வரலாற்றுச் சிறப்புமிக்க 999 ஆண்டு ஒப்பந்தம்

By ஆர்.செளந்தர், எஸ்.ஸ்ரீனிவாசகன்

முல்லை பெரியாறு அணை கட்டுவது என முடிவான பின்னர் இதற்கான திட்டம், அணையின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக் கவனித்து வந்தார். அணை கட்டுவதற்காக வேலையாட்கள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னதாகவே திட்டமிட்டார் அவர். அணைப் பகுதியில் நிலவும் காலநிலை, மழை அளவு, வெள்ளம் பாயும் வேகம் என இயற்கை நிகழ்வுகள் குறித்து தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக அணை அமைந்துள்ள இடம் கேரள மாநிலம் திருவிதாங்கூர் அரசுக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இங்கு அணையை கட்டி தண்ணீரை சென்னை மாகாணம் பயன்படுத்த வேண்டியிருந்ததால், அணை கட்டுவதற்கு முன்பே இது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உயர்நிலைக் குழு நியமனம்

பிரிட்டிஷ் அதிகாரிகள் திருவிதாங்கூர் மன்னரிடம் புதிய அணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை குறிப்பிட்டு அனுமதிக்கும்படி கேட்டனர். அனுமதித்தால் திருவிதாங்கூர் அரசுக்கு ஏதாவது வகையில் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய வனம், நிதி மற்றும் பொறியியல் அதிகாரிகள் கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை மன்னர் நியமித்தார். இந்தக் குழுவினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கேரளம் வழியாக செல்லும் தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பிவிடுவதால் கேரளத்தில் தண்ணீர் வரத்து குறையும். இதனால் வனப்பகுதிகளில் திருவிதாங்கூர் அரசு வெட்டும் தேக்கு மரங்களை தண்ணீர் மூலம் மிதக்க வைத்து அரபிக்கடலில் அமைக்கப்பட்டிருந்த ஆலவாய் துறைமுகத்துக்கு கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படும் எனக் கருதியது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் மாற்றுவழி குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த வர்த்தக வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிரிட்டிஷ் அரசு ரூ.6 லட்சம் மானியம் கொடுத்தால் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என மன்னர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மன்னரை தங்கள் வழிக்கு கொண்டுவர, வழக்கம் போலவே தங்களது ராஜதந்திரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டனர்.

அணை பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலத்துக்கு, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என ஆண்டுதோறும் குத்தகை தொகை பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த கோரிக்கையை ஏற்க மன்னர் முன்வந்தார்.

கையெழுத்தான ஒப்பந்தம்

தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திருவிதாங்கூர் அரசு ஒருவழியாக ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி பெரியாறு சுற்றியுள்ள 8000 ஏக்கர் நிலத்தை ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.5 வீதம் ரூ.40 ஆயிரம் குத்தகை தருவதாகவும் 999 ஆண்டுகளுக்கு (கி.பி.2885-ம் ஆண்டு வரை) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தில் பிரிட்டிஷ் அரசு சார்பாக லண்டனிலுள்ள இந்திய அமைச்சரவை செயலர் ஜான் சைல்டு கேனிங்டனும், திருவிதாங்கூர் அரசு சார்பில் திருவிதாங்கூர் திவான் வெங்கட்ராமராவும் கையெழுத்திட்டனர்.

மன்னருக்கு கிடைத்தது புதையலா?

முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடங்கிய பீர்மேடு- தேவிகுளம் தாலுகா கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் இருந்த பகுதி. இதன் பின்னரும் சேர நாட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பூஞ்சார் சமஸ்தானம் என்கிற பூனையாறு சமஸ்தானத்தின் ஆட்சியில் இப்பகுதி இருந்தது. முல்லை பெரியாறுக்கும், இதனைச் சார்ந்த வனப்பகுதிக்கும் உண்மையான உரிமையுடையவர் பூனையாற்று தம்பிரான். இந்த விவரம் அப்போது மதுரையை ஆண்ட ஆங்கில அரசுக்குத் தெரியவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது என தவறாகக் கருதி 155 அடிக்கு தண்ணீர் தேக்கினால் நீர் பிடிக்கக்கூடிய பகுதியான 8 ஆயிரத்து 591 ஏக்கருக்கு குத்தகை ஒப்பந்தம் போட திருவிதாங்கூர் மன்னரை அழைத்தது. தனக்கு சம்பந்தம் இல்லாத 8 ஆயிரத்து 591 ஏக்கரை தனது பகுதியாக அறிவித்து குத்தகை பணம் பல ஆயிரம் அளிக்க ஆங்கிலேய அரசு முன்வந்ததும் திருவிதாங்கூர் மன்னர் புதையல் கிடைத்ததுபோல மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை என்ற தகவலும் உள்ளது.

ஒப்பந்த சாராம்சம்

திருவிதாங்கூர் அரசு பிரிட்டிஷ் அரசுக்கு கட்டிவரும் கப்பத்தொகையில் இருந்து ஒப்பந்தத் தொகை ரூ.40 ஆயிரத்தை ஆண்டுதோறும் கழித்துக்கொண்டு மீதியை செலுத்த வேண்டும். ஏரிப்பகுதியில் மீன்பிடிப்பு, மரங்களை வெட்டுதல், போக்குவரத்துக்காக சாலை அமைத்தல், கல்குவாரி அமைத்து கல் எடுத்தல், தாதுப்பொருட்கள் எடுத்துக்கொள்ள சென்னை மாகாணத்துக்கு முழு அனுமதியும் வழங்கப்பட்டது. அணை கட்டும் செலவு முழுவதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்க வேண்டும். அணை பராமரிப்பு, பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கு திருவிதாங்கூர் அரசிடம் பணம் கேட்கக் கூடாது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 999 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒப்பந்த உடன்படிக்கையில் இரு அரசுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் 1882-ம் ஆண்டின் இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் அல்லது அதற்கு பின்னால் இயற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.





999 ஆண்டு முடிந்த பின்னர் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.

அப்பட்டமாக மீறும் கேரளம்

முல்லை பெரியாறு நீரினைப் பெற தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு என்றாலும் ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை கேரளம் தொடர்ந்து மீறி வருகிறது. அணையைப் பராமரிக்க அதிகாரிகளை உள்ளே நுழைய விடுவதில்லை. கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பொருட்களைகூட கொண்டு செல்ல அனுமதிப் பதில்லை. நீர்ப்பிடிப்பு பகுதியில் பல நூறு ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 152 அடிக்கு நீரை தேக்கினால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால் கேரளம் ஒப்பந்தத்தை பல்வேறு வழிகளில் மீறி வருகிறது.

முல்லை மலரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்