அறிவோம் நம் மொழியை: சக்கைப் போடு போடும் மழை

By ஆசை

மழையை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை சார்ந்து எதிர்கொள்கிறார்கள். கவிஞர்கள் என்றால், ‘மழை கவிதை கொண்டு வரும்போது குடை பிடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுப்பார்கள். விவசாயிகளுக்கோ மழை ‘பேஞ்சும் கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும்’. இவர்களுக்கிடையே, நடுநிலை நோக்கோடு மழையை அணுகுபவர் நம் ரமணன் மட்டும்தான். மழைக் காலங்களில் யார் காட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ, ரமணன் காட்டில் ‘மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்.’

மழை பெய்வதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை சார்ந்து எப்படியெல்லாம் விவரிப்பார்கள் என்ற கற்பனைச் சித்திரத்தை வாசகர் கோ. மன்றவாணன் நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்:

சிறு தூறல்தானே என்று நான் என் வண்டியை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். கொஞ்ச நேரத்தில் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. கரும்புச் சாறு கடையருகே ஒதுங்கினேன். கரும்புக் கடைக்காரர் “மழை சக்கைப்போடு போடுது” என்றார். கொஞ்ச நேரத்தில் மழை விடவே அங்கிருந்து புறப்பட்டேன். மீண்டும் மழை. பக்கத்தில் இருந்த டீக்கடை அருகே வண்டியை நிறுத்திவிட்டு மழைக்கு இதமாக இருக்கட்டுமே என்று ஒரு டீ சொன்னேன். டீக்கடைக்காரர், “வக்கீலய்யா, மழை என்னா இந்த ஆத்து ஆத்துது?” என்று என்னிடம் கேட்டார். மழை குறைந்து சின்னச் சின்னத் தூறல் போடவே… சரி, அங்கங்கே நின்றுநின்று போய்விடலாம் என்று கிளம்பினேன். கொஞ்ச தூரம் போனவுடன் மீண்டும் கனமழை. இந்த முறை ஒதுங்கியது சலவை நிலையத்தின் வாசலில். அந்தக் கடைக்காரர் சொன்னார், “மழை வெளுத்து வாங்குது.” மழை இவர்களுக்குத்தான் பிரச்சினை. அருகே நடைபாதையில் இருந்த குடை வியாபாரிக்கோ வியாபாரம் ஜோராக நடப்பதில் மகிழ்ச்சி! “மழை ஜோராப் பெய்யுது” என்று மழையைப் பாராட்டினார்.

கொஞ்சம் வானம் திறந்து வெயில் அடிக்கிற மாதிரி இருந்தது. வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றேன். அட… மீண்டும் அடைமழை! கிருஷ்ணாலயா திரையரங்க முகப்பில் நின்றேன். அங்கே காஞ்சனா-2 என்ற திரைப்படப் பதாகையின் கீழ் நின்றபடி ஒருவா், “பேய்மழை பேயுது” என்று நடுங்கினார். (கவனிக்கவும் பெய்யுது இல்லை பேயுது.) இப்படியே நின்றுநின்று போனபோது ஒதுங்கிய இடங்களில் தவில் வித்வான் தண்டபாணிப் பிள்ளையின் வீட்டுவாசலும் ஒன்று. விபூதிப் பட்டை, சந்தனம், குங்குமம் சகிதம் திண்ணையில் அமர்ந்திருந்த தவில் வித்வான், என்னைப் பார்த்து, “மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுதே” என்றார் பாலையா பாணியில்.

அடுத்த மழை நிறுத்தம் காவல் நிலைய வாசல். அங்கு நின்றிருந்த போலீஸ்காரர், இறங்கிய பெல்ட்டை ஏற்றி, தொப்பையை ஆசையாகத் தொட்டுப்பார்த்தபடி சொன்னார், “மழை மாமூலாத்தான் பெய்யுது.” அருகே இருந்த பழச்சாறுக் கடைக்காரரோ என்னைப் பார்த்து, “என்ன சார், மழை பிழிஞ்சித் தள்ளுது” என்று சொன்னார்.

மழை கொஞ்சம் விட்டது. வேகமாக வண்டியை ஓட்டினேன். அதைவிட வேகமாக மழை எதிர்கொண்டது. வேறு வழியின்றி ஒரு குடிசை வீட்டருகே நிறுத்தினேன். அங்கிருந்த அம்மா, “மழை பொத்துக்கிட்டு ஊத்துது” என்று வருத்தப்பட்டார். இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சமாளித்துவிட்டுக் கடைசியாக என் வீட்டுக்குப் போனேன். எப்போதும் திட்டு திட்டுன்னு என்னைத் திட்டிக்கொண்டிருக்கும் என் மனைவி, “என்னங்க, மழை திட்டுத் திட்டாப் பெய்யுது” என்றார். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அது இதுதானோ?!

சொல்தேடல்

‘அலிபை’என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லுக்கு வாசகர்களின் பரிந்துரைகளில் சில:

சந்திரா மனோகரன்: அயலிடச் சான்று, வேற்றிடச் சான்று, வேற்றிட சாட்சியம்.

கோ. மன்றவாணன்: நிகழ்விடத்து இன்மை

ஆர். கல்யாணகிருஷ்ணன்: வேற்றிட இருப்பு வாதம்.

இவற்றில் ‘வேற்றிடச் சான்று’ என்ற சொல் ஓரளவுக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

சொல் தேடலுக்கான அடுத்த கேள்வி:

தமிழின் சொல்வளத்துக்கு ஈழத் தமிழரின் கொடைகளுள் ஒன்று ‘கடவுச்சீட்டு’(பாஸ்போர்ட்). அதேபோல் ‘விசா’(Visa) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஏதேனும் சொல் உருவாக்கப்பட்டிருக்கிறதா?

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்