தமிழகத்தில் காவிரிக்கு அடுத்தபடியாக பயனளிப்பதிலும், இரு மாநில சர்ச்சைகளிலும் முக்கிய நதியாகத் திகழ்வது முல்லை பெரியாறு. மதுரை மாவட்டம் உட்பட 5 தென் மாவட்டப் பகுதிகளில் 2.13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாசனம், 80 லட்சம் மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட அனைத்தும் இந்த நதியை நம்பித்தான் உள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நதியில் 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் பின்னணியில், 120 ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை உருவாகியுள்ளது. 3 பக்கங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே சுவர் எழுப்பி புவிஈர்ப்பு அணையாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர் உயிர்த் தியாகங்களில், ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்கின் கடும் முயற்சியால் கம்பீரமான அணை உருவானது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மட்டு மின்றி அவர்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துவிட்ட இந்த அணைக்கு கேரள மாநிலம் தரும் தொடர் இடையூறுகள், இதனால் கொதித்து எழும் தமிழக விவசாயிகளின் போராட்டம், வழக்கு மேல் வழக்குகளைத் தொடரும் இரு மாநில அரசுகள், ஆய்வு மேல் ஆய்வு நடத்தும் குழுக்கள் என வரலாற்று சம்பவங்கள் ஏராளம்.
தலைவிரித்தாடிய பஞ்சம்
18-ம் நூற்றாண்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆறுகள், குளங்கள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயத் தொழிலும், உணவு உற்பத்தியும் முடங்கி பஞ்சம் தலைவிரித்து ஆடியது. கொடூரமாக நோய்கள் தாக்கின. குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மனிதர்கள் கால்நடைகளுடன் இறந்து மடிந்தனர். மொத்தம் 2 லட்சம்பேர் வரை இறந்ததாக டெய்லர் என்ற வெள்ளைப் பாதிரியாரின் நாட்குறிப்பு தெரிவிப்பதாக தகவல் உள்ளது. ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் தவித்தனர். தண்ணீரை தேடி ஊர், ஊராக அலைந்தனர்.
கடுமையான இந்த பஞ்சத்தைப் போக்க 1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி தனது அமைச்சர் முத்து அருளப்பரை அனுப்பி தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். பலநூறு மைல்களை தாண்டியும் நாலாபுறமும் ஏராளமானோர் தண்ணீரை தேடி அலைந்தனர். அப்போதுதான் கேரளப் பகுதியில் அபரிமிதமாக மழை பெய்வதாகவும், இந்த மழைநீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதும் தெரிந்தது. இந்த தகவல் குறித்து பல்வேறு நிலைகளில் தீவிரமாக ஆராயப்பட்டது.
ஆங்கிலேய அரசின் இன்னல்களுக்கு மக்கள் ஆளானாலும் தங்கள் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும்படி தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் பின்னர் ஆங்கிலேய அரசின் பொறியாளர்களான ஜேம்ஸ் கால்டுவெல், ரைவீஸ், பேயின், ஸ்மித் என பலரும் 1808 முதல் 1870-ம் ஆண்டு வரை கேரள வனப்பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகிரி சிகரம்
நெல்லை மாவட்டம் சுந்தரகிரி மலையில் சிவகிரி சிகரத்தில் தோன்றி பெருந்துறைஆறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இட மலை ஆகிய ஆறுகளுடன் முல்லை பெரியாற்றை சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் பெரியாற்றில் அணை கட்ட லாம் என முடிவெடுத்தனர்.
மேற்கு நோக்கி பாயும் இந்த நீரை தடுத்து கிழக்கு திசையை நோக்கி திருப்பினால் தென் மாவட்டங்களை செழிப்பாக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இறுதி செயல்வடிவம் தந்து அணையை கட்டும் பணியை ராணுவப் பொறியாளரான கர்னல் பென்னி குக்கிடம் ஆங்கிலேய அரசு அளித்தது.
3 பக்கங்களில் உள்ள கம்பீர மலைகளுக்கிடையே புகுந்து ஓடும் நதி நீரை சுவர் எழுப்பி தடுக்கவும், இதன் மூலம் தேங்கும் நீரை எதிர்திசையில் சுரங்கம் அமைத்து எடுக்கலாம் என்ற தொழில்நுட்பத்தை பென்னி குக் கண்டறிந்தார். நதியின் போக்கையே திசை திருப்பும் வகையில் புவிஈர்ப்பு அணையாக கட்டுவதால் மிக உறுதியாக இருக்கும் என்பதற்கான திட்ட அறிக்கையையும், மாதிரி வடிவமைப்பையும் ராணுவப் பொறியாளர் பென்னிகுக் உருவாக்கினார்.
தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் இருந்தது. அங்கிருந்து தண்ணீரை தமிழக எல்லைக்குள் கொண்டுவர திருவிதாங்கூர் மன்னரிடம் ஆங்கிலேய அதிகாரிகள் அனுமதி கேட்டனர். பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் தயாரானது.
முல்லை பெரியாறு பெயர் வந்தது எப்படி?
நெல்லை மாவட்டம் சிவகிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் பெரியாறு அடர்ந்த காட்டுப்பகுதியில் 16 கி.மீ. தூரம் பயணித்து பெரியாற்றின் துணை நதியான முல்லையாற்றை சந்திக்கிறது. முல்லையாறு வலதுபுறமாக 850 மீட்டர் உயர மலையில் இருந்து உருவாகி பெரியாற்றுடன் முல்லைக்கொடி என்ற இடத்தில் ஒன்றாகக் கலக்கிறது. ஒன்றாக இணைந்த பெரியாறும், முல்லையாறும் பெரிய நீர் பெருக்கை ஏற்படுத்தி மேற்கு நோக்கி திரும்புகின்றன.
இந்த இரு நதிகளும் சந்திக்கின்ற முல்லைக்கொடிக்கு கீழே 11 கி.மீ. பகுதியில் மலைகளுக்கு இடையே அணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்படுவதால் இது முல்லை பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு கோணங்களில் அணையை உருவாக்கிய பொறியாளர் பென்னி குக்.
முல்லை மலரும்...
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago