மரணத்துக்கு மிக நெருக்கமாகச் செல்லுதல் பெரும் கொடுமை. அதிலும் என்ன நோய் என்றே தெரியாமல், மரணத்தின் முன் மருத்துவத்தின் சகல முயற்சிகளாலும் நீங்கள் கைவிடப்பட்டு நிற்பது பெரும் பரிதாபம். வாழ்வில் பல முறை அந்தப் பரிதாபகரமான சூழலில் நான் நிறுத்தப்பட்டிருக்கிறேன். இதுதான் கடைசி இரவாக இருக்கும் என்று கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்ட ஓர் இரவு முழுவதும், “இறைவா... இந்த ஓர் இரவை மட்டும் எனக்குக் கொடு. நாளை நிச்சயம் நான் உயிர் பிழைத்துக்கொள்வேன்” என்று மன்றாடியிருக்கிறேன். கடைசி முறை மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோதுகூட, கை - கால்களின் இயக்கம்கூடச் சரியாக இல்லை. ஒரு மாத கால மருத்துவமனைவாசம், நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகும். ஆனால், வீடு திரும்பியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் மட்டும் அசைக்க முடியாததாக இருந்தது. யோகா தரும் நம்பிக்கை அது. மருத்துவர்களே வியக்கும் வகையில் பல முறை அது உயிரைத் தக்கவைத்திருக்கிறது. உடலியக்கத்தை நீட்டித்துத் தந்திருக்கிறது.
என் அனுபவம் சாதாரணம். இன்னும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருந்து பலனிக்காது என்று முற்றிலுமாகக் கைவிடப்பட்டவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கே வழியில்லாதவர்கள், மன அழுத்தத்தில் உறைந்தவர்கள் என்று எத்தனையோ பேரை யோகா மீட்டெடுத்திருக்கிறது. அடிப்படையில், அது நோயுற்றவர்களுக்கான சிகிச்சை முறையோ, நோய் வராமல் பார்த்துக்கொள்வதற்கான தற்காப்புக் கலையோ அல்ல; நம்முடைய உயிரியக்கத்துக்கும் இயற்கையின் பேரியக்கத்துக்கும் இடையிலான உறவை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதற்கான அறிவியல். அதை உடல் - மனம் இரண்டையும் பேணிப் பாதுகாத்துக்கொள்வதற்கான கருவியாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம்.
ஆண்டுக்கு மருத்துவத்துக்காக ரூ. 4 லட்சம் கோடிக்குக் குறைவில்லாமல் செலவிடப்படும் இந்தியாவில், தன்னுடைய குடிமக்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தர அரசே முன்வருகிறது என்றால், கொண்டாடி வரவேற்க வேண்டிய முயற்சி அது!
பிரதமர் மோடி 2014 செப்டம்பர் 27 அன்று ஐ.நா. சபையில் உரையாற்றினார். “உலகெங்கும் யோகாவைக் கொண்டுசெல்லும் விதமாக ஆண்டில் ஒரு நாளை யோகா தினமாகக் கொண்டாட வேண்டும்” என்று அன்று அவர் விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாகவே ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை. இந்த ஆண்டு ஜூன் 21 அன்று உத்தேசமாக உலகின் 192 நாடுகள் யோகா தினத்தைக் கொண்டாடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் உள்நாட்டிலும் யோகாவை விரிவாக எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஒரு அரசாங்கம் இறங்குவது ஆக்கபூர்வமான நடவடிக்கை. ஆனால், அதை தொலைநோக்கின்றி அரசியல் உள்நோக்கங்களுடன் அரசு அணுகுவதுதான் சங்கடம்.
யோகாவில் தேர்ந்த எந்த ஒரு ஆசிரியரும் தன்னுடைய மாணவர்களிடம் வாங்கிக்கொள்ளும் முக்கியமான உறுதிமொழி ஒன்று உண்டு: “நீங்கள் ஆசிரிய பயிற்சியைக் கற்கும் வரை, உங்களுக்குக் கிடைக்கும் இந்தக் குறைந்தபட்சக் கல்வியைக் கொண்டு யாருக்கும் யோகா கற்றுத்தரக் கூடாது.” இந்த உறுதிமொழிக்குப் பின் நியாயமான காரணங்கள் பல உண்டு. கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகள் வேறு; கற்பிப்பதற்கான பயிற்சிகள் வேறு. மிக நுட்பமான யோகப் பயிற்சிகள் ஒவ்வொரு நபருக்கும் அவருடைய ஒவ்வொரு அசைவுக்கும்கூட மாறுபட்ட பலன்களைத் தரக் கூடியவை. ஒரு ஆசிரியர் யோகாவைக் கற்பிக்கும்போது, அவர் கற்பிக்கும் ஒவ்வொருவரின் பயிற்சியிலும் அவருடைய நேரடிக் கவனிப்பு அவசியம்.
யோகா உடற்பயிற்சி கிடையாது. நமக்குள் மலர்ச்சியைக் கொண்டுவரும் ஆன்மப் பயிற்சி. பொத்தாம்பொதுவாக எல்லோருக்குமான பயிற்சியாக ஒரு மேடையிலிருந்து ஆயிரம் பேருக்குச் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. அதனால்தான், பி.கே.எஸ். ஐயங்காரைப் போன்ற மகத்தான யோகா ஆசிரியர்கள், “யோகா என்பது அந்தரங்கமானது. ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு விதமானது. அதனால்தான் நான் எப்போதும் பெரிய அளவிலான யோகா பயிலரங்குகளைத் தவிர்க்கிறேன்” என்கிறார்கள். ராம்தேவ் போன்றவர்களைத் தவறான முன்னுதாரணங்கள் என்கிறார்கள்.
பள்ளிக் குழந்தைகளை உடல் சாகசத்தில் ஈடுபடவைத்து, கை கால்களைக் கோணல் மாணலாக வளைக்க வைத்து யோகா என்று சொல்லி அறியாமையில் மார்தட்டிக்கொள்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். யோகாவைக் கற்றவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களுக்குத் தெரிய வேண்டாமா?
இளைய தலைமுறையிடம் யோகாவைக் கொண்டு செல்வதாகக் கூறிக்கொள்ளும் மோடி அரசின் முழுக் கவனமும் இப்போது டெல்லி ராஜபாட்டையில் குவிந்திருக்கிறது. குழந்தைகளிடம் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைவிட, பிரதமர் மோடி தொடக்கிவைக்கும் யோகப் பயிற்சியில் எப்படியாவது 30 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஆட்களைக் கூட்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துவிட வேண்டும் என்பதில்தான் அதிகாரவர்க்கம் குறியாக இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு குவாலியரில் 29,973 பேர் பங்கேற்ற யோகா பயிற்சி கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சி இது. இதே போன்ற கூத்துக்கு நாடு முழுவதும் திட்டமிடப்பட்டிருக்கிறது. யோகாவை ஒரு தேர்ந்த தொழில் கருவியாக்கிப் பண சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியிருக்கும் ‘பகட்டல் குருக்கள்’அகமகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். யோகாவை உண்மையாக நேசிப்பவர்கள் அமைதியாகப் புன்னகைக்கிறார்கள்!
யோகாவை உலகம் வரித்துக்கொண்டு நீண்ட காலம் ஆகிறது. மேற்குலகம் மட்டுமில்லாமல், ஈரான், ஜப்பான், கென்யா, குரோஷியா, அர்ஜென்டினா போன்ற வெவ்வேறு இனங்கள், கலாச்சாரங்களின் களநிலங்களிலும் அதன் வேர் இன்று விரவியிருக்கிறது. இந்தியாவிலும் மத - இன வேறுபாடுகளைத் தாண்டி எவ்வளவோ பேர் யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், நம்முடைய சிறுபான்மை மத அமைப்புகள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதை அவர்களுடைய சமீபத்திய அறிவிப்புகள் காட்டுகின்றன.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சூரிய நமஸ்காரத்தை முன்வைத்து, யோகா இஸ்லாமுக்கு விரோதமானது என்று அறிவித்திருக்கிறது. இந்திய அரசு முன்னெடுக்கும் மாணவர்களுக்கான யோகா வகுப்புகளைச் சட்ட விரோதம் என்று சொன்ன அது, யோகாவுக்கு எதிராகத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது. அந்த அளவுக்குப் போகவில்லை என்றாலும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் யோகாவில் மகிழ்ச்சி இல்லை என்பதை கத்தோலிக்க பிஷப் மாநாடு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் சிறுபான்மையின அமைப்புகளின் அக்கறைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. யோகா பயிற்சி எல்லோர்க்கும் கட்டாயமில்லை என்று அறிவித்திருப்பதுடன் சூரிய நமஸ்காரத்தைப் பயிற்சி வகுப்பிலிருந்து தவிர்ப்பதாகவும் சொல்லியிருக்கிறது அரசு. ஆனால், எதுவும் சிறுபான்மையின அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதாகத் தெரியவில்லை.
அரசின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குவதும் ஒரு திட்டத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும் ஆரோக்கிய மானது. ஆனால், எதிர்ப்பின் பெயரால் ஒரு சமூகத்தையே ஒரு நல்ல கலைக்கு எதிராகத் திசை திருப்புவது புத்திசாலித்தனம் அல்ல.
இந்தியாவில் சிறுபான்மையினரின் சமூக நிலைபற்றிப் பெரிதாக விளக்கத் தேவையில்லை. குறிப்பாக, முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் சமூகப் பொருளாதார நிலையில், பல இடங்களில் தலித்துகளுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் இது பொருந்தும். இந்நிலையில், யோகா போன்ற ஒரு கருவி வறிய சூழலில் உள்ள கோடிக் கணக்கானோரின் ஆரோக்கியத்தை மேலே கொண்டுவரக்கூடியது. மோடியைப் பிடிக்கவில்லை என்பதற்காக யோகாவையே இஸ்லாமுக்கு எதிரானதாக மாற்ற வேண்டுமா என்ன? சங்கப் பரிவாரங்கள் எப்படி எதையெடுத்தாலும் மத அரசியல் நோக்கங்களினூடே பார்த்துப் பழகியிருக்கின்றனவோ, அப்படித்தான் இருக்கிறது சிறுபான்மையின அமைப்புகளின் இந்த அணுகுமுறையும்!
கடுமையான உழைப்புக்குப் பேர் போன கருணாநிதி தன்னுடைய உடலைப் பராமரிப்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர் என்பது யாவர்க்கும் தெரிந்த கதைதான். கருணாநிதி யோகா கற்றவர்.
பொதுவாக, யோகா செய்பவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யும்போது, “சூரியாய நமஹ” என்று சூரியனுக்கு வடமொழியில் வணக்கம் சொல்வது வழக்கம். ஒரு நாத்திகராகவும் வடமொழிக்கு எதிரானவராகவும் அறியப்பட்ட கருணாநிதிக்கு இது சங்கடமான சூழல். ஒன்று
“சூரியாய நமஹ” என்று சூரியனை பகவானாக்கி வடமொழியில் வழிபட வேண்டும் அல்லது சூரிய நமஸ்காரத்தையே கைவிட வேண்டும். கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா? சூரிய பகவானின் இடத்தில் திமுகவின் சின்னமான உதய சூரியனைக் கொண்டுவந்தார். அந்த உதயசூரியனைப் பார்த்து, “ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்” என்று செந்தமிழில் வாழ்த்தினார். யோகாவைத் தொடர்ந்தார். சூரியனை வணங்குவதில் பிரச்சினை இருக்கலாம்; வாழ்த்துவதில் என்ன சங்கடம்?
புத்திசாலிகளால் எது ஒன்றிலிருந்தும் எதையும் விடுவித்துத் தனதாக்கிக்கொள்ள முடியும். ஒரு மகத்தான கலையை நாம் நமதாக்கிக்கொள்வோம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago