மெட்ரோ ரயில்: பாடத்தை மறக்காதீர்கள்

By சாரு நிவேதிதா

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொதுமக்களின் வசதியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

இப்போதாவது வந்ததே என்றுதான் நாம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதியன்று தொடங்கப்பட்ட சென்னை ஆலந்தூருக்கும் கோயம்பேட்டுக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம், சரியாக 115 ஆண்டுகள் தாமதமாகத்தான் நமக்கு வந்துள்ளது. ஆம், பாரிஸ் நகருக்கு மெட்ரோ ரயில் வந்தது 1900-ம் ஆண்டு. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஒருசில மெட்ரோக்களில் பாரிஸும் ஒன்று. 214 கிலோ மீட்டர்களில் 303 ஸ்டேஷன்களை இணைக்கிறது பாரிஸ் மெட்ரோ. நான் பாரிஸ் செல்லும்போதெல்லாம் என்னுடைய தீராத சுவாரசியம் இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதுதான். பூமிக்குக் கீழே ஐந்து அடுக்குகளில் ரயில்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்தாவது அடுக்கில், ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் ரயில். மொத்தம் 700 ரயில்கள்.

சென்னையின் மக்கள் தொகையைவிட பாரிஸின் மக்கள் தொகை பாதிதான். சென்னை 44 லட்சம். பாரிஸ் 22 லட்சம். ஆனால், ஒரு நாளில் பாரிஸ் மெட்ரோவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 42 லட்சம்! இதுபற்றி என் பாரிஸ் நண்பர்கள் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு, ‘இந்த நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் மெட்ரோவில் பயணிக்கிறார்கள்’ என்று. புறநகரில் வசிக்கும் மக்களும் பெருமளவில் மெட்ரோவைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தக் கணக்கு. இதுபற்றி இன்னொரு நகைச்சுவையும் உண்டு. பாரிஸ் நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் பூமிக்குள் இருக்கிறார்கள்! காரணம், அங்கே மெட்ரோ ரயில்கள் அநேகமாக பூமிக்குள்தான் ஓடுகின்றன.

எல்லாமே பூமிக்குள்தான்

பொதுவாகவே, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பூமிக்கு உள்ளே உள்ள நிலப் பகுதியை மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்குமான தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவை எல்லாமே பூமியின் உள்பகுதி வழியாகத்தான் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்னமும் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான பாதாள சாக்கடைகூட நாடு முழுவதும் கட்டமைக்கப்படவில்லை. தஞ்சாவூர் நகரில் இன்னமும் மராட்டிய மன்னர்கள் கட்டிய திறந்த சாக்கடையைத்தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்த நகரின் அத்தனை மக்களுடைய மலஜலக் கழிவுகள் செல்வதைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட கொடூரமான காட்சி தெரியுமா?

அது போக, தமிழக நகரங்களில் மெட்ரோ வாட்டர், மின்சாரம், சாலை நிர்மாணம் ஆகிய மூன்று துறையினரும் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் மாற்றி மாற்றிச் செய்துகொண்டிருக்கும் ‘பணி’களைப் பற்றி ஆச்சரியப்படாத சராசரி மனிதனே கிடையாது. ஒரு வருடமாகச் சாலை போடப்படாமல் சரளைக் கற்களாகக் கிடக்கும் சாலையைப் போட்ட அடுத்த நாளே, மின்சார வாரியப் பணியாளர்கள் வந்து அந்தச் சாலையைத் தோண்டிக்கொண்டிருக்கும் காட்சியை என்னவென்று சொல்ல! இந்த நிலையில் அண்டர் கிரவுண்ட் மூலமே சமையல் எரிவாயு விநியோகத்தையும் செய்தால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக உள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பூமிக்கு மேலே மின்கம்பிகளையும் பார்க்க முடியவில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே பூமிக்கு மேலே ஒளியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நம் நாட்டுச் சாலைகளில் தாறுமாறாகப் பிய்ந்தபடி இருக்கும் மின்கம்பிகளை அந்த நாடுகளில் பார்க்கவே முடியவில்லை. எல்லாமே பூமிக்குக் கீழேதான். அதைப் போலவேதான் ரயில்களும் அங்கே பூமிக்குக் கீழே ஓடுகின்றன. நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நான்கு மணி நேரம் மட்டுமே ரயில்களுக்கு ஓய்வு.

பாரிஸ் மெட்ரோவின் ஆச்சரியம்

பாரிஸ் மெட்ரோ ரயில் திட்டத்தின் இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஸ்டேஷனுக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்குமான தூரம் 600 மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டர். அதாவது, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கு ஒரு ஸ்டேஷன் என்று சொல்லலாம். பொதுமக்களின் வசதிக்காகவே மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சவுகரியத்தை அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் எனக்குக் கடந்த திங்களன்று ஆலந்தூர் டு கோயம்பேடு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது ஞாபகம் வந்தது. இப்போதாவது வந்ததே என்ற சந்தோஷம் ஏற்படுகின்ற அதே வேளையில், இதுகுறித்த வேறு சில எண்ணங்களும் என்னை ஆட்கொண்டன.

தோல்விக்கான காரணங்கள்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் ரயில் சேவை மக்களுக்கு முழுமையாக உபயோகமில்லாமல் இருக்கிறது. ஒரே காரணம்தான். நகரிலேயே மிகவும் புறக்கணிக்கப்பட்ட இடங்கள் என்றால், அந்தப் பறக்கும் ரயில் நிலையங்கள்தான். உதாரணமாக, மந்தைவெளி, கலங்கரை விளக்க ரயில் நிலையங்கள். இந்த இடங்களில் ஒருவர் பகலில் செல்வதற்கே அஞ்சும் நிலைமை உள்ளது. ஆள் நடமாட்டமே கிடையாது. பிச்சைக்காரர்களும், குடிகாரர்களும், சமூக விரோதிகளும் பொழுதைப் போக்கும் இடங்களாகவே அவை உள்ளன. மாலை ஆறு மணிக்கு மேல் அங்கே செல்பவரை உயிருக்குத் துணிந்தவர் என்றே சொல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு மந்தைவெளி ரயில் நிலையத்தில் மாலை ஏழு மணி அளவில் சல்லாபித்துக்கொண்டிருந்த ஒரு காதல் ஜோடியைப் பிரித்து, அந்த இளைஞனைக் கொலை செய்தார் ஒரு நபர்.

பறக்கும் ரயில் திட்டத்தின் படுதோல்விக்கு இன்னொரு காரணம், அந்த ரயில் நிலையங்களுக்குச் செல்லவே ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி நடந்து சென்றுவிட்டால் ஆகாயத்தின் அருகே தெரியும் நடைமேடைக்கு எத்தனையோ படிகளை ஏறிக் கடக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவர்களால்தான் அது சாத்தியம். அப்படியே ஏறிப்போனால் மேலே குடிப்பதற்குத் தண்ணீரோ, தேநீரோ கிடைக்காது. ஓய்வறை, கழிவறை வசதிகளும் கிடையாது.

பாடம் கற்க வேண்டும்

115 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கும்போது இதையெல்லாம் ஏன் இங்கே பிரஸ்தாபிக்கிறேன் என்றால், இந்தத் தவறுகளிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பாடம் கற்றுக்கொண்டுவருகிறார்கள் என்றே தெரிகிறது.

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் இருந்தது; தண்ணீரும் கிடைத்தது. இந்தச் சேவைகள் தொடர வேண்டும். உலகின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டும் அல்ல; மூன்றாம் உலக நாடுகள்கூட இந்த விஷயத்தில் அவற்றோடு போட்டி போடுகின்றன. சிலி நாட்டின் சான்டியாகோ நகரின் மெட்ரோவில் நின்றால், பாரிஸ் மெட்ரோவுக்கும் அதற்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியாது. ஐந்து லைன்களில் 108 ஸ்டேஷன்களை இணைக்கிறது சான்டியாகோ மெட்ரோ ரயில் திட்டம்.

பாரிஸில் சிக்கனம்; சென்னையில்…

ஒரு முக்கியமான விஷயம், பாரிஸில் கார் வைத்திருப் பவர்கள்கூட காரில் செல்ல இஷ்டப்படுவதில்லை. காரில் செல்வதைவிட மெட்ரோவில் செல்வது வசதியாகவும், சிக்கனமாகவும் இருக்கிறது என்கிறார்கள் பாரிஸ்வாசிகள். அப்படிப்பட்ட நிலையைத்தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். ஆலந்தூரிலிருந்து கோயம்பேட்டுக்கு ஒருவழி டிக்கட் 40 ரூபாய். இது 25 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் என்று அரசு முடிவெடுத்துவிட்டால் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீட்டர் போடாமல் இருநூறு, முன்னூறு என்று கேட்கும் ஆட்டோவைவிட மெட்ரோ ரயில் பயணம் மலிவுதான்.

- சாரு நிவேதிதா, எழுத்தாளர்,

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்