இந்தியாவின் வளர்ச்சியடையாத மாநிலங்களில் ஒன்றான பிஹார் மாநிலத்தைப் படிப்படியாக முன்னுக்குக் கொண்டுவந்ததன்மூலம், பல தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றவர் அந்த மாநில முதல்வராக இருந்த நிதீஷ் குமார். எனினும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் அலையில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் சுருண்ட பின்னர், இன்று நிதீஷ் குமாரின் அரசியல் களமும் அசைக்கப்பட்டுவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதீஷ் குமார் “சிலர் தங்களால் அலையை உருவாக்க முடியும் என்றும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறார்கள்” என்று மோடி மீதான தாக்குதலை ஆரம்பித்தார். தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. பா.ஜ.க.-வை எதிர்ப்பதன் மூலம் ஐக்கிய ஜனதா தளம் தனது பலத்தை இழக்கும். அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாகக் கருத்து எழுந்தது.
புயலுக்கு முன்னும் பின்னும்…
சொல்லிவைத்தாற்போல், தேர்தலில் பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 31 இடங்களை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. ஐக்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்தது வெறும் இரண்டே இடங்கள்தான். ஐக்கிய ஜனதா தளம் மட்டுமல்ல, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கும் பலத்த அடிதான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவிப்பது வழக்கமாக நடப்பதுதான். அதேபோல, அதை எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்யவும் தயங்கியதில்லை. அந்த வகையில், நிதீஷின் ராஜினாமா அறிவிப்பைப் படு மோசமாகக் கிண்டல்செய்துவருகிறார் பா.ஜ.க-வைச் சேர்ந்த சுஷில்குமார் மோடி. கடந்த 2010 சட்டசபைத் தேர்தலில் 91 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த பா.ஜ.க., 115 இடங்களைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து பிஹாரின் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்றது. அப்போது துணை முதல்வர் பதவியில் இருந்தவர் சுஷில்குமார் மோடி. நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க நிதீஷ் குமார் மறுத்ததையடுத்துக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, பிஹார் அரசிலிருந்து பா.ஜ.க. வெளியேறியது.
தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பின்னர், நிதீஷ் குமார் மீதான தாக்குதலை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. “பா.ஜ.க-வுடன் இணைந்து ஆட்சி செய்த நிதீஷ் குமார், பிஹாரின் வளர்ச்சிக்குத் தான் ஒருவர்தான் காரணம் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால், மக்கள் அவர் கட்சிக்கு இரண்டே இடங்களைத்தான் தந்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட அவர் முதல்வர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர்” என்று சுஷில்குமார் மோடி கூறினார்.
மாஞ்சி வியூகம்?
தற்போது, தனக்குப் பதிலாக மஹாதலித் இனத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஜிதன்ராம் மாஞ்சி பொறுப்பேற்பார் என்று அறிவித்துள்ள நிதீஷின் முடிவுகுறித்து கடும் விமர்சனம் செய்துவருகிறார் சுஷில்குமார். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ-க்கள் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றிக்கு உதவிபுரிந்தனர் என்றும், அவர்கள் ஆதரவு தங்கள் கட்சிக்குத்தான் என்றும் சுஷில்குமார் கூறினார். தவிர, “ரயில்வே துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டவர்தான் நிதீஷ்” என்றும், “தோல்வியால் கிடைக்கும் அவப் பெயரிலிருந்து தப்பவே இந்த ராஜினாமா நாடகம்” என்றும் கூறிவந்தார்.
இதற்கும் ஒருபடி மேலே போய், “ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சிபுரிந்த பரதன்போல், நிதீஷ் குமாரின் ஆட்சியைப் பத்திரமாகப் பாதுகாக்க ஜிதன்ராம் மாஞ்சி பயன்படுத்தப்படுகிறார்” என்று சுஷில்குமார் கடும் தாக்குதலில் இறங்கிவிட்டார். மேலும், இன்னும் ஆறு மாதங்களில் பிஹாரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வும், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டு ஆறு இடங்களை வென்ற ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் நெருக்கடி கொடுத்துவருகின்றன.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றிபெற்றால் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்கத் தயார் என்று நிதீஷ் குமார் நம்பிக்கையுடன் கூறுகிறார். அவருக்கு காங்கிரஸும் இடதுசாரிகளும் கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நரேந்திர மோடியின் அசகாய வெற்றி மூலம் கிடைத்துள்ள புத்துணர்ச்சியால் உந்தப்பட்டுள்ள மாநில பா.ஜ.க. நிதீஷின் நம்பிக்கையைச் சிதறடித்துவிடும் என்றே அவரது எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவதால் தலித் மக்களின் வாக்குகளை வென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் நிதீஷ் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் ஒரே மாதிரியாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் களம் காணப்போகும் நிதீஷ் மீண்டும் வெற்றிபெறுவாரா என்பது இன்றைய தேதியில் மில்லியன் டாலர் கேள்வி.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago