கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏதென்ஸில் கூடியிருந்தவர்களின் கைகளில் ஏராளமான பதாகைகள். ஏராளமான வாசகங்கள். ஒரு வயதான கிரேக்கர் தன் கைகளில் பிடித்திருந்த பதாகை வரலாற்றுக்கும் சமகால பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது: “நாங்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொடுத்தோம். இன்றைக்கு நாங்கள் வீழ்ந்துவிடாமல் நிற்க கேவலம் இந்தக் கடன் விஷயத்தில் ஐரோப்பா கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?”
சத்தியமான வார்த்தைகள்! ஆனால், காசே எல்லாமுமான இன்றைய உலகத்தில் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் மதிப்பிருக்கிறதா? அதேசமயம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் தன்னுடையதாக சுவிகரித்துக்கொள்ளக் கூடியது. கிரேக்கத்தைத் தங்களுடைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியவைத்த பிறகு, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே அந்த கிரேக்க முதியவரின் வார்த்தைகளைத் தனதாக்கிக்கொண்டார்: “ஐரோப்பிய நாகரிகத்தின் இதயமாகவும் நம் கலாச்சாரத்தின் பகுதியாகவும் வாழ்க்கைமுறையின் அம்சமாகவும் இருக்கும் கிரேக்கத்தை எங்கே நாம் இழந்துவிடுவோமோ என்று நான் பயந்தேன்.”
கிரேக்கம் பண்டைய காலத்தில் ஐரோப்பாவுக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவையும் தாண்டியும் அது கற்றுக்கொடுக்கும் பெரிய பாடம் அதன் சமகால அனுபவம். குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளுக்கு. நம் இந்தியாவுக்கு!
தேசம் திவாலாகிவிடும் எனும் நிலைக்கு கிரேக்கம் வந்து நிற்கக் காரணம் என்ன? சர்வதேச ஊடகங்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்தி கிரேக்கம் இதுவரை வாங்கியிருக்கும் ரூ.16.8 லட்சம் கோடி கடன். அதில் இந்த ஜூன் 30-க்குள் திருப்பித் தந்திருக்க வேண்டிய தவணை ரூ.10,500 கோடியை கிரேக்க அரசால் தர முடியாமல் போனது. சரி, ரூ. 10,500 கோடியைத் திருப்பித் தர முடியாத ஒரு நாட்டுக்கு, அதே கடன்காரர்கள் எப்படி மீண்டும் ரூ. 5.90 லட்சம் கோடியைக் கடனாகத் தருகிறார்கள்?
உலகம் கடன் பொருளாதாரம் எனும் கொள்கையை உள்வாங்கிக்கொண்டு நீண்ட காலம் ஆயிற்று. ஆக, கடன் என்பது இங்கே வெளியே சொல்லப்படும் காரணம். உண்மையான காரணம் என்ன? அது நாம் பேச வேண்டியது.
ஐரோப்பாவில் கி.பி.1500-களுக்குப் பின் தோன்றிய பொருளாதாரக் கோட்பாடுகளில் முக்கியமானது, வணிக அடிப்படைவாதம் (Mercantalism). இன்றைய முதலாளித்துவம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எல்லாவற்றுக்கும் மூலக்கோட்பாடு என்று இதைச் சொல்லலாம். எது ஒன்றையும் லாப நோக்கில் அணுகச் சொல்லும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை, ஒரு நாட்டின் பலமும் வளமும் அதன் செல்வ வளங்களே என்பது. அந்தச் செல்வ வளத்தைத் தக்கவைக்க ஏற்றுமதியை அதிகமாகவும் இறக்குமதியைக் குறைவாகவும் பேணும் வகையில் பொருளாதாரத்தைப் பராமரிப்பது. இந்தப் பொருளாதார ஆதிக்க நிலையைப் பராமரிப்பதற்கு ஏதுவாக காலனி நாடுகளை உருவாக்குவது.
நவீன யுகத்தில், வல்லரசுகள் தங்களுடைய பொருளாதாரச் சூறையாடல்களுக்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டிக்கொண்டாலும், அவற்றின் அடிப்படை இயக்கம் இன்னும் வணிக அடிப்படைவாதத்திலேயே நிலைகொண்டிருப்பதற்கும் அவற்றின் நவகாலனியாதிக்க முறைக்கும் அப்பட்டமான உதாரணம் ஆகியிருக்கிறது கிரேக்கம்.
கிரேக்கம் 1975-ல் மக்களாட்சியைத் தேர்ந்தெடுத்தபோதே, - ஏனைய வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் - பொருளாதாரரீதியாகப் பலவீனமாகத்தான் இருந்தது. எனினும், அன்றைக்கு அதன் பொருளாதாரம் சுயசார்புடன் இருந்தது. நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயம் சிறு விவசாயிகளின் கைகளில், குடும்பத் தொழிலாக, கூட்டுறவு அமைப்புடன் கை கோத்ததாக இருந்தது. 1980-ல் ‘நேட்டோ’ அமைப்பில் கிரேக்கம் இணைந்தது. 1981-ல் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் இணைந்தது. அடுத்த மூன்று தசாப்தங்களில் அதன் பொருளாதாரம் இவ்வளவு நொறுங்குவதற்கு அடிப்படையான காரணம் அதன் தற்சார்பு அழித்தொழிக்கப்பட்டது. உற்பத்திசார் பொருளாதாரம் அடித்து நொறுக்கப்பட்டு, சந்தைசார் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட்டது. விளைவு, இன்றைக்கு கிரேக்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16%, சேவைத் துறையின் பங்களிப்போ 81%. வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 3.4%. சுற்றுலாத் துறையின் பங்களிப்போ 18%.
கிரேக்கத்துக்கு அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைப் போல 175% அளவுக்குக் கடன்கள் இருப்பது உலகத்துக்குத் தெரியும். இதில் அதிகபட்ச கடன் கொடுத்திருக்கும் நாடு ஜெர்மனி என்பதும் உலகத்துக்குத் தெரியும். அந்தக் கடன்களில் ஜெர்மனியிடமே திரும்பச் சென்ற தொகை எவ்வளவு? ஒரு சின்ன உதாரணம், ஜெர்மனியின் ஆயுத ஏற்றுமதியில் 15% கிரேக்கத்துக்குதான் செல்கின்றன.
கிரேக்கத்தின் மோசமான செலவுகளில் ஒன்று அதன் அதீத ஆயுத நுகர்வு. ஒரு ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டால், கிரேக்கத்திடம் இருக்கும் பீரங்கிகளின் எண்ணிக்கை 1300. இது இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் அதிகம். ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்தில் இணைந்த பின் - 1980-களில் - தன்னுடைய ஒட்ட்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6.2% ஆயுதங்கள் வாங்குவதற்காகச் செலவிட்டது. இவ்வளவு மோசமான நிலையிலிருக்கும் சூழலிலும்கூட ஆயுதங்கள் வாங்க 2.4% செலவிட்டிருக்கிறது. கிரேக்கம் செலவிட்ட இந்தப் பணமெல்லாம் யார் யாரிடம் போனது? கிரேக்கர்கள் இதைப் பற்றிதான் உலகம் பேச வேண்டும் என்கிறார்கள்.
ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றே கிரேக்க மக்கள் இந்த முறை இடதுசாரி கட்சியான சிரிஸா கட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நடத்திய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிலும் இதையே பெரும்பான்மை கிரேக்க மக்கள் உறுதிசெய்தனர் (தேர்தலில் சிரிஸா கட்சிக்குக் கிடைத்த வாக்குவீதத்தைவிடவும் இப்போது கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குவீதம் அதிகம் என்பது இங்கே கவனிக்க வேண்டியது). அலெக்சிஸ் சிப்ராஸுக்குக் கிடைத்த வாய்ப்பு, இதேபோல, பல தசாப்தங்களாய் ஏகாதிபத்திய சக்திகளால், கடன்களின் பெயரால் காலனியாக்கப்பட்ட ஈகுவெடாரின் தலைவிதியை மாற்றியமைத்த ரஃபேல் உருவாக்கிய வாய்ப்புக்கு இணையானது. “எங்கள் நாட்டைவிடவும், மக்கள் நலனைவிடவும் வேறு எதுவும் எங்களுக்கு முக்கியம் இல்லை” என்று அதிரடி நடவடிக்கைகளை நோக்கி சிப்ராஸ் திரும்பியிருக்க வேண்டும். ஊழல் மற்று வரிஏய்ப்பு மூலம் நாட்டைச் சூறையாடிய அரசியல் - அதிகாரவர்க்கம், பெரும்பணக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாற்று பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரால் முடியவில்லை.
ஒரு நாட்டை ஆளும் பிரதான கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதில்லை என்று முடிவெடுக்கிறது, அதையே நாடாளுமன்றமும் எதிரொலிக்கிறது, நாட்டின் ஆகப் பெரும்பாலான மக்களும் அதையே வழிமொழிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு தேசமே கூடி எடுத்த முடிவு. எனினும், பிரதமரால் செயல்படுத்த முடியவில்லை. வெளிசக்திகளின் முடிவே இறுதியில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்றால், உண்மையில் அந்த நாட்டை ஆள்பவர்கள் யார்? “பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் இவை மூன்றின் பிரதிநிதிகளே கிரேக்கத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்கள். ஏதென்ஸில் அவற்றின் அதிகாரிகள் எப்போதும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் அவ்வப்போது மாறும்; குறிக்கோள்கள் ஒன்றே” என்கிறார்கள் கிரேக்கர்கள்.
இந்தியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம் இது. நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் இன்றைக்கு யாரால் வடிவமைக்கப்படுகின்றன? மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியாவில் தொடங்கி ரகுராம் ராஜன், அர்விந்த் பனகாரியா, அர்விந்த் சுப்ரமணியன் வரை யார்? எல்லாம் உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள்.
இன்றைக்கு, கிரேக்கம் அதன் வீழ்ச்சியிலிருந்து மேலே வர ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் நிர்பந்தித்திருக்கும் பரிந்துரைகள்/ கட்டுப்பாடுகள் என்ன? “ கல்வி - சுகாதாரம் மக்களுக்கான நலத்திட்டப் பணிகள், மானியங்கள் போன்ற குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகள், நாட்டின் தொழில்கள் / வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறுப்புகளிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்; முற்றிலுமாக தனியார்மயமாக்கலை நோக்கி நகர வேண்டும்.” இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது கிரேக்கம். இதையேதானே வெவ்வேறு வார்த்தைகளில் நாமும் நம்முடைய ‘பொருளாதார மேதைகள்’ வாயிலிருந்து கேட்கிறோம்?
கிரேக்கத்தின் மீது இப்போது திணிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை, “உலகப் போருக்குப் பின் ஜெர்மனிக்கு உலக நாடுகள் இழப்பீடு விதித்த ஒப்பந்தத்தைப் போலக் கொடூரமானது” என்று கூறியிருக்கிறார் பதவிநீக்கப்பட்ட கிரேக்க நிதியமைச்சர் யானீஸ். “புதிய காலனியாதிக்கத்தை எதிர்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார் பதவி விலகிய எரிசக்தித் துறை அமைச்சர் லஃபாஸனிஸ்.
புதிய காலனியாதிக்கத்துக்குப் பல முகங்கள் உண்டு. தாம் எதிர்கொள்ளும் முகத்தின் அடையாளத்தை இந்தியர்கள் கண்டுணர வேண்டும்!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago