள் அரசு வேலைகளில் சேர வேண்டும். ஆனால், கவர்ச்சிமிக்க கார்ப்பரேட் உலகில் மெத்தப் படித்தவர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்லும் காலகட்டத்தில் இது எப்படிச் சாத்தியம்?
நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா வெல்லுமா எனும் அவநம்பிக்கை இளைஞர்களிடம் உள்ளது. போராட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தை வென்றெடுக்கும் செயல்திட்டங்களைத் தீட்ட வேண்டும். அவசியமற்ற போராட்டம், வெளி நடப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, இதற்கென்று பிரத்யேகமான கூட்டத்தை நாடாளுமன்றம் நடத்த வேண்டிய நேரம் இது. “இக்கட்டான நிலையில் பொருளாதாரத்தை வென்றெடுக்க நாடு கொண்டிருக்க வேண்டிய பார்வை என்ன?” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தலாம். மொத்தத்தில், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இப்போதும் உங்களைத் தூங்கவிடாத ஒரு கனவு உள்ளதா?
நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகை காண கனவு காண்கிறேன். இந்தக் கனவு மெய்ப்பட “நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை” எனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
2013 செப்டம்பர் 5-ல் ஆசிரியர் தினத்தையொட்டி தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டி...
தமிழில்: ம.சுசித்ரா
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago