புதிய வீராணம் திட்டத்துக்கு ஒதுக்கிய ரூ. 740 கோடியில் ரூ. 6 கோடியை மிச்சப்படுத்திக் கொடுத்த துடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடித்தும் இருக்கிறார்கள். ‘‘இது பெரிய சாதனை” என்கிறார் புதிய வீராணம் திட்டத்தின் செயல் இயக்குநராகவும் திட்டப் பணிகளின்போது சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்த வி.தங்கவேலு ஐஏஎஸ்.
நெருக்கடிகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட புதிய வீராணம் திட்டம்
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ‘‘2003, 2004 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் இல்லை. கிருஷ்ணாவிலிருந்து வர வேண்டிய தண்ணீரும் வரவில்லை. இதனால் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க தினமும் 14,500 டேங்கர் லாரிகள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னையின் 14,200 தெருக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இத்தகைய நெருக்கடிகள் இருந்தபோதும், புதிய வீராணம் திட்டப் பணிகளையும் தொய்வின்றி மேற்கொண்டோம். வீராணத்திலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக மற்றும் வீராணம் ஆயக்கட்டுதாரர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னைக்கு குடிநீர் எடுத்து வரும் வழியில் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாதகமான தீர்ப்பு வாங்கினோம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், வனம் உள்ளிட்ட துறைகளில் தடையின்மைச் சான்று பெறுவதும் பெரிய வேலையாக இருந்தது. இந்தத் திட்டத்தில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமளிக்கக்கூடாது என்பதில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.
திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வாரம் ஒருமுறை அவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மாதந்தோறும் அவரே ரிவ்யூ மீட்டிங் நடத்துவார். பொதுவாக, பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது திட்டப் பணிகள் முடிந்த பிறகுதான் தணிக்கை நடக்கும்.
ஆனால், இந்தத் திட்டத்தில் டெண்டர் விட்டதிலிருந்தே ஒவ்வொரு கட்டத்திலும் தணிக்கை நடத்தப்பட்டது. அனைத்துப் பணிகளையும் 18 மாதங்களுக்குள் முடித்தோம். இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் , ஒதுக்கப்பட்ட நிதியைவிட குறைந்த செலவில் நிறைவேற்றப்பட்ட மிகப் பெரிய திட்டம் என்றால் அது, புதிய வீராணம் திட்டமாகத்தான் இருக்கும்” என்றார் தங்கவேலு.
வீராணத்தில் எடுப்பது குறைந்தளவு தண்ணீர்தான்
‘‘வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்படுகிறது. விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை சிறப்பாகத் தொடரலாம்” என்கிறார் பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘திமுக ஆட்சிக் காலத்தில் 1996-ம் ஆண்டு கொள்ளிடத்திலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாறு கால்வாயில் 22 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் தளம் அமைத்தோம். ஏரிக் கரைகளை பலப்படுத்தினோம். இதனால், தண்ணீர் கசிந்து வீணாவது தடுக்கப்பட்டது. மேலும், ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தினோம். ஆனால், இந்த ஆட்சியில் ஏரி தூர்வாரப்படவில்லை. மருதாநதியில் அணை கட்டினால், வண்டல் அங்கேயே நிறுத்தப்பட்டு ஏரிக்கு வருவதைத் தடுக்க முடியும். அதேபோல, ஏரியின் 28 பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி மேம்படுத்தினோம். சேத்தியாதோப்பு கால்வாய் வரும் வழியில் கரைகளை பலப்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.
பொதுவாக, ஏரியில் கொள்ளளவு குறைவாக இருக்கும்போது சென்னைக்கும் தண்ணீர் எடுப்பதால்தான் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஏரி, கால்வாய்களின் தொடர் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் மூலம் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை சிறப்பாகத் தொடரலாம். மற்றபடி, வீராணத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரும் தண்ணீரின் அளவு மிகக் குறைவுதான்” என்றார் துரைமுருகன்.
வெற்றிலை கொடிக்காலுக்கு வேட்டு
ஜி. ரமேஷ்
வீராணம் தண்ணீர் மூலம் 550 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்த வெற்றிலை கொடிக்கால் பரப்பு, தற்போது சுமார் 200 ஏக்கராக சுருங்கிவிட்டது. வெற்றிலை விவசாயிகள் பலர் இப்போது மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
வெற்றிலைக்கு ஆண்டு முழுக்க தண்ணீர் தேவைப்படும் என்பதால், ஏரிக் கரையை ஒட்டியுள்ள லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமழை, கொள்ளுமேடு, மானியம் ஆடூர், கொல்லிமலை, கந்தகுமாரன் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் மட்டுமே வெற்றிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
வீராணத்திலிருந்து தண்ணீர் திறப்பதற்கு கெடுபிடிகள் அதிமாகிவிட்டதால் வெற்றிலை விவசாயமும் இங்கு படுத்துவிட்டது. இதுகுறித்துப் பேசிய லால்பேட்டை வெற்றிலை விவசாயி ஹபிபுர் ரஹ்மான், ‘‘வெற்றிலை எங்களுக்கு பரம்பரை விவசாயம். கடந்த ஆண்டு சென்னைக்காக ஏரியில் தண்ணீரை நிரப்பி வைத்த அதிகாரிகள், வெற்றிலைக்கு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டனர். இந்த ஆண்டு உபரி இருப்பால் தண்ணீர் கொடுத்தனர். ஏரியை முழுமையாகத் தூர்வாரி, கூடுதலாக தண்ணீரை தேக்கிவைத்தால் வெற்றிலை விவசாயம் தழைக்கும்” என்றார்.
வீராணம் தண்ணீரும் பெருமாள் குத்தகையும்
தனது இஷ்ட தெய்வமான கோதண்டராமன், கனவில் தோன்றி அருள்வாக்கு அருளியதாலேயே பராந்தக சோழன் வீராணம் ஏரியை வெட்டினான் என்று வீராணம் மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் நம்புகின்றனர்.
வீராணம் ஏரி, பெருமாளின் சொத்து என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள அவர்கள், வீரநாராயண பெருமாளுக்கு மார்கழியில் வரும் ராப்பத்து உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, உற்சவத்தின் 9-வது நாளன்று பொதுப்பணித் துறை சார்பில் மண்டகப்படியும் நடத்தப்பட்டு வந்துள்ளது.
‘‘முன்பெல்லாம் வீராணம் ஏரித் தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக பெருமாளுக்கு ஆண்டுக்கு 912.25 ரூபாய் குத்தகை கட்டணமும், கோயிலின் ஸ்தானிக பட்டருக்கு வேத விருத்தி மானியமும் வழங்கப்பட்டு வந்தது” என்கிறார் ஸ்தானிகர் ராகவாச்சாரியார்.
பயணிப்போம்..
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago