தமிழகத் தண்ணீர் பிரச்சினை: ஒப்பீடும் தீர்வும்

By டி.எல்.சஞ்சீவி குமார்

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது தமிழகத்தின் தண்ணீர் நிலவரத்தைப் பார்த்தால் கவலை யாக இருக்கிறது. நமக்கான நீர் ஆதாரங்கள்: மழை, நீர்நிலைகள், நிலத்தடி நீர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மூன்று அம்சங்களுமே கடந்த ஆண்டைவிடக் கவலை யளிக்கின்றன.

நிலத்தடி நீர்மட்டம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது. அதிகபட்சமாக நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் 1,000 1,300 அடிவரை தோண்டினால் மட்டுமே நிலத்தடி நீர் கிடைக்கிறது. இது ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்கள் அளிக்கும் சராசரிப் புள்ளிவிவரங்கள். கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தமிழக அரசின் நிலத்தடி நீர்மட்ட அளவீடுகளின்படி கடந்த ஆண்டைவிட மிக அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3.42 மீட்டர் குறைந்துள்ளது. மிகக் குறைந்த அளவாக கரூரில் 0.01 மீட்டர் குறைந்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், சுமார் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கவலையளிக்கும் வகையில் (பார்க்க: பெட்டிச் செய்தி) ஒரு மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி மிகவும் கவலை தரக்கூடிய வகையில் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயற்கைக் கோள் மூலம் ஆய்வுசெய்ததில் தமிழகத்தில் 15,000 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது தெரிந்தது.

காரணங்கள் என்ன?

சில உதாரணங்கள், சென்னையின் குடிநீர் பெருமளவு பாலாற்றுப் படுகையிலிருந்து கிடைத்தது. இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது. சுமார் 800 தோல் தொழிற்சாலைகள் பாலாற்றைப் பாழாக்கியதில் ஆற்றுப் படுகையிலேயே 1,000 அடி வரை துளையிட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது- ரசாயன நெடியுடன். பாலாற்றுப் படுகையை நம்பியிருக்கும் சுமார் 46 ஊர்களில் 27,800 கிணறுகள் வற்றி, ரசாயன உப்புப் படிமங்கள் பூத்துள்ளன. மதுரையின் வைகைக் கரை ஓரங்களில் 41 இடங்களில் ராட்சதக் குழாய்களைப் பதித்து, நகரில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகளின் கழிவுகளைச் செலுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் மணல் கொள்ளை. மணலைத் திடப்பொருளாகப் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு மணல் துகளிலும் தண்ணீர் உறைந்திருக்கிறது. அதை ‘மைக்ரோ டிராப்ஸ்' என்பார்கள். இதுவும் ஒரு மறைநீர் தத்துவம்தான்.

கைவிட்ட மழைப் பொழிவு

தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 92 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். 2012, 2013 ஆண்டுகளில் முறையே 16 , 31 சதவீதம் மழை குறைந்துவிட்டது. தவிர, கடந்த ஆண்டு இறுதியில் வந்த ஐந்து புயல்கள் தமிழக வளிமண்டலத்தின் மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு சென்றுவிட்டது. கடந்த 2013, ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் 70.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆனால், 2014 ஜனவரி முதல் இதுவரை பதிவான மழையின் அளவு வெறும் 0.13 மில்லி மீட்டர் மட்டுமே. ஆக, அடுத்த மழைப்பொழிவு ஜூலை மாதம்தான்.

விவசாயம் கேள்விக்குறிதான்

அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவே. கடந்த 2013ம் ஆண்டின் இதே நேரத்தில் தமிழகத்தின் மொத்த அணைகளிலும் 628.71 அடி நீர்மட்டம் இருந்தது. நேற்றைய நிலவரப்படி 595.09 அடி நீர்மட்டம் மட்டுமே உள்ளது. (பார்க்க: பெட்டிச் செய்தி) குடிநீர்ப் பஞ்சத்தை சிரமப்பட்டுச் சமாளித்துவிடலாம். ஆனால், விவசாயம் கேள்விக்குறிதான். உதாரணத்துக்கு, மேட்டூர் அணையில் 33 அடி தண்ணீர் இருந்தாலும் அதில் 20 அடி வெறும் சகதி மட்டுமே. தமிழகத்தில் மொத்த அணைகளின் நிலையும் இதுதான். அணைகளைத் தூர்வாருவது மட்டுமே எதிர்காலத்தில் நிலைமையைச் சீராக்கும்.

இது சென்னை நிலவரம்

சென்னையின் குடிநீர்ப் பிரச்சினை கடந்த ஆண்டைப் போல மோசமாக இருக்காது. ஏனெனில், கடந்த 2013 மே மாதத்தில் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் 45.8 அடி தண்ணீர் இருந்தது. ஆனால், இப்போது 51.97 அடி தண்ணீர் இருக்கிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி)

நிலத்தடி நீர் பெருக என்ன செய்யலாம்?

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் கட்டாயமாக்கலாம். நிலத்தடி நீரை உறிஞ்சும் பெரும் நிறுவனங்கள், சுத்திகரித்த பின்பு நீரைக் கழிவுநீர்க் கால்வாய்களில் விடாமல் நீரை உறிஞ்சும் பகுதிக்கு அருகிலேயே நவீன நீருட்டல் மூலம் பூமிக்குள் செலுத்தலாம். விவசாயிகள் மழை தொடங்கும் முன்பே நிலங்களை உழவுசெய்ய வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள லட்சக் கணக்கான ஏக்கர் தரிசு, மானாவாரி நிலங்களை இப்படி உழவுசெய்தாலே மழைநீர் வீணாகாமல் நிலத்தில் இறங்கும்.

மரங்களை வளர்ப்போர் ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் வட்டப் பாத்தி வெட்டலாம். மலைச்சரிவுகளில் மரம் வளர்ப்போர் மரத்தைச் சுற்றிப் பிறை வடிவ வாய்க்கால் வெட்டலாம். நெல் சாகுபடிக்கு 1,400 1,600 மில்லி மீட்டர் தண்ணீர் தேவை. உளுந்து, எள் மற்றும் சிறு தானியங்களுக்கு 200 - 300 மி.மீட்டர் தண்ணீர் போதும். கோடையில் தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் மாற்றிமாற்றிச் செய்யலாம். இதில் அரசு செய்ய வேண்டியது, தமிழகத்தில் ஏழு தட்பவெப்ப மண்டலங்களில் இருக்கும் 22 வகையான மண்ணைப் பரிசோதித்து, எங்கெங்கு என்ன பயிர் செய்யலாம் என்று ‘மைக்ரோலெவல்' பயிர்த் திட்டம் வகுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE