ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத்தின் பங்களிப்பு 1.1%. ஆகச் சரிந்த ஒரு காலகட்டத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் பருவநிலையும் ஒருசேர வாட்டிவதைக்கும் காலகட்டத்தில், விவசாயிகளின் தற்கொலைகளை அதிரடியாக, பாதியாகக் குறைப்பது எப்படி? மோடி மந்திரம் உலகுக்கே வழிகாட்டக்கூடும்!
இந்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகளைத் தனித்து வெளியிடுகிறது. இதன்படி, அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை: 1995-ல் 10,720; 1996-ல் 13,729; 1997-ல் 13,622; 1998-ல் 16,015; 1999-ல் 16,082; 2000-ல் 16,603; 2001-ல் 16,415; 2002-ல் 17,971; 2003-ல் 17,164, 2004-ல் 18,241; 2005-ல் 17,131; 2006-ல் 17,060; 2007-ல் 16,632; 2008-ல் 16,196; 2009-ல் 17,368; 2010-ல் 15,964; 2011-ல் 14,027; 2012-ல் 13,754; 2013-ல் 11,772; மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ல் 5,650. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் 52% குறைவு.
தற்கொலைகளை ஒரு கவுரவப் பிரச்சினையாக, குடும்ப அவமானமாகக் கருதும் இந்திய சமூகப் பின்னணியில், பாதிக்குப் பாதி தற்கொலைகள்கூட இங்கு பதிவுசெய்யப்படுவதில்லை என்பது நமக்குத் தெரியும். அதிலும், விவசாயிகளின் தற்கொலைகள் ஒரு அரசியல் விவகாரமான பிறகு, விவசாயிகள் தற்கொலைகளைப் பதிவுசெய்வதை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்க்கின்றன மாநில அரசுகள். குறிப்பாக, 2009-க்குப் பின் விவசாயிகள் தற்கொலைகள் கணக்கைக் குறைப்பதில் மத்திய - மாநில அரசுகள் காட்டிய அக்கறையை எண்ணிக்கைகள் தெளிவாகக் காட்டின. 2009 முதல் 2013 வரை தொடர்ந்து இந்த எண்ணிக்கை சரிந்ததன் பின்னணி ஆக்கபூர்வமானது அல்ல. ஒரு சின்ன உதாரணம், மேற்கு வங்கம். நாட்டில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான இங்கு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 951 தற்கொலைகள் பதிவாயின. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலைகளே இல்லை என்கிறது மேற்கு வங்க அரசு.
இப்போது மோடி அரசில் வெளியாகியிருக்கும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலும்கூட 76% விவசாயிகளின் தற்கொலைகள், ஊடகங்களும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கும் மகாராஷ்டிரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவை.
நாட்டிலேயே வேளாண்மையில் முன்னணியில் இருக்கும் பஞ்சாபில் பதிவாகியிருக்கும் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை 22. இந்த எண்ணிக்கையின் பின்னுள்ள தில்லுமுல்லை சமூக ஆர்வலர் இந்திரஜித் ஜெய்ஜித் அம்பலப்படுத்துகிறார். “பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், குருநானக் தேவ் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து, பஞ்சாப் அரசுக்காக வீடு வீடாக நடத்திய கணக்கெடுப்பு 2000-2010 காலகட்டத்தில் 6,926 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பதிவுசெய்திருக்கிறது. இதன்படி, பஞ்சாபில் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி உயிரை மாய்த்துக்கொள்கிறார். 2014-ல் மூனாக், லெஹ்ரா, பட்லாடா ஆகிய மூன்று வட்டங்களில் மட்டும் 18 விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர். பஞ்சாபில் மொத்தம் 146 வட்டங்கள் இருக்கின்றன. அத்தனையிலும் சேர்த்து விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை வெறும் 22 என்பது மோசடி” என்கிறார் அவர்.
பஞ்சாபின் கதை இப்படி என்றால், நாட்டிலேயே அதிகமான - 16.5% - மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் வெறும் 63 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்வது பெரும் மோசடி என்கிறார்கள் பந்தல்கண்ட் விவசாயிகள். மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியைப் போல இன்னொரு மோசமான மயான பூமி உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்ட். அதிலும், கடந்த ஆண்டு இங்கு விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. அப்போதே, விவசாயிகளின் தற்கொலைகளை உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு இருட்டடிப்பதை ஊடகங்கள் எழுதின.
துணிந்து மோசடியில் ஈடுபடுவதில் உத்தரப் பிரதேசத்தை மிஞ்சிவிட்டன பிஹார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா அரசுகள். நாட்டின் மக்கள்தொகையில் 27%-ஐ ஆளும் இந்த ஐந்து மாநில அரசுகளும் ஒரு விவசாயியின் தற்கொலையைக்கூடப் பதிவுசெய்யவில்லை. பூஜ்ஜியம் என்கின்றன.
இப்படிப்பட்ட மாநில அரசுகளால் கொடுக்கப்படும் சொற்ப எண்ணிக்கையையும் பாதியாகக் குறைக்கும் கலையை மோடி அரசின் கீழ் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் கற்றிருக்கிறது. இதுவரை விவசாய வேலையில் ஈடுபட்டிருக்கும் எவரின் தற்கொலையையும் விவசாயியின் தற்கொலையாகப் பதிந்த தேசிய
குற்றவியல் ஆவணக் காப்பகம் இப்போது முதல் முறையாக நிலச் சாகுபடியாளர்களை மட்டும் விவசாயிகளாகவும் ஏனையோரை விவசாயத் தொழிலாளர்களாகவும் பிரித்திருக்கிறது. முந்தைய கணக்கெடுப்பு முறைப்படி பார்த்தால், 2014-ல் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 12,360 (விவசாயிகள் 5,650+ விவசாயத் தொழிலாளர்கள் 6,710). அதாவது,
முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகம். புதிய முறைப்படியோ சரிபாதி குறைவு. மேலும், விவசாயத் தொழிலாளர்கள் இனி விவசாயிகள் அல்லர். தவிர, இனிவரும் காலங்களில், விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களும் ‘தெளிவாக’ வரையறுக்கப் படுவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன என்கிறார்கள். அதாவது, ஒரு விவசாயியின் தற்கொலைக்கான காரணம், அத்தனை எளிதாக ‘தொழில் / கடன் சார்ந்த நெருக்கடி’ என இனி பதிவுசெய்யப்படாது என்பதே இதற்கான அர்த்தம்.
என்ன இருந்தாலும், விவசாயிகளின் நண்பர் ஆளும் அரசு இது. விவசாயிகளை நன்கு புரிந்துவைத்திருக்கும் அரசு. அதிகாரவர்க்கமும் அதற்கேற்ற மாதிரிதானே சிந்திக்கும். நாம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago