மோடி 365° - வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஓராண்டு

நரேந்திர மோடியைப் போல முதலாம் ஆண்டில் இத்தனை சாதனைகளைச் செய்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தோன்றுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக மக்களவையில் 282 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை ஆட்சியைக் கொண்டுவந்தவர், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல எல்லா வகையிலும் தேசத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்.

மோடியின் முதல் சாதனை, மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் எனும் இடமே இல்லாத அளவுக்கு காங்கிரஸைத் தூக்கியெறிந்துவிட்டு, தன் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கேற்ப பாஜகவை ஒரு பொதுக்கட்சியாக நிறுவியது. மதவாதக் கட்சி என்ற அபவாதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, இடதுசாரி-வலதுசாரி எனும் வாதங்களுக்கு அப்பாற்பட்ட மத்தியக் கட்சியாக பாஜகவை நிறுவியது. அடுத்து, இந்த நாட்டின் வளர்ச்சியான உள்ளுக்குள் மத்திய - மாநில அரசுகளின் நெருக்கத்திலும் வெளியில் வளர்ந்த நாடுகளின் நெருக்கத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்து, இந்த இரு உறவுகளையும் ஓராண்டுக்குள் எவ்வளவு இணைக்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அவருடைய பதவியேற்பு விழாவிலேயே இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டனவே? அருணாசலப் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று சீனாவுக்குத் தெளிவுபடுத்திய மோடி பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா-பாகிஸ்தான் கூட்டுகுறித்து கவலையைத் தெரிவித்தார். ஆனாலும், இந்த வேறுபாடுகள் இந்தியாவின் பொருளாதாரத் தேவைகளின் குறுக்கே வராமல் பார்த்துக்கொண்டார். தன் மீது பெரும் காழ்ப்புணர்வைக் கொட்டிய அமெரிக்காவுடன் அவர்களே ஆச்சரியம் அடையும் வகையில் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். வெளியில் மட்டும் அல்ல; உள்நாட்டிலும் அப்படித்தான். தேர்தலில் கடும் போட்டியாகத் திகழ்ந்த மம்தா, ஜெயலலிதா ஆகியோருடன்கூட ஆக்கபூர்வமான உறவைத்தானே கடைப்பிடிக்கிறார்?

இந்த நாட்டிலே தவறான காலத்தில் கருத்த மேகம் தோன்றுவதும் சரியான நேரத்தில் பருவமழை மறைவதும் போதும், சந்தையையும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையையும் குலைக்க. அப்படிப்பட்ட நாட்டில் ஸ்திரமான ஒரு வளர்ச்சி வேண்டும் என்றால், நீண்ட காலத் திட்டமிடல் வேண்டும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ அதற்கான அடித்தளம்.

ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிடப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்திருக்கிறது. மூலதன வருகை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது. நிலக்கரி வயல்கள், அலைக்கற்றை அலைவரிசை ஏலங்கள் வெளிப்படையாக நடைபெற்றன. ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் ஆறே மாதங்களில் 15 கோடிப் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. ‘சுரக்‌ஷா பீமா யோஜனா’ திட்டத்தில் 5.57 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ‘ஜீவன் ஜோதி யோஜனா’ திட்டத்தில் 1.7 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் ஓராண்டில் நகர்ந்திருக்கும் சில புள்ளிகள்.

மக்கள் ‘நல்ல நாளுக்காக’(அச்சே தின்) 70 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். நல்ல காலம் வருவதற்கு நேரமாகும். ஆனால், ஓராண்டு மோடியின் ஆட்சி நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

- சேஷாத்திரி சாரி, தேசிய செயற்குழு உறுப்பினர், பாஜக.

தொடர்புக்கு: charidr@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE