மெத்தப் படிக்காத தலைவர்கள்

By ம.சுசித்ரா

இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் கால் பதிக்க, கல்வி அடிப்படைத் தகுதி அல்ல. பாமர மக்களின் பிரதிநிதிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால்தான் இந்திய அரசியல் அமைப்பு, கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கவில்லை. சாதனை படைத்த பெருந்தலைவர்கள் பலர் படிக்காத மேதைகளாக இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் அரசியல் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் முயற்சி இது.

கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் எனும் கொள்கையோடு தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்; ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர். காமராஜரின் சிறுபிராயத்திலேயே அவர் தந்தை இறந்துபோனார். இதனால் ஆறாம் வகுப்போடு காமராஜரின் பள்ளிப் படிப்பு முடிந்துபோனது. 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் காமராஜர். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்துப் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டதால் தமிழகச் சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின்போது புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். 1936-ல் காங்கிரஸின் கட்சிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1953-ல் தமிழக முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து மதிய உணவுத்திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழிற்துறைத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஒன்பது ஆண்டுகள் சிறப்பாக நிர்வகித்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கினார்.

தஞ்சை மாவட்டத்திலே மிகவும் சாமானியர்களின் குடும்பத்தில் பிறந்து தனது ஆர்வம், இடையறாத உழைப்பு, சமூக அக்கறை ஆகியவற்றால் இளம் வயதிலிருந்தே கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்றிலும் முத்திரை பதித்தவர்தான்

மு. கருணாநிதி. அவர் காலத்தில் தமிழகத்திலும் அவருடைய கட்சியிலேயேயும் கூட இருந்த எண்ணற்ற படித்தவர்களைவிடத் தனக்கென்று தனி ஆதரவாளர்கள் பட்டாளத்தையே தன்னுடைய பேச்சு, எழுத்து வன்மையால் உருவாக்கி வளர்ந்தவர் கருணாநிதி. தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதித் திட்டம் வேரூன்றவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் அவருடைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முக்கியக் காரணமாக அமைந்தன.

எண்ணற்ற பாலங்கள், சாலைகள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், தொழில்பேட்டைகள் என்று தமிழகத்தை முன்னேற்றினார். தமிழகத்தில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எண்ணிக்கையில் பெருக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். மத்திய அரசுக்கே ஆலோசனை கூறவும் வழிகாட்டியாகச் செயல்படவும் தகுதி பெற்ற அரசியல் வித்தகராகத் திகழ்கிறார்.

இந்தியாவில் முதல்வர் பதவிக்கு முதலில் வந்த நடிகர் எம்ஜிஆர். தந்தையின் மரணத்தால் அவருடைய படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. பாய்ஸ் நாடகக் குழுவில் சிறுபிள்ளையாகச் சேர்ந்த எம்ஜிஆர், அங்கே பல பாடங்களைக் கற்றார். படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. திரைப்படங்களில் நடித்து தனக்கெனத் தனி முத்திரையையும் ரசிகர்களையும் உருவாக்கினார். திரைப்படத் தயாரிப்பின் அனைத்து உத்திகளையும் அனுபவப் பாடமாகவே பயின்றார்.

அதே வேளையில் தமிழகத்தின் அரசியல் சமூக சூழ்நிலைகளையும் மக்களுடைய மனவோட்டங்களையும் முழு நேர அரசியல் தலைவர்களைவிட நன்றாகவே படித்தார். எனவே, வெற்றிகரமான அரசியல் தலைவராகவும் சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அத்தியவாசியப் பண்டங்கள் கிடைக்கவில்லை என்ற புகாரோ கலவரமோ நேராமல் பார்த்துக்கொண்டார். காமராஜர் தொடங்கிய மதிய உணவு திட்டத்தை சத்துணவுத் திட்டமாக்கி மிகப் பெரிய அளவில் வளர்த்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக்கினார்.

ஜானகி ராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, பள்ளிப் படிப்பு முடித்ததும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், நிறைய வாசிப்புப் பழக்கம் உள்ளவர். வீட்டிலேயே சிறு நூலகம் அமைத்து புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்.

1981-ல் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா 1989-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். தமிழக அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தொட்டில் குழந்தைகள் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி, புத்தகங்கள், கல்விக்கான சாதனங்கள் வழங்கும் திட்டம் என்று மக்கள் நலத் திட்டங்களில் முன்னோடியாக இருக்கிறார். உறுதியான தலைமை, சிறந்த நிர்வாகத்துக்காக அனைவராலும் பாராட்டப்படுகிறார்.

ஏட்டுக் கல்வியைவிட வாழ்க்கைக் கல்வியில் முது முனைவோர்களாக இருந்து தமிழகத்துக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர் இத் தலைவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

53 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்