இன்னொரு நெருக்கடிநிலை வரக்கூடுமா?

By சமஸ்

வரலாறு என்றால், அது எப்போதுமே எதிர்காலத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியது தான். இந்திய ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிடுபவர்கள் உண்டு. எவ்வளவு ஓட்டைகளோடு நம்முடைய ஜனநாயகச் சட்டி உயிர் பிழைத்திருக்கிறது என்பதையும் அதுதான் உணர்த்தியது. 40 வருஷங்களுக்குப் பின் சூழல் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது?

இப்படி ஒரு விவாதம் எழும்போதெல்லாம் பெரும்பாலான நண்பர்கள், “இந்தியாவில் இன்னொரு நெருக்கடிநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த வாதத்தை வலியுறுத்தி அவர்கள் முன்வைக்கும் இரண்டு முக்கியமான காரணங்கள்: 1. நெருக்கடிநிலைக்குப் பின் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள், 2. இன்றைய நவீன யுகத்தில் நம் இளைஞர்களிடத்தில் வளர்ந்திருக்கும் அரசியலுணர்வு.

அரசியல் சட்ட மாற்றங்கள்

நெருக்கடிநிலைக்குப் பின் நம்முடைய அரசியல் சட்டத்தில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அன்றைக்கு உள்நாட்டுக் குழப்பங்களைக் காரணம் காட்டி நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டது. இனி, ‘ஆயுதப் புரட்சி’ ஏற்பட்டால்தான் நெருக்கடிநிலையை அமலாக்க முடியும். அன்றைக்கு, பிரதமரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத் தலைவரால் நெருக்கடிநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டது. இனி, மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில்தான் நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்த முடியும். அன்றைக்கு, நாடாளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மை போதும், நெருக்கடிநிலைத் தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம்.

இனி, இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை வலு இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். அதாவது, இரு அவைகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று, ஆதரித்து வாக்களித்தால் மட்டுமே தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அன்றைக்கு, நாடாளுமன்றம் ஒரு முறை அனுமதி வழங்கிவிட்டால், மத்திய அமைச்சரவை விரும்பும் வரை நெருக்கடிநிலை நீடிக்கலாம்.

இனி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றால்தான் நெருக்கடிநிலையை நீட்டிக்க முடியும். அன்றைக்கு நெருக்கடிநிலைப் பிரகடனம் குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது. இப்போது அப்படியல்ல.

இவையெல்லாம் அரசியல் சட்டத் திருத்தங்கள் நம்முடைய ஜனநாயகத்துக்குக் கொடுத்திருக்கும் கூடுதல் கவசங்கள். ஆனால், இந்தக் கவசங்கள் இருப்பதாலேயே இந்திய ஜனநாயகம் ஆபத்துகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியுமா? உதாரணமாக, குடியரசுத் தலைவரிடம் நெருக்கடிநிலையைப் பிரதமரே பரிந்துரைப்பதற்கும் மத்திய அமைச்சரவை மூலம் பரிந்துரைப்பதற்கும் இன்றைய சூழலில் பெரிய வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்ன? நாம் மேற்கொண்ட முயற்சிகள் சட்டரீதியாக நெருக்கடிநிலை அமலாக்கத்தைச் சற்றுக் கடினமாக்கியிருக்கலாம். முற்றிலுமாக ஆபத்து நீங்கிவிடவில்லை என்பதே நிதர்சனம்.

நவீன யுகத்தில் இளைஞர்களின் அரசியலுணர்வு: சில கேள்விகள்

இந்த நவீன யுகம், சமூக வலைதளங்களின் ஆதிக்கம், கல்வியறிவு காரணமாக இளைஞர்களிடத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் அரசியலுணர்வு இதெல்லாம் ஒரு வகையில் நம்மைச் சுற்றி நாமே வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் மாய வட்டங்களாகவே தோன்றுகிறது. இப்படிச் சொல்லப்பட்ட ஒரு தலைமுறை முன்னின்று தேர்ந்தெடுத்த அரசுதான் இப்போது நம்மை ஆள்கிறது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பது சரி. ஆனால், வெறும் பிழைப்புக்கான கருவியாகப் படிப்பை வளர்த்தெடுக்கும் நம்முடைய கல்விமுறையின் பின்னணியில் கல்வியறிவின் வளர்ச்சிக்கும் அரசியலுணர்வின் வளர்ச்சிக்கும் எந்த அளவுக்குச் சம்பந்தம் இருக்கிறது? தவிர, இன்றைய தலைமுறைக்கு எந்த அளவுக்குப் போராட்டங்களில் முன்னிற்கும் துணிவும் அவை தரும் வலியை எதிர்கொள்ளும் திராணியும் இருக்கிறது? சமூக வலைதளங்களில், நொடியில் முகப்புப் படத்தில் கருப்புக் கொடியைப் பறக்கவிடுவதும் வீதிகளில் களம் இறங்கி ஆயுதப் படைகளை எதிர்கொள்வதும் ஒன்றல்ல.

முதலில், சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் விடுதலைக் கனவு கண்ட, நெருக்கடிநிலையின்போது, ஜனநாயக தாகத்தோடு ஒட்டுமொத்த நாட்டையும் பார்த்த அந்தப் பரந்துபட்ட கண்ணோட்டம் இன்றைய இந்திய இளைய சமூகத்திடம் இருக்கிறதா?

அப்படித் தெரியவில்லை.

ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்

காஷ்மீரிலும் வடகிழக்கின் பெரும்பாலான மாநிலங்களிலும் இன்றைக்கு ஜனநாயகத்தைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் உருவாக்கியிருக்கும் சூழல் நெருக்கடிநிலைச் சூழலுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

சட்டம், ஒழுங்குப் பராமரிப்பின் பெயரால், ஆயுதப் படையினருக்கு உச்சபட்ச அதிகாரம் அளிக்கும் சட்டம் இது. நாட்டின் எந்தவொரு பகுதியில் இந்தச் சட்டம் அமலாக்கப்படுகிறதோ, அந்தப் பகுதி கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு, அந்தப் பகுதியின் எந்த இடத்திலும் அனுமதியின்றி நுழையவும் சோதனையிடவும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தவும் எவரை வேண்டுமானாலும் பிடியாணையின்றிக் கைதுசெய்யவும் தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும் ஆயுதப் படைகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திதான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார் இரோம் ஷர்மிளா.

அரசு இந்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய 2004-ல் நியமித்த நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி ஆணையம் தனது 147 பக்கப் பரிந்துரையில், இந்தச் சட்டத்தை ஏன் முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும் என்பதன் நியாயத்தை உரக்கப் பேசுகிறது. இந்திய அரசோ ஆயுதப் படைகளின் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறது.

நாட்டிலேயே முதல் முறையாக 1958-ல் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டுவரப்பட்ட மாநிலம் அசாம். இன்றைக்கும் குவாஹாட்டி நீங்கலாக ஏனைய பகுதிகளில் அங்கு இந்தச் சட்டம் அமலில் இருக்கிறது. நாகாலாந்து 1961-ல் தனி மாநிலமாக உருவானது. அதற்கும் முன்பிருந்தே இங்கு இந்தச் சட்டம் தொடர்கிறது. காஷ்மீரில் இன்றுவரை நீடிக்கும் பல மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான அடிப்படை பலத்தை ஆயுதப் படையினருக்குத் தருவது இந்தச் சட்டம்தான் என்கிறார்கள் காஷ்மீரிகள்.

காஷ்மீரில் மட்டும் ஆயுதப் படைகளால் கடந்த 26 ஆண்டுகளில் 94,195 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 1.28 லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லும் ‘காஷ்மீர் ஊடக மையம்’, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 416 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பட்டியலிடுகிறது. 2008-ல் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நீங்கலாக ஏனைய ஊடகங்கள் அத்தனையையும் முடக்கிப்போட்டது அரசு.

2010-ல் குறுஞ்செய்திகள் அனுப்பத் தடை விதித்தது. குறுஞ்செய்தி அனுப்பும் அனுமதியைத் திரும்ப எல்லோரும் பெற நான்கு ஆண்டுகள் ஆயின. 2012-ல் ஒருமுறை ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளச் சேவை முடக்கப்பட்டது. 2013-ல் இணைய ஊடகங்கள் மீதான அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், சில நாட்களுக்கு முன்புகூட காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் நீடிப்பதற்கான நியாயங்களைப் பேசியிருக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

சத்தீஸ்கரின் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொள்வதற்கான கடுமையான சட்டம் என்ற பெயரில், மாநில அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் ‘சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005’. சட்டப்படியான நிர்வாகத்துக்குத் தடை ஏற்படுத்தும் விதத்தில் / சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டாம் என்று யாரையாவது ஊக்குவிப்பதாக அரசு கருதும் எவரின் நடவடிக்கையும் இந்தச் சட்டத்தின்படி ‘சட்ட விரோதம்’. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு உங்களைக் கைதுசெய்ய நீங்கள் பெரிதாகக் குற்றம் ஏதும் செய்திருக்க வேண்டாம்.

அரசை விமர்சித்து ஒரு இடத்தில் கூட்டம் போடுவது, உரையாடல் நடத்துவது, சுவரொட்டி ஒட்டுவது எதுவானாலும் ‘சட்ட விரோதம்’ ஆகலாம்; அதன் அடிப்படையில் உங்களைக் கைதுசெய்து மூன்றாண்டுகள் வரை உள்ளே வைக்கலாம்.

சத்தீஸ்கரில் பத்திரிகையாளராக இருப்பது இன்றைக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அங்கிருந்து கொண்டே அரசை விமர்சிப்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். “முதலில் அதிகாரிகள் தரப்பிலிருந்து வாய்மொழியாக மிரட்டல் வரும். அடுத்து, அரசு தரும் விளம்பரங்கள் நிறுத்தப்படும். அப்புறம், பத்திரிகை முகவர்கள், விற்பனையாளர்கள் மிரட்டப்படுவார்கள்.

இவ்வளவையும் தாண்டினால், சட்டத்தை அரசு கையில் எடுக்கும். ஏனென்றால், ‘சட்டவிரோத நடவடிக்கைகள்’ தொடர்பாக ஊடகங்கள் எந்தச் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கிறது இந்தச் சட்டம். எது ஒன்றையும் சட்ட விரோதம் ஆக்க அரசால் முடியும்” என்கிறார்கள்.

புகழ் பெற்ற மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் விநாயக் சென் 2007-ல் கைதுசெய்யப்பட்டது இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான். அரசை விமர்சித்தார் என்பதாலேயே அவரைக் குறிவைத்தது அரசு. தடைசெய்யப்பட்ட இயக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டே அவரை ஆயுள் தண்டனையை நோக்கித் தள்ள சத்தீஸ்கர் அரசுக்குப் போதுமானதாக இருந்தது. நோம் சோம்ஸ்கி, நோபல் பரிசுபெற்றவர்கள் 22 பேர் என்று சர்வதேச அளவில் அறிவுஜீவிகள் பலர் சென்னுக்கு நீதி கேட்டுக் கை கோத்தும் ஒன்றும் அசைக்க முடியவில்லை. இப்போதும் உச்ச நீதிமன்றம் அளித்த பிணையிலேயே வெளியே வந்திருக்கிறார் சென்.

குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா

நாட்டுக்கே முன்னோடியாக குஜராத் அரசு, ‘குஜராத் பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல் கட்டுப்பாட்டுச் சட்டம் 2015’ என்று ஒரு மசோதாவைச் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றியிருக்கிறது. மோடி முதல்வராக இருந்தபோது கொண்டுவர முயற்சித்தது ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டு குஜராத் மசோதா 2003’-ன் திருத்தியமைக்கப்பட்ட வடிவம் இது. 2004-ல் அப்துல் கலாம், 2008-ல் பிரதிபா பாட்டீல் என்று இரு குடியரசுத் தலைவர்கள் கையெழுத்திட மறுத்து நிராகரித்த மசோதா. மனித உரிமைகளைத் தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கும் பல பிரிவுகளைக் கொண்ட மசோதா.

இதன் கீழ், தாங்கள் கைதுசெய்யும் ஒருவரின் விசாரணைக் காலத்தைக் காவல் துறையினர் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலும்கூட நீட்டித்துக்கொள்ளலாம். போலீஸ் காவலில் இருக்கும்போது ஒருவர் கொடுத் ததாகச் சொல்லப்படும் வாக்குமூலத்தையே அவருக்கு எதிரான வழக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் காவல் துறையினர் அளிக்கலாம். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குற்றவாளி, குற்றவாளியுடன் இணைந்து செயல்பட்டவர், உடந்தையாக இருந்தவர், சதி செய்தவர் என்று அனைவர் மீதும் குற்றம்சாட்ட முடியும். எல்லாவற்றுக்கும் மேல் இதன் கீழ் கைதுசெய்யப்படும் ஒருவர் ஜாமீன் மனு அடிப்படையிலோ, சொந்த ஜாமீனிலோ வெளியே வர முடியாது. இப்படியெல்லாம் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, யாரும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது.

மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி நகர்ந்த உற்சாகத்தில் மீண்டும் புதிய பெயரில் அதே மசாதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறது குஜராத் அரசு. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, ஒவ்வொரு மாநிலமும் இப்படியான சட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால், நிலைமை என்னவாகும்?

இவை எல்லாமும் இந்தியாவின் கல்வியறிவு மேலே மேலே சென்றுகொண்டிருக்கும் ‘நவீன யுகத்தில்’ நடக்கும் நெருக்கடிக் கதைகள்தான். நம் இளைஞர்களின் வளரும் ‘அரசியலுணர்வு’ என்ன செய்துகொண்டிருக்கிறது? மேலே ஓரிடத்தில் அதிகாரம் குவியக் குவிய நெருக்கடியின் கதவுகள் ஏனையோரை நோக்கி அகலத் திறக்கின்றன. எதிர்க்கும் கரங்களும் குரல்களும் முன்பளவுக்குக்கூட வலுவாகப் பிணைந்திருக்கவில்லை; மேலும் கதவுகளின் அகலத்தையும் அவை அறிந்திருக்கவில்லை!

- சமஸ்,
தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்