அக்கம் பக்கம் பார்க்காதே... அந்த நாளை மறக்காதே!

By ராணிப்பேட்டை ரங்கன்

“அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே” என்று ‘நீதிக்குப் பின் பாசம்’ திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு எம்.ஜி.ஆர். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததைப் பார்த்தது முதல் எனக்குள் அடக்க முடியாத ஆசை; சரோஜா தேவிக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றா? இல்லை - அப்படத்தை நான் பார்த்தபோது ‘(எருமைப்) பால் மணம் மாறாத’ பாலகன். சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை, கனவாகவும் லட்சியமாகவும் வெறியாகவும் ஏக்கமாகவும் பின்னாளில் என்னை ஆட்டிப்படைத்தது.

அம்மாவிடம் அனுமதி

சைக்கிள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை ‘அம்மா’விடம் - பெற்ற அம்மாவிடம்தான் - கூறினேன். “கீழே விழுந்து அடிபடும், கை-கால் உடையும்” என்று கண்ணாம்பாள் போலத் தடுத்தார். அடி அண்ணாமலை, ஈசான்யம், ரமணாஸ்ரமம் போன்ற அப்போதைய திருவண்ணாமலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மட்டும்தான் ஓட்டுவேன் என்று ‘உம்ராவ்’ ஸ்டவ் எதிரில், ‘தாற்காலிக சத்யம்’ செய்து அனுமதி வாங்கினேன். ‘யாராவது எதிரில் வந்தால் இறங்கித் தள்ளிக்கொண்டு போக வேண்டும்’ என்று ‘விபத்தில்லா சைக்கிள் பயணத்துக்கான’ ‘முதல் உத்தி’யையும் சொல்லிக்கொடுத்து அம்மா ஆசிர்வதித்தார். (அப்பா பத்திரப் பதிவுத்துறையில் வேலை செய்ததால், ஹரியாணா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்காவைப் போல அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிவிடுவார்.)

ஒரு ‘அவரு’க்கு (Hour) 4 அணாவா? என்று ஆயாசத்துடன் கேட்டு அம்மா காசு கொடுத்தார். அந்தக் காசை எடுத்துக்கொண்டு ‘அன்பு’ என்று பெயரிடப்பட்ட ‘அவர்’ சைக்கிள் கடைக்குச் சென்று சைக்கிள் கேட்டேன். திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த காலம். அப்போது டீக்கடை, சைக்கிள் ஷாப், மணல் லாரி, தியேட்டர் எல்லாவற்றுக்கும் ‘அன்பு’ என்று (குழந்தைகளுக்கும்தான்) பெயரிடுவது வழக்கம்.

அந்தக்கால சைக்கிள் கடைகளில் நீளமான நோட்டுப் புத்தகமும், ‘ஹெஸ்’ அலாரம் ‘டைம் பீஸும்’ இருந்தாக வேண்டிய ‘செட் பிராப்பர்டீஸ்’. சைக்கிள்களில் கேரியர் வைக்க மாட்டார்கள். பின்புற ‘மட்-கார்டில்’ வெள்ளை பெயிண்ட் அடித்து, கடையின் பெயரை சிவப்பாக எழுதி நம்பரும் போட்டிருப்பார்கள், லுப்தான்ஸா ஃப்ளைட்டுக்கு நம்பர் போடுவதைப் போல!

ஆடவர்களின் அனாடமி

சைக்கிள் கடைக்காரர்கள் டிராயரா, அண்டர்வேரா என்று இனம் காண முடியாத ஒன்றை அணிந்து, அதன் மீது வேட்டியைச் சுற்றிக்கட்டியிருப்பார்கள். ஆடவர்களின் அனாடமியைப் படிக்க முடிகிற இடம். நல்ல ‘புரொஃபஷனல்’ சைக்கிள் கடைக்காரராக இருந்தால், காக்கி டிராயர் அணிந்திருப்பார். பெரிய அகலமான அலுமினிய பேசினில் அழுக்குத் தண்ணீரும், காற்றடிக்க பித்தளை அல்லது எவர்சில்வர் பம்பும் (பம்பின் கீழ்ப்பகுதியில் சிவப்பு பெயிண்ட்) கட்டாயம் இருக்கும்.

வாடகைக்கு சைக்கிள் எடுக்கும்போது ‘மெதுவாக’ நகரும் காலம், 2 ரவுண்டு வருவதற்குள் ‘வேகமாக’ ஓடியிருக்கும். சின்னப் பையன்களான நாங்கள் ‘வாட்ச்’ இல்லாததால், ‘டைம் என்னா’ என்று கேட்பதற்கே சைக்கிள் கடைக்கு ஓரிரு முறை சென்று அந்த நேரத்தையும் குறைத்துக்கொள்வோம். காதலியோடும் ‘அவர்’ சைக்கிளோடும் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது!

‘அன்பு'ம் எரிச்சலும்

நிற்க, ‘அன்பு’கடையில் நான் போய் சைக்கிள் கேட்டதும் பெரிய சைக்கிளைக் காட்டி எடுத்துக்கொள்ளச் சொன்ன உரிமையாளர், ‘‘எங்கே வீடு?’' என்று கேட்டார். ‘‘சன்னதித் தெரு’' என்றதும் ‘‘சரி’'என்றார். சிறிதுநேரம் பேசாமல் நின்றேன். ‘‘ஏன் நிற்கிறாய்?’' என்றார். “சைக்கிள் ஓட்டத் தெரியாது, கற்றுக்கொள்ள வேண்டும், சின்ன சைக்கிள் இல்லையா?” என்று கேட்டேன். ‘அன்பு’ எரிச்சலாக மாறியது. அடிக்காத குறையாக விரட்டிவிட்டார்.

ரகசிய உடன்பாடு

முயற்சியில் தோற்று வீட்டுக்குப் போவதைவிட ‘ரேடியோ கிரவுண்டு’ போனால் ‘த்ரீ டைகர்ஸ்’ வாலிபாலாவது பார்க்கலாம் என்று திரும்பினால், இன்ப அதிர்ச்சி! சின்ன சைக்கிளோடு என் நண்பன் சுந்தர். வகுப்புத் தோழனும் எங்கள் தெருவிலேயே குடியிருக்கும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையுமான சுந்தர் என்னை, ‘நேருவை அரவணைத்த சூ என்லாய்' போல அழைத்துச் சென்றான்.

அவனுடைய சைக்கிள் சின்னதும் இல்லை, பெரியதும் இல்லை. நடுத்தரமானது. கற்றுக்கொள்ள ஏற்றது. அவனிடம் மெதுவாக என் ஆசையைச் சொன்னேன். “இது ஓட்டற சைக்கிள், கத்துக்கொடுக்கிற சைக்கிள் இல்ல, எங்க அப்பா பாத்தா திட்டுவாரு” என்றான். ‘சுமைதாங்கி’ படத்தில் ஜெமினி கணேசனுக்கு வருவதைப் போல நமக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்த சோக சீன்கள் என்று நொந்தவாறே அவன் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். அவனே மீண்டும் கூப்பிட்டு, “சயின்ஸு, இஸ்ட்ரி, ஜாக்ரபி கேள்வி பதிலெல்லாம் என் நோட்டில் எழுதித் தருவதாக இருந்தால், வீட்டுக்குத் தெரியாமல் சைக்கிள் கற்றுத்தருகிறேன்” என்று ரகசிய உடன்பாட்டை விவரித்தான்.

திருவண்ணாமலையில் விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்

‘‘சைக்கிள் கத்துக்க எத்தனை நாளாகும்?’’ என்று கேட்டேன். உடன்பாடு என்றால் இருதரப்பும் எல்லாவற்றையும் பேசியாக வேண்டாமா! “நல்லா கத்துக்கிட்டா 3 நாள் போதும்’’ என்றான். அந்த ஒரு ஷரத்தைச் சரியாகக் கவனிக்காமல் ஏமாந்தேன். ‘‘நல்லா கத்துக்கொடுக்காட்டி…’’ என்று எதிர் ஷரத்து போடாமல் உடன்பாட்டை ஏற்றேன்.

அவன் கேட்டபடி சில சப்ஜெக்ட்டுகளில் 7 அல்லது 8 பாடங்களுக்கான முழுக் கேள்வி பதில்களை நோட்டுகளில் எழுதிக்கெடுத்தேன்! பாடங்களை எழுதி முடிக்கவே 5 நாட்கள் ஆனது. பிறகு, ஒரு நல்ல ‘ராகு காலத்தில்’(ஞாயிறு மாலை 4.30-6) வேட்டவலம் ரோடுக்குக் கூட்டிச் சென்றான். அப்போது ‘மனோன்மணி’என்று ஒரு விழுப்புரம் பஸ் மட்டும் அந்தப் பக்கம் வரும். அதன் பம்பரில் ‘மெயில்’என்று எழுதியிருக்கும். அந்த இடத்தை ‘விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்’ என்பார்கள். அந்தக் காலத்திலேயே சென்னையைவிட திருவண்ணா மலையில்தான் பஸ் ஸ்டாண்டுகள் அதிகம்! செங்கம், வேலூர், விழுப்புரம், பெங்களூர் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பஸ் ஸ்டாண்ட்!

குரு கற்றுத்தராத வித்தை

அங்கு போனதும் அவன் கேரியரில் உட்கார்ந்துகொண்டு ஹேண்டில் பாரைப் பிடித்துக்கொள்வான், நான் பெடல் போட வேண்டும். 3 ஞாயிறுகளில் தொடர்ந்து மிதித்தேன். நாலாவது வாரம் கையை எடுத்துக்கொள்ளச் சொல்லி ஹேண்டில் பாரையும் பிடித்தேன். என்னுடைய ஆர்வம் அவன் மனதை இளகச் செய்தது. நன்றாகவே ஓட்டக் கற்றுக்கொடுத்தான். குரு எல்லா வித்தையையும் கற்றுத்தந்துவிடுவாரா? சைக்கிளில் எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லித்தரவில்லை. மைல்கல், வீட்டு வாசல்படி, குப்பைமேடு என்று இடதுபுறம் சற்று உயரமான இடத்துக்கருகே சைக்கிளை நிறுத்தி, ஏறி உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிப்பேன். ஒரு நாள் சன்னதித்தெருவிலேயே ஓட்டினேன். குடித்தனக்காரப் பெண் என் அம்மாவிடம் சென்று, ‘உத்தர குமாரனின்’ வெற்றியைப் போல அதைச் சொல்ல, என்னுடைய அம்மா வாசலுக்கே வந்து நான் சைக்கிள் ஓட்டும் சாகசத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

துரோணரை மறக்காத ஏகலைவன்

பவித்ரம் என்ற ஊருக்குப் போகும் (வெள்ளை வெளேர்) டவுன் பஸ் எதிரில் வந்தபோதும் இறங்காமல் நான் ஒதுக்கி ஓட்டியதால் என் திறமை மீது அம்மாவுக்கு இருந்த சந்தேகம் நீங்கியது. அதற்குப் பிறகு கண்ணமங்கலம், குடியாத்தம், வேலூர், சேலம், ஏற்காடு, நாமகிரிப்பேட்டை, பெத்தநாயக்கன் பாளையம், மதுரை, வந்தவாசி, வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை (அவதார ஸ்தலம்), ஆர்க்காடு, காங்கேயநல்லூர், மதுரை, சென்னை என்று பல ஊர்களில் சைக்கிள் ஓட்டினேன், இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்த துரோணரை மறப்பதே இல்லை.

குரு எல்லா வித்தையையும் கற்றுத்தந்துவிடுவாரா? சைக்கிளில் எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லித்தரவில்லை. மைல்கல், வீட்டு வாசல்படி, குப்பைமேடு என்று இடதுபுறம் சற்று உயரமான இடத்துக்கருகே சைக்கிளை நிறுத்தி, ஏறி உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிப்பேன். என்னுடைய அம்மா வாசலுக்கே வந்து நான் சைக்கிள் ஓட்டும் சாகசத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்