வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம்: எம்ஜிஆரின் குற்றச்சாட்டு

By குள.சண்முகசுந்தரம், வி.சாரதா

வீராணத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீர் எடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள், மறுபுறம் வீராணம் தண்ணீருக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். லிட்டருக்கு ஒரு பைசாவில் ஆரம்பித்த ராயல்டி கோரிக்கை, இப்போது ஐந்து பைசாவில் வந்து நிற்கிறது.

இந்தக் கோரிக்கைக்காகவும் விவசாயிகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்த வீர. இளங்கீரன், ‘‘வீராணம் தண்ணீரை விநியோகித்து சென்னை மக்களிடமிருந்து தண்ணீர் வரியாக கோடிக் கணக்கில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் வருவாய் ஈட்டுகிறது. அதில் ஒரு பகுதியைத்தான் ராயல்டியாக கேட்கிறோம். ராயல்டி கிடைத்தால் ஏரியைத் தூர்வாரலாம், வீராணம் பாசன விவசாயிகளுக்கு கூடுதலாக பயிர்க் கடன்களை வழங்கலாம்.

கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கையை ரவிக்குமார் எம்எல்ஏ முன்வைத்தபோது, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், ‘வீராணம் தண்ணீருக்கு ராயல்டி கொடுத்தால், காவிரித் தண்ணீருக்காக கர்நாடகாவுக்கும் ராயல்டி கொடுக்க வேண்டி வருமே’ என்று மழுப்பலாக பதிலளித்து சமாளித்தார்” என்றார் இளங்கீரன்.

37 ஆண்டுகளாக பந்தாடப்பட்ட திட்டம்

1967-ல் தமிழக முதல்வராக அண்ணா இருந்தபோதே வீராணம் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், 37 ஆண்டுகள் அரசியல் பந்தாட்டத்தில் சிக்கி, 2004-ல்தான் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.

எம்ஜிஆரின் குற்றச்சாட்டு

1970-ல் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வீராணம் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்காக செக்கோஸ்லேவியா நாட்டில் இருந்து பிரத்யேக குழாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1972-ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திமுக அரசைக் கலைத்ததுடன், அந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா ஆணையத்தையும் நியமித்தார்.

இதன்காரணமாக, வீராணம் ஏரியிலிருந்து குழாய் அமைக்கும் பணி 25 சதவீதம் முடிந்திருந்த நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ரூ. 6 கோடி நிர்வாகப் பிழை- சர்க்காரியா அறிக்கை

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த சர்க்காரியா ஆணையம், ‘‘கருணாநிதி தனது முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சத்ய நாராயணா பிரதர்ஸ் என்ற ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தத்தைக் கொடுக்க வேண்டுமென கருணாநிதிக்கு விருப்பம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அது ஒரு மிகப் பெரும் நிர்வாகப் பிழை. ரூ. 6 கோடி பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இப்பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தம் தாளாமல், ஒப்பந்ததாரர் சத்ய நாராயணா தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், 1993-ல் முதல்வர் ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் வீராணம் திட்டக் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு “புதிய வீராணம் திட்டம்” வகுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காகவும் சென்னையின் குடிநீர் விநியோக வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 1,638.04 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு, அதில் ரூ. 1,073 கோடி உலக வங்கியிடமிருந்து கடனாகக் கோரப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த திமுக அரசு, தெலுகு கங்கைத் திட்டம் அமலுக்கு வரவுள்ளதைக் குறிப்பிட்டு, 1997-ம் ஆண்டில் கடன் ஒப்பந்தத்தை திருத்தியது. இதுகுறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் “கடன் ஒப்புதல் தரப்பட்டு 6 மாத காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. புதிய அரசு, வீராணம் திட்டத்துக்குப் பதிலாக கிருஷ்ணா திட்டத்துக்கு முன்னுரிமை அளித்தது. எனவே, இந்திய அரசின் மூலம் வீராணம் திட்டத்துக்கான கடன் தொகையை ரத்து செய்து, சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த நிதி கோரப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த தேர்தல்களில் இது மைய விவாதப் பொருளானது.

18 மாதங்களில் முடிக்கப்பட்ட திட்டம்

தனது முதல் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்துக்காக தனது அடுத்த ஆட்சிக் காலத்தில் ரூ. 740 கோடி நிதி ஒதுக்கி, மீண்டும் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா. திட்டப் பணிகள் 2002, நவம்பர் மாதத்தில் தொடங்கின.

2003 - 2004 ஆண்டில் சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. அந்த ஆண்டு வந்திருக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரும் வந்து சேரவில்லை. எனவே, தமிழக அரசு புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தது. பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, பதினெட்டே மாதங்களில் அதாவது, 2004-ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடைந்தன.

அண்ணா ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீராணம் திட்டம், 37 ஆண்டுகள் அரசியல் பந்தாட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதாவின் 2-வது ஆட்சியில் அமலுக்கு வந்தது.

திருத்தம்

நேற்றைய நாளிதழில், ‘20-09-2014 அன்று சென்னையை நோக்கிய தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது வீராணம் ஏரித் தண்ணீர். 04-10-2014 அன்று முதல் நாளொன்றுக்கு 48 கன அடி வீதம் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்போது, தண்ணீர் திறப்பு 77 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று வெளியான தகவல்கள் சரியல்ல.

சோதனை ஓட்டம் 20-09-2004 அன்று தொடங்கியது என்பதும், 04-10-2004 அன்று ஏரியிலிருந்து வினாடிக்கு 48 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது என்பதும், தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 77 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதுமே சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்