சிலே: போராட்டங்களின் தேசம்

By செய்திப்பிரிவு

சாரு நிவேதிதா

சிலேயின் (Chile) வடக்குப் பகுதியில் உள்ள அத்தாகாமா பாலைவனம்தான் உலகிலேயே மிக வறட்சியான பகுதியாக இருந்துவருகிறது. சஹாரா பாலைவனத்தில்கூட ஒரு ஆண்டில் நான்கு இஞ்ச் அளவு மழை பெய்யும். ஆனால், அத்தாகாமாவில் பூமி தோன்றிய காலத்திலிருந்தே மழை பெய்ததில்லை. அத்தாகாமாவின் தனித்தன்மை என்னவென்றால், அதன் வெப்பம் அல்ல; குளிர். சஹாராவில் வெப்பம் அதிகம். அத்தாகாமாவின் வெப்பம் 40 டிகிரி அளவுதான். ஆனால், இரவில் குளிர் 5 டிகிரி வரை போகும். மேலும், விலை உயர்ந்த தாமிர, தங்க, நைட்ரேட் சுரங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் அதிகம் உண்டு (சிலே முழுவதுமே சுரங்கங்கள் அதிகம்). இது தவிர, இந்தப் பாலை நிலத்தில் உள்ள அரிகா (Arica), இக்கிக்கி (Iquique), அந்தொஃபகாஸ்தா (Antofagasta) ஆகிய மூன்று ஊர்களிலும் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்கள்தான் 1945-ல் பாப்லோ நெரூதாவைத் தங்கள் செனட்டராக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள்.

உலகப் பயணிகளின் மெக்காவாக உள்ள நாடுகள் இரண்டு - பெரூ மற்றும் அதன் கீழே உள்ள சிலே. பெரூ 15-ம் நூற்றாண்டின் இன்கா நாகரிகத்தின் தொட்டிலான மாச்சு பிச்சுவின் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. சிலேவுக்குச் செல்பவர்கள் இரண்டு விதமான பயணிகள். ஒன்று, சிலேயின் நம்ப முடியாத நிலவியல் அமைப்பால் ஈர்க்கப்பட்டுச் செல்பவர்கள். இரண்டாவது ரகம், அதன் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்.

சிலேவின் நிலவியல் அதிசயங்கள்

உலக வரைபடத்தில் பார்த்தால், பூமியின் தென்மேற்குக் கோடியில் ஒரு நீண்ட கோடுபோல் தென்படும் சிலே. வடக்கிலிருந்து தெற்கே 4,270 கிமீ தூரம் நீண்டிருந்தாலும் அதன் அகலம் 177 கிமீதான். இந்த நில எல்லைகள்கூட மனிதர்கள் வகுத்தவை. எனவே, சிலேவின் நிலவியல் அதிசயங்களாக இதை நாம் கொள்ள முடியாது. மாறாக, இயற்கை அளித்திருக்கும் அதிசயங்களே சிலேயை வேறுபடுத்துகிறது. தென் சிலேயில் தியர்ரா தெல் ஃபூவகோ (Tierra del fuego) என்ற தீவுக் கூட்டம் இருக்கிறது.

மலைகளும் வனங்களும் கடலும் சூழ்ந்த இந்த இடம்தான் பூமி உருண்டையில் மனிதர்கள் வாழும் கடைக்கோடி நிலம். குளிர் எப்போதும் பூஜ்ஜியத்தில் இருக்கும். ஜனவரி, பிப்ரவரிதான் சிலேயின் கோடைக் காலம். அப்போது தியர்ராவின் வெப்பம் 11 டிகிரி வரை போகும். தியர்ரா தெல் ஃபூவகோவிலிருந்து பின்னோக்கிப் போனால் அண்டார்க்டிகா. வடதிசை நோக்கிப் பயணித்தால் அத்தாகாமா பாலைவனம். அதனால்தான், சிலே உலக சுற்றுலாப் பயணிகளிடையே ஒரு அதிசய தேசமாகக் கருதப்படுகிறது. தெற்கே தென்துருவப் பனிப் பிரதேசம். வடக்கே பூமி தோன்றியதிலிருந்தே மழையைக் காணாத பாலைவனம். மேற்கே மற்றொரு அதிசயம். அதன் பெயர் ஈஸ்டர் தீவு. உலகின் மேற்கு மூலையான இத்தீவில் 2,000 பேர் வசிக்கிறார்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இங்கே மனிதக் குடியிருப்பு தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தீவுக்குச் செல்ல சிலேவிலிருந்து 3,750 கிமீ தூரம் கடலைக் கடக்க வேண்டும். தலைநகர் சந்தியாகோவிலிருந்து விமானத்தில் 5 மணி நேரப் பயணம். கப்பலோ படகோ ஈஸ்டர் தீவுக்குச் செல்வதில்லை.

கீழேயுள்ள புகைப்படத்தில் உள்ளபடி ஈஸ்டர் தீவில் ஆயிரம் சிலைகள் அமைந்துள்ளன. மோவாய் சிலை என்று அழைக்கப்படும் இச்சிலைகள், ஒரே கல்லால் செய்யப்பட்டவை. இங்கே வாழ்ந்த ராப்பா நூயி மக்களால் 12-15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இச்சிலைகள் அளவில் பிரம்மாண்டமானவை. இதில் ஆகப் பெரிய சிலையின் உயரம் 33 அடி. மேலும், சிலேயில் ஏகப்பட்ட எரிமலைகளும் பனிமலைகளும் உள்ளன. இப்படி இயற்கையின் பல்வேறுபட்ட ரூபங்களைக் கொண்டதால் சிலே உலகப் பயணிகளின் முதல் நிலமாக இருந்துவருகிறது. ஆனால், நான் சிலேவைப் பார்க்க நினைத்ததன் காரணம், அதன் மக்கள்.

உதாரணமாக, ஆகஸ்ட் 5, 2010-ல் சிலேயில் நடந்த ஒரு சம்பவம் உலகம் பூராவிலும் உள்ள ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறி 69 நாட்கள் தலைப்புச் செய்தியாகவே தொடர்ந்தது. அத்தாகாமா பாலைவனத்தில் உள்ள சான் ஹோஸே சுரங்கம் ஒன்றில் சுவர் பாதை இடிந்து 33 தொழிலாளிகள் 2,300 அடி ஆழத்தில் பூமியின் கீழே மாட்டிக்கொண்ட சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 69 நாட்களுக்குப் பிறகே அவர்களில் ஒருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டனர். விபத்து நடந்து 17 நாட்களுக்குப் பிறகே மீட்கும் குழுவுக்கும் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கும் தொடர்பே ஏற்பட்டது. 69 நாட்கள், 33 பேர் எப்படி எந்த மனநல பாதிப்பும் இல்லாமல் பூமிக்குள் இருக்க முடிந்தது என்பது சிலே மக்களைப் பார்க்கும் வரை எனக்குப் பெரும் புதிராகவே இருந்தது. அந்தத் தொழிலாளர்களில் ஒருவர் சொன்னார், “நாங்கள் உள்ளே சிக்கிக்கொண்டபோது எங்களுக்காகக்கூடப் பிரார்த்தனை செய்யவில்லை; வெளியில் உள்ளவர்கள் எங்களைக் கைவிட்டு விடாத அளவுக்கு அவர்களுக்கு மனோபலமும் நம்பிக்கையும் வேண்டுமே என்றுதான் பிரார்த்தித்துக்கொண்டோம்.” சுரங்கம் அடைபட்டு இரண்டு மாதங்கள் சென்றுவிட்ட நிலையில் ‘இனிமேல் அவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை’ என்று வெளியில் இருப்பவர்கள் நம்பிக்கை இழந்திருந்தால்?

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் கலை கலாச்சாரம்

சிலே மக்களிடம் உரையாடியபோது எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. அவர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் கலை கலாச்சாரத்தின் மூலமே தங்கள் வாழ்வை அர்த்தபூர்வமுள்ளதாக ஆக்கிக்கொள்கிறார்கள். உதாரணமாக, 1945-ல் அத்தாகாமா சுரங்கத் தொழிலாளர்கள் பாப்லோ நெரூதாவைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். நெரூதா சொல்கிறார், அத்தொழிலாளர்களுக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாது; குளிருக்கு உடுத்த உடை இல்லை; படுக்கப் பாய் இல்லை; தின்ன உணவில்லை; குடிக்கத் தண்ணீர்கூட இல்லை. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் என்னைக் கவிதை வாசிக்கச் சொன்னார்கள் என்று.

சிலே முழுவதும் இப்போதும் மக்கள் கலை கலாச்சாரத்தைத்தான் தங்கள் வாழ்வின் அர்த்தமாகக் காண்கிறார்கள். தேசம் பூராவும் ஒரு சினிமா போஸ்டரையோ வேறு எந்த சுவரொட்டிகளையோ பார்க்க முடியவில்லை. யாரும் சினிமா நடிகர்களைக் கொண்டாடுவதில்லை. சினிமா என்றால் நம் பாஷையில் ஆர்ட் ஃபிலிம்தான்; நாடகம் என்றால் சீரியஸ் நாடகம்தான். தொலைக்காட்சி சீரியல் பார்க்கிறார்கள்தான். ஆனால், அதையும் மிஞ்சிவிடுகிறது கால்பந்தாட்டம். ஆனால், அதையும் அவர்கள் வெறும் கேளிக்கையாகக் கொள்ளவில்லை. அவர்களே ஆடுகிறார்கள் (நமக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள உறவை நினைத்துப்பாருங்கள்!).

இசை என்றால் நமக்கு வெறும் கேளிக்கை. சிலேயர்களுக்கு அது வாழ்க்கை. இசைக் கலைஞர்களின் கிதார் சப்தமும் குரலும் கேட்காத தெருமுனைகளே சிலேவில் இல்லை. ஈஸ்லா நேக்ரா என்ற ஊருக்குப் போய்விட்டு நானும் என்னுடைய வழிகாட்டி ரொபர்த்தோவும் சந்தியாகோ நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். ஈஸ்லா நேக்ரா சந்தியாகோவிலிருந்து 96 கிமீ தூரத்தில் உள்ள கடற்கரைச் சிற்றூர். கருப்பு நிறப் பாறைகள் நிறைந்த கடல் என்பதால் பாப்லோ நெரூதா அந்தக் கிராமத்துக்கு ஈஸ்லா நேக்ரா (கறுப்புத் தீவு) என்று பெயரிட்டார்.

சிலேயில் நெரூதாவுக்கு மூன்று வீடுகள் உள்ளன. சந்தியாகோ நகரில் ஒன்று; அவர் பிறந்து வளர்ந்த வால்பரைஸோ நகரில் மற்றும் ஈஸ்லா நேக்ராவில் (இந்த மூன்று வீடுகளுமே அருங்காட்சியகங்களைப் போல் பிரம்மாண்டமாக இருக்கின்றன.) ஈஸ்லா நேக்ராவிலிருந்து சந்தியாகோ திரும்பும் வழியில் சாப்பாட்டுக்காக பொமாய்ரே என்ற கிராமத்தில் காரை நிறுத்தினோம்.

மட்பாண்டங்களுக்காகப் புகழ்பெற்ற சிற்றூர் இது. அங்கே சிறியதொரு உணவகம் இருந்தது. நகரங்களைப் போல் இல்லாமல் வாய்க்கு ருசியான கிராமத்துச் சாப்பாடு. அச்சிறிய உணவகத்தில் ஒரு பெண் கிதார் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற பாடலை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. விக்தோர் ஹாராவின் ‘எஸ்தாதியோ சிலே…’ நான் ஆயிரக்கணக்கான முறை கேட்டு ரசித்த பாடல். சொல்லப்போனால், நான் சிலே சென்றதன் காரணமே அந்தப் பாடலை இயற்றிப் பாடிய ஒரு கலைஞன் கொல்லப்பட்ட இடத்தைப் பார்ப்பதற்காகத்தான். அந்தத் தருணத்தில் என் மனம் அடைந்த பரவசத்துக்கு எல்லையே இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர் சால்வதோர் அயெந்தே 1973 செப்டம்பர் 11-ம் தேதி அன்று அவருடைய ராணுவ ஜெனரல் பினோசெத்தினால் கொல்லப்பட்டார். (அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 துர்ச்சம்பவம் வரலாற்றில் நம்பர் இரண்டுதான். சிலே செப்டம்பர் 11 தான் முதலாவது). அந்தப் படுகொலைக்கு அமெரிக்க அரசு உதவியாக இருந்தது. லா மொனேதா என்று அழைக்கப்படும் அதிபர் மாளிகையின் மேலே ஆகாயத்திலிருந்து விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கின. அதிபருக்கு அடிபணிய வேண்டிய ராணுவ அதிகாரிகளே பினோசெத்தின் பேச்சைக் கேட்டு, அதிபர் மாளிகையை டாங்கிகளால் இடித்துத் தள்ளினர். அப்போது ஒரு ஐந்து நிமிடம் டாக்டர் அயெந்தே வானொலியின் மூலம் மக்களிடம் உரையாற்றினார். அதையும் அவரது குரலில் கேட்பதற்காகத்தான் நான் சிலே சென்றேன்.

என் வார்த்தைகளில் கசப்பு இல்லை

அந்தக் கடைசிப் பேச்சு: “என்னருமைத் தோழர்களே! நிச்சயமாக இதுதான் நான் உங்களிடையே பேசும் கடைசி சந்தர்ப்பமாக இருக்கும். தேசிய வானொலி அலுவலகங்களின் மீது விமானப் படை குண்டு வீசித் தாக்கிவிட்டது. என் வார்த்தைகளில் கசப்பு இல்லை; ஆனால், ஏமாற்றம் இருக்கும். தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையே மறந்துவிட்டு, தேசத்துரோகத்தைச் செய்ய முனைந்திருக்கும் அந்த ராணுவ அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் தார்மீகரீதியான தண்டனை காத்திருக் கிறது. அதிலும் திரு மெந்தோஸா நேற்றுதான் அரசு சார்பில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரும் இந்த நம்பிக்கைத் துரோகத்தில் முன்னணியில் நிற்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தங்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்குச் சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. நான் பதவி விலக மாட்டேன்! வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு என் உயிரைப் பலியிடுவதன் மூலம் நன்றிக்கடன் செலுத்துகிறேன்.

உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும், பல்லாயிரக்கணக்கான சிலேயர்களின் மனசாட்சியில் விதைக்கப்பட்ட நம்பிக்கையின் விதைகள் எந்தக் காலத்திலும் கருகிவிடாது. நம்மைத் தோற்கடிக்கும் வலிமை அவர்களிடம் இருக்கிறது; ஆனால், சமூக நீதி என்பதை அதிகாரத்தின் மூலமும் வன்முறைக் குற்றங்களின் மூலமும் சாதித்துவிட முடியாது. வரலாறு நம்முடையது. மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

என் தேசத்தின் தொழிலாளர்களே! நீங்கள் என் மீது என்றென்றைக்கும் கொண்ட விசுவாசத்துக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். சமூக நீதி குறித்த மாபெரும் கனவைச் சுமந்துகொண்டிருந்த ஒரு மனிதனின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள். நான் இந்த அரசமைப்பை வெகுவாக மதித்தேன். வரலாற்றைத் தீர்மானித்துக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், நமது அரசியல் மரபைத் துச்சமாக எண்ணி அதன் மதிப்பைக் குலைத்துவிட்ட ராணுவ அதிகாரிகள் இன்று அவர்களின் வீடுகளில் அமர்ந்துகொண்டு இன்னும் தங்கள் சொத்துகளைப் பெருக்கிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வந்துவிட்டது என்று எண்ணி அதற்கு ஏற்ற அந்நிய நாடுகளின் உதவியைப் பற்றி நினைத்து மனப்பால் குடித்துக்கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் மீறி, நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். என் தேசத்தின் அற்புதமான பெண்களே! விவசாயப் பெண்மணிகளே!! நீங்கள்தான் இத்தேசத்தின் ஆன்மா! அதேபோல் இந்த தேசத்தின் மீது அன்பும் நேசமும் கொண்டு உழைத்துக்கொண்டிருக்கும் உழைப்பாளிகளே! உங்களிடமெல்லாம்தான் நான் எனது இந்தக் கடைசித் தருணத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எங்களுக்கான பாடலையும் இசையையும் தந்து எங்களுக்கு மகிழ்ச்சியையும் போராடுவதற்கான பலத்தையும் கொடுத்த இளைஞர்களிடமும் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்… சிலே தேசத்தின் ஆண் மகனிடம், தொழிலாளியிடம், விவசாயியிடம், புத்திஜீவியிடம் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன். புத்திஜீவிகள் மிக விரைவில் கொல்லப்பட்டுவிடுவார்கள். ஏனென்றால், நமது தேசத்தில் ஃபாஸிஸம் நுழைந்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டன. அவர்களை வரலாறு தண்டிக்கட்டும்.

நம் வானொலி நிலையமும் முடக்கப்பட்டுவிடும். என் அமைதியான உலோகக் குரல் இனிமேல் உங்களை வந்தடையாது. இருந்தாலும், இந்தக் குரலை நீங்கள் கேட்டுக்கொண்டேதான் இருப்பீர்கள். எப்போதுமே நான் உங்கள் அருகிலேயேதான் இருப்பேன். குறைந்தபட்சம் தொழிலாளர்களுக்கு விசுவாசமாக இருந்த ஒரு கண்ணியமான மனிதனின் நினைவு உங்களை விட்டு என்றுமே நீங்காமல் இருக்கும். மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தங்கள் உயிரைத் தியாகம் செய்துவிடக் கூடாது. மக்கள் தங்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய அனுமதித்துவிடக் கூடாது. அதேசமயம், உங்களை யாரும் அவமதித்துவிடவும் கூடாது.

என் தேசத்தின் தொழிலாளர்களே! எனக்கு சிலேயின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதன் விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. இப்போது துரோகத்தின் ஆட்சி நடக்கிறது. கூடிய சீக்கிரத்தில் பாதைகள் திறக்கும்… அப்போது நம் மக்கள் சுதந்திரமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

சிலே வாழ்க! சிலேயின் மக்கள் வாழ்க! தொழிலாளர்கள் வாழ்க!

இதுதான் என் கடைசி வார்த்தைகள். மேலும், எனக்கு நிச்சயமாகத் தெரியும், என் தியாகம் வீண் போகாது. எனக்கு நிச்சயமாகத் தெரியும், துரோகத்துக்கும் கோழைத்தனத்துக்கும் என் மரணம் ஒரு தார்மீகரீதியான தண்டனையைக் கொடுக்கும்!”

இந்த உரையை நான் ‘பாட்டில் ஆஃப் சிலே’ (Battle of Chile) என்ற ஆறேகால் மணி நேர ஆவணப்படத்தில் கேட்டிருக்கிறேன். பத்ரீசியோ குஸ்மான் இயக்கிய அந்தப் படம், அதிபர் மாளிகையான லா மொனேதா பீரங்கிகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதே எடுக்கப்பட்டது. அதில் வரும் ஒரு காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. ஒரு ராணுவ அதிகாரி துப்பாக்கியைக் காட்டியபடி படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளரிடம் சொல்வார், “டோண்ட் ஷூட், டோண்ட் ஷூட்” என்று. நமக்கு ராணுவ அதிகாரியின் முன்பக்கமே திரையில் தெரியும். ஆனால், படமோ தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். ஒருகட்டத்தில் ராணுவ அதிகாரி தன் துப்பாக்கியால் எதிரே உள்ள ஒளிப்பதிவாளரைச் சுட்டுவிடுவார். நாம் அதைப் பார்க்கிறோம். ஒளிப்பதிவாளர் நமக்குத் தெரிய மாட்டார். பின்னணியில் இயக்குநர் “நம் ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று அறிவிப்பார்.

மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்

டாக்டர் அயெந்தே சொன்னதுபோல் கொடுங்கோலன் பினோசெத்தின் 17 ஆண்டுகளை மக்கள் துர்க்கனவாக எண்ணிக் கடந்தார்கள். இப்போது டாக்டர் சால்வதோர் அயெந்தேயை அவர்கள் தங்களின் தேசத் தந்தையாகக் கொண்டாடுகிறார்கள்.

லா மொனேதா மாளிகையின் முன்னே நின்றபோது என் கண்ணீரை அடக்க முடியாமல்போனது. அதேபோல், மியூசியத்தில் டாக்டர் அயெந்தேவின் கடைசிப் பேச்சைக் கேட்டபோது துக்கம் தாளாமல் தரையில் சரிந்தேன்.

மக்கள் மீது எவ்வளவு நேசமும் பிடிப்பும் வெளிப்படும் வார்த்தைகள் அவை: “நம்மைத் தோற்கடிக்கும் வலிமை அவர்களிடம் இருக்கிறது; ஆனால், சமூக நீதி என்பதை அதிகாரத்தின் மூலமும் வன்முறைக் குற்றங்களின் மூலமும் சாதித்துவிட முடியாது. வரலாறு நம்முடையது. மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்!”

ஓ அயெந்தே!

- சாரு நிவேதிதா, ‘ஸீரோ டிகிரி’, ‘ராஸ லீலா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்