உண்மையான எதிர்த் தரப்பு எப்படி இருக்க வேண்டும்?

By ஷிவ் விஸ்வநாதன்

நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். நிறைவாழ்வை வாழ்ந்தவர்கள் என்றாலும் இந்த உலகைப் புரிந்துகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருப்பவர்கள். பிரமாதமான ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், தொழில்முறைப் பணியாளர்கள் போன்றோர் இவர்களில் அடங்குவார்கள். தாங்களெல்லாம் மிகுந்த செயலூக்கம் கொண்டிருந்தாலும்கூட, உலகம் தங்களைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் இவர்கள். இவர்களில் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார், “நம்மில் பலரும் அரசியல் என்பதை நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவும், தனிநபர்களின் கனவுகளைப் பொது நன்மையோடு சேர்க்கும் வழிமுறையாகவும் கருதினோம். நாமெல்லாம் குழம்பிப்போயும், கற்றுக்குட்டிகளாகவும், முட்டாள்தனமாகவும் நடந்துகொண்டோம். கனவுகளை நனவுகளாக மிக எளிதாக மாற்றிவிட முடியும் என்று நம்பினோம். நாமெல்லாம் முட்டாள்களாக, ஆனால் மகத்தான முட்டாள்களாக இருந்தோம். நமது முட்டாள்தனத்திலும்கூட ஞானம் இருந்தது.”

இந்த உரையாடல்களுக்கிடையே கருத்தொற்றுமை இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன் என்றாலும் நிச்சயம் ஒரு பொதுத்தன்மை இருந்தது. அந்தப் பாணி அரசியலுக்குப் புத்துயிர் கிடைக்க வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள்.

வகைகளுக்கிடையிலான போர்

வகைகளுக்கிடையிலான பனிப்போருக்கு இடையில் இந்தத் தலைமுறையும் சிக்கிக்கொண்டுவிட்டது. இந்த வகைமைகளின் மீதான மோகத்தில் நாம் நம்மையே அழித்துக்கொண்டுவிட்டோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், நுட்பமான உணர்வுடையவர். நாங்களெல்லாம் மனதின் கமிஸார்களாகிவிட்டோம் (தணிக்கையாளர்) என்று அவர் கூறினார். “ஸ்டாலினைப் பற்றி எண்ணிப்பாருங்கள்! இன்றைய தேதியில் காலாவதியாகிவிட்டதைப் போலவும், கேலிக்குரியவர் போலவும் ஸ்டாலின் நமக்குத் தோன்றுகிறார். ஆனால், ஒருகாலத்தில் அவர்தான் நம் வாழ்க்கை மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். சத்தியத்துக்கான அக்னிப் பரிசோதனைதான் ஸ்டாலின். தகவல்தொடர்பு-தானியங்கி முறையின் மூலம் அதுதான் வரலாற்றைச் சரியான போக்கில் திருப்பியது. செஸ்லாவ் மிலாஸ்வ் எழுதிய ‘தி கேப்டிவ் மைண்டு’, ஆர்தர் கோஸ்ட்லருடைய ‘டார்க்னெஸ் அட் நூன்’, ஜார்ஜ் ஆர்வெல்லின்‘1984’ ஆகிய நூல்களையெல்லாம் நாங்கள் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவற்றை அதர்மம் குறித்த கதைகளாகப் படிக்காமல், அன்றாட நீதிக் கதைகள் போலவும், அன்றாட வாழ்க்கையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான எச்சரிக்கையாக மட்டுமே படித்துவிட்டோம். இதன் விளைவாக, இடதுசாரிகள் அவர்களின் கொள்கையிலேயே பொம்மலாட்டப் பாவைகளாக, அதாவது அவர்கள் அறியாமலேயே அவர்களாலேயே ஆட்டப்படும் பொம்மைகளாகிவிட்டார்கள்.”

என் நண்பர் ஒன்றை உணர்ந்திருக்கிறார். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த வர்களுக்கு இடையே இப்போது நிறைய ஒற்றுமையைக் காண முடிகிறது. அவர்களெல்லாம் இந்த உலகத்தைக் குறித்துத் தீவிரமான பார்வை கொண்டிருந்தவர்கள். இந்த உரையாடலில் ஒரு நெகிழ்ச்சி இருந்தது. “நேரு யுகம் என்பது லட்சியவாத யுகம்” என்று அறிவியலாளர் தினேஷ் மோகன் என்னிடம் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. கல்வி புதிய உலகொன்றைத் திறந்துவிட்டது. அந்த யுகத்தின் முதல் தலைமுறைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் கல்வியை நேசித்தார்கள். தேர்வுகள் குறித்தல்ல, புத்தகங்கள், கருத்துகளின் ரசவாதம் போன்றவைகுறித்த காதல் அது. “லட்சியம் என்பது கருத்துகளையும் இந்த உலகத்தையும் தாண்டிய கருத்துகளையும் துழாவிச் செல்லுதல், கண்டறிதல் என்று அர்த்தம். வெறுமனே திறன் மேம்பாடு சார்ந்ததோ, இயக்கம் சார்ந்ததோ அல்ல அது” என்று அவர் எச்சரித்தார்.

அரசியல் வறுமை

இன்னொருவர் சொன்னார், “சிறு நகரங்களிலிருந்து வந்த மக்களையெல்லாம் அப்போது சந்தித்தோம். அவர்களுடைய சிந்தனைகளெல்லாம் நமது கற்பனைச் சிறகுகளைக் கட்டவிழ்த்துவிட்டன. நம்பவே முடியாத உலகுகளை அவர்கள் உருவாக்கினார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் ஒரு பட்டியல் இருந்தது. ஓவியர்கள், அறிவியலாளர்கள், கதைசொல்லிகள், வடிவமைப்பாளர்கள் போன்றோரின் பட்டியல் அது. அவர்களெல்லாம் இப்போது மறைந்துவிட்டார்கள்.” அந்த உலகம் கற்பனாவாத உலகம்; அதில் தவறுகளும் இழைக்கப்பட்டன. இன்று அந்தத் தவறுகளையெல்லாம் நாம் பட்டியல் போட வேண்டும். நமது சித்தாந்தங்கள் நம் கண்ணை மறைத்து, சகிப்பின்மையை நோக்கி அழைத்துச்சென்றுவிட்டன.

லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் ஆகியோரைக் கடவுள்களாக, துரதிர்ஷ்டவசமாகத் தனிப்பெரும் கடவுளர்களாகக் கருதினோம். நமது மதங்களைப் போல நமது அரசியல் சித்தாந்தங்களும் கலவையாக இருந்திருக்க வேண்டும்.

நமது ஒருதலைப்பட்சமான நம்பிக்கைகள் ஒருதலைப் பட்சமான வரலாறுகளையே உருவாக்கின. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசியல் கட்சிகளெல்லாம், முக்கியமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று வெறும் தொல்பொருட்கள் போன்று மாறிவிட்டன. அவையெல்லாம் அரசியல்ரீதியிலான ஆட்டிசம் போன்று ஆகிவிட்டன. எனினும், சிறப்பானவர்களில் பெரும்பாலானோரை அவை விழுங்கி, அழித்துவிட்டன. தாங்கள் கொடுத்த பலிகளுக்காக ஒப்பாரி வைப்பதற்கு இன்றைக்கு இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஒப்பாரிச் சுவர் தேவைப்படுகிறது.

தேச விடுதலையின்போது பேசப்பட்ட சுதந்திரம் என்ற கனவை நோக்கிய தேடலில் கடைசியில் எதிர்க் கருத்துகள், பித்துநிலை, விளிம்புநிலை ஆகியவற்றையெல்லாம் அழித்துவிட்டதுதான் விநோதம். அறிவியல்பூர்வமாகவே இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான வெறியில், உண்மைக்குப் பல மொழிகள் உண்டு என்பதைக் காணத் தவறிவிட்டோம். ‘திட்டம்’, ‘வடிவமைப்பு’, ‘திட்டப்பணி’, ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ போன்ற சொற்களையெல்லாம் ஆரம்ப நிலைப் பரிசோதனைகளாகக் கருதாமல் அதிகாரபூர்வமான திட்டங்களாகக் கருதிவந்திருக்கிறோம்.”

எனது விசித்திரமான நண்பர்களில் ஒருவர் மோடியை கிஃபென் சரக்கு என்றார். கிஃபென் சரக்கு என்பது ஒரு முரண்பாடான விஷயம். சரக்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தேவையும் அதிகரிக்கும். ஆனால், விலை குறைந்தால் தேவை குறைந்துவிடும். சராசரியானவர்களையே மோடி ஈர்க்கிறார். அவர்களோ பொய்யான ஒரு வரலாற்றை உருவாக்குகிறார்கள். நமது தலைமுறையில் நமது தவறுகளெல்லாம் மிகவும் வெளிப்படையாக இருந்தன. ஆனால், இந்தத் தலைமுறையின் தவறுகள் படுகுழியில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நடைமுறைக்கு உதவாத தன்மையால் நமது தலைமுறை ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. நடைமுறை அறிவு காரணமாக இந்தத் தலைமுறையோ ஒரு துயர நாடகமாய் ஆகிவிடும்போல் இருக்கிறது. எங்கள் தலைமுறையின் பிரச்சினைகள் எல்லாம் பேய்களென்றால், இந்தத் தலைமுறையின் பிரச்சினைகளெல்லாம் ராட்சசர்கள் போன்றவை.

மாற்றுச் சக்தியின் விதை

முந்தைய தலைமுறை சகிப்புத்தன்மை அற்றும் கொஞ்சம் அரைகுறையாகவும் இருந்தது. எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதிய சாத்தியங்களை அது உருவாக்கியது. உண்மையில், நமது தவறுகளை அடையாளமாகக் கொள்ளும் உணர்விலிருந்துதான் எங்கள் தலைமுறை இந்த சாத்தியத்தை உருவாக்கியது. சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் நமது யோசனையைத் தூண்டிவிட்டிருக்கின்றன. முதலாவது, சிபிஐ (எம்) பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. அடுத்தது, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பாஜகவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் போராட்டம். மோடியின் வருகை நிகழ்ந்திருப்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை இன்று, வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இது ஆகிவிடும்.

மோடியின் அரசியலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் மாற்று வரலாற்று சாத்தியத்துக்கான விதைகளைத் தூவும். குடிமைச் சமூகத்துடனும் பாஜக அரசுக்கு ஆக்கபூர்வமான, படைப்பூக்கத்துடன் கூடிய, விமர்சனபூர்வமான எதிர்த் தரப்பாக இருக்க வேண்டிய இடதுசாரிக் கட்சிகளில் உள்ள செயல்பாட்டாளர்களுடனும் நிகழ்த்திய நூற்றுக் கணக்கான உரையாடல்களின் விளைவாக எழுந்ததுதான் நமது எளிய யோசனை: படைப்பூக்கத்துடன் கூடிய பல்வேறு சாத்தியங்களைக் கொண்டிருக்கும் எதிர்த் தரப்பாக அது இருந்தாக வேண்டும். தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் உரிய பிரத்யேக செயல்பாடுகளைத் தவிர்க்கக் கூடியதாக அந்த எதிர்த் தரப்பு இருக்க வேண்டும். கடைசி விஷயம் மிகவும் முக்கியமானது. இதைப் பற்றி விளக்குகிறேன். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போது எல்லா சித்தாந்தங்களையும் சார்ந்திருந்த கட்சித் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டது, நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. துணிவும் எதிர்ப்புணர்வும் ஒரே ஒரு சித்தாந்தத்துக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை இடதுசாரிகளும் வலதுசாரிகளும் கண்டறிந்தது அப்போதுதான்.

நக்ஸலைட்டுகள், இடதுசாரித் தாராளவாதிகள், காந்தியர்கள், லோகியாவாதிகள், பெண்ணியவாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிபிஐ (எம்), சிபிஐ, சுதந்திர உணர்வை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகத் தரப்பு, இடதுசாரித் தலித்துகள் ஆகிய இடதுசாரிகளின் வெவ்வேறு வண்ணங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் சீதாராம் யெச்சூரிக்கும் இன்னபிற இடதுசாரிகளுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இடதுசாரிக் கட்சிகள் தேவையற்றவையாகக் கருதப்பட்டு புறந்தள்ளப்படுவதற்கு முன் இதையெல்லாம் செய்தாக வேண்டும்.

அடித்தட்டினர்சார்ந்த சிந்தனை என்பதை இடதுசாரிகள் தொடக்கத்தில் முன்னெடுத்திருந்தாலும் அது தேசியவாதம், மார்க்ஸிஸச் சிந்தனை என்பதையெல்லாம் தாண்டிப் போய்விட்டது. இந்த நிலையில் மாற்றுச் சக்திகளிடம், முக்கியமாக அறிவியல் சார்ந்த இயக்கங்களிடம் உரையாடல் நிகழ்த்த இடதுசாரிகள் தவறிவிட்டனர். மாற்றுச் சக்திகளின் இயக்கங்கள் எதிர்காலத்தின் உரிமைகள்குறித்தும் பேசின. அவற்றை சிந்தனாரீதியாகவும் அமைப்புரீதியாகவும் விரித்துச்செல்ல வேண்டியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருத்து மாறுபாடு, கிறுக்குத்தனம், மாற்றுகள், விளிம்புநிலையினர், சிறுபான்மையினர் ஆகியோரை உள்ளடக்கிய விதைநெல் களஞ்சியமாக இடதுசாரிகளின் பன்மைத்துவம் அவர்களை ஆக்க வேண்டும். இதற்கும் மேலாக, வீழ்த்தப்பட்டோர், நசுக்கப்பட்டோர், மறக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோர் மீது அக்கறை கொள்ளும் ஒரு பார்வையை அது உருவாக்க வேண்டும்!

- ஷிவ் விஸ்வநாதன், அரசு நிர்வாகம் மற்றும் பொதுக்கொள்கைகளுக்கான ஜிந்தால் கல்லூரியின் பேராசிரியர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்