தி.மு.க-வின் கோட்டை எனச் சொல்லப்படும் தஞ்சைத் தொகுதியில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசுரபலம் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் தளிக்கோட்டை ராஜா பாலு (டி.ஆர்.பாலு) அ.தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பரசுராமனிடம் 1,44,119 ஓட்டில் தோற்றுப்போயிருக்கிறார்.
பாலுவின் சாதனைகள்
புறவழிச்சாலைகள் 91, மேம்பாலங்கள் 334, பெரிய பாலங்கள் 72, ரயில்வே மேம்பாலங்கள் 61, இவையெல்லாம் பாலுவால் தமிழகம் கண்ட பலன்கள். அடையாறு நதியைத் தூய்மைப்படுத்த ரூ. 491 கோடி, காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைத் தூய்மைப்படுத்த ரூ. 1,100 கோடி, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 35,798 கோடி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ. 15,001 கோடி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க ரூ. 244 கோடி; இவ்வளவும் டி.ஆர். பாலு முயற்சியால் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவை. ஆனால், இந்தச் சாதனைகளுக்கு டி.ஆர். பாலுவின் தடாலடிக் குணமே அகழி பறித்துவிட்டது.
தஞ்சையை நோக்கி…
கடந்த முறை தென்சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மாறிய டி.ஆர். பாலு, இந்தமுறை தனது சொந்த பூமியான தஞ்சையில் களமிறங்க 2011-லிருந்தே திட்டம் வகுக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தி.மு.க. வேட்பாளர் மகேஷ் கிருஷ்ணசாமிக்குப் பொருளாதாரரீதியில் உதவிடும்படி மாவட்டச் செயலாளரான பழனிமாணிக்கத்திடம் ஸ்டாலின் சொன்னார். அதை அந்தத் தரப்பு சரிவர நிறைவேற்றவில்லை. இதனால் பழனிமாணிக்கம் மீது ஸ்டாலினுக்கு மன வருத்தம். அதனால், அவரும் பாலுவின் தஞ்சைப் பயணத்துக்குத் தலையாட்டிவிட்டார். நேரடியாகக் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கட்சியின் சட்டதிட்டங்கள் தடுக்கும் என்பதால், தனது உறவினர் வீட்டுத் திருமணங்கள் தஞ்சை மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் தவறாமல் ஆஜரானார் பாலு. உள்நோக்கம் தெரிந்துபோனதால் பழனிமாணிக்கம் தரப்பால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
திருமணங்களை வைத்துத் திருவடி பதித்த பாலு, தஞ்சையை மையப்படுத்திப் புதிய ரயில்களை விட்டதுடன், புதிய ரயில்வே திட்டங்களுக்கும் தடம் போட்டார். இவையெல்லாம் தன்னால்தான் வந்ததாக பழனிமாணிக்கமும் தண்டோரா போட்டார். இதனால், இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையில் அடிதடி ரகளை என தஞ்சை தி.மு.க. ரணகளப்பட்டது. ஒரு கட்டத்தில் தஞ்சைக்கு பாலுவே ஸ்டாலினை நேரடியாக அழைத்துவரவும் ஆரம்பித்தார். கட்சிக்குள் சட்டதிட்டம் பேசும் கட்சித் தலைமை இதையும் வேடிக்கை பார்த்தது.
இதனால், கொதிப்படைந்த பழனிமாணிக்கம் தரப்பு, மெதுவாக கனிமொழி பக்கம் சாய்ந்தது. பாலு தரப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கனிமொழியை அழைத்துவந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பாலுவைக் கண்டிக்கும் விதமாக பழனிமாணிக்கம் ஊடகங்களில் பேச, அதை கருணாநிதியிடம் முறையிட்டார் பாலு. முடிவில் கருணாநிதி தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துவைத்தார். ஆனாலும், புகைச்சல் நின்றபாடில்லை. இந்தத் தேர்தலில் பழனிமாணிக்கத்துக்குத் தஞ்சையிலும் செஞ்சி ராமச்சந்திரனுக்குக் கடலூரிலும் சீட் கொடுக்க கடைசிவரை முயற்சித்தார் கருணாநிதி. இரண்டுமே நடக்கவில்லை. செஞ்சியாருக்குப் பொன்முடியும் பழனிமாணிக்கத்துக்கு பாலுவும் இடைஞ்சலாக நின்றார்கள். தனக்கு சீட் இல்லை என்றதும் அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார் செஞ்சியார். பழனிமாணிக்கத்துக்கு சீட் இல்லை என்றதும் டி.ஆர். பாலுவின் கொடும்பாவியை எரித்து ஆதங்கத்தைத் தணித்துக்கொண்டார்கள் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள்.
மக்கள் எதிர்ப்பு
அதே சமயம் டி.ஆர். பாலு வருகிறார் என்றதுமே தஞ்சையில் அவருக்கு எதிரான அஸ்திரங்கள் கூர்தீட்டப்பட்டன. தனது தொழில் அபிவிருத்திக்காகவே அவர் தஞ்சை வருவதாகத் தகவல் பரப்பினார்கள். மன்னார்குடியில் உள்ள பாலுவின் மதுபான ஆலையும் பல பேருக்குக் கண்ணை உறுத்தியது. மன்னார்குடி அருகே வடசேரியில் இயங்கிவரும் டி.ஆர். பாலுவின் கிங்ஸ் கெமிக்கல் ஆலைக்கு எதிராக 2010-ல் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அப்போது ஆலை வளாகத்துக்குள்ளேயே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாளை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக அனுசரித்துவருகிறார்கள் வடசேரி மக்கள்.
இதேபோல், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததில் டி.ஆர். பாலுவுக்கும் பங்கிருக்கிறது எனப் பல தரப்பிலும் புகார் கிளப்பினார்கள். அவருக்கு எதிராக விவசாயச் சங்கத்தினர் தீர்மானமே போட்டார்கள். பதறிப்போன பாலு, “விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அமல்படுத்த விட மாட்டேன்” என மறுத்தார். ஆனாலும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. ‘நம்மாழ்வார் இறப்புக்குக் காரணமானவர்களுக்கா உங்கள் ஓட்டு?’ எனச் சுவரொட்டி ஒட்டினார்கள்.
சாதிரீதியாகப் பிளவுபட்ட தஞ்சை
கட்சி முழுக்க பழனிமாணிக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தஞ்சை தி.மு.க. பாலுவுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கவில்லை. அதைப் பற்றி பாலு கவலைப்படவும் இல்லை. பாலுவுக்கு ஆதரவாக அவரது அகமுடையார் சமூகத்தினர் அணி திரட்ட, கள்ளர் சமூகம் பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. மொத்தத்தில் டி.ஆர். பாலுவின் வருகையால் தஞ்சை தி.மு.க. சாதிரீதியாக இரண்டுபட்டதுதான் மிச்சம்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த தஞ்சை வாக்காளர்கள், எட்டு முறை போட்டியிட்டு ஐந்து முறை எம்.பி-யாகி, இரண்டு முறை அமைச்சராக இருந்தவரை விட்டுவிட்டு, எதற்காக டி.ஆர். பாலுவுக்கு இங்கே சீட் கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கான பதில்தான் பரசுராமனின் வெற்றி!
- குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.tl@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago