2014 மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியா எதைப் பிரதிநிதித்துவப்படுத்தப்போகிறது என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் இது என்று அரசியல் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் வர்ணிக்கின்றனர். இருப்பினும் மதச்சார்பின்மை, இந்து தேசியம் என்ற கருத்தாளர்களிடையே உருப்படியான விவாதங்களோ கருத்துப் பரிமாற்றங்களோ நடக்கவில்லை. வெறும் வசைபாடல்கள்தான் நடந்தன. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தல் என்றாலே இருவேறு முனைகளையுடைய அரசியல் கருத்துகள் தீவிரமாக அலசப்பட்டு மக்கள் அவற்றுக்குச் சார்பாக நின்று வாக்களிப்பார்கள். ஜனநாயகத்தின் அடிநாதமான அம்சமே இந்தக் கருத்துமோதல்களும் மக்களின் பங்கேற்பும்தான். இங்கோ, நரேந்திர மோடி பிரதமராகிவிடுவாரோ என்று ஒரு தரப்பினர் அச்சமும் கவலையும் அடைவதைத்தான் பார்க் கிறோம். இந்தியாவில் தொடர்ந்து பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன, ஆட்சிகள் அமைகின்றன, பிடிக்காத அரசுக்கெதிராகத் தேர்தலில் வாக்குச்சீட்டு மூலம் மக்கள் தீர்ப்பளித்து அவர்களை அகற்றுகின்றனர் என்பதைத் தொடர்ந்து நாம் பெருமையுடன் பார்த்துவந்தாலும் இத்தகைய அச்சம் நிலவுவது நமது ஜனநாயகத்தின் வலிமை குறித்தே கவலைப்பட வைக்கிறது.
இந்திய அரசானது விரிவாக எழுதப்பட்ட அரசியல் சட்டத் தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. ஆட்சிக்கு வருவோர் அத்துமீறி நடந்துவிடாமல் இருக்க ஏராளமான கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் நம் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதுவும் போக, சுதந்திரமான நீதித்துறை நம்மிடம் இருக்கிறது. கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் பிரதமர், அரசியல் சட்டத்தின் அம்சங் களை மீறிவிடாமல் பார்த்துக்கொள்ள குடியரசுத் தலைவர் இருக்கிறார். அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு விடாமல் தடுக்க விழிப்புள்ள எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அரசைக் கடுமையாக விமர்சிக்கவும் தவறு செய்தால் அம்பலப்படுத்தவும் பத்திரிகைகள் இருக்கின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என்று கண்காணித்து அதற்கேற்பச் செயல்படும் மக்கள் அமைப்புகள் பல இருக்கின்றன. ஆட்சி யாளர்களால் நெருக்குதல்கள் அதிகமானால் அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் ராணுவத்துக்கும் சட்டரீதியாகவே பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொறுப்புகளும் அரசியல் சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டமைப்புகளையும் ஏற்பாடுகளையும் மீறி மோடி செயல்பட்டுவிடுவார், எல்லாவற்றையும் தன் விருப்பத்துக்கு வளைத்துச் செயல்பட்டுவிடுவார் என்று அதற்குப் பிறகும் நினைத்தால் ‘ஏற்கெனவே ஏதோ தவறு நடந்துவிட்டிருக்கிறது' என்றுதான் பொருள்.
கடந்த காலத்தின் நிழல்
1975 முதல் 1977 வரை ‘நெருக்கடிநிலை' இருப்பதாகப் பிரகடனம்செய்து, இந்த நாட்டின் அரசியல் சட்ட அமைப்புகளுக்கெல்லாம் வாய்ப்பூட்டுப் போட்டு, கைகளைக் கட்டி அடக்கியாண்ட ‘சிறு கும்பலின் செயல்கள்' இன்னும் பலருடைய நினைவில் பசுமையாக இருப்பதால், அந்த அனுபவத்தின் விளைவுதான் இந்த அச்சம் என்று கருத வேண்டியிருக்கிறது. அம்மாதிரி மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; அப்படி மீண்டும் நடக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். நெருக்கடிநிலை பிரகடனம் குறித்தும் அதன் பிறகு நடந்த சட்ட மீறல்கள் குறித்தும் முறையாக விசாரித்து, தவறு செய்தவர்களைத் தண்டித்து, இனி அதுபோல நடக்காதிருக்க சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இப்போது அச்சப்படத் தேவையில்லை.
நெருக்கடிநிலை காலகட்டத்தில் நடந்த அதிகார துஷ்பிரயோகம், சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நீதிபதி ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் விரிவாக விசாரித்தது. இந்திரா காந்தியும் அவரைச் சேர்ந்த சிலரும்தான் இந்த அத்துமீறல்களுக்குக் காரணம் என்று கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் பதிவுசெய்தது. உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (மிசா), இந்திய பாதுகாப்பு (ராணுவம்) சட்டம் ஆகிய இரண்டும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது பதிவுசெய்யப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன்தான் மேலிடம் இந்த உத்தரவு களைப் பிறப்பிக்கிறது என்பது தெரிந்தும்கூட அன்றைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவற்றைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்று அமல்செய்தனர். இதையெல்லாம் ஷா கமிஷன் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டும்கூட, தவறுசெய்தவர்கள் மீது வழக்கும் பதியப்படவில்லை, தண்டனையும் விதிக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, இனி இம்மாதிரி தவறுகள் நடக்காமலிருக்க சட்டபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் முனைப்பு காட்டப்படவில்லை.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களும், 2002-ல் குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரப் படுகொலைகளும் மக்களுடைய நினைவை விட்டு நீங்காமல் இருப்பதுடன் இவை மீண்டும் நடைபெறலாம் என்றே எச்சரிக்கின்றன. ராணுவத்தை வரவழைத்துப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும்வரை நாட்டின் சிவில் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் அவ்விரு படுகொலைகளையும் தடுத்து நிறுத்தாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டுதானிருந்தார்கள் என்பதும் இந்த அச்சத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அரசு நிறுவனங்கள்…
நம் நாட்டின் உளவு நிறுவனங்கள், காவல்துறை, சிவில் நிர்வாகம், நீதிமன்றங்கள் ஆகியவற்றை யாரும் முறையற்ற வகையில் கைப்பற்றிவிடாமல் தடுக்க சட்டப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், மக்கள் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது இந்த அமைப்புகளை நாட முடியும். சுருக்கமாகச் சொன்னால், சட்டப்படியான ஆட்சி நடக்கும்போது, யார் அல்லது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் நடக்கிறது என்பதே நம்முடைய பெருமைக்குரிய பாரம் பரியமாக இருந்துவருகிறது. அப்படிப்பட்ட ஆட்சி மாற்றம் நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கும் அச்சத்தை ஊட்டாமல் நடைபெற வேண்டும்.
ஷா கமிஷனும் அதைப் போன்ற விசாரணை அமைப்பு களும் தெரிவித்த பரிந்துரைகள் ஏன் சட்டமாக்கப்படவில்லை? ஆட்சியைக் கைப்பற்றுவது என்றால், இந்த அமைப்பு களையும் சேர்த்துக் கைப்பற்றுவதுதான் என்பதே சிலரின் கண்ணோட்டமாக இருப்பதுதான் இப்போது அச்சத் துக்குக் காரணமாக இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் தன்னுடைய நோக்கத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் வகையில் எல்லா அமைப்புகளின் விதி களையும் நடைமுறைகளையும் செயல்களையும் மாற்றி விட முடியும் என்பதே இப்போதுள்ள நடைமுறை. இது அமைப்புரீதியாக ஏற்பட்ட பலவீனம். வெவ்வேறு சித்தாந்தங் களைக் கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் நிர்வாகமும் மக்களும் பாதிக்கப்படாத வகையில் செயல்பட சுதந்திரமான செயல்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் வழிசெய்யப்பட்டிருக்கவில்லை.
அது மட்டுமல்ல, முக்கியமான துறைகளில் பொறுப்புக்கு வருபவர்கள் தங்களுடைய பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும், ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஏற்ப ஆடாமல் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியை இழந்து, பதவியைக் காத்துக்கொள்ளவும் சலுகைகளை அனுபவிக்கவும் வளைந்துகொடுப்பதுதான் இந்த அவலங்களுக்குக் கூடுதல் காரணம். கடுமையான சித்தாந்தம் உள்ள ஒருவர் ஆட்சிக்கு வந்து, அவர் இந்த அமைப்புகளையெல்லாம் பலமாகத் தாக்கினால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது உண்மையானால், ‘மோடி' என்பவர் நம்முடைய மிகப் பெரிய பிரச்சினை அல்ல, பிரச்சினையின் ஒரு அடையாளம் அவ்வளவே. அரசியல் நெருக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் தற்காப்பு அமைப்பு நமது அரசின் அங்கங்களுக்கு இல்லை என்பதையே இது வெளிப்படையாக உணர்த்துகிறது. இந்த அமைப்புகளின் அதிகாரங்களைச் சீர்குலைத்ததற்கும் சுதந்திரத் தன்மையைச் சேதப்படுத்தியதற்கும் காங்கிரஸ் மட்டுமல்ல அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எல்லா அரசியல் கட்சிகளும்தான் பொறுப்பு.
“மத்தியில் கூட்டணி அரசுக்கு மோடி தலைவரானால் இந்தி யாவுக்கே ஆபத்து” என்று யாராவது கூறினால், “இந்தியா என்ற சிந்தனைக்கே அடையாளமான, பெருமைமிக்க நமது ஆட்சியமைப்புகளை எந்தவிதத் தற்காப்பும் இல்லாமல் நிர்க்கதியாக விட்டவர்கள் யார்?” என்ற எதிர்க் கேள்வியை நாம் கேட்டாக வேண்டும்.
‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago