சுவாரஸ்யங்கள் இல்லாத பனிப்போர்

By தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், இன்னொரு பனிப்போர் மூள்வதற்கான சாத்தியம் குறைவு.

ரஷ்யாவின் சவாலுக்குப் பதில் தரும் விதமாக, கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கூட்டணிப் படைகளுடன் இணைந்து போர் டாங்குகளை நிலைநிறுத்துகிறது அமெரிக்கா. அமெரிக்கப் போர் விமானமும் ரஷ்ய ராணுவ விமானமும் சமீபத்தில் ஒன்றுக்கொன்று 10 அடி இடைவெளியில் பறந்து சென்றன. நெடுந்தொலைவு சென்று தாக்கும் அதி நவீன ஏவு கணைகளை ரஷ்யா தயாரித்துவருகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் முறுக்கிக்கொண்டு நிற்கின் றன. நான் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், யாரேனும் பனிப்போரை மீண்டும் தொடங்கிவிட்டார்களா என்ன?

அப்படி இருந்தால், இந்த முறை பனிப்போர் சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லாத ஒன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது, ஜேம்ஸ் பாண்ட் இருக்க மாட்டார், ஸ்மெர்ஷ் உளவுத் தடுப்பு அமைப்பு இருக்காது. ‘கெட் ஸ்மார்ட்’ தொலைக்காட்சித் தொடரில் ‘ஏஜெண்ட் 86’ அணிந்துவரும் தொலைபேசி ஷூ இருக்காது. ஐ.நா. பொதுச் சபையில் நிகிட்டா குருச்சேவ் ஷூவால் மேஜையைத் தட்டிய சம்பவம், நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த போட்டி, யாருடைய நாட்டின் சமையலறைச் சாமான்கள் சிறந்தவை என்று இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடந்த விவாதம் என்று எந்த சுவாரஸ்யமும் இருக்காது.

1963-ல் மேற்கு ஜெர்மனிக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி ‘இச் பின் எய்ன் பெர்லினர் (நான் பெர்லின்காரன்)’ என்று சொன்னதைப் போல், உக்ரைன் தலைநகர் கீவில் நின்றுகொண்டு, ‘நான் உக்ரைன்காரன்’ என்று ஒபாமா சொல்வார் என்று நான் நினைக்கவில்லை.

போர்ச் சூழல்

இல்லை, இந்தப் பனிப்போருக்குப் பிந்தைய பனிப்போர் டபுள்யூ. டபுள்யூ.இ.வை (வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டெர்டெயின்மென்ட்) விட அதிகமான விஷயங்களைக் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. நான் ஒன்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் திறந்த மார்புடன் குதிரையில் வருவதை இங்கு குறிப்பிடவில்லை, அதுதான் பொருத்தமான உதாரணம் என்றபோதிலும். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வெற்று மோதல்தானே தவிர, தாக்கம் தரும் கருத்துகளுக்கு இடையிலான மோதல் அல்ல.

பனிப்போருக்கு ஒரு தொடக்கம், ஒரு முடிவு உண்டு. பெர்லின் சுவர் வீழ்ந்ததுடன் பனிப்போருக்கு ஒரு இறுதித் திரையும் விழுந்தது. ஆனால், பனிப்போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைக்குத்தான் தற்போதைய போர்ச்சூழல் நம்மைக் கொண்டுவந்திருக்கிறது. தற்போது சீனாவுக்குச் செல்ல மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. அமெரிக்கத் தொழிலதிபர்கள் யாரும் பெய்ஜிங்குக்கு லேப்டாப்புடன் செல்வதில்லை. சமூக வலைதளமான லிங்கெடின்-ஐ விட அதிகமாக உங்கள் சுயவிவரங்களை சீன ஹேக்கர்கள் வைத்திருக்கிறார்கள்.

எல்லாமே கசப்பானவையாக மாறியது எப்போது? நேட்டோ படையை நாம் (அமெரிக்கா) விரிவாக்கம் செய்த போது ரஷ்யாவின் எல்லையை நோக்கி முதலில் சுட்டது நாம்தான். இத்தனைக்கும் அப்போது சோவியத் ஒன்றியம் என்ற ஒன்றே காணாமல் போய்விட்டிருந்தது. மாஸ்கோவுக்கு விடுக்கப்பட்ட செய்தி இதுதான்: நீங்கள் எந்த அமைப்பையும் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்களுக்கு எதிரிதான்! எண்ணெய் விலை சரிவு கட்டுப்படுத்தப் பட்டபோது அதை அவமானமாக உணர்ந்த ரஷ்ய அதிபர் புதின், இதற்குப் பழிவாங்கப்போவதாக அறிவித்தார். ஆனால், நேட்டோ படைகளின் அச்சுறுத்தல் இருப்பதாகக் காரணம்காட்டி ரஷ்ய சமூகத்தை ராணுவமயமாக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியிருக்கிறார். இப்படிச் சொல்லியே அவரும் அவரது ஆதரவாளர்களும் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, தங்களை எதிர்ப்பவர்களை மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட முடியும்.

லிபிய அதிபர் கடாஃபியின் ஆட்சியை நேட்டோ படையினர் கவிழ்த்தது, அரபுப் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் வீதிகளில் நடந்த போராட்டங்கள் ஆகியவை புதினை நிலைகுலைய வைத்துவிட்டன என்கிறார் பாரிஸில் தங்கியிருக்கும் ரஷ்யப் பொருளாதார நிபுணர் செர்ஜி குரீவ். “ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவை இழந்துவிட்டதைப் புதின் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேறு விஷயங்களை நாடத் தொடங்கினார். அவை, அதீத தேசியவாதம் மற்றும் அமெரிக்க எதிர்ப்புணர்வு” என்கிறார் செர்ஜி குரீவ்.

“ஊழல்களைக் கட்டுப்படுத்துவதிலும், நவீன பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும் உக்ரைன் வெற்றிபெற்றுவிடுமோ என்ற பயத்தை விட புதினுக்கு வேறு பயம் இல்லை. ஏனெனில், அப்படியான விஷயங்கள் எதுவும் புதினின் ரஷ்யாவில் இல்லை” என்கிறார். அதேசமயம், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான புதினின் பிரச்சாரங்கள் ரஷ்ய மக்களின் நரம்புகளில் ஏற்றப்படுகின்றன.

புதினைப் போல பதற்றத்துடன் சீனா நடந்துகொள்ள வில்லை. அந்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கச் சந்தையில் இன்னும் அதிக இடம்பிடிக்க வேண்டும் எனும் தேவை இருக்கிறது. அதேபோல், தெற்குச் சீன கடல்பகுதியில் தங்கள் உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் சீனத் தலைவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கிறார்கள். உண்மையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் ஆசிய நிபுணர் ஆண்ட்ரூ பிரவுன் எழுதியிருப்பதைப் போல், பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் ரஷ்யாதான் இருநாடுகளையும் ஒன்றிணைத்திருக்கிறது.

செல்வம் முக்கியம்!

சுருக்கமாக, அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த ஈர்ப்பும் அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடையின் மீதான எச்சரிக்கையும் தான், தற்போதைய - பனிப் போருக்குப் பிந்தைய சூழலில் மிக முக்கியமானது. அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரானைக் கொண்டுவருவதும் இதில் அடங்கும்.உலக நாடுகள் முன்பைவிட அதிகமாக ஒன்றை யொன்று சார்ந்திருக்கும் சூழலில் அமெரிக் காவின் பொருளாதார பலம் ரஷ்யாவையும் சீனாவையும் கட்டுப்படுத்தும் விஷயமாக இன்றும் இருக்கிறது.

உக்ரைனில் தனது ராணுவ நடவடிக்கைகளைப் புதின் மறைக்க விரும்பவில்லை. காரணம், அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று அவர் பயப்படுகிறார். தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனா அடக்கிவாசிக்கிறது. காரணம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யாமல் பொருளாதார ரீதியாக அந்நாட்டால் வளர முடியாது. அமெரிக்காவின் துப்பாக்கிகள் அல்ல விஷயம், வளம்தான் முக்கியம். எனவேதான், ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் சுதந்திரமான பொருளாதார ஒப்பந்தங்களை அமெரிக்கா விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அமெரிக்காவின் ஆரோக்கியமான பொருளாதாரம்தான் உலகின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அடிப்படையான ஆதாரம். ஒரு பெரிய கம்பை வைத்துக்கொண்டால்தான் எத்தனை தூரம் என்றாலும் நாம் சுகமாக நடந்துசெல்லலாம். கம்பு மட்டுமல்ல, கனத்த பணப் பையும் மிக முக்கியம்!

© ‘நியூயார்க் டைம்ஸ்’ தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்