வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம்.. ஒதுக்கிய நிதி எங்கே?

By குள.சண்முகசுந்தரம், க.ரமேஷ், வி.சாரதா

சென்னைக்கான புதிய வீராணம் திட்டம் வந்த பிறகு, வீராணம் ஏரியில் தண்ணீரை நிரப்புவதற்கு அதிகாரிகள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாலும் தூர்வாரும் விஷயத்தில் மெத்தனமாகவே இருக்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறார் எம்ஜிஆர் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதன்.

1986-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, வீராணம் ஏரியை தூர்வாரி அதில் சேகரிக்கப்படும் மண்ணை ஏரியின் மையப் பகுதியில் கொட்டி சுற்றுலாத் தலம் அமைக்க அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் முயற்சி எடுத்தார். ஆனால், ஏனோ செயல்பாட்டுக்கு வராமலேயே போய்விட்டது.

இதுதொடர்பாக வி.வி.சுவாமிநாதன் கூறும்போது, ‘‘புவனகிரி எனது தொகுதி என்பதால் எம்ஜிஆரையே வீராணத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஏரியை தூர்வார வேண்டும் என்று காமராஜர் சொன்னபோது, கழிவு மண்ணை கொட்டுவதற்கு இடமில்லை என்று சொல்லி அவரை அதிகாரிகள் திசை திருப்பிவிட்டனர். அப்படி ஏதும் தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, வீராணத்தை தூர்வாரும்போது கிடைக்கும் கழிவு மண்ணை ஏரியின் மையத்தில் சுமார் 10 ஏக்கரில் கொட்டி அங்கே சுற்றுலாத் தலம் அமைக்கவும், பூங்கா, விடுதிகள் அமைத்து பராமரிக்கவும், படகுப் போக்குவரத்து ஏற்படுத்தவும் எம்ஜிஆரிடம் ஒரு திட்டத்தைக் கொடுத்தேன்.

இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஏரியை பராமரிக்கலாம் என்பதால் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு ஆட்சியின் சூழல் மாறிவிட்டதால் அந்தத் திட்டம் கிடப்பிலேயே போய்விட்டது. அண்மையில், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கடிதம் எழுதினேன்” என்றார் சுவாமிநாதன்.

வி.வி.சுவாமிநாதன் - கே.பாலகிருஷ்ணன்

அரசுக்கு வருவாய்; விவசாயிகளுக்கு பயன்

வீராணம் ஏரியைத் தூர்வாருவதால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். வண்டல், விவசாயத்துக்குப் பயன்படும் என்பதால் அரசுக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:

சென்னைக்கு வேண்டிய நீரை வீராணம் ஏரியில் தேக்கிவைப்பதை யாரும் எதிர்க்க வில்லை. ஆனால், பாசனத்துக்கான முன்னுரிமை பறிபோய்விடுமோ என்ற பயம் உள்ளது. சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ஆரம்பித்த பிறகு வறட்சிக் காலத்தில் நாங்கள் போராடியே தண்ணீர் பெற வேண்டியுள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறையின் கீழ் வந்தாலும், ஏரித் தண்ணீர் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வீராணம் ஏரியை தூர்வாரவே இல்லை. ஏரியைத் தூர்வாருவதாக அரசு அறிவித்தால், அதில் ஈடுபடுத்திக் கொள்ள விவசாயிகள் பலரும் தாமாக முன்வருவர். இங்கிருந்து கிடைக்கும் களி மண் மூலம் அரசு வருவாயும் ஈட்ட முடியும்.

தூர்வாருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், தண்ணீர் இல்லாத நேரத்தில் தூர்வாருவோம் என்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் தண்ணீரைத் தேக்கி வைக்கிறார்கள். பிறகு, எப்படி ஏரியைத் தூர்வாருவது? ஏரியின் வடக்கு திசையில் உள்ள வீராணம் புதிய பாசன வடிகால்வாய் மூலமாக கடந்த 5 ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இத்திட்டம் தொடங்கும் முன் இந்தப் பகுதியில் விவசாயிகளுக்கு இத்திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?” என்று கேள்வியெழுப்புகிறார் பாலகிருஷ்ணன்.

மண்ணை எடுக்க மாற்றுவழி

தூர்வாரும் பணியை தனியாருக்குக் கொடுத்தால் மண்ணைச் சுரண்டி ஏரியை நாசப்படுத்தி விடுவார்கள். அதற்கு பதிலாக, அரசே ஏரி மண்ணை வெட்டிக் கொடுக்கட்டும் அதை கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் உரமாக பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று 2012-ல் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.

ஒதுக்கிய நிதி எங்கே?

மன்னராட்சியில் ஏரிகளை தூர்வார ஏரி வாரியம் இருந்தது. அதன் சட்டதிட்டப்படி ஏரிகளில் தினமும் தூர்வாரும் பணிகள் நடைபெறும். குடிமக்கள் ஒவ்வொருவரும் வத்தைகளில் சென்று ஏரி தண்ணீருக்குள் மூழ்கி குறிப்பிட்ட அளவு மண்ணை தூர்வாரி கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். மன்னராட்சிக்குப் பிறகு, குடிமராமத்து முறை வந்தது. இதன்படி, கோடையில் வீட்டுக்கு ஒருவர் வீதம் நீர்நிலைகளை தூர்வாரி செப்பனிடும் வழக்கம் இருந்தது.

இப்போது, தூர்வாருகிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள்தான் தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வீராணம் ஏரியை தூர்வாருவதற்காக 2013-ல் விதி 110-ன் கீழ் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இதுகுறித்து பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘ஏரியில் தற்போது முழுக் கொள்ளளவில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகளைச் செய்ய முடியவில்லை. தண்ணீர் குறைந்ததும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக முடிக்கப்படும்’ என்றார்.

அரசு அனுமதி கிடைத்ததும் தூர்வாரப்படும்

வீராணம் ஏரியை தூர்வாரப்படும் மண்ணை தங்களுக்குக் கேட்கும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என்றே கடலூர் மாவட்ட அரசுத் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, ’’ஏற்கெனவே விவசாயிகள் அப்படியொரு கோரிக்கை வைத்திருப்பது உண்மைதான்.

இப்போது அரசே வீராணத்தை தூர்வார நிதி ஒதுக்கி இருக்கிறது. சென்னை குடிநீருக்கு இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதால் இதுகுறித்து அரசு உரிய உத்தரவுகள் பிறப்பித்த பிறகு வீராணம் முறையாகத் தூர்வாரப்படும். தூர்வாரப்படும் மண்ணை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து அப்போது முடிவுசெய்வோம்” என்றார்.

வடவாறு சிமெண்ட் தளத்தால் பாதிப்பு

“அணைக்கரையில் உள்ள கீழணை யிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் வடவாறு கால்வாயில் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டதால் கால்வாய் பயணிக்கும் ரெங்கநாதபுரம், கீழகஞ்சங்கொல்லை, மேலகஞ்சங் கொல்லை, பூவிழுந்தநல்லூர், ரெட்டி யூர், குருங்குடி உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்போதும் வைத்திருக்கும்.

வடவாற்றில் சிமெண்ட் தளம் அமைத்து கரைகளில் கசிவு சரிப்படுத்தப்பட்ட பிறகு இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் 30 அடியிலிருந்து நூறுக்கு கீழே சென்று விட்டதாகக் கூறும் கிராம மக்கள், ’’நிலத்தடி நீருக்குப் பாதிப்பு வரும்’ என்று அப்போதே நாங்கள் ஆட் சேபித்தோம். இதற்கு சிமெண்ட் தளத்தில் பெரிய துளைகள் அமைக்கப்படும் என்று சொன்னார் அப்போதைய அமைச்சர் துரைமுருகன். சொன்னபடி துளையும் போட்டார்கள். ஆனாலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை” என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்