மியான்மர் எல்லையைத் தாண்டி இந்தியா நடத்திய தாக்குதலை மணிப்பூர் மக்கள் வரவேற்கிறார்கள்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தரையிறங்குவதற்கு முன்னர் விமானம் சற்று தொலைவிலிருக்கும் 'லோக்தக்' ஏரியை ஒரு முறைச் சுற்றி வரும். இந்தியாவின் ஒரே மிதக்கும் தேசிய வனவிலங்கு பூங்காவான 'கெய்புல் லம்ஜாவோ'வைக் கொண்டிருக்கும் ஏரி அது. எழில் மிக்க ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள் இந்த ஏரியில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மிக அழகான நகரம் என இம்பாலைக் கூறலாம். மலைகளுக்கு நடுவில் விரிந்திருக்கும் சமவெளி. விமான நிலையத்திலிருந்துச் சற்றுத் தொலைவில் வெளிப்பூச்சே செய்யப்படாத பல கட்டிடங்களைப் பார்க்க முடியும். மணிப்பூரில் பொருளாதாரம் நிலைபெறாததன் குறியீடு அது.
மணிப்பூரில் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தினருடன் தொல்குடி மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு உண்டு. இம்மக்களின் இனக்குழு அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயங்களாக இவற்றைப் பார்க்கலாம். மெய்த்தேய், குக்கி, நாகா, கோம் என்று முக்கியமான பழங்குடிகள் தவிர சிறு குழுக்களும் ஏராளமாக உள்ளன. இவர்கள் மொழியும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதது போல ஒலிக்கும்.
யாண்டபூ ஒப்பந்தம்
உலகில் மிக நீண்ட காலமாக நடந்துவரும் கிளர்ச்சிகளில் மணிப்பூர் கிளர்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. இதன் விதையை, இன்று அநேகமாகக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. இதன் தொடக்கங்கள் 1820-களில் மணிப்பூர் ஆங்கிலேய - பர்மா போரில் உள்ளன. பர்மாவின் அன்றைய ஆட்சியாளர்கள் மணிப்பூரை வீழ்த்தி சூறையாடிச் சென்றனர். அதன் பின் ஆங்கிலேயரின் உதவியோடு பர்மாவைத் தோற்கடித்தார் மணிப்பூரின் அன்றைய அரசர் கம்பீர் சிங். 1826-ல் ‘யாண்டபூ ஒப்பந்தம்' கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மணிப்பூருக்கு உரியது என்று அவர்கள் நம்பிய ‘காபா பள்ளத்தாக்கு' பர்மாவுக்கே கொடுக்கப்பட்டது. இந்த பள்ளத்தாக்கிலிருந்துதான் செட்டிநாடு முதல் ஐரோப்பா வரை புகழ்பெற்றிருக்கும் ‘பர்மா' தேக்கு மரங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், ‘யாண்டபூ ஒப்பந்தம்’ மணிப்பூர் அடைந்திருக்க வேண்டிய மிகப் பெரிய வாழ்வாதாரத்தையும், புகழையும் தடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் பிரதிநிதியாக ஒரு அதிகாரியை மணிப்பூரில் நிறுத்திச் சென்றனர். அன்று முதல் ஆங்கிலேய அரசின் செயல்பாடுகள் மணிப்பூரின் பாரம்பரியத்தில் குறுக்கிடத் தொடங்கின.
மொழியை அழித்தல்
மணிப்பூர் மக்கள் தங்கள் அரச குடும்பத்தின் மீது நீங்காப் பற்று உடையவர்கள். மேலும் தங்கள் கலை, இலக்கியம்ங மொழி. பண்பாடு. மீது இன்று வரையில் நெருங்கியத் தொடர்பு கொண்டவர்கள். ஆங்கிலேயர்கள் வந்தவுடன் வங்க மொழி எழுத்து மொழி ஆனது. நிர்வாகத்துக்கு ஏதுவாக இருக்கும் என்று இது தொடங்கப்பட்டது. ‘மாயேக்' என்ற மணிப்பூரின் பண்டைய எழுத்து வழக்கு குறைக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் மாயேக் எழுத்து வழக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்று இம்மொழியை வாசிக்க கற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் பெற்றோரால் அது இயலாது.
இந்த மொழிச் சிக்கல் அன்று மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அன்றைய மணிப்பூர் அரசரின் மருமகன் ஹிஜாம் ஐராவட் முதல் கட்சியைத் தொடங்கினார். 1904-ல் மணிப்பூரின் பெண்கள் அரசுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் எதிராகப் போராடத் தொடங்கினர். இதில் ஐரோம் ஷர்மிளாவின் குடும்பத்தாரும் அடக்கம். இதன் பின் தொடர்ந்துமணிப்பூர் சிக்கலில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இம்பாலை நெருங்கியது. இந்தியச் சுதந்திரத்தின்போது இந்தியாவுடன் சேர மணிப்பூர் அரசர் அன்றைய வடகிழக்குத் தலைநகரமான ஷில்லோங்கில் ஒப்புக்கொண்டார். ஆனால் இதில் மக்களுக்கு அத்தனை மகிழ்ச்சி இல்லை. வெளி நிர்வாகக்காரர்கள் தங்களின் மொழி கலாச்சாரத்தைக் குலைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே மக்கள் அதை விரும்பவில்லை எனலாம்.
இதற்கிடையே, ஹிஜாம் ஐராவட் இடதுசாரிச் கிளர்ச்சியாளராக மாறியிருந்தார். 1950-க்குப் பின் ‘சிவப்பு காவலர்கள்' என்ற ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்கி 'சுதந்திர விவசாய குடியரசு' க்காகப் போராட எண்ணினார். ஆனால் எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. ராணுவத்துக்குப் பயந்து பர்மாவுக்குள் தஞ்சம் புகுந்தார். அவரது இறப்புடன் அந்த இயக்கம் முடிவுக்கு வந்தது.
சீனா, பாகிஸ்தான் உதவி
1960-ல் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யூ.என்.எல்.எஃப்.) எனும் இயக்கத்தை சமரேந்திரா சிங் என்பவர் தொடங்கினார். இவரது லட்சியம் இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்ற ‘ஒன்றிணைந்த' மணிப்பூரை உருவாக்குவது. இவர் அன்றைய பர்மாவின் பல பகுதிகளைச் சேர்த்தே கூறினார் என்று இன்று கூறப்படுகிறது. இவர்கள் ஆயுதங்களுக்காகவும் பயிற்சிக் காகவும் தங்கள் கொள்கைக்கு ஏதுவாக இருந்த சீனர்களிடம் சென்றனர். மா சேதுங் இருந்தவரையில் சீனர்களின் உதவி இவர்களுக்குக் கிடைத்தது. கிழக்குப் பாகிஸ்தானிடம் இருந்தும் இவர்கள் உதவி பெற்றனர். 1971 வங்காளப் போருக்கு பின் பாகிஸ்தானிடமிருந்து உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. சீனாவில் 1980-களில் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர் ஆயுதப் பயிற்சி போன்றவை கிடைக்கவில்லை. ஆனால் இன்றும் சந்தையில் கிடைக்கும் சீன ஆயுதங்களையே இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இப்படியாக, கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் சண்டைக்கு இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் மணிப்பூர் மக்கள். அரை நூற்றாண்டு காலமாகத் தொடரும் அமைதியின்மையால் நடுத்தர வர்க்கமே இன்று மணிப்பூரில் இல்லை. சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் சொந்த மண்ணை விட்டுச் சென்றவர்களே அதிகம். எந்த தனியார் தொழிலும் இல்லை. வேலை வாய்ப்பு என்பது அறவே கிடையாது. அரசு வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகள் டெல்லியிலோ சென்னையிலோ பெங்களூரிலோ வெளிநாடுகளிலோ வாழ்கின்றனர். முடியாத இளைஞர்கள் காடுகளுக்குள் புகுந்துவிட்டனர். இம்பாலின் தெருக்களிலும் கடைகளிலும் பெண்கள் மட்டுமே உள்ளனர். மணிப்பூரில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தோன்றுவது ‘ஆண்கள் எங்கே?’ என்ற கேள்விதான்.
இந்த தீவிரவாதக் குழுவுக்குள் பல பிரிவினைகள் வந்து இன்று கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களின் ‘லட்சியங்கள்' கரைந்து போய் இன்று பாதை மட்டுமே எஞ்சி உள்ளது. உலகில் எந்த நாட்டிலும் / பகுதியிலும் மக்கள் ஆதரவின்றி கிளர்ச்சி நெடுநாள் தொடரச் சாத்தியமில்லை. திரிபுரா மிசோரம் போன்ற மாநிலங்கள் இன்று தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டன. சீரான காவல் / ராணுவ செயல்பாடும் அதற்கான அரசின் ஒத்துழைப்பும் அதற்குப் பின் தொடங்கிய சிறப்பான நிர்வாக செயல்பாடும் இதைச் சாத்தியப்படுத்திஉள்ளன.
தாண்டப்பட்ட எல்லை
எல்லைப் பகுதிகளில் இன்று வரை மியான்மர் அரசின் ஆட்சி இல்லை என்பதே உண்மை. மணிப்பூருக்கு தெற்கிலும் நாகாலந்துக்குக் கிழக்கிலும் அமைந்துள்ள ச்சின், காசின் போன்ற பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் உறைவிடமாக மாறிவிட்டன. ஒவ்வொரு முறை பயங்கரவாதிகள் குண்டு வைக்கும்போதோ அல்லது தாக்குதல் நடத்தும் போதோ ராணுவமும் பிற படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே நடக்க வேண்டி யிருக்கும். அங்கு பணி செய்யும் ராணுவ வீரர்கள் சலிப்பாகவோ கோபமாகவோ சிரித்துகொண்டோ இதைக் கூறுவார்கள். சமீபத்தில் இதற்கு மாறாக நடந்த ராணுவ நடவடிக்கை ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வல்லது என்றே மணிப்பூர் மக்களால் கருதப்படுகிறது. போடோ தீவிரவாதிகளை ஒடுக்க பூட்டானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை, அவர்களிடம் நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டுவந்திருக் கிறது. அதேசமயம், மணிப்பூர் மக்களுக்கு எந்தவகையான மாற்றத்தை அது கொண்டு வரும் என்பதில்தான் அம்மக்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
- சாரா, வடகிழக்கு மாநிலங்களில் களப்பணியாற்றி வருபவர், தொடர்புக்கு: writersara123@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago