'நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் ஒன்பதரை ஆண்டுகள் பயணம் செய்து, சுமார் 500 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளூட்டோ கிரகத்தை வெற்றிகரமாக அணுகி, இதுவரை இல்லாத 'குளோசப்' படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அது அனுப்பிய படங்கள் தெளிவாகவே உள்ளன. புளூட்டோ கிரகம் ஒரு விண்கலத்தால் ஆராயப்படுவது இதுவே முதல் தடவை. இது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
சூரிய மண்டலத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடந்த காலத்தில் அமெரிக்க ‘நாஸா' அமைப்பின் வெவ்வேறான விண்கலங்களால் ஆராயப்பட்டுவிட்டன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது.
அமெரிக்க விண்கலம் இந்திய நேரப்படி செவ்வாய் மாலை புளூட்டோவைக் கடந்து சென்றது. அப்போது விண்கலத்துக்கும் புளூட்டோவுக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர். விண்கலம் மெதுவாக நின்று நிதானமாக புளூட்டோவை ஆராய்ந்ததாகக் கூற முடியாது.
நெடுஞ்சாலை வழியே காரில் வேகமாகச் செல்கின்ற ஒருவர், காரை நிறுத்தாமல் வீடியோ கேமரா மூலம் சாலை ஓரத்து கிராமத்தைப் படம் எடுத்துச் சென்றால் எப்படியோ அப்படித்தான் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவைப் படம் பிடித்தது. அப்போது அந்த விண்கலத்தில் இருந்த ஆராய்ச்சிக் கருவிகள் புளூட்டோ பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டன.
தகவல் கிடைக்க 16 மாதங்கள்
புளூட்டோவைக் கடந்தபோது விண்கலம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. புளூட்டோவுக்கு அருகில் விண்கலம் இருந்த நேரம் சுமார் எட்டு நிமிடங்களே. எனினும், அந்த எட்டு நிமிட நேரத்தில் எண்ணற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இவற்றை நிதானமாகப் பூமிக்கு அனுப்பும். அத்தனை தகவல்களும் கிடைக்க 16 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வளவு காலம் ஆவானேன்?
முதலாவதாக, விண்கலத்தில் பல கருவிகள் உள்ளன. இரண்டாவதாக, விண்கலத்தினால் தகவல்களை அனுப்பக்கூடிய திறன் குறைவு. மூன்றாவதாக, புளூட்டோ மிகத் தொலைவில் உள்ளதால் அங்கிருந்து சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர நாலரை மணி நேரம் ஆகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘நாஸா' அனுப்பிய ‘வாயேஜர் - 2' விண்கலம் 1989-ல் நெப்டியூன் கிரகத்துக்குச் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அருகே சென்று அதாவது, நெப்டியூனை மிக நெருங்கிப் படம்பிடித்தது. ஆனால், இப்போதோ புளூட்டோ சற்றே தொலைவில் இருந்தபடி ஆராய்ந்துள்ளது. இதற்குக் காரணம் உண்டு. புளூட்டோ பற்றி அவ்வளவாகத் தெரியாத காரணத்தில் அக்கிரகத்தைச் சுற்றி நுண்ணிய துகள்கள் வளையம் போல அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.
புளூட்டோவை நெருங்கும்போது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் மீது நெல்மணி அளவுக்குச் சிறு துகள் மோதினாலும் விண்கலம் செயலற்றதாகி விடுகின்ற ஆபத்து இருந்தது. ஆகவேதான் விண்கலம் சற்று எட்ட இருந்தபடியே புளூட்டோவை ஆராய்வது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.
விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து புளூட்டோவை நிதானமாக ஆராயும்படி செய்திருக்கலாமே என்று கேட்கலாம். அது நடைமுறையில் சாத்தியமற்றது. ஒரு விண்கலத்தின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைப்பதானால் அதற்கு நிறைய எரிபொருள் தேவை. நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் அந்த அளவுக்கு எரிபொருள் கிடையாது.
58 ஆயிரம் கி.மீ வேகம்
சொல்லப்போனால், நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2006-ம் ஆண்டு ஜனவரியில் விண்ணில் செலுத்தப்பட்டபோதே, அது மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டது. இதுவரையில் நாஸாவின் எந்த விண்கலமும் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது கிடையாது. ஒரு விண்கலம் சூரிய மண்டலத்தின் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டுமானால், அந்த அளவுக்கு வேகம் தேவை. நியூ ஹொரை சன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்துவிட்டு, அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டதால் விண்கலம் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது.
நியூ ஹொரைசன்ஸ் புளூட்டோவுக்குக் கிளம்பிய பின்னர், அது 2007-ம் ஆண்டு வாக்கில் வியாழன் கிரகத்தை நெருங்கிக் கடந்து சென்றது. ஒரு விண்கலம் இப்படியாகக் கடந்து செல்லும்போது, இயற்கை விதிகளின்படி வியாழன் அதை ‘ஜருகண்டி’ பாணியில் தனது பெரும் ஈர்ப்புச் சக்தி மூலம் வேகமாக இழுத்து மறுபுறத்தில் தள்ளிவிடும். வியாழன் கிரகம் இவ்விதம் வேகமாக இழுத்துத் தள்ளியதன் பலனாக நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தின் வேகம் மணிக்கு 83 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இதன் பலனாக நியூஹொரைசன்ஸ் விரைவாக புளூட்டோவைச் சென்றடைய முடிந்தது.
பெர்சிவல் லோவலின் தேடல்
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் பன்னெடுங்காலமாக அறியப்பட்டவை. இரவு வானில் இவற்றை வெறும் கண்ணால் காண முடியும். சனி கிரகத்துக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நீண்ட காலம் அறியப்படாமல் இருந்தன. டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு, யுரேனஸ் கிரகம் 1781-ம் ஆண்டிலும் நெப்டியூன் 1846-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கரான பெர்சிவல் லோவல் என்ற விஞ்ஞானி சொந்த செலவில் வான் ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, நெப்டியூனுக்கு அப்பால் ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் நீண்ட நாள் வானைத் தேடினார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.
எனினும், பின்னர் இன்னொரு அமெரிக்க விஞ்ஞானியான கிளைட் டாம்போ பெரும்பாடுபட்டு 1930-ல் அந்தக் கிரகத்தை - அதாவது புளூட்டோவைக் கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கூறிய யோசனையின் பேரில் புளூட்டோவுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. இவ்விதமாக புளூட்டோ சூரிய மண்டலத்தின் ஒன்பதாவது கிரகமாகக் கருதப்படலாயிற்று. புளூட்டோவுடன் ஒப்பிட்டால் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ராட்சத பனிக்கட்டி உருண்டைகள். வடிவில் சிறியதான புளூட்டோவானது பூமி, செவ்வாய் போன்று பாறைகளால் ஆனது. புளூட்டோ மிகத் தொலைவில் இருப்பதால் அது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
வானில் ஒரு ஏப்பம்
புளூட்டோ ஒரு கிரகம் என்ற அந்தஸ்தை 2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் இழந்தது. ஒரு கிரகம் என்றால், அது தனிப் பாதையில் சூரியனைச் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக, அது மற்ற கிரகங்களைப் போல உருண்டை வடிவில் இருக்க வேண்டும். மூன்றாவதாக, அது தன் அருகில் உள்ள சிறிய உருண்டைகளைத் தன் பால் ஈர்த்து ஏப்பம் விட்டிருக்க வேண்டும் என மேற்படி ஆண்டில் சர்வதேச வானவியல் சங்கம் புதிய விதிகளை நிர்ணயித்தது. புளூட்டோ மூன்றாவது நிபந்தனையைப் பூர்த்திசெய்யாததால் அதைக் கிரகம் என ஏற்க முடியாது என்று அச்சங்கம் தீர்மானித்தது. எனினும் புளூட்டோவுக்கு குள்ளக் கிரகம் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்களிலும் புளூட்டோ ஒரு குள்ளக் கிரகம் என்று வர்ணிக்கப்படலாயிற்று.
வானவியல் சங்கம் இவ்விதம் முடிவு எடுத்ததற்கு முன்னரே அந்த ஆண்டு ஜனவரியில் நியூ ஹொரைசன்ஸ் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகம் என்றே கருதுகின்றனர். புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் ஒரு அமெரிக்கர் என்பதும் அதற்கான ஒரு காரணமாகும். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்திய விஞ்ஞானிகளில் சிலரும் அவ்விதமே கருதுகின்றனர்.
நான்கரை லட்சம் பேர்
நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில், புளூட்டோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் சாம்பல் சிறிதளவு வைக்கப்பட்டுள்ளது. நாஸா விடுத்த வேண்டுகோளின்படி பலரும் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டதால், சுமார் நாலரை லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய ஒரு சி.டி. ஒன்றும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளது.
புளூட்டோ சந்திரனைவிடவும் சிறியது. ஆனால், அதற்கு சாரோன் உட்பட ஐந்து குட்டி சந்திரன்கள் உள்ளன. புளூட்டோ சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது. அதைத் தாண்டிப் பல லட்சம் பனிக்கட்டி உருண்டைகள் வளையம்போல அமைந்துள்ளன. இவை அமைந்த பகுதி ‘கைப்பர் பெல்ட்' என்று அழைக்கப் படுகிறது. சூரிய மண்டலத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்தப் பகுதியிலிருந்து அவ்வப்போது சிறிய பனிக்கட்டி உருண்டைகள் வால் நட்சத்திரங்கள் என்ற பெயருடன் பல கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் கடந்து சூரியனை நோக்கி வருகின்றன. சூரியனைச் சுற்றிவிட்டு அவை வந்த வழியே சென்றுவிடுகின்றன.
புளூட்டோவைக் கடந்து சென்ற நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இந்த கைப்பர் வளைய வட்டாரத்தை நோக்கிச் செல்லும். அவற்றை ஆராய்ந்து தகவல்களை அனுப்பும். புளூட்டோவும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த உருண்டைகளில் ஒன்று என்ற ஒரு கருத்து உண்டு. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பனிக்கட்டி உருண்டைக்கு நிபுணர்கள் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைக் குறிக்கும் வகையில் ‘வருணா' என்று பெயரிட்டுள்ளனர். சூரிய மண்டலம் தோன்றியபோது மிஞ்சிய துண்டு துக்கடாக் களே இவ்விதம் பனிக்கட்டி உருண்டைகளாக இருப்பதாக ஒரு கருத்து உண்டு.
நியூ ஹொரைசன்ஸ் அனுப்பும் தகவல்கள், சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago